எழுதி வரும் நாவல் ராமோஜியம் – 1935 கும்பகோணம்

ஒன்பது வருஷம் முந்தி, 1935-இல் ….
*********************

கும்பகோணத்தில் மெட்றாஸ் திருச்சி பாசஞ்சர் ராத்திரி ஒன்பதரை மணிக்கு வந்து சேர்ந்தது. தலையில் ட்ரங்க் பெட்டியைத் தூக்கி வைத்துக் கொண்டு நடந்து போன இரண்டு பேரையும் என்னையும் தவிர கும்பகோணத்தில் உதிர்த்துப்போக ரயிலுக்கு வேறே யாரும் இல்லை.

ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி ரயில்வே ஸ்டேஷன் ஆள் அரவமின்றிக் கிடந்தது. ரயில் விளக்கோடு நீள நடந்து வந்தவர் ஸ்டேஷன் மாஸ்டர் தான்.

”ரயில்வே ஸ்டேஷன்லே கேட்டா சொல்வாங்க, துக்காம்பாளையம் தெருன்னு கேட்கணும்..” எங்கே போகணும் என்று எனக்கு இப்படித்தான் சுருக்கமாகத் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. ’மகாமகக் குளத்தோடு போய்’ என்று கொசுறு.

ரயில் நீளமாக நீராவிப் பெருமூச்சு விட்டு சிரம பரிகாரம் செய்து கொண்டிருக்க, ப்ளாட்பாரத்துக்கு இரண்டு இளைஞர்கள் ஓடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

ரயிலுக்குப் பச்சை விளக்கு காட்டிக் கிளம்பச் செய்வதற்கு தயாராக இருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம், அவர் ரயிலை வழியனுப்பியதும் துக்காபாளையத் தெரு என்று கேட்க நினைத்துக் காத்திருந்தேன். அவர், ’வாங்கோ கோபு அவா வரலை போலிருக்கே’ என்றார் வந்தவர்களில் ஒருவரிடம்.

எப்படி சார் இல்லாமல் போகும் என்று இரண்டாவது இளைஞன் பரபரப்போடு ரயிலைப் பார்க்க, ஒரு இரண்டாம் வகுப்பு கம்பார்ட்மெண்ட் கதவு திறந்தது. பச்சைப் பட்டுப் பாவாடையும், கறுப்பு ரவிக்கையும் மஞ்சள் தாவணியுமாக தலை நிறைய மல்லிகைப் பூச்சரம் அலங்காரமாக அணிந்து, ஒரு இளம்பெண் இறங்கினாள். அடுத்து அவள் ஒரு மத்திய வயதுப் பெண்மணியை ஜாக்கிரதையாகக் கைபிடித்து இறக்கி விட்டதையும் கவனித்தேன்.

“கோபு வந்துட்டியா, நல்லதா போச்சு.. கொஞ்சம் கண் அசந்துட்டேன்.. அதுக்குள்ளே கும்மோணம் வந்துடுச்சு”

அந்த அம்மாள் கொஞ்சம் சத்தமாகச் சொன்னாள்.

“இதுதான் என் தம்பி மகள்.. கங்கா சொல்லியிருப்பாளே.. இவங்க வீட்டுக்கு தான் இச்சலகரஞ்சியிலே ஒரு வாரம் போகவேண்டியிருந்துது..” அந்தப் பெண்ணைச் சுட்டிக்காட்டிச் சொன்னாள் அவள்.

“ரத்னா தானே?” கோபு என்ற இளைஞன் என் பொறாமையைத் தூண்டியபடி அந்த தேவதைப் பெண்ணிடம் விசாரித்தான். ஆமா என்று அவனுக்கு சிறு புன்னகையைப் பதிலாக்கி அவள் நேரே பார்த்தபடி நடந்து போனாள்.

”என்ன சார் வேணும்?”

ஸ்டேஷன் மாஸ்டர் கொஞ்சம் அயர்வோடு என்னிடம் கேட்க, ”சார் துக்காபாளையத் தெருவுக்கு எப்படிப் போகணும்?” என்றேன்.

“வெளியிலே ஜட்கா வண்டிக்காரன் யாரைக் கேட்டாலும் சொல்வானே.. எட்டணா கொடுத்தா கொண்டு போய் விட்டுடவும் செய்வான்.. ஒண்ணு செய்யுங்கோ.. அதோ போறாளே, அவா கூடப் போங்கோ, அங்கே தான் போறா” என்றபடி ரயில் விளக்கை வைத்துவிட்டு ஆபீஸ் உள்ளே போனார்.

போகும்போது ஒரு தடவை சார் என்று உரக்கக் கூப்பிட்டு கைகாட்ட, கோபுவோடு வந்த இளைஞர் நின்றார். போங்கோ என்றார் ஸ்டேஷன் மாஸ்டர் என்னிடம். வழி காட்டிய உதவிக்காக அவர் வீட்டுத் தோட்டத்தில் கத்தரி சாகுபடி செய்து களையெடுத்து இலவசமாகப் பறித்துக் கூடையில் நிரப்பிக் கொடுப்பேன், அவர் வீட்டில் தோட்டம் இருந்தால்.

”என்ன வேணும் சார்?” அந்த யுவர் என்னிடம் விசாரித்தார்.

“என் பேரு ராமோஜி”

“சொல்லுங்க”

“துக்காபாளையம் தெருவுக்குப் போகணும். ஸ்டேஷன் மாஸ்டர் கிட்டே கேட்டேன்.. அவர் உங்களோடு…”

“தாராளமா வாங்க.. கஷ்டம் ஒண்ணும் இல்லே.. லேடீஸ் ஒரு வண்டியிலே போகவும் நானும் கோபுவும் போக இன்னொண்ணுமா ஏற்பாடு செஞ்சோம்.. அதை செய்யறதுக்குத்தான் டைம் அதிகமாகி, வந்தவங்க அவங்களே ரயில்லே இருந்து இறங்கிட்டாங்க .. வாங்க, போகலாம்”

அவன் நிறைவான புன்சிரிப்போடு சொல்லி அந்த ராத்திரி ஒன்பதரைக்கு என் நண்பனாகிப் போனான்.

என் பெயர் ராஜு.

கையை நீட்டினான். என் கையில் பிடித்திருந்த பச்சை ட்ரங்க் பெட்டியை இடது கைக்கு மாற்றிக் கைகொடுத்தபோது பெட்டியை அவன் வாங்கிக் கொண்டான்.

கனமே இல்லையே என்றான் ராஜு.

“ஆமா ட்ரஸ் மட்டும் தான்.. இங்கே டீ போர்ட்லே உத்தியோகமாகி வந்துக்கிட்டிருக்கேன்” என்றேன்.

கன்கிராஜுலேஷன்ஸ் என்றான் ராஜு. முன்னால் நடந்து போன இளைஞன் கொஞ்சம் நின்று வாழ்த்துகள் என்றான். கையில் பிடித்திருந்த ட்ரங்க் பெட்டியைக் கீழே வைத்தான். அந்தப் பெண்ணுடையதாக இருக்கவேண்டும்.

”நான் கோபு” என்றபடி கைகுலுக்கினான். பார்த்ததுமே பிடித்துப் போன மற்றொரு முகம். இன்னொரு நண்பனை அந்த ராத்திரி கொடுத்து, இன்னும் இருக்குது என்றது.

குதிரைவண்டி ஸ்டாண்டில் வரிசையாக ஏழு வண்டிகள் நின்றன. எங்களைப் பார்த்து முதலில் நின்ற வண்டியைச் சற்றே முன்னால் எடுத்தான் வண்டிக்காரன்.

ஸ்டேஷன் வாசலில் நாலைந்து மங்கிய பல்ப்கள் வெளிச்சம் காட்ட வந்து நின்ற முதல் வண்டியில் ஏற முன்னால் நடந்து போன ரத்னா என்று அழைக்கப்பட்ட அழகுப் பெண் ஆர்வம் காட்டினாள்.

“இது கொஞ்சம் சின்ன வண்டியா இருக்குமே” கோபு சொல்ல, அவள் நிமிர்ந்து பார்த்தபோது அவள் பார்வை வட்டத்தில் முழுமையாக நின்றவன் நான் தான்.

“நீங்க இந்த வண்டியிலே போங்க”

ரத்னா என்னிடம் பேசிய முதல் வாக்கியம் இது. கும்பகோணத்தை நேசிக்க, ராத்திரி ஒன்பதரை மணியைப் பிரியமான நேரமாகக் கொள்ள, குதிரையைப் பார்த்தால் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க(எப்படி?) வாத்சல்யம் ஏற்பட அந்த ஒற்றை வாக்கியம் போதும்.

எழுதி வரும் நாவல் ராமோஜியம் – ஒரு சிறு பகுதி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன