நீங்க எத்தனை காலமா தேவ ஊழியம் செஞ்சுக்கிட்டிருக்கீங்க. கிறிஸ்துநாதர் மாதிரி ப்ராக்டிகல் ஆக எதாவது எங்களுக்கு சொல்லுங்க ஃபாதர்

An excerpt from the translation done today

போப்பாண்டவர்கள். போப்பாண்டவர்கள். பிலாத்தோஸ் பாதிரியார் வசித்த சர்ச் மேல்தளத் தாழ்வாரச் சுவரில் வரிசை வரிசையாகப் பல போப்பாண்டவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. முதல் படம் அப்போஸ்தலரான புனித பத்ரோஸ் என்ற பேதுருப் புனிதரின் ஓவியம். அடுத்து முதல் போப்பாண்டவர்களின் சிறு ஓவியங்களைச் சேர்த்து உருவாக்கிய பெரிய படம். பதிமூன்றாம் லியோ போப்பாண்டவரின் படத்திலிருந்து தொடங்கி, மற்ற ஓவியங்கள் பெரியதாக இருந்தன. பதினொன்றாம் ப்யூஸ் ஓவியத்தோடு போப்பாண்டவர்களின் படங்கள் முடிந்தன. அதற்கப்புறம், செங்கோலும் மணிமுடியும் தரித்த ஏசு ராஜாதிராஜனுடைய ஓவியம். அந்தப் படத்தின் கீழே தான் நாற்காலியில் பிலாத்தோஸ் பாதிரியார் அமர்ந்திருந்தார். எதிரே இருந்த நாற்காலியில் அப்பூப்பன் இருந்தார். அவருக்குப் பின்னால் புடவைத் தலைப்பை முக்காடாகப் போட்டுத் தலை மறைத்தபடி அம்மா. அம்மாவைத் தொட்டுக்கொண்டு நானும் நின்றேன்.

“ஃபாதர், ஜெசிக்காவோட ஜீவிதத்திலே சில காரியங்கள் நடந்து போச்சு.அவ இப்போ கொஞ்சம்கூட சந்தோஷமா இல்லே”, என்றார் அப்பூப்பன். பிலாத்தோஸ் பாதிரியார் கைகழுவி விட்டு வந்து சொன்னார் : “ஜெசிக்கா ஹாப்பி இல்லே. அதுனாலே?”

“இந்த வயசுலே சந்தோஷமா இல்லேன்னா வேறே எப்போ இருக்கப் போறா? பரீட்சையிலே விடைத்தாளிலே சிவப்பு மையாலே கோடு போட்டு அடிக்கற மாதிரி அந்த கணக்கு புஷ்பாங்கதன் ஜெசிக்காவோட சந்தோஷத்தைக் காணாமப் போக்கிட்டார். ஃபாதர், கணக்கு களவாடின வீட்டுக்காரங்களான நாங்க எப்பவும் திருச்சபை மாதாவோட புள்ளைங்களாத்தான் இருந்துக்கிட்டிருக்கோம். ஃபாதர், நீங்க இந்த விஷயத்திலே தலையிடணும்”.

“திருச்சபைக்கு இப்போ முன்னே மாதிரி மதிப்பு இருக்குதா, வலிய ஆசாரி? விசுவாசிகளோட அன்றாட ஜீவிதப் பிரச்சனைகளிலே திருச்சபை தலையிடக்கூடாதுன்னு உங்களுக்குள்ளே முற்போக்குன்னு சொல்லிக்கறவங்க கொஞ்ச நாளா பிரசங்கம் பண்றாங்களே?” பிலாத்தோஸ் பாதிரியார் கேட்டார்.

”முற்போக்குக்காரங்களை விட்டுத்தள்ளுங்க ஃபாதர். நீங்க பூரண சுதந்திரத்தோடு தலையிடலாம் இதிலே. நான் எழுதித் தரேன்”., அப்பூப்பன் சொன்னார்.

“மார்க்கோஸ் ஆசாரி, நான் என்ன செய்யணும்னு சொல்றீங்க?” பிலாத்தோஸ் பாதிரியார் கேட்டார். “அந்த ஆள் ஊரறிஞ்ச பாவின்னு நோட்டீஸ் அடிச்சு சர்ச் சுவர்லே ஒட்ட முடியுமா? வருடாந்திர பாவ சங்கீர்த்தனத்தைச் செய்ய விடாம தடுக்க முடியுமா? அவன் செத்துப்போனா திருச்சபை கல்லறையிலே புதைக்க விடாம வெளியிலே அடக்கம் செய்யச் சொல்ல முடியுமா? இதெல்லாம் அவன் நம்ம ஆளா, கத்தோலிக்க கிறிஸ்துவனா இருந்தாத்தானே செய்ய முடியும்?”.

பிலாத்தோஸ் பாதிரியார் மீண்டும் கையலம்பி விட்டு உடனே திரும்பி வந்தார். அப்பூப்பன் சொன்னார்: “அவருக்கு திருமுழுக்கு கொடுத்து கத்தோலிக்க கிறிஸ்துவராக்கி அவர் மேலே இந்த கத்தோலிக்க நடவடிக்கை எடுக்கப் போறோமா என்ன? ஃபாதர், நம்மோட கர்த்தரான ஏசு கிறிஸ்து எவ்வளவு சிம்பிள் ஆக பைபிள்லே உவமைக்கதை எல்லாம் சொல்லியிருக்கார்? நீங்க எத்தனை காலமா தேவ ஊழியம் செஞ்சுக்கிட்டிருக்கீங்க. கிறிஸ்துநாதர் மாதிரி ப்ராக்டிகல் ஆக எதாவது எங்களுக்கு சொல்லுங்க ஃபாதர்”.

“ப்ராக்டிகல்லா ஒண்ணே ஒண்ணு மட்டு சொல்வேன்”, பிலாத்தோஸ் பாதிரியார் சொன்னார். “நீங்க இந்த சம்பவத்தை மறக்கப் பாருங்க. இதை பலரும் சொல்லிக் கேட்டிருப்பீங்க”.

“எனக்கும் அதுதான் தோணுது ஃபாதர். இந்தப் பொண்ணோட அப்பன் கிட்டே நல்ல விதமா சொல்லுங்க” என்றாள் அம்மா.

‘Lanthan Batheriyile Luthiniyakal’ – N.S.Madhavan – being translated into Tamil by Era.Murukan – ‘பீரங்கிப் பாடல்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன