சக்திக் களஞ்சியம்

இந்த மாதம் எழுதியது, மொழிபெயர்த்தது ஆகக் குறைவுதான். நிறையப் படித்தேன், படித்துக் கொண்டிருக்கிறேன்.

போன வாரம் கிருஷ்ணகான சபாவில் ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சியில் அன்புக்குரிய பேராசிரியர் வவேசு அவர்களுடன் சக்தி வை.கோவிந்தன் பற்றி, அவை நிறைந்த கலந்துரையாடல்.

நிகழ்ச்சியில் பேச, சக்தி கோவிந்தன் நடத்திய பத்திரிகைப் படைப்புகளின் தொகுப்பான ‘சக்தி களஞ்சியம்’ இரண்டு தொகுதிகளை – கிட்டத்தட்ட 1500 பக்கம் – படிக்க வேண்டியிருந்தது. கூடவே திரு பழ.அதியமான் எழுதிய ‘சக்தி வை.கோவிந்தன் – தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை’ மற்றும் ‘நவீனத் தமிழ் ஆளுமைகள் (அஞ்சலிகள், அறிமுகங்கள்) நூல்களையும் வாசித்தேன்.

பேராசிரியர் வவேசு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் அழைத்திருக்காவிட்டால் சக்தி வை கோவிந்தன் என்ற மகாமனிதர் குறித்து எனக்குத் தெரிந்திருக்காது.

சக்தி களஞ்சியம் 1940, 50களில் வெளிவந்த சக்தி பத்திரிகைக் கதை, கட்டுரை, கவிதைகளின் தொகுப்பு. சரஸ்வதி பத்திரிகை ஆசிரியர் விஜயபாஸ்கரன் தேர்ந்தெடுத்துத் தொகுத்த படைப்புகள்.

கவிதைகளில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், ந.பிச்சமூர்த்தி, அ.சீனிவாசராகவன் ‘நாணல்’, கொத்தமங்கலம் சுப்பு, ந.பிச்சமூர்த்தி என்று மரபுக் கவிதை , நாட்டுப் பாடல் பாணி, புதுக்கவிதை என அனைத்து கவிதை வகைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

கட்டுரைகள் பற்றி எடுத்துக்காட்டாக இது –

உலகம் சுற்றும் தமிழரான ஏ.கே.செட்டியார் கோவா பயணம் பற்றி எழுதிய கட்டுரையில் கோவாவில் பெண்கள் 1940-களில் ரயில் நிலையங்களில் போர்ட்டராக வேலை செய்ததையும், அவர்களில் சிலர் சுருட்டுப் புகைத்து பாதி சுருட்டை அணைத்துக் கூந்தலில் செருகிப் போவதையும் சொல்கிறார். அப்படியா இருந்தது?

கௌடில்யன் எழுதிய அர்த்தசாஸ்திரம் பற்றிய கட்டுரையில், அரசன் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டும் உறங்கினால் போதும் என்கிறார்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அம்புஜம்மாள் தன் கதை போன்ற கட்டுரையில் உலகப் போர் காலத்தில் (1944) சென்னை மகளிர் ட்ராமில் தியேட்டருக்கு மாட்னி ஷோ பார்க்கப் போவதையும், திரும்பும்போது விமானத் தாக்குதல் அபாய அறிவிப்பு சங்கு (சைரன்) ஒலிக்க தியேட்டரில் விளக்குகளெல்லாம் அணைக்கப்பட்டு இருளாவதைச் சொல்கிறார். இருட்டில் பயந்து நிற்கும்போது, அது ஒத்திகையாக ஊதப்பட்ட சங்கா, நிஜமாகவே ஜெர்மன் விமானத் தாக்குதலா என்று அறியாத பயம். வீட்டில் விட்டு வந்த குழந்தைகள் அப்போது நினைவு வருகிறார்கள்..

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாக இருந்த Totten Ham என்ற ஆங்கிலேயர் பற்றி அரு.சொக்கலிங்கம் எழுதிய கட்டுரை, சத்தத்தை சகிக்க முடியாத திவானைச் சித்தரிக்கிறது. திவானிருந்த தெருவில் சத்தமெழுப்பிக் கனைகும் கழுதைகளும் குரலெடுத்து தர்மம் கேட்கும் பிச்சைக்காரர்களும் போகத் தடையாம். இன்னும் மேளம் வாசித்தபடி கல்யாண ஊர்வலம், ராத்திரி எட்டு மணிக்கு மேல் பொதுக்கூட்டம், இசை நிகழ்ச்சி எல்லாம் தடைசெய்யப் பட்டதாம். இங்கிலாந்தில் எங்கோ கல்லறைத் தனிமையில் அமைதியான சூழ்நிலையில் தனித்துறங்கும் திவான் இன்று புதுக்கோட்டைக்கு வந்தால் சத்தம் கேட்டே மீண்டும் போய்ச் சேர்ந்துவிடுவார்.

ஆங்கில எழுத்தாளர் பேர்ல் பக் அம்மையார் விஜயலட்சுமி பண்டிட் பற்றி எழுதிய கட்டுரை மொழிபெயர்ப்பில் (விஜயலக்ஷ்மி பண்டிதை) அவருடைய இல்லத்தில் வாரத்தில் ஆறு நாள் ஆங்கிலத்தில் பேசி, ஐரோப்பிய உடையணிந்து, ஐரோப்பிய உணவு உட்கொள்வார்கள் என்கிறார். ஏழாம் நாள் இந்தி பேசி, இந்திய உடையணிந்து, இந்திய உணவாம். பண்டிதையின் திருமணத்துக்கு பெண்வீட்டுச் சீராக நூறு பட்டுப் புடவைகள், நூறு ஜோடி காலணிகள் என்று அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார் பேர்ல் பக்.

நாகசுவர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை தன் இசை பற்றிய கட்டுரையில் தன் தாய்மாமனான நாகசுவர வித்துவான் திருமருகல் நடேசப் பிள்ளையை மரியாதையாக மாமனார் என்று குறிப்பிடுகிறார் – ‘எனக்கு ஐந்து வயதானபோது என் மாமனார்…’. வீணை தனம்மாளை சில அபூர்வக் க்ருதிகளை வீணையில் வாசிக்கக் கோரி, அவர் வாசிக்க வாசிக்க இவர் நாயனத்தில் தொடர்ந்து கற்றுக் கொண்டதை அருமையாகச் சொல்கிறார்.

நந்தனார் சரித்திரக் கீர்த்னைகள் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் பற்றி ‘ஞாயிறு’ எழுதிய கட்டுரையில் ஒரு பகல் நேரம் பசியோடு, இடுப்பில் நீளமான துண்டும், மேலே ஒரு துண்டுமாக பசியால் வாடி கோபாலகிருஷ்ண பாரதியார், ஆனைதாண்டாபுரம் (ஆனந்தத் தாண்டவபுரம்?) அண்ணுவய்யர் இல்லத்தில் பூஜை நேரத்தில் நந்தன் கீர்த்தனை பாடி சகலரையும் மெய்மறக்க வைத்தது சித்தரிக்கப்படுகிறது. பாடியபடி ஊர் ஊராக, தலயாத்திரை போகும் பரதேசியாக அவரை நினைத்து, ‘எத்தனை நாள் இங்கே இருக்க உத்தேசம்’ என்று ஐயர் கேட்க, ‘சோறு கிடைக்கும் வரை’ என்கிறார் பாரதியார். பின் அவருடைய பொருளாதார நிலைமை மேன்மையடைய, சிதம்பரம் கோவிலில் தேசாந்தரிக் கட்டளை ஏற்படுத்துகிறார் கோபால கிருஷ்ண பாரதியார். பசியால் வாடி ஆலயத்துக்கு வரும் தேசாந்தரிகளுக்கு உணவூட்ட ஏற்படுத்தப்பட்டது அந்த தினசரி அன்னதானம்.

அல்லயன்ஸ் பதிப்பக நிறுவனர் மறைந்த குப்புசாமி ஐயர் பற்றி தி.ஜ.ர எழுதிய கட்டுரை சுவையானது.

அல்லயன்ஸில் தன் படைப்பின் கையெழுத்துப் பிரதியை ரொம்ப நாள் முன் அனுப்பியிருந்த தி.ஜர, அது புத்தகமாக எப்போது வெளியாகும் என்று கேட்க பதிப்பகம் போகிறார். அங்கே குப்புசாமி ஐயர், கரையான் வந்ததாக நிறையக் கையெழுத்துப் பிரதிகளைக் கிழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். கவலைப்பட வேணாம், உங்க கையெழுத்துப் பிரதி பத்திரமாக இருக்கிறது என்று ஐயர் சொன்னாலும், அது புத்தகமாகவில்லையாம்.

சபரிராஜன் எழுதிய மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை, சபர்மதி ஆஸ்ரமத்தில் ஒரு பகல் நேர சம்பவத்தைச் சொல்கிறது. கஸ்தூர்பா பகல் உறக்கத்தில் இருக்கிறார். காந்திஜி பூனை போல் அடிமேலடி வைத்து சமையலறைக்குள் போகிறார். என்ன சத்தம் அங்கே என்று கேட்டபடி கஸ்தூர்பா விழித்துக் கொள்ள, சிரிப்போடு காந்தி நிற்கிறார்.

“எதுக்கு பூனை மாதிரி வந்தீங்க?”

“மோதிலால் நேரு இன்னும் சற்று நேரத்தில் இங்கே வரப் போகிறார். அவருக்கு சிற்றுண்டி தரணும். ஏதாவது சமைக்கச் சொல்லி சமையலறைக் காரியம் கவனிக்கிற நண்பர்களுக்கு சொல்ல வந்தேன்”

“ஏன் என்னை எழுப்பிச் சொன்னா செய்ய மாட்டேனா?”

“நீ சத்தம் போடுவேன்னு பயமா இருக்கு”.

வெள்ளையனுக்கே பயப்படாத காந்தி பயந்த நிகழ்ச்சி இது.

நாமக்கல் கவிஞரின் கட்டுரையும் காந்தி பற்றித்தான். காந்தி தமிழ்நாட்டு யாத்திரையைத் தொடங்க இருக்கிறார். நாமக்கல் கவிஞர்ர் முன்கை எடுத்து கரூரில் காந்தி வந்து பேச ஏற்பாடாகிறது. காந்தியிடம் அளிக்க சுதந்திரப் போராட்ட நிதி திரட்டப்படுகிறது. திடீரென்று கரூர் பயணத்தை ரத்து செய்ததாக காந்தி யாத்திரையைத் திட்டமிட்டு நடத்தும் ராஜாஜியிடம் இருந்து தகவல் வர, நாமக்கல்லார் நொந்து போகிறார்.

ராஜாஜியிடம் நேரில் போய்க் கேட்க, அவர் சொல்கிறார், “கரூரில் காந்தி பேச முடியாத சூழ்நிலை. அவருக்கு சுகக்கேடு” .

நாமக்கல்லார் கேட்கிறார், “அப்போ, வேறே புதுசா ஊர்களை பயணத் திட்டத்தில் சேர்த்திருக்கீங்களே”.

ராஜாஜி, “அது அப்படித்தான்” என்கிறார்.

“நாங்க நிதி எல்லாம் வசூலிச்சு வச்சிருக்கோமே” என்கிறார் நாமக்கல் கவிஞர்.

“பரவாயில்லே, அதை இங்கே கொண்டு வந்து கொடுத்துடுங்க” என்று வழி சொல்கிறார் ராஜாஜி.

“அப்படிச் செய்தால் என்னையும் நம்ப மாட்டாங்க, உங்களையும் நம்ப மாட்டாங்க, காந்தியையும் நம்ப மாட்டாங்க” என்று யதார்த்தமாகச் சொல்கிறார் நாமக்கல் கவிஞர். அப்புறம் அவர் நேரடியாக காந்தியைச் சந்தித்து முறையிட, காந்தி கரூர் வந்து போகிறார்.

காந்தி பற்றி ஏழு கட்டுரைகள். 1921-ல் தமிழகப் பயணம் அவர் வந்தபோது புதுக்கோட்டை வழியாகச் செட்டிநாடு போகவேண்டி வந்தது. புதுக்கோட்டை சமஸ்தானம் காந்தி புதுக்கோட்டை வழியாகப் பயணப்பட அனுமதி மறுத்து விட, காந்தி சுற்றுப் பாதையில் போகிறார். தூத்துக்குடியில் அவருக்கு திருவோடு பரிசளிக்கிறார்கள். சிகரெட் பாக்கெட்களைக் கொடுக்க முனைய, மற்றவர்கள் ஓடிவந்து தடுக்கிறார்கள்.

பாரதி பற்றியும் நிறையக் கட்டுரைகள் சக்தி பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன.

வெ.சாமிநாத சர்மா, தமிழறிஞர் – தொழிற்சங்கத் தலைவர் திரு.வி.க நடத்திய கிராம ஊழியன் பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு நாள் பாரதி வந்த சம்பவத்தைச் சொல்கிறார். பாரதி மெலிந்த உடம்பும், நிமிர்ந்த நன்னடையும், சிவந்த கண்களில் நேர்கொண்ட பார்வையும், சட்டை போடாமல் மேலே கோட்டும், அலையாகத் தலையில் புரளும் தலைப்பாகையும், வாயில் புகையும் சுருட்டுமாக வந்து நின்றாராம். அன்று மாலை சென்னைக் கடற்கரையில் நடந்த மாப்ளா கலவரம் பற்றிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்கு வரும்முன் பாரதியார் பூக்கடையில் ஒரு செண்டு வாங்கி அதில் மற்றப் பூவைஎல்லாம் பிய்த்து விட்டு, இரண்டு பூவை மட்டும் எடுத்து இரு செவிக்கு மேலும் அலங்காரமாக வைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாராம். கூட்டத்துக்கு நடுவே தடதடவென்று நடந்து அவர் வர, சாமிநாத சர்மா, “சுற்றிக் கொண்டு வந்திருக்கலாமே” என்று கேட்கிறார். “நமக்கு எப்போதும் சுற்றி வளைத்துப் பழக்கமில்லை” என்கிறார் பாரதியார்.

பாரதிதாசன் எழுதிய கட்டுரையில் பாரதியார் மண வீட்டுக்கு ஒரு தடவைக்கு இரண்டு தடவை கூடப் போவார், ஆனால் பிண வீட்டுக்குப் போவதில் அவருக்கு விருப்பமில்லை என்கிறார். பரிதாபத்துக்குரிய இந்த தேசத்து ஜனங்கள் எப்போதாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திருமணமும் அவற்றில் ஒன்று. அப்போது அந்த சந்தோஷத்தில் பங்குகொள்ள பாரதிக்கு ஆர்வம் இருந்ததாகச் சொல்லும் பாரதியாரோடு அபூர்வமாக இடுகாட்டுக்குப் போக நேர்ந்ததை சீடர் சுவைபடச் சொல்கிறார். ’ரசத்திலே தேர்ச்சி கொள்’ என்ற புதிய ஆத்திசூடி வரியை பாரதியார் அங்கேதான் பாரதிதாசனுக்குச் சொன்னாராம்.

செல்லம்மா பாரதி தன் கணவர் பற்றி எழுதிய கட்டுரையில், பாரதிக்குப் பிடித்த கீர்த்தனைகளாக, நகுமோமு (ஆபேரி ராகம்), சக்கனிராஜ (கரஹரப்ரியா ராகம்) இவற்றைக் குறிப்பிடுகிறார்.

தொகுப்பில் வந்த சிறுகதைகள் பற்றி விரிவாக எழுத வேண்டும். 1940,50 களில் சிறுகதை வளர்ச்சி பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.

கலைஞன் பதிப்பகம் 1990-ல் வெளியிட்ட இந்த சக்திக் களஞ்சியம் தொகுப்புகள் – இரண்டு நூல்கள்) கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன