New: எப்படி எழுதினேன்?


எப்படி எழுதினேன்

என்.எஸ்.மாதவன்

எழுத்தில் நான் கடைப்பிடிக்கும் விதி அதில் சுய சரிதக் கூறுகளுக்கு இடமில்லை என்பதுதான். ஏலியட் முதலான படைப்புகளை வாசித்து, சுயமானதொரு ஆளுமையிலிருந்து தப்பி ஓடுவதே எழுத்து என்ற புரிதல், இளமையிலேயே எனக்குக் கிட்டியிருந்தது.

நான் பிறந்தது எர்ணாகுளத்தில். நீங்கள் நம்ப முடியாத நவீன நகரமாக அப்போது எர்ணாகுளம் இருந்தது. 1964-ல் எரணாகுளத்தில் இருந்த ஒரே ஒரு ரெகார்டிங்க் கம்பெனியில், அப்போது புகழ் பெற்ற பாப் இசைப் பாடகர்களான பீட்டில்ஸின் ஒரு இசைத்தட்டு வாங்கப் போயிருந்தேன். அவர்கள் வரவழைத்திருந்த ஐந்தோ அல்லது ஆறோ இசைத்தட்டுகள் வந்ததுமே பரபரப்பாக விற்றுப் போயிருந்தன. அவ்வளவு நவீனமான நகரம் அது.

அன்று வாசிப்பின் தொடக்க காலத்திலேயே எனக்கு வேறொரு குணம் உண்டாகியிருந்தது. நான் நான்காம் வகுப்பில் இருந்தபோது, அன்றைய கம்யூனிஸ்ட் மாநில அரசு இரண்டு அல்லது மூன்று அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழிவழிக் கல்வியைத் தொடங்கி இருந்தது. மிகச் சிறு வயதில் அப்படி ஒரு பள்ளியில் ஆங்கில மொழி கற்றதனால் எனக்குக் கிட்டிய பலன், நான் பத்தாம் வகுப்பில் இருக்கும் போதே ஆல்பர்ட் காம்யூ நூல்களை முதல் முறையாக வாசிக்க முடிந்தது. வாசித்துப் பெரிதாக எதையும் புரிந்து கொள்ளாவிட்டாலும் அப்படியான புத்தகங்கள் கிட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது.

என் வீட்டிலேயே ஓர் இலக்கியச் சூழல் நிலவியது. என் தந்தை வழிப் பாட்டி மிகப் பிரசித்தமான தர்க்கவியல் நிபுணராக இருந்தார். வாரணாசி பல்கலைக் கழகத்திலிருந்து சிறப்புப் பட்டம் பெற்றவர் அவர். ஆதி சங்கரரின் படைப்புகளுக்கு மலையாளத்தில் முதலாவது உரையாசிரியர் அவரே. இலக்கியமும் எழுத்தும் பெருஞ்செயல்கள் என்று கருதிய சூழல் எனக்குக் கிட்டிய ஒன்று.

அதோடு கூட அக்காலத்தில் நிலவிய பொதுவான இலக்கியச் சூழலும் உண்டு. பெரும்பாலும் மேற்குடியினர் கைகொண்டிருந்த வடமொழி சார்ந்த அறிவுஜீவிதத் தன்மையிலிருந்து, முற்போக்கு இலக்கியம், ஜீவனுள்ள இலக்கியம் என்றெல்லாம் புதிய பாதை சமைத்த ஒரு காலகட்டத்தில்தான் என் வாசிப்பு தொடங்கியது. முற்கால இலக்கியப் படைப்பாளிகளான கேரள வர்மாவோ, கவிஞர் உள்ளூர் பரமேஸ்வர ஐயரோ போன்றவர்கள் எழுத்தில் அடங்காத ஆர்வம் கொண்டிருந்தது போல எழுத்தாளனுக்குச் சில தன்மைகள் வேண்டியிருந்தன.

அந்தக் காலத்தில் வடமொழிதான் இலக்கிய மொழி. கவிஞர் குமாரன் ஆசான் தவிர ஏனையோர் மேற்குடியினர். சமஸ்கிருத இலக்கியத்தை நோக்கினால், எழுத்தை விட எழுத்தாளனைப் பற்றிய சித்தரிப்புகளே மிக்கவாறும் உண்டு. முற்போக்கு இலக்கியம் வந்தபோது இது மறைந்தொழிந்தது. அதற்கு மாறாக பஷீர், கேசவதேவ், தகழி போன்ற படைப்பாளிகள் முன்னெடுத்துப் போன ஒன்று, அனுபவம் சார்ந்த எழுத்து.

என்னைப் போன்ற ஒரு சிறுவனுக்கு என்ன அனுபவம் கிடைத்திருக்கக் கூடும் அன்று? அனுபவம் இருந்தால் மட்டும் எழுத்தாளனாகலாம் என்ற பிரக்ஞை உள்ளத்தில் இருந்த காலம் அது. பஷீர் போல பத்து, பனிரெண்டு வருடம் பயணம் போய் எழுத என்னால் அப்போது முடியாதே. இதெல்லாம் செய்ய இயலாதவர்களின் எழுத்துகளை விமர்சகர்கள் சபிக்கும் காலமாயிருந்தது அது.

அன்றைய சூழலில் எரணாகுளம் போன்ற நவீனமான நகரத்தின் பாதிப்பு வெகுவாக இருந்தது. அங்கே பொது நூலகத்தில் இல்லாத வெளிநாட்டுப் பத்திரிகைகளே இல்லை என்று சொல்லலாம். இவற்றின் மூலம் எனக்கு எழுத்தில் செய்நேர்த்தி என்ன என்ற புரிதல் கிடைத்தது. எழுதுவது எப்படி என்று பெரிய பெரிய எழுத்தாளர்களோடு நிகழ்த்திய நேர்காணல்கள் அன்றைய பாரீஸ் ரிவ்யூ போன்ற வெளிநாட்டு இதழ்களில் வந்து கொண்டிருந்தன. அதெல்லாம் வாசித்து மனப்பாடமாக நினைவில் நிறுத்துவது எனக்கு முக்கிய காரியமாக இருந்தது.

ஒரே வயது வட்டத்திலான இளைய தலைமுறை இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று கூடிய இடமாக அக்காலத்தில் எரணாகுளம் மகாராஜா கல்லூரி இருந்தது. பள்ளிக் கல்வி முடித்துப் பெற்ற அறிவோடு மகாராஜா கல்லூரியில் சேர வேண்டும். பத்தாம் வகுப்பில் படிக்கும்போது லட்சியம் இது மட்டும் தான். கல்லூரியில் அட்மிஷன் கிடைக்க, பள்ளி இறுதி வகுப்புத் தேர்வில் கிட்ட வேண்டிய மதிப்பெண்களைப் பற்றியல்லாமல் நினைப்பு வேறெது பற்றியுமில்லை. நான் புகுமுக வகுப்பில் சேர்ந்த காலத்தில் கவிஞர் சச்சிதானந்தன் முதுகலை இலக்கிய வகுப்பில் இருந்தார். அவர் போன்ற சிலரின் விலை மதிப்பில்லாத நட்பு எனக்குக் கிடைத்தது.

இலக்கியத்தோடு, அரசியலிலும் எனக்கு ஆர்வம் இருந்தது. இலக்கியமும் அரசியலும் இடை கலக்கும்போது அது வேறு மாதிரியான பிரச்சனையாக இருந்தது. கழுத்தா, எழுத்தா என்பதே அது. கழுத்து இருந்தால் தானே எழுத உயிரோடு இருக்க முடியும்? எழுதுவது என்பது ஏறக்குறைய மென்மை கொள்வது. அதனால் சகிப்பின்மையும் உண்டாகும். இந்த சகிப்பின்மையைக் கடந்து போய் எழுத்தாளனாக வேண்டும். என்று ஆழ்மன நினைவில் உண்டு. என்றாலும் அப்படி வெளிப்படையாகத் தோன்றாத ஒரு காலகட்டத்தினூடே தான் அன்று கடந்து போனேன்.

மலையாளத்தில் சிறப்பான கதாசிரியர்களில் ஒருவரான காலஞ் சென்ற டி.ஆர் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் மாலை நேரங்களில் சந்திக்கும்போது எல்லா எழுத்தாளர்களையும் கடுமையாக விமர்சித்தோம். நாங்கள் எழுதப் போவதில்லை என்று தீர்மானித்திருந்ததே அதற்கு முதற் காரணமாகும். ஆகவே யாரையும் விமர்சிக்கலாம் தானே? இப்படி இருக்க, டி.ஆரின் ‘மிருகம்’ என்ற சிறுகதை ரகசியமாக மாத்ருபூமியில் பிரசுரமனது. அக்காலக் கதைகளின் பயன்படுத்தப்பட்ட சொற்களின் பட்டியல் ரொம்ப விசித்திரமானது. அவன், நகரம், காலகட்டம் இப்படி ஒரு ஐம்பது சொற்களை நாங்கள் ஒரு நாள் பட்டியலிட்டோம். இந்தச் சொற்களை நாங்கள் எழுதப் போகும் கதைகளில் பயன்படுத்தப் போவதில்லை என்றும் உடன்படிக்கை செய்து கொண்டோம். அந்த உடன்படிக்கை பிற்காலத்திலும் தொடர்ந்தது. நான் அப்போது பெரும்பாலும் எழுதியதெல்லாம் நான் பங்கு பெற்று இயங்கிக் கொண்டிருந்த மாணவர் சங்க செயல்பாடுகள் குறித்த கட்டுரைகளே. எங்களுடைய மாபெரும் உடன்படிக்கையை மீறி டி.ஆர் கதை எழுதியது ஏன் என்று அவரிடம் கேட்டேன். ’கூச்சல் போடுவதற்கான துணிச்சல் நமக்கு வேண்டாம். நம்மால் எழுத முடியும் என்று காட்ட வேண்டும்’, என்றார் அவர்.

அப்போதெல்லாம் நான் கதை எதுவும் எழுதவில்லை. அதற்கப்புறம், திருவனந்தபுரத்தில் வசிக்கும்போது தான் மாத்ருபூமி சிறுகதைப் போட்டிக்குக் கதை எழுதினேன். அப்போது எங்கள் விடுதியில் எல்லோரும் மாத்ருபூமி போட்டிக்குக் கதை எழுதினார்கள். எனக்கும் சச்சிதானந்தனுக்கும் நண்பரான ஒரு நம்பூத்ரி இருந்தார். டெக்கான் ஹெரால்ட் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தவர் அவர். ‘நீ நிறைய ஐடியா வச்சிருக்கியே, அதில் ஒண்ணை எடுத்து கதையா எழுதேன்’ என்றார் என்னிடம் நம்பூத்ரி. அப்படித்தான் ‘சிசு’ என்ற முதல் சிறுகதை எழுதினேன். அதில் சுய அனுபவம் ஏதுமில்லை. குழந்தை இல்லாத மனைவி – கணவன் பற்றிய கதை அது. அப்போது எனக்குப் பத்தொன்பதோ, இருபதோ தான் வயது. ஒரு பெண்ணைப் பற்றித் தெளிவாகத் தெரியாமல் தான் நான் கதை எழுதினேன்.

அந்தக் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. முதல் பரிசு கிடைத்ததில்லை அதில் முக்கியமான விஷயம், அனுபவம் இல்லை என்று புரிந்ததால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கி வைத்துக் கற்பனையான ஓர் உலகத்தை உருவாக்கியது தான் இதில் முக்கியம். பாவனையாகச் செய்தது என்றால் வானத்தில் இருந்து தெறித்து விழுந்த செயற்கை உலகம் எல்லாம் இல்லை. எழுதிய சூழ்நிலையின் பாதிப்பு அதில் நிச்சயம் உண்டு. அனுபவம் இருந்தால் மட்டும் கதை எழுதலாம் என்பதில்லை என எனக்குக் கிடைத்த அந்த முதல் பரிசு. அழுத்தந் திருத்தமாகக் காட்டியது. பிறகு நான் அதே படிக்கு இன்னும் எட்டு, பத்து கதைகள் எழுதினேன். அதற்கப்பால் நான் கேரளத்தை விட்டு வெளியே பணி நிமித்தம் போக வேண்டி வந்தது. அப்படி ஒரு நான்காண்டுகள் கழிந்த பிறகு கோட்டயம் நேஷனல் புக் ஸ்டால் (என் பி எஸ்) மலையாள கலைக் களஞ்சியம் ஒன்றை வெளியிட்டது. அதில் மலையாளச் சிறுகதை வரலாறு இடம் பெற்றிருந்தது. அந்தக் கட்டுரையில், என்னைப் பற்றிக் குறிப்பிடுவது – எரிந்து முடித்த இலக்கியச் சுடர்கள் ஜயதேவன், என்.எஸ்.மாதவன் போன்றவர்கள்.

அந்தக் காலத்தில் எனக்கு மலையாளத்தோடு தொடர்பின்றிப் போனது. அன்று கேரளத்துக்கு வெளியே வசிக்கும்போது மலையாளத்தோடு இருந்த ஒரே தொடர்பு தொலைதூரத் தொலைபேசி அழைப்பு (எஸ் டி டி) மூலமே கிடைத்திருந்தது. இப்போது தொலைக்காட்சி, கைப்பேசி என்று எல்லாம் வந்து விட்டது. மொழியில் இருந்து இன்று தப்பிக்க முடியாது.

கேரளத்திலிருந்து வெளியே போய் ஐந்தாறு ஆண்டுகள் கழிந்த போது நான் எழுத்தாளன் என்ற நினைப்பு இல்லாமல் போனது. சிறு வயதில் ஒன்றோ இரண்டோ கதை எழுதாதவர்கள் அபூர்வம். அவர்கள் போன்ற ஒருவன் என்ற மனநிலையோடு நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன். அதன் பின் வாழ்வு வசப்பட்டு இடரின்றி அமைந்தது. எனக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடத் தொடங்கினேன் – வாசிப்பு, கால்பந்தாட்டத்தை ரசிப்பது இப்படி.

தொடர்ந்து கால்பந்தாட்டம் பார்த்து, எனக்கு ஹிக்விட்டா கதை எழுதத் தோன்றியது. ஆனால் அதை எழுதும்போதே எனக்கு நிச்சயமானது – இதை எழுதும் நான் பழைய நானில்லை.

மிகுந்த சோம்பலோடு தான் அக்கதையை எழுதினேன். அந்தக் கதையின் கையெழுத்துப் பிரதி தொலைந்து போனது. என் மனைவி அதைத் தேடிக் கொடுத்தார். இறுதியாக ஒரு நாள் துணிச்சலோடு, திருப்பி அனுப்புவதற்காக தபால்தலை ஒட்டிய உறையோடு கூட அக்கதையை மாத்ருபூமியின் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயருக்கு அனுப்பி வைத்தேன். எம்.டி.வாசுதேவன் நாயர் போல் தம் எழுத்தாளர் இனத்தைச் சேர்ந்த மற்றொருவரை உற்சாகப்படுத்தும் ஒரு பத்திரிகை ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவர் மாத்ருபூமி பத்திரிகை அடுத்த வாரத்தில் வெளியிட வேண்டித் தேர்வு செய்திருந்த கதையை நிறுத்தி வைத்து, நான் அனுப்பிய ஹிக்விடா கதையைப் பிரசுரித்தார். அதன் பிறகு எனக்குத் தொடர்ந்து எழுத முடிந்தது.

(Kerala Literay Festival KLF 2017 –
ஹிக்விடா முதல் தேன் வரை கருத்தரங்கு.

ஹிக்விடா என்.எஸ்.மாதவனின் புகழ்பெற்ற சிறுகதை. தேன், பால் சக்கரியாவினது.

பிப்ரவரி 2-5 :கோழிக்கோடு

‘சிசு’ கதை குறித்து திரு என்.எஸ்.மாதவன் பேசியது இது

Transcript in Malayalam : Safia O C

Acknowledgements:அழிமுகம் மலையாள இணைய இதழ்

மொழிபெயர்ப்பு : இரா முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன