வாக்கையன் குறிப்புகள்

 

Yugamayini column – ஏதோ ஒரு பக்கம் -10

மழை இல்லாத நவம்பர் ஞாயிறு காலைப் பொழுது. வெக்கையும் புழுக்கமுமாக விடியும் கோடைகாலம் விடை பெற்றுப் போனதில் வருத்தமில்லை. மழை தொடர வேண்டும் என்ற பிரார்த்தனைகளுக்கும் குறைவொன்றும் இல்லை. இன்னும் ஒரு ஈடு திருப்பதிப் பெருமாளிடம் இறைஞ்ச அவன் வாயிலில் ஒரு நிமிடம். பெருமாள் நல்ல பெருமாள். வருடா வருடம் பிரம்மோற்சவத்துக்காகத் திருப்பதிக் குடை வழக்கம் போல் வால்டாக்ஸ் ரோடு, ஆனைக் கவுனியைத் தாண்டினாலும் இவரைத் திருப்பதியிலிருந்து பருந்து எடுத்துப்போய் சென்னை மாம்பலத்தில் இறக்கிவிட இங்கே கிளை அலுவலகம் திறந்தவர். சொந்தக் கல்யாண உற்சவத்தைக்கூட பக்தர்கள் சவுகரியத்துக்காக சென்னை தீவுத் திடலில் நடத்த ஒத்துழைப்பவர்.

பச்சை மாமலைபோல் மேனி. குட் மார்னிங். கமலச் செங்கண். கூரியர்லே செக் அனுப்பிட்டேனே. ஆயர் தம் கொழுந்தே. ஃபாலோ பண்ணுங்க. அச்சுதா.

ஹேண்ட்ஸ் ஃப்ரீ மொபைலில் பேசியபடி எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு யாரோ வழிபாடு நடத்துகிற சத்தம். ஓகே பை. டேக் கேர். அரங்க மாநகருளானே.இரண்டு குறுக்குத் தெருக்களை நிதானமாகக் கிடந்து உஸ்மான் வீதிக்கு வந்தபோது புது மேம்பாலத்தில் அசமஞ்சமாக ஒரு பழைய கறுப்பு அம்பாசிடர் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. மாருதியும் ஹுண்டாயும் இன்ன பிற சொகுசு வண்டிகளும் ஊர் முழுக்க சீறிப் பாய்ந்து கொண்டிருந்தாலும் வழக்கொழிந்து விடாமல் நானும் இருக்கிறேன் என்று அம்பாசிடர் இன்னும் திடகாத்திரமாக மூச்சு விட்டபடி மல்லுக்கட்டுகிறது. ஆனாலும் கறுப்பு அம்பாசிடர் அபூர்வம். கறுப்பு அன்னம் மாதிரி. கறுப்பு அன்னத்தை யாரும் பார்த்ததில்லை. உலகம் முழுக்க ஆயிரம் வருஷமாக, அதற்கு மேலாக வெள்ளை அன்னம் தான் கண்ணில் படுகிறது. ஆகவே அன்னத்தின் நிறம் வெள்ளை என்று பல கோடி தடவை நிரூபிக்கலாம் இல்லையா? செய்யலாம் தான். ஆனால் ஒரு கறுப்பு அன்னத்தை எங்கேயாவது பார்த்தாலும் காலகாலமாக உறுதிப்படுத்திய கோட்பாடு ஒரு நொடியில் தகர்ந்து ஒன்றுமில்லாமல் போய்விடுமே. ப்ளாக் ஸ்வான் எஃபெக்ட், ப்ளாக் அம்பாசிட்டருக்குப் பொருந்த இன்னும் நூறு வருடம் பிடிக்கலாம். அதுவரை பல ஆயிரம் அம்பாசிடர்கள் இங்கே ஓடிக் கொண்டிருக்கும். சந்தேகமே இல்லை.

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் உபயோகிப்பது கறுப்பு அம்பாசிடர்தான். அவருடைய பழைய கார் இனியும் நகராது என்ற அந்திம கட்டத்துக்கு வந்தபோது டைம்ஸ் ஆப் இந்தியா நிர்வாகிகள் அவருக்கு விலை உயர்ந்த சொகுசு காரைப் பரிசளிக்க முன்வந்தார்கள். லக்ஷமண் மறுத்து விட்டார். அம்பாசிடர் தான் வேணும். அவர் வீட்டு வாசலில் அம்பாசிடர் காரை நிறுத்திவிட்டு அழைப்பு மணியை அழுத்தினார்கள். வெள்ளை அம்பாசிடர். புத்தம் புதுசு. இது வேணாம். கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலர். கார்ட்டூன்காரர் குழந்தையாக அடம் பிடித்தார். கார்க் கம்பெனியிலேயே கறுப்புக் கார் உற்பத்தியை நிறுத்தி ஏகப்பட்ட வருஷம் ஆச்சு. அப்போ புதுக் கார் வேணாம். எடுத்துட்டுப் போங்க. வெளுத்த காரை பெயிண்டில் குளிக்க வைத்து கறுப்பாக்கி திரும்ப அவர் வீட்டு வாசலில் நிறுத்தினதாக எப்போதோ எங்கேயோ படித்த செய்தி. மேம்பாலத்துக் கறுப்புக் காரும் இதே போல் பெட்ரோலும் பிடிவாதமும் சரிவிகிதத்தில் கலந்து ஓடிக் கொண்டிருக்கும்.

பாலத்தை ஒட்டி ஹோட்டல் வாசல் பக்கம் பத்திரிகை விற்கும் கடை. காலைப் பத்திரிகை வாங்குகிறவர்களில் பலரும் ஒரு சிகரெட்டையும் வாங்கிப் பற்றவைத்துக் கொள்கிறார்கள். அப்புறம் பெங்களூர் குதிரைப் பந்தயக் கையேடு கேட்கிறார்கள். இரண்டுக்கும் இங்கே தடை ஆச்சே? அது பாட்டுக்கு அது.

ஷட்டர் இறக்கி இருந்த துணிக்கடை வாசலில் கர்ம சிரத்தையாக இரண்டு பேர் நடைபாதையைப் பெருக்கித் தண்ணீர் அடித்துக் கழுவுவது கண்ணில் படுகிறது. நடைபாதை முடிகிற இடம் புதுசாகத் தார் போட்ட தெரு. அங்கே போன வாரம் பெய்த மழைத் தண்ணீர் இன்னும் முழுக்க வடியாமல் குளம் கட்டி நிற்கிறது.

ஏம்பா, எம்மா நேரமா கடை வாசலை க்ளீன் பண்ணிட்டு இருக்கோம். அல்லாரும் செருப்பு மாட்டிக்கினு சுகூரா அத்த மிதிச்சுக்கினு போறீங்க. படிச்சவங்கதானே.

பின்னால் துரத்தும் குரல். படிச்சவங்க தான். நடைபாதை நடக்கப் போட்ட சமாச்சாரம். அதை கடைவாசல் ஆக்கினது கடை முதலாளி. தள்ளுபடி விலையில் துணி விற்கிற கடையில் படிக்கட்டை சுத்தமாக்கிக் கோலம் போட்டு வைக்கட்டும். சுத்தமான கடைவாசல் அதையும் தாண்டி நடைபாதையில் ஏன் முடியணும்? நடைபாதையை மிதிக்காமல் மிதந்தபடி எப்படி பாதையைக் கடக்கிறது? லெவிடேஷன் கனவிலும் கதையிலும் மட்டும் ஏன் வர வேண்டும்?

பனகல் பார்க் பக்கம் திரும்ப, இன்னொரு அடைத்த கடை. தங்கம் விற்கிற இடம். புழுதியைச் எல்லா திசையிலும் வினியோகித்துக் கொண்டு நீளமான வாரியலால் நடைபாதையைப் பெருக்கித் தள்ளியபடிக்கு இங்கேயும் ரெண்டு பேர். எனவே முன் ஜாக்கிரதையாக நடைபாதையை விட்டு இறங்கித் தெருவில் தொடரும் நடை.

சார், ப்ளாட்பாரத்திலே போங்க. மார்னிங் டைம்னாலும் அவனவன் மாமியாருக்குப் பிரசவ நேரம் மாதிரி வண்டியை வெரட்டிக்கினு வருவான். அவனுக்கு டர்னிங்லே ஸ்டியரிங் ப்ரேக் கண்ட்ரோல் இல்லாமப் போனா, நம்ம கதை கந்தலாயிடும்.

மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து உட்கார்ந்தபடி மூக்குப் பொடி போட்டுக் கொண்டிருக்கும் போக்குவரத்து போலீஸ்காரர். தும்மல் முன்பாரம் பின்பாரமாகக் கூடவே வரக் கரிசனமாகச் சொல்கிறார். ரொம்ப ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்படியும் ஒரு ஆச்சரியம். ஞாயிற்றுக்கிழமை காலையில் டிராபிக் போலீஸ்காரரை தரிசித்ததில் இல்லை. மூக்குப் பொடியும், அதை சுகமாக மூக்கில் ஏற்றுகிற போலீஸ்காரர்களும், அதான் சொன்னேனே, வழக்கொழியவில்லையா?

அடைத்த நகைக்கடையைப் பார்க்கிறேன். பூட்டிய கதவுக்கு வெளியே போட்ட மர பெஞ்சில் நடுவயசுப் பெண்மணி ஒருவர் தனியாக உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் வைத்த பிளாஸ்டிக் கூடையில் தண்ணீர் போத்தல் எட்டிப் பார்க்கிறது. விடிகாலையிலேயே தங்கம் வாங்க முந்தி வந்து இடத்தைப் பிடிக்க காரணம் என்ன அம்மணி? கடை திறந்து கூட்ட நெரிசல் மும்முரமாவதற்குள் நகை வாங்கிப் போகவா? வருகிற தை மாதத்தில் நடக்கப் போகும் மகள் கல்யாணத்துக்குச் சேர்க்க வேண்டிய லிஸ்டில் ஒரு ஐட்டத்தை முடிச்சாச்சு என்று டிக் செய்வீங்களா? இல்லை, நேற்று வாங்கின நகையில் ஏதாவது சந்தேகமா?

சரி, நீ கிளம்பிப் போய் ஐயனாவரத்துலே உங்கம்மாவப் பாரு. ரோதனை தாங்கலை. பீட்டுலே நிக்கும்போது செல்லுலே கூவுது. வயசான காலத்துலே அத்த யாருமே கவனிச்சுக்கறதில்லையாம். பர்சை கூடையிலே போடாதே. காசு பத்திரம்.

டிராபிக் போலீஸ்காரர் பொடிமட்டையை மோட்டார் சைக்கிள் பெட்டிக்குள் வைத்தபடி சொல்ல அந்தம்மா எழுந்திருக்கிறார். இவ்வளவுதானா? பொடிக்கார போலீஸ் வண்டியை ஸ்டார்ட் செய்கிறார். மாமியார் பிரசவமாக இருக்காது.

நகைக்கடை பக்கம் காம்பவுண்ட் சுவர் எழுப்பி இன்னொரு வளாகம். உள்ளே வரிசையாக வண்டிகள். கசங்கிய காக்கி யூனிபார்ம் அணிந்த செக்யூரிட்டி கார்ட் ஒரு ஸ்கூட்டர் ரியர் வ்யூ கண்ணாடி முன் குனிந்து நிற்கிறார். கையில் ரேசரைப் பிடித்து முகம் மழித்துக் கொண்டிருக்கிறார். பூபென் கக்கரோ வைத்தீஸ்வரனோ பார்த்தால் ஓவியமாக்கி இருப்பார்கள். வைத்தீஸ்வரன் சார் ஓவியத்தோடு தன் தொகுப்பான ‘நகரச் சுவர்க’ளுக்கு நீட்சியாக ஒரு கவிதையும் எழுதக்கூடும். பூபேன். வேண்டாம். இறந்து போய்விட்டார் அந்த சர்ரியலிச ஓவியர்.

பனகல் பார்க்கைப் பார்த்தபடி நிற்கும் கடைவரிசையை வலம் வந்து மறுபடி வெங்கட்நாராயணா வீதி. தினசரி மதுரைக்கும் திருச்சிக்கும் டூரிஸ்ட் பஸ் சர்வீஸ் நடத்தும் கம்பெனி வாசலில் பஸ் வந்து நிற்கிறது. கலைந்த தலையும் அசதியுமாக தோல்பையைத் தோளில் மாட்டியபடி இறங்கியவர்கள் ஆட்டோ பிடிக்காமல் நடக்க அவசரப்படுகிறார்கள். பக்கத்தில் எப்போதும் போல் பார்சல் இறக்கிக் கொண்டிருப்பது தொடர்கிறது. வாரம் முழுக்க பார்சலில் அனுப்பிப் பெற சென்னைக்கும் மதுரைக்கும் நடுவே பஸ்ஸில் பயணம் செய்கிற பொருட்களை வரிசைப்படுத்தவும். காப்பி குடிச்சுட்டு வந்து முதல் காரியமா முடிச்சுடு என்று கிளீனரிடம் சொல்லியபடி டிரைவர் தெரு ஓரத்து டீ ஸ்டாலுக்கு நடக்கிறார்.

நடேசன் பூங்கா. உள்ளே சின்ன பிள்ளையார் கோவில் வாசலில் குருக்கள் தயாராக வீபுதித் தட்டோடு நிற்கிறார். ஞாயிற்றுக்கிழமை வசூல் ஆர்வம் முகத்தில் எழுதியிருக்கிறது. பக்கத்து ஸ்டூலில் வைத்த டேப் ரிக்கார்டரில் ஓம் கணநாதாய நம என்று திரும்பத் திரும்ப லூப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அழைத்துக் கொண்டிருக்கிறார். பூங்காவில் வாக்கிங் போகிறவர்கள் பிள்ளையாருக்கு கும்பிடும் தட்டில் தட்சணையும் காணிக்கையாக்கி, குளிக்காமல் வீபுதி பூசிய நெற்றியோடு நடக்கிறார்கள். திரிபலா சூர்ணத்தை தேன் இல்லாம சாப்பிடலாம். உரக்கப் பேசியபடி வாக்கிங் போகிற பெண்மணிகளைக் கொஞ்சம் வேகமாகக் கடந்து முன்னால் நடக்க, கூடுவாஞ்சேரிப் பக்கம் அரை கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தாரு. வீடு கட்ட ஆரம்பிச்சு செத்துட்டாரு பாவம். இன்னொரு நடமாடும் அரட்டை அரங்கம். எட்டுப் பேர் கொண்ட குழு. நடை வேகத்தைத் திரும்பக் குறைக்க, திரிபலாதி சூரணம் சாப்பிட்டு அரை மணி நேரம் கழிச்சு ஒரு ஸ்பூன் சியவனப்ராசம். ஆர்ய வைத்யசாலை சூரணம் இம்ப்கோ சூரணத்தை விட சுறுசுறுன்னு நெய் மணக்க இருக்கும். இவர் பட்சணம் மாதிரி முழுங்கிடறார்.

பூங்கா வெளியே கையில் பிடித்த நோட்டீஸ்களோடு சிலபல பேர் நிற்கிறார்கள். சலுகை விலைக்கு செல்போன், டிடிஎச், சுலப மாதத் தவணைக்கு பென்ஸ் லாரி. விநியோகிக்கும் இளைஞர், இளம் பெண்களுக்கு நன்றி சொல்லி ஒரு கத்தை கடுதாசோடு கடந்தால் திரும்ப வழிமறிப்பு. நடுவயது மிடில் கிளாஸ் மாமாக்கள். ஒற்றை மாமி. இவங்களும் பார்க்கில் நோட்டீஸ் விநியோகிக்க வந்தாச்சா? யோகா கிளாஸ், எய்ட்ஸ் விழிப்புணர்வு, பல்ஸ் போலியோ?

நூத்து எண்பத்தோரு நாள் டிபாசிட் செய்தால், பத்தரை சதவிகிதம் வட்டி.

அரசுடமை வங்கி ஆபீசர்கள் எல்லோரும். பைனான்ஸ் கம்பெனி மாதிரி ஞாயிற்றுக்கிழமை பூங்கா வாசலில் டெபாசிட் கான்வாசிங் நடத்த வந்தவர்கள். அரசு வங்கி ஊழியர்களின் ஒட்டுமொத்த முகம் மாறிக் கொண்டிருக்கிறது.

டெபாசிட் செஞ்சா, காமாட்சி விளக்கு பரிசு உண்டா?

கிடையாது. நீங்க அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு பனகல் பார்க்கிலே மீட்டிங் போட்டு பத்து சதவிகிதம் பணம் திருப்பித் தரணும்னு மன்றாடவும் வேணாம். நேஷனலைஸ்ட் பேங்க். டெபாசிட் தொகைக்கு டி.ஐ.சி.ஜி.சி மூலமா கவர்மெண்ட் உத்தரவாதம் கொடுக்கும். டி.ஐ.சி.ஜி.சி அப்படீன்னா.

வேணாம் மேடம். நானும் பேங்க் ஆபிசரா இருந்துதான் கட்சி மாறினவன்.

Then I should not be carrying coal to New Castle.

அவர் ஆங்கிலப் பழமொழியைச் சொல்லிச் சிரிக்கிறார். கொல்லர் தெருவில் ஊசி விக்கறது போல் என்ற நம்ம ஊர் சொலவடை இவருக்குத் தெரிந்திருக்காதா.

நிலக்கரி வளத்தோடு தொழிற்புரட்சி நேரத்தில் இங்கிலாந்தின் தொழில் மையமாக விளங்கிய நியூகாசிலில் இப்போது நிலக்கரிக்கான அவசியமே இல்லை. வேலை மெனக்கெட்டு அதைக் கொண்டு போனால் வாங்கி வீட்டு வரவேற்பறையில் வைக்க அங்கேயும் பழைய நினைப்பு பெரிசுகள் இருக்கக் கூடும். அது சரி, நம்ம ஊரில் அண்ணா தெரு, கே.கே.வீதி, ஜெ.ஜெ அவென்யூ, எல்லாம் உண்டு. கொல்லர் தெரு?

தூறல் ஆரம்பித்து சட்டென்று வலுக்கிறது. மழைக்காலம் மிச்சம் இருக்கிற நிம்மதி. போர்வை போர்த்திக் கொள்ளும் நடைபாதை காய்கறிக் கடைகளையும், திருப்பதிக் கோவில் வாசல் பூக்கடைகளையும் கடந்து சாவதானமாக நடை. மழையைத் தொடர்ந்ததற்காகக் கொண்டல் வண்ணனுக்கு நன்றி சொல்லும்போது பின்னால் ஒலிக்கும் பாட்டு. கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. மொபைல் பாடி அழைக்கிறது. ஹலோ, புரடெக்ஷன் மேனேஜர்தான் பேசறேன். சனியன் பிடிச்ச மழை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எல்லாம் அனுப்பியாச்சு. இப்போ பார்த்து இப்படியா? சலித்தபடி புரடக்ஷன் யூனிட் வண்டியை கிளப்புகிற சத்தம்.

வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் மழை விட்டிருக்கிறது. நன்றியைத் திரும்பக் கேட்கலாகாது. பெருமாள் நல்ல பெருமாள். முறை வைத்து, எல்லாருக்கும்.

(Yugamayini – Dec 08)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன