‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை

நன்றி வாடை
(இரா.முருகன் – தீராநதி செப்டெம்பர் 2019)

சங்கரன் மார்ச் 13, 2001 நடுராத்திரிக்கு புது கருநீல சூட்டும், வெள்ளைச் சட்டையோடு கருப்பு நிற டையும் அணிந்து, மினுமினுக்கும் ஷூக்களோடு மீனம்பாக்கம் விமானநிலையம் வந்து சேர்ந்தான். முப்பது வயதுக்காரன். அதியதிகாலை ஒன்றரை மணிக்கு சிங்கப்பூர் வழியாக எங்கேயோ போகும் சர்வதேச விமானத்தில் ஜன்னல் இருக்கை அவனுக்கு. அடுத்த இருக்கை சாரு என்ற சாருமதிக்கானது.

சாரு முப்பத்தைந்து வயது அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட். சங்கரனுக்கு இரண்டு லெவல் மேல் பதவியில் இருக்கும் அதிகாரி. ப்ரான்ஸ் போயிருக்கும், மனைவிக்கு ஸ்ட்ராங் டீ போட்டுத் தரும் பொறுப்பான கணவன் இன்று இரவு வீடு திரும்பும்போது அவள் அங்கே இருக்க விடாமல் இந்தப் பயணம். விடிந்தால் காரடையான் நோன்பு வேறே. என்றாலும் ஆபீசில் இப்படி சிங்கப்பூருக்குத் துரத்தியதை மாளாத் துயரோடு அவள் சொல்லியபடி வருகிறாள். அவளுக்கேயானதாக சங்கரன் கருதிய வாழைப்பூ வாசனையை அருகிலிருந்து தீர்க்கமாக முகரும் கிறுகிறுப்பும் தூக்கமின்மையுமாக அடுத்திருந்தான் சங்கரன். சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட் வந்தும் பெண் வாடையும் குறைகளின் பட்டியலும் பாக்கி இருந்தது.

புது வாடிக்கையாளரை வரவேற்று அவர்களை வசீகரிக்க அனுப்பப்பட்ட கம்ப்யூட்டர் கம்பெனி பிரதிநிதிகள் இந்த இருவரும். கல்யாண கோஷ்டி என்று தொழில்முறை பட்டப்பெயர். கோஷ்டி முதலில் ஆறு நபர்கள் பங்கு பெறுவதாக இருந்து பின் தில்லி தலைமையகத்தில் வெட்டிச் சுருக்கப்பட்டது. சென்னையிலிருந்து ரெண்டு, வெளியே இருந்து ஒன்று.

எமிக்ரேஷனில் சங்கரனையும் சாருவையும், சிங்கப்பூரில் பெருச்சாளி போல் ஒளிந்து திரிந்து ஒன்றாக ஜீவிக்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தோடு பாஸ்போர்ட்டை, விசாவை எல்லாம் திருப்பித் திருப்பிப் பார்த்து, பெருமூச்சோடு சாப்பா அடித்து ஊருக்குள் புக அனுமதித்தார்கள். சாரு பாஸ்போர்ட்டைத் திரும்ப எடுத்துக்கொள்ளாமல் நடக்க, ‘உங்க கூட்டாளிக்கு பாஸ்போர்ட் வேணமா?” என்று சங்கரனிடம் கொடுத்து, அவள் புகார்ப் பட்டியலில் புது ஐட்டமானார்கள் அவர்கள்.

‘லட்சணமான புருஷன் வீட்டிலே இருக்க’ என்று அங்கலாய்ப்பை சரியான இடத்தில் நிறுத்தி, சங்கரனின் சுபதினம் சந்தோஷமாக சிங்கப்பூரில் தொடங்கியதை பாழாக்கினாள் கோழிக் கழிச்சல் நெடியடிக்கும் பதிவிரதை. இது கையிடுக்கில் பெர்ப்யூம் பொழிந்து ஏற்படுத்தும் செயற்கை வாடையன்று. காது மடலில், பின் கழுத்தில், முதுகில் பொசியும் உடல் வாடை.

ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் வந்திருந்தால் சொல்லியிருக்க மாட்டாளோ? சங்கரன் ஹோட்டல் ரிஜிஸ்டரில் கையெழுத்து போடும்போது யோசித்தான். நல்லவேளை அடுத்தடுத்து இருக்கிற தனித்தனி அறைகள் அவர்களுக்கு.

காலை ஏழு மணிக்கு என்னமோ நினைத்துக் கொண்ட மாதிரி மலேசியாவுக்கு ஃபோன் செய்தான். ஆதினமிளகி பெரியப்பா செரங்கானிலோ செம்பிலானிலோ இருக்கிறார். அவ்வப்போது மொபைல் பேச்சு தான் உறவை வலுப்படுத்துகிறது.

“நேற்றே எதிர்பார்த்தேன். உன் அழைப்பு வரல்லேன்னதும் அமெரிக்கா போய்ட்டு காலையிலே தான் வந்தேன்” என்றார் பெரியப்பு. ஏதேது காலையிலேயே உருண்டை சாப்பிட்டிருப்பாரோ. “அமெரிக்கா போனா நம்ப மாட்டியா? சூக்கும சரீரியா போய்ட்டு வந்தேன். சித்தர்களுக்கு எல்லாம் முடியும்”. அவரிடம் நாசுக்காகக் கழன்று கொண்டு ஃபோனை வைக்கும்போது, அடுத்த தடவை பூத சரீரத்தோடு சிங்கை வரும்போது மலேசியாவுக்கும் மறக்காமல் வருவதாக வாக்குரைத்தான் சங்கரன்.

எட்டு மணிக்கு பாறபுறத்து சங்கரனை மொஃபைலில் கூப்பிட்டான். சிங்கப்பூர், மலேயா, இந்தோனேசியா, தாய்லாந்தில் பல்பொடி மாதிரி கம்பேனி சாஃப்ட்வேரை கூவிக்கூவி விற்கிற சேல்ஸ் வைஸ் பிரசிடெண்ட். சங்கரனுக்கு மூன்று லெவல் முந்திய அதிகாரி. சங்கரன் வெறும் ப்ராஜக்ட் மேனேஜர் என்பதால் எல்லோருக்கும் ’எஸ் சார் எஸ் மேடம்’ அடிமை உறவு.

”சீர் செனத்தி எல்லாம் கொண்டு வந்துட்டியா?” நல்ல தமிழில் விசாரித்தான் பாறை என்ற பாறபுறத்து. பிறந்தது முதல் மலையாள பூமியை மிதிக்காத மலையாளி. பாறையைத் தூக்கி புறத்தில் போட்டுத் தமிழனானவன்.

”எல்லாம் கொண்டு வந்திருக்கேன்” என்ற சங்கரன் நாலு செகண்ட் தாமதித்து சார் சேர்த்துக் கொண்டான். கஸ்டமருக்குக் கொடுக்க விளக்க ஆவணம் மற்றும் கம்பெனி கதை சொல்ல பவர்பாயிண் ப்ரசெண்டேஷன் இதெல்லாம் கொண்டு வந்த சீரில் அடங்கும்.

எத்தனை பேர்? கப்பார் சிங் மாதிரி கேட்டான் மலையாளி. இருபது ப்ளஸ். எத்தனை வருஷம்? ஒரு வருஷம். துட்டு? ஒரு மில்லியன் டாலர் என்றான் மூச்சைப் பிடித்தபடி சங்கரன். அம்புட்டுதானா என்று பாறை இறுகினான்.

”எங்கே நாம் சந்திப்போம்?” பொறுமையில்லாத காதலி போல கேட்டான் சங்கரன். ”அங்கேயே ரூம்லே இரு. வந்துடறேன். உன் ரூம் தான் நமக்கு இப்போ தாவளம்.. தலைவர் காசு செலவு செய்ய அஞ்சறார், சரியான”. பாதி வாக்கியத்தில் பாறை ஃபோனை வைத்து விட்டான். இன்றைக்கு உலக அரை வாக்கிய தினம் போல.

சங்கரன் அறை வாசலில் அழைப்பு மணியை யாரோ விடாமல் பொறுமையின்றி அழுத்தினார்கள். தீ பிடித்தது என்று சொல்ல ஹோட்டல் ஊழியர் யாராவது உயிரைக் கையில் பிடித்தபடி வந்திருக்கலாம். அடுத்த அறை சாருவை ஏகாந்தத்தில் தேள் ஒன்று வன்மையாகக் கொட்டியிருக்கலாம். உலகம் அழிந்து போய்க் கொண்டிருக்கிறது என்று கேபிள் டிவி எல்லா சேனலிலும் செய்தி நகர்ந்து கொண்டிருக்கலாம்.

ஓடிப்போய்க் கதவைத் திறக்க முழு வழுக்கையராக ஒரு பேர்வழி. சின்ன போ டை கட்டிக்கொண்டு ஹோட்டல் தலைமை வெயிட்டர் மாதிரி நின்றார். ”நான் ஒண்ணும் ஆர்டர் பண்ணலியே” என்றான் சங்கரன்.

”நான்சென்ஸ். பிரசண்டேஷன் ரெடி பண்ணிட்டியா?” வந்தவர் சினம் மொழிய “சாரி சார்” உதிர்த்தான். எந்த தெய்வம் வந்திறங்கியிருக்கோ.

அவன் வரவேற்றபடி வளைந்து உள்ளே சுட்ட, வந்தவர் “பீம்” என்று சுருக்கமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அது போதாது என்று பட, ப்ரார் என்றார். சங்கரன் புரியாமல் பார்த்தான். திரும்ப ப்ரார் என்று ரெண்டு தடவை அஜீர்ணம் வந்த மாதிரி சொல்லி பீம் ப்ரார் என்று முடித்தார். மலேசிய நிர்வாகத் தலைவராம். தென்னாப்ரிக்காவிலிருந்து ட்ரான்ஸ்பரிலாம்.

வந்தவரை உட்காரச் சொல்லிவிட்டு லேப்டாப்பை அவர் முன்னால் நகர்த்த, அவர் பொறுத்திரு என்று கை காட்டினார். ரொம்ப நாள் பழகிய லாகவத்தோடு ரூம் டெலிபோனில் ரிசப்ஷனை அழைத்து இந்தியில் ஜோக் சொல்லிச் சிரித்து விட்டு கருப்பு காப்பி என்று உத்தரவு பிறப்பித்தார். உனக்கு என்று சங்கரனைப் பார்க்க அவனும் அவசரமாக கருப்பு காபி என்றான்.

காபி குடித்து விட்டு பிரசண்டேஷன் என்று ப்ரார் சொன்னார். கம்பெனி பராக்கிரமங்களை, இந்த ப்ராஜெக்ட் கிடைத்தால் எப்படி சாதனை மேல் சாதனையாகப் புரிந்து, கஸ்டமருக்கு கணிசமான செலவு மிச்சம் பிடித்து, நல்ல சேவை தருவோம் என்று படமும் கதையுமாக எதிர்ச் சுவரில் அடித்து வைத்த திரையில் பரத்தி அளிக்கும் ஒலி ஒளிக் காட்சி அது.

பிபிடி எனப் பெயர் முடியும் ஃபைலை மடிக்கணினியில் திறந்து முதல் ஸ்லைடை திரை முழுக்கப் பரத்தி சங்கரன் காட்ட பீம் நிறுத்தச் சொன்னார்.

“நின்னுக்கிட்டு சொல்லு. நாளைக்கு க்ளையண்ட் முன்னாடி உக்காந்து பேசிடுவியா நீ?”.

அவர் எகிறிவிட்டு கோட் பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து தலையைத் துடைத்துக் கொண்டார். அது பூப்போட்ட சில்க் கைக்குட்டை.

பெரியோர்களே தாய்மார்களே என்று சந்தை அடிவாரத்தில் எலி பாஷாணம் விற்கிறவன் போல் அழைத்தான் நின்றபடிக்கு லுங்கியை இறுக்க முடிந்தபடி சங்கரன். கை கூப்பி இந்திய பாணியில் வணங்கிவிட்டுத் தொடங்கச் சொன்னார் திரு.ப்ரார்.

அப்போது வாசல் கதவு தானாக திறக்க, பாறை என்ற பாறபுறத்து ஆறரை அடிக்கு ரெண்டங்குலம் குறைவான உயரத்தை குறுக்கிக் கொண்டு ட்ரங்க் பெட்டி சைஸ் ப்ரீஃப்கேஸோடு பிரவேசித்தான்.

“பாற எப்படி இருக்கே.. கல்யாண கோஷ்டியிலே நீயும் உண்டுன்னு சொல்லவே இல்லையே” என்றபடி சங்கரனைப் பார்த்துக் கண்சிமிட்டினார் பீம். இவரோடு கண் சிமிட்டணுமா சும்மா சிரிக்கணுமா என்று தெரியாமல் அவன் மருக, ”ஆஸ்திரேலியா கணக்குலே இந்த புது அக்கவுண்ட் போகுது. அதான் ஆரம்ப ஆர்.எஃப்.ஐ ஸ்டேஜிலேயே போய் அட்சதை போடுன்னு என்னை அனுப்பிட்டாங்க” என்று பிருபிருத்தான் பாறப்புறத்து.

“அது நியாயமே இல்லே. சிங்கப்பூர் பேங்குக்கு சிட்னியிலே உக்காந்து என்ன சர்வீஸ் செய்வீங்க இது எனக்கு மலேசியாவுக்கு வர வேண்டிய ஆர் எஃப் ஐ” பீம் சொல்லியபடி கட்டிலில் சட்டமாக உட்கார்ந்தார். பாறை பாத்ரூமில் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான். அவன் வருவதற்குள் –

ஆர்.எஃப்.ஐ என்பது ரிக்வெஸ்ட் ஃபார் இன்பர்மேஷன். வெளிநாட்டிலோ, இங்கேயோ ஒரு நிறுவனம் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். புதியதாக சாப்ட்வேர் உருவாக்கி இயங்க வைத்துத் தரவோ, இருக்கும் மென்பொருளை சீராக மாற்றித் தரவோ இன்னும் மூன்று மாதம் கழித்து சேவையாளர்களான ஐ.டி கம்பெனிகளை அந்த நிறுவனம் அணுக உத்தேசிக்கலாம். எந்தெந்த சாப்ட்வேர் கம்பெனிகளோடு பிசினஸ் பேசலாம் என்று குறும்பட்டியல் உருவாக்கத் தகவல் கேட்கிற ஏற்பாடு ஆர்.எஃப்.ஐ.

திரும்ப வாசலில் அழைப்பு. சங்கரன் போய்த் திறக்க, தலை குளித்து, வசீகரமாகப் பட்டுடுத்தி கண்ணில் மையெழுதி கழுத்தில் பவுடர் கோட்டோடு சாரு. பிறன்மனை நோக்காப் பேராண்மை என்று சங்கரனின் நியூரான்கள் அறம் உரைக்க, உன்னிலும் பெரிய அதிகாரியை பணிந்து தொழு என்று அனுபவம் அதட்ட, அவனைக் குகை மனிதனாக்கும் ரசாயனத் தனிமங்களும் சுரக்கத் தொடங்கியதை சங்கரன் உணர்ந்தான். மருக்கொழுந்து மணத்தோடிருந்தாள், பிரசவ ஆஸ்பத்திரி டாக்டர் போல் ஓவர்கோட் அணிந்திருந்த சாருமதி.

காபிக் கோப்பைகளும் ப்ளாஸ்குமாக வெயிட்டர் வந்தான். பீமுக்கு அத்தை பிள்ளை போன்ற சகஜத்தோடு அவரிடம் காபியை நீட்ட, அவர்கள் உரையாடியது பஞ்சாபியில் என்று சங்கரனுக்கு எப்படியோ புரிந்தது.

வெயிட்டரிடம் ‘அப்புறம் ஊர்க்கதை பேசலாம். துண்டு மாங்கா ஊறுகாய் மட்டும் விசாரிச்சு வை. சாயந்திரம் பார்க்கலாம்” என்று இந்தியில் அன்போடு சொல்லி சிங்கப்பூர் டாலர் கரன்சியைக் கையில் வைக்க, ஏகத்துக்கு இளித்தபடி போனான் அவன்.

“இந்த பேங்க் என்ன மாதிரி சேவை கேட்கறாங்க?”

பீம் காபியை சீப்பிக் குடித்தபடி சங்கரனைத் தவிர்த்து சாருவை கூர்மையாகப் பார்த்துக் கேட்டார். அவள் வாளாவிருந்தாள். ”சொல்லும்மா” என்றார் பீம். பாப்பா மலரில் பங்குபெற வந்த சிறுமியைப் பாட்டு பாடச் சொல்லும் ரேடியோ அண்ணா மாதிரி.

“சார் நான் இன்ஷ்யூரன்ஸ் பிசினஸ் அனலிஸ்ட். எனக்கும் பேங்கிங்குக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது. நீ கூடப்போன்னு காரடையான் நோம்பு அன்னிக்குப் பார்த்து அனுப்பி வச்சிருக்காங்க.” சாரு பட்டியல் படித்தாள்.

“அதுனாலே என்ன? சென்னை அண்ணா சாலையில் சிண்டிகேட் பேங்க், ஸ்டேட் பேங்க், ஹெட் ஆபீசோட இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் இதெல்லாம் கடந்து தான் எல்.ஐ.சிக்கு போகணும். நீ நேரா எல் ஐ சி போகணும்கறதாலே வழியெல்லாம் கண்ணை மூடி வச்சுப்பியா?” பீம் கேட்டார்.

இந்த மாதிரி லாஜிக்கோடு பேசுகிறவர்களை சங்கரன் துதிப்பான். இப்போதும் புல்லரித்து நிற்க, “சிகரெட் குடிக்கலாமா?” என்று பாறையும் சாருவை பார்த்துக் கேட்டான். சங்கரன் வேண்டாம் நன்றி என்றான்.

“நோ ஸ்மோகிங்க் ரூம் சார் ரெண்டும்” என்றாள் சாரு. சங்கரனுக்கே அப்போதுதான் தெரிந்த தகவல் அது.

“ஒரு தம் போட்டுட்டு தெம்பா ஆரம்பிக்கலாம்”

சங்கரனையும், சாருவையும் உள்ளே சோபாவில் வீற்றிருக்க விட்டுவிட்டு, வந்தவர்கள் மால்பொரோ சிகரெட்டோடு வெளியேறினார்கள்.

”ஆர்.எப்.ஐயிலே என்ன எல்லாம் வரும்?” நிஜமாகவே அப்பாவியாக சங்கரனைக் கேட்டாள் சாரு. “இன்ஷூரன்ஸ் வேலைக்கு அமெரிக்காவுக்கு ஆள் பிடிச்சு அனுப்பறதை மட்டும் தான் ரெண்டு வருஷமா செய்யறேன். ஆர் எஃப் ஐ எல்லாம் தெரியாது” என்று தன்நிலை விளக்கமும் அளித்தாள்.

சங்கரனுக்கு வந்த ஆச்சரியம் கொஞ்ச நஞ்சமில்லை என்ன நம்பிக்கையில் இவளை நானாவித வாசனைகளோடு விமானம் ஏற்றி அனுப்பியிருக்கிறார்கள்? வாசனைப்பொடி வாடை அடித்தாள் அப்போது.

ரகசியம் சொல்ல கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்தான். “அதெல்லாம் ஒரு கஷ்டமா?”. அடுத்த ஐந்து நிமிடத்தில், புது மஞ்சள் கிழங்கு அரைத்துப் பூசிய வாசனையை நிதானமாக முகர்ந்தபடி சொன்னதன் சாராம்சம் இது-

”உங்கள் கம்பெனி பற்றி, உங்களுடைய கஸ்டமர்கள் பற்றிச் சொல்லுங்கள் என்று விதவிதமான ராகங்களில் தொடரும் ஆர் எப் ஐ கேள்விகளுக்கு நல்ல கற்பனை சக்தி உள்ளவர்கள் அருமையாகப் பதில் அளிக்கக் கூடும். இந்த பதில்களை ஒட்டு மொத்தமாகப் படித்துப் பார்த்தால், சகல துறையிலும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரப் பெரும் சுவடுகள் வைத்து முன்னே போவதாக ஒரு கார்பொரேட் பிம்பம் கிட்டும். அது கலைந்து விடுவதற்குள் குறும்பட்டியலில் இடம் பிடித்து விட வேண்டும்”.

சங்கரனும், சாருமதியும் இதரரும் பரபரத்து சிங்கப்பூரில் வந்து உட்கார்ந்திருப்பது ஆர் எப் ஐ மகோத்ஸவத்தின் இறுதிக் கட்டமாக, கஸ்டமருக்கு நேரில் கம்பெனி மகாத்மியத்தைச் சதுராடிக் காட்ட.

மறுபடி டெலிபோன் மணி. யாரோ வீர்சங்வி எங்கோ பெர்லினில் இருந்து கூப்பிட்டு கம்பெனி ஜெர்மனி கிளையின் பிரதாபங்கள் பிரசண்டேஷனிலும் ஆவணத்திலும் சரியாக வந்திருக்கிறதா என்று விசாரித்தான். அவனுக்காக ஆர்.எஃப் ஐ ரெஸ்பான்ஸ் ஆவணத்தில் தேடி ஒரு பத்தி முழுக்க இருந்த மெய்க்கீர்த்தியை சங்கரன் படிக்கும்போதே இதில் பாதி ரீல் என்று புரிந்தது.

பெர்லினுக்கு வாசிப்பு சேவை நடத்தியபோது அயர்லாந்தில் இருந்து ஒரு பழனியப்பன் கூப்பிட்டு, “ப்ரோ, நம்ம கதை என்ன சொல்றீங்க?” என்று உரிமையோடு கேட்டான். அடுத்து குமாரி னாய் என்ற ஒரு தாய்லாந்துப் பெண் மழலையில் பாங்காக் பற்றி புதுக்கதை சொல்கிறேன் என்று ஆரம்பிக்க, எழுதி அனுப்பச் சொல்லி பேச்சை கத்தரித்தான் சங்கரன். அவள் கமகமவென்று மீன்வற்றல் வாடை அடிப்பாள் என்று அவனுக்கு எப்படியோ தெரிந்திருந்தது. “நான் அபிஜித் தாகூர், அமெரிக்காவிலே இருந்து பேசறேன். இப்போ ராத்திரி பத்து மணி” என்று ஆரம்பித்தவனை, “நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு விடிஞ்சதும் கூப்பிடுங்க தாகூர்” என்று படுக்கைக்கு அனுப்பினான் சங்கரன்.

“நீங்க என்ன நினைக்கறீங்க?” பக்கமாகத் தலையைத் திருப்ப தலையணை கன்னத்தில் முட்டியது. தற்காப்புக்காக கோட்டை எழுப்பிய மாதிரி அவனுக்கும் சாருவுக்கும் இடையே ஒரு தலையணையை அணைத்துப் பிடித்து உட்கார்த்தியிருந்தாள் அவள். என் ரூம் தலகாணியைத்தானே கட்டிட்டிருக்கே என்று மனதில் கேட்டவாறு கழுத்தை வளைத்துப் பார்க்க, ‘காரடையான் நோன்பு அடை’ என்று அவள் வேறு ஏதோ கிரகத்துப் பழக்கம் பற்றி முணுமுணுத்தது கேட்டது. புளித்த தயிர் வாடை அடித்தாள் பெண்மணி.

பாறையும் பீமும் சூயிங்கம் வாசனையோடு உள்ளே வந்து சோபாவில் இடம் இல்லாமல் கட்டிலில் இருந்தார்கள். “வாசிப்பா” என்று ஏப்பத்தோடு பஞ்சாபியில் சொன்னார் பீம். அப்படித்தான் இருக்கும்.

“ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் கேள்வன்” என்று பொய்க்கீர்த்தி சொல்கிற தொனியில், “எங்கள் தொழில்நுட்ப டி என் ஏ” என கம்பெனி புகழ்மாலை ஆரம்பமானது. இன்னும் அரை மணி நேரம் விஸ்தாரமாக குழல் ஊதப்படும்.

“டெக்ஸாஸ்லே வேர்ஹவுஸிங் சாப்ட்வேர் பண்ணியிருக்கோம்” என்று ஏழாம் ஸ்லைடின் வாக்கியத்தைப் படித்தபோது, பீம், “உருளைக்கிழங்கை கிட்டங்கியிலே ஐஸ்லே வைக்கறது எல்லாம் இங்கே ஏன்? இது பேங்க் வேலை” என்று சங்கரனை எகிறினார். பாறை குறுக்கே உருண்டு விழுந்து ‘மார்ட்கேஜ் அதாவது, வீட்டுக் கடன்களை சேர்த்து வைச்சு புனர் பைனான்ஸ் கிட்டும் வேர்ஹவுஸிங்” என்று விளக்க அவர் உடனே தூங்கத் தொடங்கினார்.

“கல்யாண கோஷ்டின்னா சும்மாவா?” என்றான் பாறை. யாருக்கு கல்யாணம் என்று கேட்டாள் சாரு. அவள் பிடித்திருந்த தலையணை கீழே விழ, சங்கரனோடு தோளொடு தோள் உரசி விலகி உட்கார்ந்தாள்..

”கடைசியிலே இருந்து சொல்லு” என்று தூக்கத்தில் இருந்து கண் விழித்து தாடை எச்சிலைப் புறங்கையால் துடைத்தபடி பீம். கடைசியில் ஆரம்பித்து முதல் ஸ்லைடில் முடிக்க இதென்ன அரபு மொழியிலா இருக்கு என்று கேட்க நாக்கு நுனிவரை சங்கரனுக்கு கேள்வி வந்தாலும் அடக்கிக் கொண்டான். புறங்கையில் எச்சிலோடு உதட்டைத் துருத்திக் கொண்டிருக்கிறவர் கம்பெனியையே ஆஸ்திரேலியாவில் தோளில் தாங்குகிறவராக இருக்கலாம். பீம் அபானவாயு உதிர்த்தபடி பாத்ரூமுக்கு நடந்தார்.

”பீம் பாய் பீம் பாய், கடைசியிலே இருந்து சொல்றது ஒரு சேஞ்சுக்கு நல்லா இருக்கலாம். நாம் அந்த விளையாட்டுக்கெல்லாம் வரல்லேயே” என்றான் பாறை நகரும் அவர் முதுகு பார்த்து. இருவரும் ஒரே பதவியாக இருக்கும். .

”என்ன மாதிரி பிசினஸ் மாடல் அவங்களுக்கு ஆலோசனை சொல்லியிருக்கு?” டாய்லெட்டிலிருந்து பீம் கேட்டார்.

“Fixed bid, பிக்ஸட் பிட். வருஷத்துக்கு ஒரு மில்லியன் டாலர் கொடுத்திடுங்க. எத்தனை பேர், என்ன திறமை அது எங்க பொறுப்பு. மாதா மாதம் என்ன சாதிச்சிருக்கோம்னு கமிட்டி போட்டு ரிவ்யூ பண்ணி, திருப்தி இல்லேன்னா அபராதம் போடுங்க அப்படீன்னு டீல்”.

“இதுலே இந்த சங்கரனும் சாருமதியும் யாரா இருக்காங்க?” ஈரக் கையை மெத்தையில் புரட்டியபடி கேட்டார் பீம். “கஸ்டமர் காலை நான் அலம்புவேன். சங்கரன் குடிப்பார்” என்றாள் தடாலென்று சாருமதி. ஜவ்வாது வாடை அவள் மேல் வீசியதாக அப்போது சங்கரன் உணர்ந்தான்.

கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது. சூழ்நிலையில் பனிக்கட்டியை உடைத்தெறிய பாறை முற்பட்டான். “எல்லோரும் அதான் செய்யறோம். நீங்க சென்னையில் உட்கார்ந்து கால் கழுவி விடறீங்க. நாங்க வெளிநாட்டுலே”.

“கால் கழுவறது கால் கழுவறதுதானா, இல்லே இடக்கரடக்கலா?” சங்கரன் சாருவை சிரித்தபடி நோக்க அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் ஜவ்வாது வாசம் தொடர்ந்தது.

பீமுக்கு ருசிக்கவில்லை இதெல்லாம். “சரி கால் கழுவினாலும், ஷூ பாலீஷ் செஞ்சாலும் சரியா செஞ்சு டாலர் வந்தா சரிதான்.. இது நல்லா வந்திருக்கற மாதிரி தானிருக்கு சங்கரா. கடைசி ஸ்லைட் போ”

சங்கரன் ஒரு மௌஸ் க்ளிக்கில் முப்பது ஸ்லைட் கடந்து வியட்னாமில் பன்றி வளர்ப்பு பண்ணை சாப்ட்வேரில் உறைந்தான். அப்புறம்? பீம் கேட்டார்.

அப்புறம் விழுப்புரம் தான். சங்கரன் சாருமதி காதில் சொன்னான். காதருகே ஒரு நரை முடியோடு இருந்த அழகான பிசினஸ் அனலிஸ்ட். இன்ஷ்யூரன்ஸ் மட்டும் தெரிந்தவள். மணமாணவள். இன்னும் மாறாது ஜவ்வாது மணப்பவள்.

அவள் என்னமோ சந்தோஷத்தோடு அவன் தொடையில் தட்டி ஆமாமா என்றாள். சங்கரனுக்கு அந்த ஜவ்வாது கணம் உடன் மனதில் உறைந்தது.

“என்னது இது?” பீம் பிளிறினார்.

“என்னதுன்னா?” சங்கரன் மிரண்டு போய்க் கேட்டான்.

“என்னதுன்னா என்னது இது? எத்தனை க்ள்யண்ட் பிரசெண்டேஷன் செஞ்சிருக்கே?”

பீம் சட்டென்று ரௌத்ர பாவம் காட்டினார். சங்கரனை சுவரோடு மோதி, நகத்தால் வகுந்து குடலை உருவும் பெருஞ்சினம் அவர் ஆகிருதி முழுக்கப் பற்றிப் படர்ந்து மேலேறியது. உருட்டி விழித்து, தாடையில் உமிழ்நீர் வடிய அவர் குரலை உயர்த்தி இன்னொரு முறை கேட்டார் –

“நீ என்னவா இருக்கே?”

”சொல்லு நீ என்னவா இருக்கே?” அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினார். தனியார் துறை. சம்பளம் ஏகமாகக் கொடுத்து, காலால் உதைத்துத் தள்ள முடியும். உதைக்கப் போகிறார். அதற்குள் சுருக்கமாக வரலாறு சொல்லணும்.

“தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கம்ப்யூட்டர் துறை மேலதிகாரியா தில்லியில் இருந்தேன். ரெண்டு வருஷம் முந்தி கம்பெனியில் சேர்ந்தேன். சீனியர் ப்ராஜக்ட் மேனேஜரா இருக்கேன்”

மூணு வருஷமா இருக்கே, எத்தனை ஆர் எப் பி, ஆர் எப் ஐ பிரசெண்டேஷன் நடத்தியிருப்பே?”

“இதான் சார் பத்தாவது”

“அதான் இப்படி மடத்தனமா செய்யறியா?”

இதற்கு மேல் திட்ட வேண்டும் என்றால் சங்கரனின் அம்மாவைத்தான் சந்தேகிக்க வேண்டும். செய்யக் கூடிய எச்சில் கிழம் தான் இது.

இதுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்பது போல், சின்ன மேஜை மேல் வைத்திருந்த ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் பத்திரிகையை காரியமாகப் படிக்கத் தொடங்கினான் பாறை.

“என்ன செய்யணும்னு எஜமான் சொன்னா, இந்த நாயி செஞ்சுடுமுங்க” என்ற உடல்மொழியோடு எதற்கென்றே தெரியாமல் சாரி சொன்னான் சங்கரன். அவன் தோளில் ஆதரவாகத் தட்டி தோழமை சொல்வாள் சாரு என்று எதிர்பார்த்தான். அவள் கைக்கடியாரத்தைப் பார்த்தபடி இருந்தாள். அவளிடம் கொசு மருந்து வாடை அடித்தது.

“என்ன செய்யணுமா? இது கூடத் தெரியாமலா சீனியர் ப்ராஜக்ட் மேனேஜரா குப்பை கொட்டறே? கடைசி ஸ்லைட் என்ன இருக்கணும்?”

“என்ன இருக்கணும்?”

“என்னையே கேக்கறியா? கெட்ட வார்த்தை வாயிலே வருது” என்றபடி வாஷ்பேசினில் போய் தூ என்று சங்கரனின் முகத்தை ஆவாஹனம் செய்து உமிழ்ந்து வந்தார் பீம்.

”என்ன சார் அங்கே போடணும்?” சாரு ஒரு வழியாக அந்தப் பேச்சை முடித்து வைத்தாள்.

பரபரவென்று லேப்டாப்பை நகர்த்தி கீழே விட்டெறியப் போவதுபோல் போக்குக் காட்டி பீம் அடித்தொண்டையில் அலறினார் –

“தாங்க் யூன்னு நன்றி சொல்ல ஸ்லைட் எங்கே? எங்கே? எங்கே?”

பாறை ஏதோ காணாததைக் கண்டதுபோல் கைதட்டினான். சாரு சிரித்தாள். பீம் விழித்தார்.

“தாங்க் யூ ஸ்லைட் போட்டுடறேன் சார்”

சங்கரன் ஒரு நிமிடத்தில் நன்றி சொல்லும் ஸ்லைடை சேர்க்க, பீம் உடனடியாக அதை நிராகரித்தார்.

“மூஞ்சியிலே அடிக்கற மாதிரி படார்னு நன்றி சொல்லிட்டு விட்டுடுவியா? ஏதாவது அறிஞர் நல்வாக்கு, ரெண்டு வரிக் கவிதை, பூ, மரம், காடு, ஒத்தையடிப் பாதைன்னு படம் .. இதெல்லாம் வேண்டாமா?”

எந்த அறிஞர் ஒற்றையடிப் பாதையில் நடந்தபடி நன்றி சொல்வதற்கான வாக்கைத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்? சங்கரனுக்கு புரியவில்லை.

”ரெண்டு வருஷம் முந்தி சுமிடோமா பேங்குக்கு, நம்ம பங்காளிகளும் பகையாளிகளுமான கே சி எஸ் கம்பெனி பிரசண்டேஷன் கொடுத்தாங்க. பத்து மில்லியன் டாலர் ப்ராஜக்ட். டாப் மேனேஜ்மெண்டே டோக்கியோவிலே சுமிடோமா பேங்க் வாசல்லே தலைகளோட தரிசனத்துக்கு தேவுடு காத்து நின்னாங்க. ஒரு முழு நாள் கழிச்சு உள்ளே கூப்பிட்டு பிரசண்டேஷன். பரவாயில்லாம பண்ணினதா கேள்வி. என்ன பிரயோஜனம்? கடைசியா தேங்க் யூ இல்லாமல் சும்மா முடிச்சுட்டாங்கன்னு டிஸ்க்வாலிஃபை பண்ணிட்டாங்க பேங்க்லே. கே சி எஸ் ஜப்பான்லே அப்புறம் பிசினஸே பண்ண முடியலை. மரபு தெரியலையாம். மரியாதையின்மையும் காரணம்”.

பீம் சொல்லச் சொல்ல அவரை மீட்பராகக் கருதி சங்கரன் திரும்ப வணங்கினான்.

“இப்போ அங்கே என்ன மணி? காலம்பற எட்டா? எங்க பில்டிங்க்லே எல்லா அபார்ட்மெண்டிலும் நோம்புச் சரடு கட்டிண்டு காரடை வேக வச்சிருப்பா. வைக்கோல் வாசனையோட அபூர்வமா இருக்கும்”, சாரு எழுந்து நின்று அறிவித்து திரும்ப உட்காரும்போது தலையணையை தூரத்தில் எறிந்தாள்.

நீராவியோடு வேகும் வைக்கோல் வாடை சங்கரனுக்கு அனுபவமானது.

பாறை “கார்டை ஏன் வேவிக்கணும்? வேணும்னா, இங்கே கிச்சன்லே சொல்லி வேக வைக்கச் சொல்லலாமா?” என்று சாருவைக் கேட்க, “உங்களுக்கு தெரியாது. இது மலையாள பண்டிகை இல்லே” என்றபடி சங்கரனைப் பார்த்தாள். அவன் தேங்க் யூ ஸ்லைடை பிக்காஸோ நவீன ஓவியமாக மாற்றிக் கொண்டிருந்தான்.

நிலைமை சீரானதாக கணக்கில் கொண்டு பீம் தாம் அரியதோர் கடமையாற்றிய பெருமிதத்தோடு எப்படி கிளையண்ட் பிரசண்டேஷன் நடத்த வேணும் என்று அனுபவ விளக்கச் சொற்பொழிவைத் தொடங்கினார்.

”ஈஸ்ட்பேக் பேங்க்லே பிரசண்டேஷனுக்காக நம்ம டீம் பத்து வருஷம் முந்தி வந்தபோது சொல்லச் சொல்ல கேட்காம காலையிலே பியர் அடிச்சுட்டு போனான். ராவ்னு டாடாபேஸ் ஆர்கிடெக்ட். உள்ளே போறதுக்கு முந்தி டாய்லெட்டுக்கு போனானா, கொட்டித் தீர்த்துட்டு அவன் வர்றதுக்குள்ளே மத்தவங்க உள்ளே போய் இந்தாளு வெளியே. உள்ளே நுழையவே முடியலியே. ப்ளாடர் கண்ட்ரோல் இல்லாம மில்லியன் டாலர் தோல்வி”.

யாரும் எதுவும் சொல்லவில்லை. குறைந்த பட்சம் கைதட்டு கூட இல்லை. என்றாலும் மனம் தளராமல், “கிளையண்டு கூட எங்கே சாப்பிடப் போறோம்?” என்று வினவினார் பீம். ‘உஷ்’ என்று அவர் உதடுகளுக்கு மேல் விரல் வைத்துப் பொத்தினான் பாறை.

“சுயம்வரத்திலே நம்ம கழுத்திலே பூமாலை விழுந்து, நாம் ஜயிச்சு காண்ட்ராக்ட் கையிலே வந்தாத்தான் அதிகாரபூர்வமா விருந்து. இப்போ எட்டு வங்கி அதிகாரிகள், அதில் ரெண்டு பெண்கள், தனிப்பட்ட பார்ட்டிக்கு நம்மோடு இதே ஓட்டல்லே வருவாங்க, நாளை ராத்திரி 8 மணிக்கு”.

பாறை ரகசியம் சொல்லி விட்டு கையை பீம் உதட்டிலிருந்து எடுக்க, “பார்ட்டின்னா மிளகாய் இருக்குமில்லே?” என்றார் அவர்.

நாலு வருஷம் முன்பு முழுக்க ஜப்பானிய வாடிக்கையாளர்களாக இருந்த பார்ட்டியில், மிளகாய் காரமானது என்று அதை மேசையில் பார்த்து அவர்கள் சாகே குடித்தபடி நடுநடுங்க, இது என்ன பிரமாதம் என்றாராம் பீம்.

ம்யூசுவல் ஃபண்ட் ப்ராஜக்டை கால் மில்லியன் டாலருக்கு கைப்பற்றி வெற்றிவாகை சூடிய நாள் அது. ப்ராஜக்ட் மேனேஜர் தெலுங்கன் சௌத்ரியும் விருந்தில் இருந்தானாம். மிளகாய் என்ன பிரமாதம் என்று சிரித்து முன்னால் தட்டில் வைத்திருந்த ஒரு கொத்து மிளகாய்களை ராட்சசன் போல் அவன் கடித்துத் தின்ன நடுநடுங்கிய ஜப்பானியர்கள், இது அசாத்தியமான பொறுமையும் தீரமும் வேண்டிய செயல் என்று தீர்மானித்தார்கள், இவ்வளவு சகிப்புத்தன்மையும் பொறுமையும் உள்ள நம் கம்பெனிக்கு கால் இல்லை, அரை மில்லியன் டாலர் காண்ட்ராக்ட் அறிவித்தார்களாம்.

நாளை ராத்திரி சங்கரனாவது சாருவாவது மிளகாய் தின்ன வேண்டி வரும் என்றார் தீர்க்கமான நோக்கோடு பீம். சாரு சங்கரன் காதில், ”ஒரு மில்லியன் டாலருக்கு நானும் நீயும் மிளகாய் கடிக்கணும். நூறு மில்லியன் டாலர் ப்ராஜக்ட்னா உலக அழகியை கூட்டி வந்து மிளகாய் தின்னச் சொல்லுவாங்க போல” என்றாள். அவனை ஈர்க்கும் குண்டூர் மிளகாய் வாசம் முகிழ்ந்தது.

பாறை லாப்டாப்பை வாங்கி ப்ராஜக்ட் மதிப்பாக போட்டிருந்த ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை சற்றே முன்பின் இழுத்து ஆறு ஆயிரம் டாலர் வெட்டிக் குறைத்தான். ”நிச்சயம் கஸ்டமர் நமக்குத்தான் முதல் வாய்ப்பு தருவாங்க” என்று அவன் நம்பிக்கை சொல்லும்போது, பீம் இதோ வர்றேன் என்று வெளியே போனார். அறை வாசலில் பஞ்சாபி வெய்ட்டர் தலை தெரிந்தது காரணமாக இருக்கும். ஊறுகாய் பற்றி நற்செய்தி வந்திருக்கலாம்.

“எப்போ பிரசண்டேஷன்? நாளைக்கு காலையிலே பத்து மணி தானே?” சாரு கேட்டாள். அலுப்பு தெரிந்த குரல் அது.

“பத்தரைன்னு பார்த்தேனே” சங்கரன் சொன்னபோது பாறையின் மொபைல் அடித்தது. அவன் இரண்டு நிமிடம் காதே உடலின் முக்கியமான பாவம் என்ற பாவனையில் செவியில் அப்பிக்கொண்ட மொபைல் ஃபோனோடு எஸ் எஸ் எஸ் என்று வரிசையாக ஆமோதித்தான். குரல் நடுக்கம் வேறே.

அவன் ஃபோனை வைத்துவிட்டுச் சங்கரனைப் பார்த்தான்.

“நாளைக்கு இல்லே. இன்னிக்கு சாயந்திரம். மாத்திட்டாங்களாம். அவங்க பிரசிடெண்ட் நாளைக்கு கனடா போறாராம். உங்களுக்கு கஷ்டமில்லையேன்னு கேட்டாங்க. அவர் கனடா போனா நமக்கேன் கஷ்டம்? இல்லேன்னுட்டேன். இன்னிக்கு நாலு மணிக்கு அவங்க ஆபீஸ் நாலாம் மாடி கான்ப்ரன்ஸ் ரூம் சூயஸ்லே ப்ரசண்டேஷன்”.

சங்கரன் உற்சாகமானான். இன்றைக்கே ஏறக்கட்டியபின், நாளைக்கு ஊர் சுற்றிவிட்டு விமானம் ஏறிவிடலாம். பீமுடைய வளர்ப்புக் குரங்கு மாதிரி அந்த ஆள் கைகாட்டியதும் யாருடைய மகிழ்ச்சிக்காகவோ கண்ணில் ஜலம் அருவியாகக் கொட்ட நாக்கு பற்றி எரிய மிளகாய் தின்ன வேண்டாம்.

பாறையின் தொலைபேசி அழைத்தது.

“ஒரு லாப்டாப் மட்டும் எடுத்துப் போக அனுமதி உண்டு என்கிறார்கள்”. பாறை சொல்லிக் கொண்டிருக்க, சங்கரன் லாப்டாப் போதும் என்றார் பீம். மற்ற எல்லாம் இந்த ரூம்லேயே இருக்கட்டும் என்றார் அவர்.

இரண்டு காம்பாக்ட் டிஸ்க்களில் இன்று அளிக்கப் போகும் பவர்பாயிண்ட் பிரசண்டேஷனையும் தகவல் தெரிவுபடுத்தும், தோராயமாக கணக்குப் போட்டு ஒரு மில்லியன் டாலரில் வேலை முடிப்பதாக சத்தியம் செய்யும் ஆவணத்தையும் பிரதி செய்தான் சங்கரன். சிறிய டிபன் டப்பா போல டிஸ்க் தொகுப்பை லேப் டாப் அருகில் வைத்து விட்டுக் கழிவறை போனான்.

”தாங்க் யூவில் எழுத்து ரொம்ப கூர்மையா இருக்கு. கத்தாழை முள் மாதிரி”. பீம் இன்னும் நன்றி சொல்வதில் முழுத் திருப்தி அடையவில்லை. “நீ வேற டை கட்டி நல்ல பேண்ட் போட்டுட்டு வா. நான் முடிச்சு வைக்கறேன்” என்று புன்னகையோடு சங்கரனிடம் சொன்னார்.

பீம் தேர்ந்த கலைஞன் சிதார் வாசிக்கிறதுபோல் லாப்டாப்பில் பட்பட்பட்டென்று விரலைத் தேய்த்துத் தட்டிக்கொட்டி பவர்பாயிண்ட் ப்ரசெண்டேஷனை நிறுத்தி, லேப்டாப்பை மடக்கி லெதர்பையில் வைத்தார்.

கோஷ்டியாகப் புறப்பட்டார்கள்.

சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்னாலேயே வந்து கான்ப்ரன்ஸ் அறையில் விளக்கு, ஏசி, பிரசண்டேஷன் லாப்டாப் கனெக்ஷன், திரை எல்லாம் தயாராக்கி ஏழெட்டு வங்கியாளர்கள் உட்கார்ந்திருந்தார்கள், சங்கரனின் கம்பெனி கல்யாண கோஷ்டி உள்ளே நுழைந்தது.

பிரசிடெண்ட், பிரசிடெண்ட் என்று பரபரப்பாக, நான்கைந்து டை கட்டியவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக அலைந்தபோது சிங்கப்பூர் ஜனாதிபதியே அங்கே கம்பெனி சூர வீர பிரதாபங்களைக் கேட்க ஆஜராகிறாரோ என்று மாயத் தோற்றம் எழுந்தது. அவர் இல்லை, வங்கித் தலைவர் தான் ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்து திரும்பத் திரும்ப தாமதமானதற்கு மன்னிப்பு கேட்டார். நெட் வேறே டவுன் என்று அதற்கும் இன்னொரு நாலு தடவை மன்னிப்பு கோரப்பட்டது. கம்பெனி கல்யாண கோஷ்டி உசிதமான நல்ல வார்த்தை சொல்லி அதை ஏற்றுக் கொண்டது.

ஆடல் பாடல் தொடங்கட்டும் என்றார் ப்ரசிடெண்ட். பாறை முன்னுரையாக ரெண்டு நிமிட நேரம் பேசி, சங்கரனை பழுத்த அனுபவமுள்ள வங்கியாளர் என்று அறிமுகப்படுத்தினான். கூடவே சாருவையும் இன்ஷ்யூரன்ஸ் மாமேதை என்று தெரியப்படுத்த அவள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சங்கரன் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடும் வித்தைக்காரன் போல் லெதர் பையில் இருந்து மடிக் கணினியை எடுத்து இணைத்து விரலை கணினிப் பரப்பில் வைத்து இழுக்க, திரையில் பளீரென்று அவனுடைய பிரசெண்டேஷன். அது முப்பதாவதான, நன்றி சொல்லும் கடைசி ஸ்லைட். அவன் வேகமாக முதல் ஸ்லைடுக்கு போக முன் நகரப் பார்க்க, முன்னும் இல்லை, பின்னும் இல்லை, நான் மட்டும் தாண்டா இருக்கேன் என்று நன்றி ஸ்லைட் சிரித்தது.

கடைசியாக ப்ரசெண்டேஷனை குடைந்தவர் பீம்பாய் தான். என்ன செய்தாரோ கடவுளுக்கே வெளிச்சம்.

பீம்பாயிடம் குனிந்து பிரச்சனையைச் சொல்ல, அவர் மாறாத புன்சிரிப்போடு “உன் பேக் அப் டிஸ்குகளை எடுத்து லெதர் பையில் வைத்திருக்கேன். பதட்டப்பட வேண்டாம்” என்று அபயஹஸ்தம் காட்டினார்.

சாருமதி அவசரமாகக் லெதர்பையில் கைவிட்டு உடனே முகம் திரிந்து கையை வெளியே எடுத்துக் கொண்டதைப் பார்க்க, காலையில் விழுத்துப்போட்ட உள்ளாடையை சங்கரன் அதற்குள் வைத்திருக்கிறான் என்று பரவலான ஊகம் நிலவியது. பீம் பையைக் குடைந்து வெளியே எடுத்தது இரண்டு பாட்டில் மாங்காய் ஊறுகாய். ஒரிஜினல் பஞ்சாப் அச்சார்.

மாறிடுச்சு என்று வெள்ளையாக விடை பகர்ந்து இன்னும் பலமாகச் சிரித்தார் அவர். பிரசிடெண்ட் நேரத்தைப் பார்த்தார். எல்லோரும் நேரத்தைப் பார்க்க, பத்து நிமிடம் கடந்து போய்விட்டிருந்தது.

ஆரம்பிக்கலாம் என்றார் அவர். சரி என்று தொடங்கினான் சங்கரன்.

”நாள் முழுக்க மென்பொருளாகவும், காகிதப் பொதியாகவும் ஆவணங்கள், நீண்டு, மிக நீண்டு போய்க் கொண்டே இருக்கும் கணக்கு வழக்கு, கூடவே பவர் பாயிண்ட் ப்ரசெண்டேஷன் ஏகப்பட்டது தினமும். பவர் பாயிண்ட் மூலம் சாவு என்றா நமக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? இது unconference அன்கான்பரன்ஸ்களின் காலம். கூட்டம் போட்டு சமோசா டீ கொடுத்து கையில் மைக்கை வாங்கி நீளமாகப் பேசிப் பேசி சாதித்ததை விட, உட்கார்ந்தும், படுத்தும், நின்றுமாக கருத்து பரிமாறும் அ-கூட்டம் சாதிப்பது அதிகம். யாராவது வளவளவென்று பேசிக் கொண்டே போனால் விட்டெறிய குட்டித் தலையணைகளும் அ-கூட்டம் நடக்கும் கான்பரன்ஸ் ஹாலில் இரைந்து கிடக்கும். நானே போன மாதம் சென்னையில் தலைகாணி அடி வாங்கினேன். வீட்டில் இல்லை. ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் அ-கூட்டம் அது”.

அவன் சிரிக்க, பிரசிடெண்ட் சிரிக்க, மற்றோரும் சிரிக்க அறை டென்ஷன் இல்லாத அன்கான்பரன்ஸ் அறையானது. தெம்பாக சங்கரன் தொடர்ந்தான்.

“ஆகவே இப்போது பிரசெண்டேஷன் இல்லை. உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நான் பதினைந்து நிமிடம் எங்கள் கம்பெனி பற்றியும், இந்த ஆர் எப் ஐ பற்றியும் என்ன தீர்வு, எவ்வளவு பணம் செலவாகும் என்று உத்தேசமாக ஒரு நிமிடம் கணக்கும் சொல்லி உட்கார்கிறேன். பிர்சிடெண்ட், மற்ற மாண்புமிகு வங்கியர்களுக்கு நேரம் இருந்தால் கேள்வி கேட்கலாம். இல்லை எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு நாலு பட்டர் பிஸ்கட்டும் டீயும் உண்டு குடித்து அல் விதா சொல்லி இன்றைக்குப் பிரிவோம். விரைவில் சந்திப்போம்”

அவன் தொடர்ந்து சின்னச் சின்ன வாக்கியங்களில் பதினைந்து நிமிடம் நேர்த்தியாகப் பேசி உட்கார, முதல் கைதட்டு சாருவிடமிருந்து. ரோஜாப்பூ வாசனை அனுபவப்பட்டது சங்கரனுக்கு.

பிரசிடெண்ட் நன்றாக இருந்தது என்று சொல்லி அவசரமாக நடந்தார். மற்றவர்களும் தாயாதி பங்காளிகளாக மகிழ்ச்சியாகக் கை கொடுத்து பிரியாவிடை பெற்றுப் போனார்கள். வெற்றி என்று இரண்டு விரலால் வெற்றிச் சின்னம் காட்டினான் பாறை. ராத்திரி எட்டு மணிக்கு சென்னை திரும்ப ஃப்ளைட் டிக்கட் மாற்றியிருந்தான் அவன்.

“மிளகாய் வேணுமா?” பாறை பீமைக் கேட்க, அவர் ஒரு வினாடி யோசித்துச் சொன்னார் – “இருந்தா எடுத்து என் பின்னாலே திணிச்சுடு”.

டாக்சியில் ஹோட்டல் திரும்பும்போது பக்கத்தில் ‘காரடையான் நோம்பு முடிஞ்சிருக்கும். அவரும் ப்ரான்ஸ்லேயிருந்து வந்திருப்பார்”.

சங்கரன் தீர்க்கமாக முகர்ந்தான். அது ஆண் வாசனை. போக நெடி.

”பெர்ப்யூம் போட்டுக்க மறந்துட்டேன். ஒண்ணும் அசம்பாவிதமாகலையே?” அவள் கண்கள் செருக, தயக்கத்தோடு கேட்டாள்.

எனக்கு ஜலதோஷம் என்றான் சங்கரன்.

(நிறைந்தது)

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன