New – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்

வெளியிட இருக்கும் என் அடுத்த நாவலான 1975 (எமர்ஜென்சி கால கட்டத்தில் நிகழ்வது) – ஒரு சிறு பகுதி
—————————————————————————————————————

காண்டேகர் துக்க தினக் கூட்டம் என்று அறிவித்து விவேகானந்தா ஆரம்பப் பள்ளியில் ஏழெட்டு பெஞ்சுகளை இழுத்துப் போட்டு மூன்றாம் கிளாஸ், நான்காம் வகுப்புக்கு நடுவே இருந்த ஸ்கிரீன்களை நகர்த்தி விட்டு இடம் ஏற்பாடு செய்து கூட்டம் நடத்தினார் சிங்கம்புலி. கூட்டத்தில் எத்தனை பேர் காண்டேகர் கதைகளைப் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

“போத்தி, நீங்க காண்டேகர் பத்தி பேசுங்க முதல்லே”. அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். எனக்கு காண்டேகர் என்ற பெயர் மட்டும்தான் தெரியும். அவர் எழுதிய எந்த நாவலும் படித்ததில்லை. இதைச் சொன்னேன்.

“அதுனாலே என்ன, துக்கம் பொதுவானதுதானே, எல்லோருக்கும் புரியும். நீங்க பேசுங்க. கூட்டுப் பிரார்த்தனை செய்யறபோது நீங்க ப்ரேயரைப் படிங்க, அது போதும்”, என்றார் சிங்கம்புலி.

“இன்னிக்கு மூக்குக் கண்ணாடி போட்டுட்டு வரலே, போட்டுக்கிட்டு வந்து இன்னொரு நாள் படிச்சு துக்கம் அனுஷ்டிக்கறேன்”, என்று சொல்லிவிட்டேன்.

அவர் சம்மதித்து, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பொத்தாம்பொதுவாக காண்டேகரின் எழுத்து எப்படி ஆத்மாவைத் தொடுகிறது என்று விலாவாரியாக விவரித்துச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

நடுநடுவே நம் துக்கத்துக்கும் துயரத்துக்கும் யார் காரணம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று முழங்கினார். அது மறைமுகமான எமர்ஜென்சி எதிர்ப்பு என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டுமாம். அவரும். அப்போதெல்லாம் கை தட்டச் சொல்லி எனக்குக் கண்காட்டினார். .

சோனியான என் கைதட்டு சத்தம் போதாமல் சிங்கம்புலி உடனே பாட்டுப் படிப்பதில் இறங்கினார்.

“மகான் காண்டேகர் பெயர் சொல்லுவோம், மாண்புறு சிந்தனை வழிசெல்லுவோம்”.

இந்தப் பாட்டை அவர் கென்னடி, கோல்வால்கர், டால்ஸ்டாய், பட்டினத்தார், தாயுமானவர் என்று பலருக்கும் நினைவு அஞ்சலி செலுத்தும்போது பெயரை மட்டும் அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி மாற்றி சத்தம் போட்டு பாடிப் பழக்கப்படுத்தியிருக்கிறார்.

அவர் குரல் காத்திரமாக இருப்பதால் யார் பெயரில் இப்படி இரங்கல் பாட்டு பாடினாலும் முடிக்கும்போது பலத்த கைதட்டு வரும்.

“கண்ணை மூடிட்டுக் கேட்டா அப்படியே சீயாழி கோவிந்தராஜன் அசரீரி பாடற மாதிரி இருக்கு”.

என் பின்னால் இருந்த ஜவுளிக்கடை காசியாப்பிள்ளை நெகிழ்ந்து போய் என் தோளில் தட்டினார். பின்னால் திரும்பிப் பார்க்க, கண்களில் கண்ணீர் திரள, போயிட்டாரே என்று கையை அசைத்துக் காட்டினார். காண்டேகர் மட்டும் பார்த்திருந்தால் ஏன் உயிரை விட்டோம் என்று அவரும் காசியாப்பிள்ளையோடு கூடச் சேர்ந்து ஒரு பாட்டம் அழுதிருப்பார்.

முகேஷ் துக்கதினத்தன்று ’மகான் முகேஷின் பெயர் சொல்லுவோம்’, ’சிற்பி முகேஷ் பெயர் சொல்லும் பொழுதிலே’ என்று துக்க கானங்களைப் பாடி அடுத்து இன்னும் கூடுதல் துக்க அனுஷ்டானம் என்று எமர்ஜென்சி பாட்டை எல்லாம் வரிசையாகப் பாட ஆரம்பித்தார் சிங்கம்புலி.

சேர்ந்திசை என்று சர்க்கார் திட்டத்துக்கும் எமர்ஜென்சிக்கும் ஆதரவாகத் தாளம் மாற்றிப் போட்டு இசையமைத்து கூட்டமாக இளைஞர்களும் இளம் கன்னியரும் பாடிய பாடல்கள் அவை. தினம் கவர்மெண்ட் ரேடியோவில் அவற்றைச் சதா கேட்டுக் கேட்டு அலுத்துப் போனாலும் வக்கீல் குமாஸ்தா நாராயணனுக்கு மலமிளக்கி மருந்து அவைதான்.

“யூரல் மலைகளின் சாரல் மழையில்”ன்னு உச்ச ஸ்தாயிலே பாடறதைக் கேட்டா எங்கே எங்கேன்னு வயிறு கலகலன்னு வழி விட்டுடுது தம்பி”.

நாராயணன் வாங்கிய புது டிரான்சிஸ்டர் அவருக்கு பர்கோலாக்ஸ் ஆகத்தான் பெரும்பாலும் பயன்பட்டது.

‘இது தாமசவர கமனா கூடப் பாடும். ஆனா எனக்கு கேட்க பொறுமை இல்லே” என்றார் என்னிடம். தாமசவர கமனா இல்லேங்க என்றேன். அது தெலுங்கு, உங்களுக்குத் தெரியாது தம்பி என்று என்னை அடக்கி விட்டார்.

முகேஷ் நினைவுக் கூட்டத்தில் நானும் பாடுவேன் என்று உட்கார்ந்து விட்டார். நல்ல வேளையாக இருபதம்சத் திட்டப் பாடல்களை சிங்கம்புலி இசைக்கத் தொடங்கியதும் வயிற்றைக் கையால் பிசைந்தபடி அவசரமாக எழுந்து போனார் நாராயணன். எமர்ஜென்சி கீதங்களுக்கு என்ன எல்லாம் உபயோகம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன