வெர்ச்சுவல் ரியலிட்டி – இன்று

 

கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி

கல்கியில் பொய்-மெய் (வெர்ச்சுவல் ரியலிட்டி) பற்றி 1995-லேயே எழுதியிருக்கிறேன். (பார்க்க – என் புத்தகம் ‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ – ஸ்நேகா பதிப்பக வெளியீடு).

பதிமூன்று வருடம் கழித்து கல்கியில் திரும்பப் பத்தி எழுதும்போது வெர்ச்சுவல் ரியலிட்டியோ, பத்தி எழுதி வரும் சன்மானத் தொகையோ அன்று கண்ட மேனிக்கு அப்படியே இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை!)

***************************************

கண்ணபிரானும் நாரதரும் பூமியில் நடந்து போகிறார்கள். தாகம் என்று தண்ணீர் கேட்கிறான் கண்ணன். கூப்பிடு தூரத்தில் தெரிந்த குடிசையில் வாங்கி வரப் போகிறார் நாரதர். போன இடத்தில் தன்னை மறக்கிறார். வாழ்க்கைச் சுழலில் சிக்கி, வெள்ளாமை, விளைச்சல், கல்யாணம், குழந்தைகள். வெள்ளத்தில் பயிரும் குடும்பமும் அழிகிறது. தனிமை சோகத்தில் மூழ்குகிறார். காற்றில் கண்ணன் குரல். ‘குடிக்கத் தண்ணீர் கேட்டேனே, நாரதா. என்ன ஆச்சு?’ இலக்கிய உத்தியான மேஜிக்கல் ரியலிசமும் தொழில்நுட்பக் கோட்பாடான வெர்சுவல் ரியலிட்டியும் சந்திக்கும் புராண அற்புதம் இது. இங்கே இதில் ரெண்டாவது மட்டும்.

வெர்ச்சுவல் ரியலிட்டி கம்ப்யூட்டர் உருவாக்கும் ஒளி-ஒலிக் காட்சி. விசேஷ கம்ப்யூட்டர் திரையில் இந்த மாய உலகம் முப்பரிமாணமாக விரிய நாம் இதன் நடுவே நடக்கிறோம். எதிர்ப்படும் பிம்பங்களைத் தொட்டு உணர்கிறோம். கை குலுக்குகிறோம். பேசுகிறோம். சிரிக்கிறோம். கம்ப்யூட்டர் படைக்கும் மாயாலோகத்தில் நாம் அமிழ்ந்து அனுபவிப்பது எப்படி சாத்தியமாகிறது?

எட்டரை அடி விட்டமுள்ள ஒரு குழிந்த பந்து. தலையில் கவிழ்த்த ஹெல்மெட் போன்ற கவசத்தோடு இந்த மாயக் கோளத்தில் நுழையும்போது, மின்னலைகள் மூலம் கவசம் கம்ப்யூட்டரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறது. நீங்கள் நிற்பது வெற்று அறைதான். ஆனால் கம்ப்யூட்டர் உங்கள் முன் ஒரு பச்சை வயல் பரப்பை இழையவிடுகிறது. எல்லையில்லாது பச்சை மண்ணும், நெல்கதிரும், வாய்க்காலும், மரமும், நீல வானத்தில் பறக்கும் கொக்கும் நாரையுமாக விரியும் வெளி. நீங்கள் நகரும்போது தலைக் கவசம் உங்கள் கண் அசைவைப் பின் தொடர்கிறது. உங்கள் பார்வை போகிற திசையையும் நீங்கள் நடக்கும் வேகத்தையும் ஒட்டிய பிம்பங்களை கம்ப்யூட்டர் வரிசையாகக் காட்டத் தொடங்குகிறது. அதோடு கூட வாய்க்கால் மதகில் தண்ணீர் பாயும் ஒலி, மரக்கிளையில் குயிலின் குரல் என்று கூடவே தொடர்கிறது. வயல் வரப்பில் குந்திப் பகல் உணவு கழிக்கும் விவசாயியின் பிம்பம் உங்களை நிமிர்ந்து பார்க்கிறது. அவரை ஏதோ விசாரிக்கிறீர்கள். கம்ப்யூட்டர் இப்போது அந்தப் பிம்பத்தின் மூலமாக உங்களுக்குப் பதில் சொல்கிறது. மரத்தின் மேல் இருந்து கூவும் குயில் எவ்விப் பறந்து வானத்தில் சிறகடிக்கும்போது அந்த இசை தேய்கிறது. டாப்ளர் கோட்பாட்டை பயன்படுத்தி கம்ப்யூட்டர் செய்யும் சித்து வேலை இது. நீங்கள் முன்னால் நடக்க நடக்க, கோளம் சுழலச் சுழல மாயாஜாலம் தொடர்கிறது.

வெர்ச்சுவல் ரியலிட்டியில் அமிழ்ந்திருக்க மனித மூளையும் ஒத்துழைக்கிறது. கம்ப்யூட்டர் உருவாக்கிய பிம்பத்தைத் தொட்டதும் ஏற்படும் தொடு உணர்ச்சி மூளையை ஒரு வினாடி மழுங்கடித்து விடமுடியும். திரையில் காட்டிய கையை வருடும்போது மூளையை மேக்னெடிக் ஸ்கானிங் செய்து பார்த்தால், அது ஏமாந்தது தெரியும். உடம்பில் இன்னொரு கை முளைத்து அது வருடப்படுவது போல் உணர்ச்சியை மூளை நம்பிவிட வாய்ப்பு உண்டு. தொடு உணர்ச்சியை கம்ப்யூட்டருக்கு உணர்த்த சென்சர் இணைத்த கையுறைகள் பயன்படுகின்றன.

பொழுது போக மட்டும் இல்லை, உயிர் காக்கவும் வெர்ச்சுவல் ரியலிட்டி உதவி செய்யும். உயரமான கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணி நடக்கும்போது உச்சிக்கு ஏறி இறங்கும் தொழிலாளர்கள் பலியாவது அவ்வப்போது ஏற்படும் துயர நிகழ்வு. வெர்ச்சுவல் ரியலிட்டி கொண்டு உருவாக்கிய கட்டுமான தளத்தில் தலையில் பாரத்தோடு தொடர்ந்து ‘ஏறி இறங்க’ முற்படும்போது தலை சுற்றல், களைப்பு வந்து தப்பாக அடி எடுத்து வைப்பதை கம்ப்யூட்டர் கண்காணித்து வெளிப்படுத்தும். அதற்கான சூழலை விலக்கி நிஜ உலகில் கட்டிட வேலை நடக்கத் திட்டமிட்டால் கட்டிடங்கள் காவு வாங்குவது என்பது பழங்கதையாகும்.

கட்டிட வேலை மட்டுமில்லாமல், தீ விபத்தை வெர்ச்சுவல் ரியலிட்டியில் அச்சு அசலாக நிகழ்த்திக் காட்டி தீயணைப்பு வீரர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்க முடியும். எதிரில் வருகிறவர் மேல் மோதாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதிலிருந்து, அசுர வாகனங்களான மிலிட்டரி டேங்க், டிரக், கார்ப்பரேஷன் தண்ணீர் லாரி ஓட்டுவது வரை இப்படி மாயாலோகத்திலேயே கற்பித்து விடலாம்.

வெர்ச்சுவல் ரியலிட்டிக்கு அடுத்தபடி என்ன? நிஜத்தையும் மாயத்தையும் இணைக்கும் கலவையான மிக்ஸ்ட் ரியலிட்டி. இதன் முதல கட்டம் கடியாரங்களை ஒருங்கிணைக்கும் வெற்றிகரமான சோதனை. நிஜ உலகத்து அறையில் மாட்டியிருக்கும் சுவர்க் கடியாரத்தின் பெண்டுலம் அசைகிறது. கம்ப்யூட்டர் படைத்த மாயவெளியிலும் ஒரு கடியாரம். நிஜக் கடியாரத்தின் அசைவுகள் மாயக் கடியாரத்துக்குக் கம்ப்யூட்டர் மூலம் போய்ச் சேரும். அதன் அசைவும் இப்போது நிஜக் கடியாரத்துக்கு இசைந்தபடிக்கு. இது இன்னும் முன்னேறும்போது வெர்ச்சுவல் ரியலிட்டியில் மானாட மயிலாட, கூடவே மங்கையவள் நடனமாடுவது நிஜ உலகத்தில் இருக்கும். சபாஷ், சரியான போட்டி.

(கல்கியில் அண்மையில் வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன