தீபாவளி 1975

1975 நாவலில் இருந்து –

1975 – தில்லி தீபாவளி

தீபாவளிக்கு ரெண்டு நாள் முந்தி கரண்ட் அக்கவுண்ட் வாடிக்கையாளர்கள்
மும்முரமாகி விடுவார்களாம். அவர்கள் என்றல்ல மொத்த தில்லியுமே பிசியாகி விடும். ஆப்பிள், ஆரஞ்ச் என்று பழக்கடையில் விலைபோகாமல் அடுக்கி இருந்த சரக்கெல்லாம் அரைவிலை, கால்விலையில் கிலோ கணக்காக வாங்கப்பட்டு, பாலீஷ் போட்டுக் கண்ணாடி போல மினுமினுக்க வைக்கப்படும்.

அடுத்து சோனியான முந்திரிப்பருப்புகள் குவியல் குவியலாக சற்றே வறுபட்டு வைக்கப்படும். கொஞ்சம் பழசானாலும் பழைய மது போல 1940-களில் வாங்கி பாக்கி இருந்த உலர் திராட்சை வென்னீரில் கழுவி உலர்த்தப்பட்டு அதுவும் எடுத்து வைத்துக் கொள்ளப்படும்.

பிளாஸ்டிக் கும்பாக்கள் பத்து ரூபாய்க்கு ஆறு என்று லாஜ்பத் நகர் சென்ட்ரல் மார்க்கெட்டில் சீப்படும். அதெல்லாம் முக்கியத் தேவை இப்போது. கூடவே புகையிலைக் காகிதம் மாதிரி பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று செலஃபோன் காகிதம்.

முந்திரியும், திராட்சையும் ஆப்பிளும் ஆரஞ்சும் சமயத்தில் கொய்யாவும் காகிதம் சுற்றி கும்பாவில் இட்டு, அதையும் சுற்றிக் கலர்க் காகிதம் பொதிந்து வைத்தால் ஒரு தீபாவளிப் பரிசு தயார்.

இதை பாதி தில்லி மீதி தில்லிக்கு தீபாவளிக்கு முந்தைய நாள் ’தீவாலி சுப்காம்னா’ என்று வாழ்த்து சொல்லி வீடு தேடிச் சென்று அளித்து வரும்.

தீபாவளியன்று காலையில் மீதி தில்லி முதல் பாதி தில்லிக்கு மறுபரிசு கொடுத்து வாழ்த்து சொல்லித் திரும்பும்.

பேங்க் ஆபீசர்கள் வீடுகளில் தொழில்முறை கரண்ட் அக்கவுண்ட் வாடிக்கையாளர்களான வர்த்தகர்களும், சிறு தொழிலதிபர்களும் சென்ட்ரல் மார்க்கெட்டில் கடைவைத்திருக்கும் வியாபாரிகளும் அளித்து வாழ்த்திப் போவதால் வீடு முழுக்க பழ வாசனையாக இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

முக்கியமான பதவியில் இருப்பவர்கள் இப்படிப் பழம் பெரும் பெருமக்களாவதோடு, ப்ரஸ்டிஜ் குக்கர், பால் குக்கர், ஒரு லிட்டர் வால் பாத்திரம் என்று உருவாக்கப்பட்ட ஸ்டெயின்லெஸ் பாத்திரங்களிலும் புளிப்பு திராட்சை அடைத்து வாங்கிக் கொள்வர்கள். அதிலும் மேன்மையானவர்கள் கரன்சி நோட்டு வாங்குவார்கள் என்றும் ஐதீகம்.

—————————————–

1975 – தமிழ்நாட்டில் தீபாவளி

ஒரே இரைச்சலாக வர்த்தக ஒலிபரப்பு. அது இந்த ஊருக்கு மட்டுமே உண்டான சிறப்பு. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னால் ஊரில் இருக்கும் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் எல்லாரும் திரௌபதை அம்மன் கோவிலில் ஆளுக்கொரு கும்பிடு போட்டுவிட்டு ஒரு கூட்டம் போடுவார்கள்.

தீபாவளிக்காக லோக்கல் கடைகள், டீக்கடை, ஹோட்டல், ஜவுளிக்கடை, பேன்ஸி ஸ்டோர் இப்படி ஒரு கடை விடாமல் விளம்பரம் செய்யக் கட்டணம் வசூலிப்பார்கள். மொத்தம் ஆறு சவுண்ட் சர்வீஸ்கள் ஊரில் உண்டு. காலை ஒன்பது மணியில் இருந்து ஏதாவது சவுண்ட் சர்வீஸில் இருந்து ராத்திரி ஒன்பது வரை விளம்பரங்களை சினிமா கானங்களோடு சிலோன் ரேடியோ ஸ்டைலில் ஒலிபரப்புவார்கள்.

ஒவ்வொருவருக்கும் ரெண்டு மணி நேரம் தினசரி ஒலிபரப்பக் கிடைக்கும். அது திங்களன்று காலை ஒன்பதிலிருந்து பதினொன்று என்றால் செவ்வாயன்று வேறு நேரமாக இருக்கும்.

இந்தத் தொடர் ஒலிபரப்புக்காக விளம்பரம் வாங்குவது, எழுதுவது, ஒலிபரப்புவது என்று சகலமானதற்கும் ஒற்றுமையாக வேலை பிரித்துக் கொள்ளத்தான் திரௌபதை அம்மன் கோவில் மீட்டிங். விளம்பரக் கட்டணம் வசூலானதையும் தீபாவளி இனாமாகக் கடைகள் தரும் பணத்தையும் பிரித்துக் கொள்ளவும் இந்தக் கூட்டம் உதவும்.

கடைகள் மட்டுமில்லாமல், நுட வைத்தியசாலை, பசுமாடு கன்று ஈன காளையை அடுத்து விடும் சேவை, எலக்ட்ரீஷியன் இப்படியான இனங்களிலும் விளம்பரங்கள் காதில் விழும்.

இப்போது ராஜா சவுண்ட் சர்வீஸ் உச்ச சத்தத்தில் வெங்கடேசா காப்பித்தூள் நயம் பீப்ரி கொட்டை வறுத்து அரைத்து என்று சாங்கோபாங்கமாக காப்பிப்பொடி விற்கும் கடைக்கு விளம்பரம் தந்து கொண்டிருக்கிறது.

நாலைந்து விளம்பரம் ஒரு கொத்தாக ஒலிபரப்பி முடிந்து ஏதாவது சினிமாப்பாட்டு வரும். போன வருடம் எலந்தப் பழம் தினசரி நூறு தடவை கேட்கக் கிடைத்ததாக ஆபீசில் பழநி சொன்னார். இந்த வருடமும் அதைப் போட்டால் கேட்கத் தடை இல்லை என்றார் அவர்.

திடீரென்று எமர்ஜென்சி பாட்டு ராஜா சவுண்ட் சர்வீஸில் இருந்து ஒலிபரப்பானது.

” கள்ளக் கடத்தல் முதலை எல்லாம் உள்ளே பதுங்குறான்”.

கடைத்தெருவின் சத்தத்தை மீறி கவர்மெண்ட் சங்கீதம் ஒலித்தது.

தீபாவளி, பொங்கல் எல்லாம் இனிமேல் புறங்கழுத்தில் சர்க்கார் உஷ்ண மூச்சு விட்டபடி பார்த்துக் கொண்டிருக்கத்தான் நடக்கும் போல.

”பத்து வருசக் கணக்கை எழுதிப்
பட்டியல் நீட்டுகிறோம்”

எனக்கு அந்தப் பாட்டைக் கேட்கவே உடம்பே பற்றி எரிகிற மாதிரி இருந்தது. எதையும் கவனிக்காமல் வண்டியை ஓட்டிப் போனேன்.

1975 நாவல் வாங்குவதற்கு இங்கே க்ளிக் செய்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன