சாக்லெட் கிருஷ்ணா

 

On stage and back stage

கத்தரி வெய்யில் பிற்பகலில் ராணி சீதை அரங்கம் நிரம்பி வழிகிறது. கிட்டத்தட்டக் குடை சாய்ந்த நாற்காலியில் சமாளித்து உட்கார்ந்த பெரியவர் திருப்தியாகச் சிரிக்கிறார். ஹிந்துவுக்கு லெட்டர்ஸ் டு தி எடிட்டர் எழுதி வீட்டில், வெளியே சமாளிக்க வேண்டியிருக்கும் சகலமான சின்ன பெரிய இடைஞ்சல்கள் பற்றியும் புகார் செய்யக் கூடியவர் என்று பார்த்தாலே தெரிகிறது. ஆனாலும் இன்றைக்கு செய்ய மாட்டார். ஒண்ணு, ரெண்டு, மூணு என்று நாற்காலிகளை எண்ணிக் கொண்டு பி-15 சீட்டுக்கு முன்னேறுகிறது ஒரு இளஞ் ஜோடி. வழியில் எல்லோர் காலையும் ‘சாரி’ சொல்லி, குறி தவறாமல் மிதித்தபடி ஊர்ந்து, ‘இதோ பி-15’ என்று வெற்றிக் கூச்சல் போட, அடுத்த சீட் மாமா அமைதியாகச் சொல்கிறார் – ‘வலது பக்கம் ஆரம்பிச்சு எண்ணணும்’. கவுண்ட் அப் திரும்ப ஆரம்பிக்கிறது. கிரேஸியின் ‘சாக்லெட் கிருஷ்ணா’ புது நாடகத்தைப் பார்க்க வந்தவர்கள் எல்லோரும். முப்பது சொச்சம் வருஷமாக கலப்படம், நஞ்சு சேராத தன் அக் மார்க் நகைச்சுவையால் மோகன் கட்டிப்போட்ட தமிழ் நாடக ரசிகர்கள். கயிற்றை அவிழ்க்க அவர்களோ கிரேஸியோ தயார் இல்லை.திரை உயர, செட் பிராப்பர்டி சுவர்க் கடியாரம் ஏழு மணி காட்டுகிறது (நாடகம் முடியும்வரை கிரேசி மேஜிக்குக்கு கட்டுப்பட்டோ என்னமோ அதே நேரம் தான் காட்டியது கடியாரம்). சாக்லெட் கம்பெனி விற்பனை அதிகாரி மாது பாலாஜி சாக்லெட் பாக்கெட்டுகளோடு கிருஷ்ண பகவானைக் கும்பிட்டு விழுந்து செண்டிமெண்டாக பிரார்த்திக்கிறார். மாதுவின் திருட்டுப் பாட்டி காணிக்கை சாக்லெட்டைச் ‘சுட்டு’ உறையோடு தின்று விடுகிற •பர்ஸ்ட்-ஓவர் கலாட்டாவில் சிரிப்பு சிக்ஸர் எகிற, ராணி சீதை ஹால், ஹா-ஹா-ஹால். அந்தப் பாட்டிக்கு ‘மைக்கேல் மதன காமராஜன்’ எஸ்.என்.லட்சுமிப் பாட்டியம்மா சாயலா? இருக்கட்டுமே, கிரேஸி படைத்த ஈஸ்ட்மென் கலர்ப் பாட்டிதானே அவரும்?

மத்தியதர குடும்ப •ப்ளாட் வாசிகளாக மாது, மனைவி மைதிலி – கிரேஸியின் புது மைதிலி ரியலி க்யூட். கூடவே திருட்டுப் பாட்டி. அப்பா ராமானுஜமாக எப்பவும் போல் ரமேஷ். அவரைக் கலாய்க்கவாவது அடுத்த நாடகத்தில் மாதுவின் பிள்ளையாக ராமானுஜத்தை ஆக்க கிரேசிக்கு வேண்டுகோள் விடப்படுகிறது. பாபாராவ், கோனார் போன்ற பேடண்டட் கிரேஸி கேரக்டர்கள் மிஸ்ஸிங். ஆனாலும் ஈடு கட்டி அதற்கு மேற்கொண்டும் நீள நெடுக வியாபிக்க, விவேகா பைன் ஆர்ட்ஸ் நீலு அதிரடி எண்ட்ரி. வாஸ்து நிபுணராக லூட்டி அடிக்கிற நீலு, கூட சோ இல்லாவிட்டாலும் சோபிக்க சாக்லெட் கிருஷ்ணன் வசன கடாட்சமும் சொந்த குரல் வளமும் துணை. வாஸ்து நீலுவுக்காக நாலு புத்தம்புது நகைச்சுவை டயலாக் எழுதிடலாமே மோகன்? நினைத்தால், அடுத்த வினாடி உங்க பேனா கொட்டுமே.

வினாடிக்கு வினாடி சிரிப்பு ஸ்கோர் எகிற, சட்டென்று மாதுவைத் தேடி கிருஷ்ண விஜயம். மஞ்சள் பட்டு வேஷ்டி, மயில்பீலி செருகிய புல்லாங்குழல், கூடவே டிரேட் மார்க் கட்டை மீசையோடு சாக்ஷ¡த் கிரேஸிதான் கிருஷ்ணன். சாவதானமாக, இருப்பில் இருந்து மூக்குக் கண்ணாடியை வேறே எடுத்து மாட்டிக் கொள்கிறார். ‘முப்பத்தைந்து வயசுலே உனக்கே கண்ணாடி தேவை. எனக்கு ரெண்டு யுகமும் சொச்சமும் வயசாச்சு. சாளேஸ்வரம் என்ன, ராமேஸ்வரமே வரும்’. மாது முழிக்க அரங்கம் அதிர்கிறது. பாக்கி நேரம் முழுக்க கிரேஸி டைம்.

சாதா மனுஷர்கள், இவர்களோடு உறவாட வருகிற அமானுஷ்ய சக்தி. அதுவும் ஹீரோவான மாது கண்ணுக்கு மட்டும் தெரிவது. அதன் மூலம் திடீரென முதலமைச்சர் அருளால் மந்திரி பதவி கிடைத்த அசெம்ப்ளி கடைசி வரிசை எம்.எல்.ஏ மாதிரி வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் அடையும் மாது, அப்புறம் ஒரு பலவீனமான நிமிடத்தில் அந்த சக்தியைக் கழட்டி விட உத்தேசிக்கிறது. சாக்லெட் கிருஷ்ணாவில் எல்லாம் உண்டு. மேலேயும் உண்டு.

முப்பது வருடம் முன்னால் எழுதி இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ‘அலாவுதீனும் நூறு வாட்ஸ் பல்பும்’ மூலம் தூள் கிளப்பும் கிரேசி, அந்த அலாவுதீனை சாக்லெட் கிருஷ்ணனுக்காக ரீ-விசிட் செய்திருக்கிறாரோ என்று சின்ன சந்தேகம் எழுகிறது. செய்திருந்தாலும் வரவேற்கக் கூடியதே. இந்த முப்பது வருடத்தில் கிரேஸியின் நகைச்சுவை கூர்மை அடைந்து நாடகம், திரைப்படம் என்று விரிந்ததோடு, ஆன்மீகம், இலக்கியம், ஓவியம் என்று பல துறையிலும் சாதனை படைத்து வருகிறார் அவர். அதன் சாரம் கிருஷ்ணன் மாதுவிடம் சொல்லும் இந்த வசனம் – ‘நீங்க எல்லாரும் கடவுளை வாகனமாக உபயோகிக்கறீங்க. வேண்டிய இடத்துக்குப் போனதும், வாகனம் தேவையில்லைன்னு வெட்டி விட்டுடலாம். அடுத்த கஷ்டம் வரும்போது பார்த்துண்டாப் போச்சு’. பாலம் கடக்கும்வரெ நாராயணா, பின்னே கூராயணா. மலையாளப் பழமொழியைச் சொல்லாமல் சிரிக்கிறார் பகவான்.

சாக்லெட் கிருஷ்ணா வாலியின் கலியுகக் கண்ணனை விட வித்தியாசமானவராக இருக்கக் காரணம் இவர் தரையில் கால்பதித்து நடக்கிறவர். லேண்ட்லைன் தொலைபேசியில் கூப்பிட்டுத் தேடும் அம்மா யசோதா, தமிழிலும், இங்கிலீஷிலும், மார்வாடி இந்தியிலும் மிஸ்டர் கிருஷ்ணனைத் துரத்தும் காதலிகளாக பாமா, ருக்மணி, மீரா. இப்படி பலரிடம் இருந்து தப்பித்து வந்து மாதுவிடம் தஞ்சம் புகுகிறார். அர்ஜுனன் வேறு போதாக்குறைக்கு டெலி•போன் செய்து பகவத்கீதையில் சந்தேகம் கேட்கிறான். (‘இதெல்லாம் எதுக்குப்பா கிருஷ்ணன் கிட்டே விசாரிக்கறே? காலையிலே டெலிவிஷன்லே வேளுக்குடி கிருஷ்ணன் பகவத்கீதை உபன்யாசத்தில் தெளிவா விளக்கறாரே, கேக்கலியா?’ – மாது). கலப்படமான வெண்ணையைச் சாப்பிட்டு விட்டு மயக்கம் போட்டு விழுகிறார் (‘கிருஷ்ணா கான்ஷியஸ்னஸ் கேட்டிருக்கேன்; இது என்ன கிருஷ்ணா அன்கான்ஷியஸ்னஸ்?’). எழுந்து, ‘உன் கனவிலே நான் வந்தபோது நீ கனவுக்குள்ளே இன்னொரு தூக்கம் போட்டுண்டு இருந்தே. அதான் இன்னொருத்தர் கனவுக்குள்ளே போயிட்டேன்’ என்று ஜென் கிருஷ்ணனாக வலிக்காமல் தத்துவம் சொல்கிறார். வீட்டு டெலிவிஷன் ரிப்பேர் ஆன மாது, ‘அரசி’ சீரியல் பார்க்க கிருஷ்ணனை வாயைத் திறக்கச் சொல்கிற யுடிலிட்டி-வால்யு-பேஸ்ட் கிருஷ்ணா வித்தியாசமான பிரகிருதி தான். நாடகம் முழுக்க வரும் மாது – கிருஷ்ணா உரையாடலை மோகனும் பாலாஜியும் அனுபவித்துச் செய்திருக்கிறார்கள்.

நாடகம் முடிந்து பேக்-ஸ்டேஜில் ‘வரதுக்குட்டி கோபி’யை சந்தித்தபோது கிரேஸியின் வெற்றிக்கான ரகசியம் விளங்கியது. தேக அசௌகரியத்தையும் பொருட்படுத்தாமல் நாடகத்தில் தினசரி வந்து நடிக்கும் கோபி என் கையைப் பிடித்துக் கொண்டு சொல்கிறார் – ‘ சின்னதோ, பெரிசோ, மோகன் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினா, ஆத்மார்த்தமா அதோட ஒன்றிப் போயிடலாம். அவரோட மேஜிக் அது. என்ன வேணுமானாலும் அந்த அனுபவத்துக்குக்காகத் தர ரெடி’. வாமன கோபி கண் கலங்கிய திரிவிக்ரமனாக, நான் நகர்ந்தேன்.

எனக்கென்னமோ சாக்லெட் கிருஷ்ணாவை எழுத கிரேஸிக்கு ஒரு ‘ஹிடன் அஜெண்டா’ இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. வெய்யில் நூத்துநாலு, நூத்தியெட்டு என்று அஷ்டோத்திரமாக எகிறும் கடும் கோடை நேரத்தில், மேடையில் ஹாய்யாக ஓங்கி உலகளந்த உத்தமனாக, மேலே சட்டை பனியன் இல்லாத பேர்பாடி கிருஷ்ணாவாக காற்றாட வந்து நின்று சகலரையும் சதாய்க்கிற குஷிக்காகவே அவர் கிருஷ்ணாவதாரம் எடுத்திருக்கிறார் என்று ஊகிக்கிறேன். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இனி வரும் மேடை நிகழ்ச்சிகளில் குளிரில் நடுங்காமல் மோகன் அடிச்சுப் பொளிக்க அம்பலப்புழை கிருஷ்ணாய துப்யம் நமஹ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன