புதிய சிறுகதை : தேங்காய் ரம் : இரா.முருகன்

10.06.2018 காமதேனு வார இதழில் பிரசுரமாகியுள்ளது

தேங்காய் ரம் இரா.முருகன்

முன்பனிக்கால சனிக்கிழமை சுகமான வெய்யிலோடு விடிந்தது. நடு ராத்திரிக்கு அப்புறம் தூங்கியது போதுமானதாக இல்லை என்று உடம்பு புகார் செய்தது.

நேற்று தாகசாந்தி கொஞ்சம் அதிகம். அருணன் வருவதாக உறுதியளித்து, கடைசி நேரத்தில் ஃபோன் செய்து வருவதற்கில்லை என்று சொல்லிவிட்டான். அவனுக்காக வாங்கி வைத்த தேங்காய் ரம் என்ற வினோதமான திரவத்தை முழுக்க அருந்த நான் மட்டும் தான் இருந்தேன். அப்புறம் தான் கஸ்டமர் நாதமுனி வந்து சேர்ந்து கொண்டான்.

தெருவோடு போனவன் நாதமுனி. வெள்ளிக்கிழமை சாயந்திரம் லுங்கி உடுத்திக் கொண்டு சமயாசமயத்தில் அதையும் மடித்துக் கட்டிக்கொண்டு, இங்கிலாந்து யார்க்ஷையர் பிரதேச கால்டர்டேல் நகரத்தில் லாந்திக் கொண்டிருப்பதில் அவனுக்கு அலாதி மகிழ்ச்சி. எப்போதாவது வெள்ளைக்காரன் யாராவது கேலியாக சிரித்தபடி எதிர்ப்பட்டுப் போவான். காரில் புளிமூட்டை போல ஏழெட்டு பாகிஸ்தானிகள் அடைந்து போகும் குழுவில் யாராவது கண்ணாடியை இறக்கி, ’இந்தியா போடா நாயே’ என்று சத்தமிட, பதிலுக்குக் கெட்ட வார்த்தை சொல்லி காலைத் தரையில் தேய்த்து உமிழ்வதும் நாதமுனிக்குப் பிடித்த நடவடிக்கை தான்.

”சாயந்திரம் வீட்டிலே லைட் எரியுதேன்னு வந்தேன். இதென்ன தனியா உக்கார்ந்து குடிச்சுட்டிருக்கே”? அவன் கேட்டபடி உள்ளே வந்தபோது உட்காரச் சொல்லி தேங்காய் ரம் விளம்பினேன்

டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் அந்த கிரகசாரத்தை வாங்கும்போதே நான் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். தேங்காயை எங்கள் பிரதேசத்துச் சாப்பாட்டில் சகல இனத்திலும் சேர்ப்பார்கள் திருப்பணித்துறை பேக்கரி பன்னில் போடுவார்கள். மிட்டாயில் கலப்பார்கள். பிஸ்கட்டில் சேர்த்து நறநறவென்று சாப்பிடத் தருவார்கள். வேலை மெனக்கெட்டு அதை ரம்மில் சேர்ப்பார்களா?

சேர்த்திருக்கிறார்களே இந்த புத்திசாலிகள். மாலிபு என்று அமெரிக்கப் பெயர் வேறே. இங்கிலாந்தில் அமெரிக்கப் பெயர் சொல்லி ஒரு குண்டூசி கூட விற்க முடியாது என்ற மார்க்கெட்டிங் அடிப்படை தெரியாத மண்ணாந்தைகள்.

அவர்கள் மேல் இவ்வளவு கோபம் வந்திருக்காது. தேங்காய் ரம் ஏற்படுத்திய வயிற்றுப் பிரட்டலும் அதையும் தாண்டி ஏறும் கிறுகிறுப்புமே எரிச்சலின் காரணம் என்று சொல்ல நினைத்தேன் கஸ்டமர் நாதமுனியிடம்.

அவனைக் கஸ்டமர் நாதமுனி என்று விளிக்கக் காரணம் என்னைப் போல, அருணன் போல இந்தியாவில் கடைபோட்டிருக்கும் கம்ப்யூட்டர் கம்பெனி ஊழியன் இல்லை நாதமுனி. என்னை இங்கே ஒரு பெரிய வங்கியில் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டு அவர்கள் காலால் ஏவும் எந்த வேலையையும் தலையால் செய்ய நேர்ந்து விட்டிருக்கிறது எங்கள் கம்பெனி. நாதமுனி காலால் வேலை இடும் கஸ்டமர். பேங்கில் வேலை பார்க்கிறவன்.

நாதமுனி உதாரிலும் வீம்பிலும் எப்படியோ, குடியில், வாழ்க்கையிலேயே முதன்முதலாக மதுக்கடைக்குப் போனவனை விடவும் மோசம். தேங்காய் ரம் ஒரு மனுஷன் தலைக்கு ஏறி அவனை நெடுஞ்சாண்கிடையாக வாசலில் கிடத்தியது இதுதான் சரித்திரத்திலேயே முதல் நிகழ்ச்சியாக இருக்கும்.

என் இருப்பிடம் மேடும் பள்ளமும் விரவி இருக்கும் கால்டர்டேலில் ஒரு மேட்டுப் பிரதேசத்தில் அமைந்தது. போதையோடு இந்த லுங்கிக்காரன் வாசல் படியில் விழ, உருண்டு உருண்டு கீழே மெடிக்கல் ஷாப்பை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தவனை பாதையில் வரும் கார் நசுக்காமல் இழுத்து வருவது என் கடமையாகப் போனது. பின்னாலேயே ஓடி அவனை இழுக்கும்போது தான் சொன்னான் – நாளைக்க்கு ஆபீஸ் பக்கம் பழைய பொருள் விற்பனை.. போக மறக்காதே’.

ஏதோ உயிரை விடும்முன் சொல்கிற கடைசி வாக்கியம் போல் இதைச் சொல்லிவிட்டு அவன் கண்ணை மூட, வந்த ஒரு டாக்சியில் அவனை அடைத்து அனுப்பினேன். அப்புறம் நிம்மதியாக, வேறே என்ன, மிச்சம் தேங்காய் ரம் குடித்துக் கொண்டிருந்தேன். எப்போது உறங்கினேனோ தெரியாது. காலை விழித்துக் கொண்டபோது உத்தேசம் மணி எட்டு.

ஓட்ஸ் தூளையும் சர்க்கரையையும் சேர்த்துப் பால் இட்டுக் காய்ச்சிப் பாயசமும் சுட்ட ரொட்டிகளும் ஆரஞ்ச் மர்மலேடுமாகப் பசியாறியபோது இன்னும் கொஞ்சம் ரம் அருந்தலாம் என்று தோன்றியது. அப்போது தான் இன்னொரு விஷயமும் புரிய வந்தது. இத்தனை வசவோடும் திட்டோடும், நானும் அந்த மாலிபு தேங்காய் ரம்மின் சுவையில் மானசீகமாக ஈடுபட்டிருக்கிறேன்.

நிமிஷத்துக்கு நிமிஷம் தேங்காய் ரம் குடிக்க வேணும் என்று புத்தி ஆணையிட மனதில் ஆவலும் சந்தோஷமும் இனம் புரியாதபடிக்கு முட்டி மோதியது. ’டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் இன்னும் திறந்திருக்காது, ரம் கிடைக்காது’ என்று மூளையைச் சலவைக்குப் போட அது சிலிர்த்தெழுந்து, ’ஊரில் ஒரே ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தானா? அருகே செயின்ஸ்பரி சூப்பர் மார்க்கெட் இருபத்து நாலு மணி நேரமும் அடைக்காமல் இருப்பதல்லவா’ என்று கேட்டது.

மனம் ஆட்டுவிக்க, பைஜாமாவும் டீஷர்டும் மேலே ஸ்வெட்டருமாக வெளியே வந்து கதவைப் பூட்டி விட்டு நடக்க ஆரம்பித்தேன். செயின்ஸ்பரி மினி சூப்பர் மார்க்கெட் வாசலைக் கடக்கும்போது மனம் கிடந்து தேங்காய் ரம் என்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.

உள்ளே போய்க் கை உதற அந்த மதுபானப் பாட்டில் எங்கே என்று தேடினேன். காணவே இல்லை. என்ன வேணும் என்றாள் ஒடிசல் தேகப் பெண். வந்த காரியத்தைச் சொன்னேன். இருக்கு ஆனால் இல்லே என்று எக்சிஸ்டென்ஷியலிசம் பேசினாள்.

”கோடவுனில் இருந்து எடுத்து வரணும். ஒரு அஞ்சு நிமிஷம் அங்கே இங்கே எங்கேயாவது அலைந்து விட்டு வந்தால் தருகிறேன்”, என்றாள் அவள்.

வெளியே வந்தேன். இடப்புறம் மார்க்கெட், நகராட்சிக் கட்டிடம் என்று ஊர் தாழ்ந்த தரை நோக்கி விரிந்து கொண்டிருந்தது. பத்து அடி அங்கே நடந்து திரும்பிப் பார்த்தால் நான் நிற்குமிடம் குன்றின் உச்சி போல் தெரியும்.

வலது புறம் பார்க்க, மேலே மேலே உயர்ந்து கொண்டு போன இடத்தில் நான் வேலை பார்க்கும் வங்கியும் பின்னாலேயே சாக்லெட் தொழிற்சாலையும் நடுவில் பரந்த புல்வெளியும் மேட்டில் ஒய்யாரமாகக் காட்சியளித்தன.

புல்வெளியில் பத்து கார்களும் நான்கு வேன்களும் ஒரு மினி ட்ரக்கும் நின்று கொண்டிருந்தன. எல்லா கார்களின் பின்பகுதியும் திறந்து அதுவும் இதுவுமாகப் பழைய பொருட்கள். அட்டவணை வேண்டுமென்றால் இதோ – இண்டக்ஷன் ஸ்டவ், ஈரத் தலை காயவைக்க யந்திரம், எலக்ட்ரிக் அரிசி குக்கர், முட்டை அடிக்கிற சிறு எலக்ட்ரிக் மத்து, ஓரமாக கோக்கோ கோலாவோ எதுவோ விழுந்து கரைபட்ட புத்தம்புது மெத்தை, தலையணை, நாலு டப்பா பல சைஸ் ஸ்க்ரூ ஆணிகள், காமிக்ஸ் புத்தகக் கட்டு, பெரிய முரசு, கிளாரினெட், அழகான பழைய டெலிவிஷன் பெட்டி, வால்வ் ரேடியோ…

நான் டெலிவிஷன் பெட்டி இருந்த காரை அடுத்துப் போனேன். இருப்பதிலேயே நீளம் குறைந்த நிஜார் உடுத்திய ஒரு கிழவர் பைப் பற்ற வைத்தபடி எஸ் என்றார். நான் எதற்கும் இருக்கட்டும் என்று, காலை வணக்கம் சொல்லிக் கையசைத்தேன். பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வருகிறாயா என்று கேட்டார் அவர். இந்தியா. அவர் மேலப் பரம்பில் தாமோதரன் நம்பூதிரி தெரியுமா என்பது மாதிரி ஒரு பெயர் சொன்னார். விலாசம் கொடுத்தால் பரிசயமுண்டாக்கிக் கொள்வேன் என்றேன். ”வேண்டாம், அவரை அறிமுகப்படுத்திக் கொண்டபிறகு தான் நான் மிடாக் குடியனானேன்”, என்று எனக்குச் சம்பந்தமில்லாத சமாசாரம் சொன்னார்.

அந்த டெலிவிஷன் பெட்டி? கிட்டத்தட்ட முப்பது வருடம் முன்னால் வாங்கியதாம். கருப்பு வெள்ளை தான். படம் துல்லியம். சத்தம் அசாத்தியமாக கணீர். என்ன, சத்தம் இருந்தால் படம் வராது. படம் இருந்தால் சத்தம் வராது. அப்போதெல்லாம் என்ன செய்யணும்?

இரண்டு மரக் குச்சிகளை எடுத்து நீட்டினார். தவில் வாசிக்கிற மாதிரி அவற்றால் இரண்டு பக்கமும் பெட்டியை அடித்தால் சரியாக வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால்? டி.வியோடு ரேடியோவும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் காலத்து வானொலி. டிவியில் படம் தெரிய, ரேடியோவில் எப்போதும் சிம்ஃபனி ஆர்கெஸ்ட்ரா ஒலிபரப்பாக, இரண்டும் ஒன்றோடு ஒன்று இசைந்தே வருமாம். சரி, எவ்வளவு தரணும் சார்?

பனிரெண்டு பவுண்ட் என்றார். நான் ஒரு பத்து பவுண்ட், ஒரு ஐந்து பவுண்ட் கரன்சி நோட்டுமாக எடுத்துக் கொடுத்தேன். அவரிடமோ என்னிடமோ சில்லரை இல்லை.

வா, உன்னை வீட்டில் கொண்டு விடுகிறேன் என்றபடி அவருடைய விற்பனையை மூடி வைத்து விட்டுக் கிளம்பினார். போகும் வழியில் ஒரு வினாடி நிற்கச் சொல்லி தேங்காய் ரம் வாங்க செயின்ஸ்பரிக்குள் போனேன். அவரும் கூடவே வந்தார். மூன்று பவுண்ட் ரம் விலைக்கு அவருடைய டெபிட் கார்டை தேய்க்கக் கொடுத்தார்.

கணக்குத் தீர்ந்த நிம்மதியில் வீட்டில் என்னையும் நான் வாங்கிய தளவாடங்களையும் இறக்கி விட்டுக் கிளம்பினார். நான் டிவியை ப்ளக் பொருத்தி இயக்கினேன். உஸ் என்று சத்தம். படம் எதுவும் இல்லை. ரேடியோவைத் தட்டியதும் மொஸார்ட் ’ஜி.மேஜர்’ ஆதார ஸ்வரத்தில் சிட்டைப்படுத்திய பத்தாவது சிம்ஃபனியை லண்டன் இசைக்குழு இசைக்க, படுக்கையறைக்குப் போனேன். மேலே பறந்த கரப்பான் பூச்சிகளை மருந்தடித்து ஓட்டி விட்டுப் படுக்கையில் சாய்ந்தேன். பசி என்றது வயிறு.

ப்ரிட்ஜில் வைத்த பர்கர், கோழி பக்கோடா, அரை பிட்ஸா சாப்பிட்டு சோர்வு அகல, வாங்கிய தேங்காய் ரம் பாட்டிலைத் திறந்தேன். கொஞ்சம் கோவா பக்க முந்திரிப்பழ ஃபென்னி வாசனை, நல்ல கள் வாசனை, சற்றே ரம் வாசனை, அக்குளில் அடித்துக் கொள்ளும் செண்ட் வாசனை என்று கலவையாக அது கந்தம் உருவாக்கி அழைத்தது. பெரிய தாத்தா தேங்காய் உடைத்ததும் எவர்சில்வர் டம்ப்ளரில் தரும் தேங்காய்த் தண்ணீர் வாடையும், லேசான இனிப்புமாக அந்த திரவம் உள்ளே புக, நான் யாரோ ஆனேன்,

தேங்காய் ரம் மாந்திய கிறுகிறுப்பு தலை குப்புறப் புரட்டிப் படுக்கப் போட்டது. பகல் தூக்கம், பின்மாலை, ராத்திரி உறக்கமாக நீட்சி கொண்டது. வீடு முழுக்க இருளோ என்று கிடக்க விழித்துக் கொண்டேன்.

தலை கனக்க முன்னறைக்கு வந்தேன். கடியாரம் ராத்திரி பனிரெண்டு மணி பத்து நிமிடம் என்றது. ஏதோ சத்தம். வெளிச்சம். குழம்பிப் போய்ப் பார்த்தேன் பழம்பொருள் விற்பனையில் வாங்கிய டெலிவிஷன் பெட்டியில் வெய்யில் காயும் பாலைவனம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்தது.

எகிப்திய மன்னனின் சவ ஊர்வலம் அங்கே. அரசன் டுடங்கமுனின் பதப்படுத்தப்பட்ட உடல் ஆடி ஆடி முன்னால் போனது. அந்த இருளும் வெளிச்சமும் சேர்ந்த நிலவறைகளில் யார்யாரோ ஓடி நடந்து கொண்டிருந்தார்கள். எகிப்துக்காரர்களில் சிலர் நீள மூக்கோடு நான் பிரியாணி வாங்குகிற ஆப்கான் கடைக்காரர் போல் டை கட்டி நின்றார்கள். ஆராவமுது வாத்தியார் சாயலில் ஒருவரோ அவரோ புளியோதரை கிண்டிக் கொண்டு என்னை உற்றுப் பார்த்தார். படுத்தபடி போன டுடங்கமுன் என்னைப் பார்த்து ”பழைய தேங்காய் ரம் வேணுமா?”, எனக் கேட்டான். நான் வேணும் என்று சொல்வதற்குள் டெலிவிஷன் பெட்டிக்குள் தலைகுப்புற விழுந்தேன். டுடங்கமுன் பக்கத்தில் உயரமான கோப்பைகளில் திரவம் நிறைத்திருந்தது. ”தேங்காய் ரம்தானே?”, என்று மன்னனைக் கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. நாதமுனி குரலில், பழைய டெலிவிஷன் விற்றவர் குடிக்கச் சொன்னார். அந்தப் பாத்திரத்திலிருந்து நான் குடிக்கும்போது முகத்தில் டுடங்கமுன் போல் சவத்திரை கவிந்தது. அது பொன்னால் வேய்ந்த திரை என்றாலும் இறுகக் கவ்வி வலியை ஏற்படுத்தியது. ரேடியோ சத்தம் உச்சத்தில் கேட்க, வின்ஸ்டன் சர்ச்சில் குரல் – ”நாம் அவர்களோடு கடற்கரையில் போரிடுவோம். தெருக்களில் போரிடுவோம்”. இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் அது. தாக்கிப் பறக்கும் ஜெர்மன் விமானங்களின் சத்தம் நாராசமாகச் சூழ இன்னும் கொஞ்சம் தேங்காய் மது பருகினேன். ஆராவமது புளியோதரை கிண்டி இறக்கி வடாம் பொறித்துக் கொண்டிருக்க நடுவே புகுந்து பாத்ரூமுக்குப் போனேன். வந்து வடாம் தின்னு என்றார் அவர். அவர் பக்கமாக வராமல், ஊர்வலம் போன திசையில் தலை வைத்து உறங்கிப் போனேன்.

இது ஞாயிறு காலை. முன்னறைத் தரையில் படுத்திருந்த நான் விழித்துக் கொண்டேன். அறை முழுக்க தேங்காய் ரம் வாடை. மின்சார இணைப்பில் இல்லாத பழைய டெலிவிஷன் பெட்டியும் ரேடியோவும் பிரம்மாண்டமாக அந்த வாடையைக் கிளப்பியபடி நின்றன. உள்ளே போய் ப்ரிட்ஜில் பார்த்தேன். நேற்று வாங்கிய தேங்காய் ரம் போத்தல் திறக்கப்படாமல் பத்திரமாக உள்ளே இருந்தது. கூடவே இருந்த உயரமான, மூக்கு நீண்ட பாத்திரத்தையும் அதன் உள்ளே காடிபோல் வாடையடித்து இருந்த திரவத்தையும் பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டேன். ஞாயிற்றுக்கிழமை நான் குடிப்பதில்லை.

இரா.முருகன்
eramurukan@gmail.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன