New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 27 இரா.முருகன்

நான் தெரிசா. இங்கிலாந்திலே மேற்கு யார்க்‌ஷையர் பிரதேசத்தில் கால்டர்டேல்-ங்கிற சின்ன நகரத்திலிருந்து வந்திருக்கேன். இந்திய வம்சாவளியிலே வந்தவள். தமிழும் மலையாளமும் பேசின குடும்பத்தோட கடைசிக் கண்ணியிலே இருக்கப்பட்டவள். ஆனா அந்த மொழிகள் தெரியாது. இங்கிலீஷ் மட்டும் பேச, எழுத வரும். உங்ககிட்டே இங்க்லீஷ்லே பேசலாமா?

தன் முன்னால், கை நீட்டினால் மேலே படும் தொலைவில் நின்று பேசிக் கொண்டு போகும் பெண்ணையே பார்த்தபடி இருந்தான் சின்னச் சங்கரன். எங்கே பார்த்திருக்கிறோம் இவளை?

தெரிசாவுக்கும் அவனை ஏற்கனவே சந்தித்த ஞாபகம். அவளுக்கு நினைவு வந்து விட்டது. சங்கரன் தன்னை அடையாளம் காணப் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு சுவாரசியமாக இருந்திருக்க வேண்டும். ஒரு சிரிப்போடு அவள் சங்கரன் பேசுவதற்காகக் காத்திருந்தாள்.

வெளியே மயில்களின் கூட்டம் எவ்விப் பறந்து போக மழையும் நின்று கலை நிகழ்ச்சிகள் தொடங்குவதாக நொடிக்கொரு தடவை ஒலிபெருக்கியில் அறிவிப்பு வந்த வண்ணமிருந்தது.

காலையில் மேஜை போட்டு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விண்ணப்பம் வாங்கிய வாசல் அறையில் பகுதி கதவடைத்து சங்கரன் உட்கார்ந்திருக்கிறான். மத்திய சர்க்கார் அதிகாரி தோரணை தற்காலிகமாக விடைபெற்றுப் போயிருக்கிறது. மதிப்புக்குரிய அமைச்சரோடு வந்த முதல்நிலை அதிகாரி, கலாசார விழா சிறப்பாக நடந்தேறச் செயலாற்றும் சர்க்கார் நிர்வாக யந்திரத்தின் சகல சக்தியும் வாய்ந்த இயக்குனர், அழகான, ஆங்கிலம் மட்டும் பேசத் தெரிந்த இளம் பெண்களின் அதிகாரபூர்வ சிநேகிதன் என்று சில பிம்பங்களை அவன் விரும்பி இப்போது புனைந்துள்ளான்.

காலையில் யந்திர நிர்மாணம் பற்றிப் பேச வந்த முதியவர் எங்கே?

யாரோ வந்து சங்கரனைக் கேட்டார்கள். அந்தக் கேள்வியை பல பேர் கேட்டு விட்டார்கள். தற்காலிக யந்திரம் என்று ஒரு பெரிய செப்புத் தகட்டை விழாப் பந்தலுக்கு அருகே ஒரு மாமரத்தில் இரும்பு ஆணிகள் கொண்டு அவர் அடித்து நிறுத்தும்போது தான் சுருக்கமாக மழை பெய்தது. ஏழெட்டு மயில்கள் கூட்டமாகத் தாழப் பறந்து திரும்ப வானேறின.

அந்த முதியவரை மட்டுமில்லை, பிரபுத்துவக் குடும்ப உடுப்புகளோடு வந்த இன்னும் ரெண்டு முதியவர்களையும் அவர்களை அழைத்து வந்த பழைய ஆஸ்டின் காரையும் கூடக் காணவில்லை என்றான் சங்கரன். விசாரிக்க வந்தவன் நன்றி சொல்லித் துண்டால் முகம் துடைத்து அகன்று போனான்.

இப்போது சங்கரனும், வந்த பெண்ணும் மட்டும் அறையில்.

இந்தச் சுறுசுறுப்பான பெண் யாராக இருக்கும்? தில்லியில் பார்த்தவளா?

சங்கரனின் ஞாபக சக்தி கை கொடுத்தது. புத்தியின் உள்ளறையில் இருந்து சரியான தகவலை எடுத்துக் கொடுத்து அது விலகிப் போக, புன்னப்புரம் ரூட் பஸ் என்றான். தெரிசா இல்லை என்று தலையசைத்தாள். கொஞ்சம் ஏமாற்றம் அவள் கண்ணில் தெரிந்தது.

வெளிநாட்டுப் பெண். இங்கத்திய பெயர்கள் அதுவும் மலையாள பூமியில் இந்த குட்டநாடு பிரதேச ஊர்களும் கிராமங்களும் இன்னும் சங்கரனுக்கே பரிச்சயமாகவில்லை. அவள் எப்படி புன்னப்புரத்தை நினைவு வைத்திருக்கக் கூடும். வேறு ஏதாவது தகவல் துணுக்கு உண்டா என்று தேடினான் அவன்.

ஒரு பாதிரியாரும் லுங்கி அணிந்த, நல்ல ஆங்கிலத்தில் பேசக் கூடிய கனவான் ஒருத்தரும் கூட வர, நீங்கள் என்னோடும் என் மனைவி வசந்தியோடும் பஸ்ஸில் வந்த மாலை நேரம்.

தெரிசா பெரிய சிரிப்போடு ஆமாம் என்று அங்கீகரித்தாள். நேர்த்தியான நெற்றிப் பொட்டு வச்ச அழகான பெண்மணி அவங்க. உங்க மனைவியை தினமும் குளிச்சுப் பொட்டிடும் போது நினைச்சுக்கறேன்.

தெரிசா தகவல் பகிர்ந்த மகிழ்ச்சியின் அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினாள். அவளுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடப் போகின்றன என்ற நம்பிக்கை விழிகளில் தெரிந்தது.

சங்கரனின் பார்வை அவளுடைய உருண்ட தோளில் பதிந்திருந்தது. கண்ணை ஒரு வினாடிக்கு மேல் பார்க்க முடியவில்லை. பார்க்கப் பார்க்க மனதில் ஆழமாகத் துளைத்துக் கீறி மனமெல்லாம் பரவுகிற விழிகள் அவை.

தெரிசாவாகப் பரிச்சயம் இல்லாவிட்டாலும் இந்த விழிகள் அவனுக்குப் பரிச்சயமானவை. ஒரு வினாடி பார்வையில் பட்டு ஈர்த்து, அவசரமாகப் பின் வாங்க வைக்கும் செழுமையான மார்பும் கூட. குரல் மட்டும் இன்னும் கீச்சென்று இருந்தால் தில்ஷித் கவுரே தான் இவள். தில்ஷித் கவுரை பத்து வினாடியாவது தொடர்ந்து கண் இமையாது பார்க்க முடியும். அமைச்சக அலுவலகத்தில் சங்கரனுக்கு சில படிகள் கீழே உத்தியோகம் பார்க்கிறவள். பார்வை நிலைக்கும் போது புத்தி ஏதாவது ஆபீஸ் காரியத்தைப் பேச முன்னால் கொண்டு வந்து வைத்துவிடும். பேசியபடி பார்க்கும் அதிகாரியின் வார்த்தைகளில் மட்டும் சிரத்தை வைப்பது எதிர்ப்பட்ட ஊழியரின் கடமை. இந்தத் தெரிசா கீழ்ப்படிதலுள்ள ஊழியர் இல்லை. திமிர்த்து நின்று பேசும் அவளுடைய தோரணை அவனுக்கு வேண்டி இருந்தது. எதுவோ சவாலாக அவனிடம் பிரயோகிக்கப் படுகிறது. எதிர்கொண்டு ஏற்று வாங்கி நின்று சமாளிப்பது மனசுக்கு இஷ்டமானது.

ஜாக்கிரதையான, பிழை வராத சுத்தமான ஆங்கிலத்தில் கூறினான் சங்கரன் –

நீங்கள் ஆங்கிலத்திலேயே பேசலாம். தமிழ் தாய்மொழி என்றாலும், இந்தி தான் தில்லியில் அதிகாரிகளும் மற்றவர்களும் பேச வேண்டும் என்று சர்க்காரால் எதிர்பார்க்கப்படுவது. இந்தி பேசாதவர்கள் நாவை ஒட்ட நறுக்க எல்லா அமைச்சகங்களிலும் சகலவிதமான சைஸில் கத்திகள், ரம்பங்கள் சகிதமாக ஒரு அதிகாரி உண்டு. ராஜ்பாஷா அதிகாரி என்று கிரீடம் வைத்த பதவி. சங்கரனாகிய நான், மாதம் மூன்று முறையாவது இந்தியில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற அரசு உத்தரவைக் கடைப்பிடிக்கிறேன் என அவர் சான்றிதழ் தராவிட்டால் எனக்கு அடுத்த புரமோஷன் கிட்டாது. என் மனைவி ஆயுசுக்கும் சூப்பரிண்டெண்ட் பெண்டாட்டியாகவே இருப்பாள்.

சூப்பரிண்டெண்ட் மனைவி எங்கே, கோவிலுக்குப் போயிருக்காங்களா?

தெரிசா குரல் அவனை நேசமாக வருட, ஆபீஸ் டூர் என்பதால் குடும்பத்தோடு பயணம் எல்லாம் கிடையாது என்றான் அவன். அதில் கொஞ்சம் வருத்தம் தெறித்தாலும் நல்ல சந்தோஷமும் குரலில் கலந்து வந்தது. இவளுடைய அகலமான தோள்களுக்கு நடுவே ஒரு வினாடி முகம் புதைக்க முடிந்தால்.

சின்னச் சங்கரன் நினைப்பை வலுக்கட்டாயமாக விரட்டினான். அவளை உட்காரச் சொன்னான். தொடையில் கை படும் தொலைவில் நிற்கும் பெண் அருகே அமர்ந்து பேசினால் பேச்சில் மட்டும் புத்தியைக் கொண்டு மேலே பேச்சு வார்த்தை நடத்திப் போக அவனால் முடியும். நின்றால் பார்வை கொண்டு தலை குப்புற வீழ்த்தி விடுகிறாள். திமிர்த்த உடல் மிரட்டுகிறது.

அந்த பஸ் பயணம். அது ஒரு வருடம் முன்பாக இல்லையா? நீங்கள் எப்படி இன்னும் இங்கே?

நம்ப முடியாத குரலில் கேட்டான் சங்கரன். வெளிநாட்டுப் பெண் ஒரு வருடமாக இங்கே தங்கி இருக்கிறாளா என்ற ஆச்சரியம் குரலில் தெரிந்தது.

ஆமா, வரும்போது ஆறு மாதம் தங்க அனுமதி கிடைச்சது. இந்திய வம்சாவளி எங்கிறதாலே அதை புதுப்பித்து இன்னொரு வருஷம் இருக்கக் கிடைச்சிருக்கு.

அடேயப்பா ஒண்ணரை வருஷமா, நல்லது என்றான் சங்கரன். அழகான பெண்கள் எல்லா வெளி தேசங்களில் இருந்தும் வந்து இந்த பச்சை மணக்கும் வனப்பான பிரதேசத்தில் நடமாடட்டும். அது என்ன ஒரு வருஷம் நீட்டிப்பு?

உங்களுக்குத் தெரியாததில்லை. இந்திய வம்சாவளின்னா ஒரு வருடம் விசா நீட்டிப்பு அது முடிஞ்சு இன்னொரு வருஷம் இப்படி மொத்தம் அஞ்சு வருடம் இங்கே தங்கி இருக்கலாம். எனக்கு என் வேர்களைத் தேடவும் இன்னும் சில முன்னோர் கடமைகளுக்காகவும் தங்க வேண்டி நேர்ந்தது. உங்களைப் போல நல்ல நண்பர்கள் உதவி செஞ்சா, இங்கேயே நான் குடிமாற்றம் ஆகி விடுவேனோ என்னமோ.

தெரிசா அவனிடம் சிரிப்பை யாசித்து, என்ன சொல்றீங்க என்று கொஞ்சம் அதிகாரத்தோடு தொடர்ந்து கேட்க சங்கரன் அவசரமாக அப்படி நடந்தால் மிக்க நல்லதே என்றான். அவள் நிரந்தரமாக இங்கே இருக்க நேர்ந்தால் அதனால் அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லைதான்.

பாதிரியாரும் லுங்கி தரித்த கனவானும் கூட விசா நீட்டிப்பு பெற்றார்களா?

அந்தக் கனவான் லுங்கியைத் துறந்து டூ பீஸ் சூட் அணிந்து இங்கிலாந்து திரும்பி விட்டார். என் கணவர் தான் அவர். அவருக்கு விசா நீட்டிப்பாகவில்லை.

சங்கரனுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. இன்னும் ஒரு வருஷம் இவள் தனியாக இங்கே இருப்பாள் என்பது தனக்கு எந்த விதத்தில் சந்தோஷம் தருகிறது? தெரியவில்லை. உடம்பில் உள்ளே நியூரான் நினைவாக, திசுவாக, இனக் கவர்ச்சி கலந்த உயிரணுக்களாக ஏதோ இயங்கும் நிமிடங்கள் இவை..

உங்கள் கணவர் திரும்பப் போக வேண்டி வந்ததா? வருத்தப்படுகிறேன். எங்கள் அரசுத் துறை அப்படித்தான் சில நேரம் ஜோடிகளைப் பிரித்து வைத்து ஏதோ புண்ணியம் கட்டிக் கொள்கிறது. இரண்டு பேருமே சர்க்கார் ஊழியர்களாக இருக்கும் பட்சத்திலும் சர்க்கார் விளையாடுவதுண்டு. ரிடயர் ஆனதும் தான் சேர்ந்து இருக்க முடியும். சந்ததி அப்போது எப்படி வளரும்?

சங்கரன் சீரியஸான தொனியில் அவளிடம் கரிசனாமாகக் கேட்க, அவள் கலகலவென்று சிரித்தாள். சிரிக்கும் பெண்ணை ரசித்துப் பார்க்கலாம். தப்பே இல்லை. சங்கரன் அதைத்தான் செய்தான்.

கையை முகத்துக்கு நேரே அழகாக அசைத்து, அது போகட்டும், முடிந்த கதை முசாபர் போனது என்றாள் தெரிசா. சரி, புதுக் கதை பேச சங்கரன் தயார் தான். ஆனால் அந்தப் பாதிரியார்? பாதிக் கதையில் திரும்ப உள்ளே வந்து விட்டால்? அல்லது இறந்து போயிருந்தால்? மறைந்த பாதிரியார்கள் நினைப்பைப் புனிதமாக்குகிறார்கள். அவர்களை அன்போடு நினைவு கூர்வது போல் கண்ணியமான செயல் வேறேதும் இருக்க முடியாது.

ஜாக்கிரதையாக பாதிரியாரின் நலம் விசாரிக்க, கன்னத்தில் குழி விழச் சிரித்த தெரிசா என்ற அழகுப் பெண் சொன்னாள் –

அமேயர் பாதிரியாருக்கு வத்திகன் மாநகரில் போப்பரசருடைய புனித வசிப்பிடத்தில் தங்கி இருந்து தேவ ஊழியம் செய்ய வாய்ப்புக் கிடைத்து இத்தலி போக இருக்கார். இனி திரும்ப இங்கிலாந்தோ இங்கேயோ வருவாரான்னு தெரியலை. பிதாவுக்கு ஸ்தோத்திரம்.

அவசரமாகத் தன் மார்பில் குரிசு வரைந்தான் சங்கரன். பக்கவாட்டில் நகர்ந்த கை அவளுடைய திரண்டெழுந்த நெஞ்சில் இடித்ததைத் தெரிசா குமிழ் சிரிப்போடு நோக்கி இருந்தாள். சங்கரன் மயில்களின் உலகத்தில் மிதந்தான்.

உங்க மனைவி ஒரு இனிய பெண்மணி.

புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வந்தாள் தெரிசா. வசந்திக்குச் சொன்னால் சந்தோஷப் படுவாள். அவள் இல்லாததால் தான் பார்வையும் கவனமும் இப்படி அந்நிய ஸ்திரி பேரில் கள்ளக் கண்ணாகவும் இனிப்பு தடவிய வார்த்தைகளாகவும் பொழிகிறது. பிடார் ஜெயம்மா இருந்தால் கண்டிப்பாள்.

உங்கள் மனைவி போல, பொட்டு வைத்தால் அழகுக்கு அழகு செய்யும் வேறே ஒரு முகத்தைப் பார்த்ததில்லை என்றாள் தொடர்ந்து தெரிசா. வசந்தியை வாழ்த்திப் பாடி சங்கரன் மனதில் இடம் பிடிக்க என்ன தேவை அழகுப் பெண்ணே? உன் அண்மையும் குரலும் சிரிப்புமே போதாதோ. சங்கரன் வியந்தபடி, மறுபடி காற்றில் சிலுவை வரைய சந்தர்ப்பம் நோக்கியிருந்தான்.

அவள் வைத்திருந்த மஞ்சள் குறும் பொட்டு சங்கரனுக்குள் போதையை மெல்ல ஏற்றிக் கொண்டிருந்தது. அவன் குறும்பாகப் பதில் சொல்ல வேண்டிய நேரம் இது. பேச்சு மூலமே இந்த நட்பு வலுவாக இறுகட்டும்.

பொட்டு வைக்கும் எல்லாப் பெண்ணுமே அழகுதானே என்று அவள் கண்ணைக் கூர்ந்து பார்த்து சங்கரன் சொல்லத் தெரிசா லயிப்போடு சிரித்தாள். வீடு விட்டுத் தனியாக வந்த அதிகாரி. கம்பீரமாக இருக்கிறவன். நிச்சயம் தெரிசாவுக்கு உதவி செய்வான். அதற்கு மேலும் செய்யக் கூடும்.

ஒரு வருஷமாக இங்கே என்ன செய்யறீங்க?

உண்மையான ஆர்வத்தோடு சங்கரன் கேட்டான். இந்த ஊரும் கோவிலும் என்னை ஈர்த்து இங்கேயே இருந்து விடச் சொல்லுது என்றாள் தெரிசா.

வேறே எங்கேயும் போகலையா என்று விசாரித்தான் சங்கரன்.

பந்தலில் இருந்து உரத்த குரலில் அர்ஜுன நிருத்தத்துக்கான பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. மேடை பக்கவாட்டில் இருந்ததால் சங்கரன் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே நடனக் கலைஞர்களின் அசைவைப் பார்க்க முடிந்தது.

தமிழ் பேசுகிற பிரதேசம் முழுக்கப் போய் வந்தேன். என் கொள்ளுப் பாட்டனார் தமிழில் இயற்றின ஏசு கீர்த்தனைகளைப் புத்தகமாக்க முயற்சி செய்யறேன். கூடவே இன்னொரு நல்ல காரியமும் இப்போ ஏற்பட்டிருக்கு

அவள் சொல்லும்போது மேளங்களின் கூட்டமான ஓசை வெளியை முழுக்க நிரப்பி அதிர்ந்தது. தெரிசாவும் சங்கரனும் ஒன்றும் பேசாமல் பக்கவாட்டில் திரும்பி ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபடி அருகருகே அமர்ந்திருந்தனர்.

அர்ஜுன நிருத்தமாக ஒரு முதிய ஆண் கலைஞர் ஆடிக் கொண்டிருந்ததை சங்கரன் பார்வை பதித்து நோக்கத் தெரிசா மீண்டும் பேசினாள் –

கொஞ்சம் வித்தியாசமான உடுப்பு இல்லையோ, வெறும் மயில்பீலியை மட்டும் கோர்த்து உடுத்துக்கிட்டு?

தெரிசாவுக்கும் மேடை கண்ணில் பட்டிருக்கிறது. அவனிடம் குறும்பான பதிலை மீண்டும் எதிர்பார்க்கிறாள் என்று பரபரப்பான நரம்புகள் மூளைக்குச் சேதி சொல்லிக் குதித்தன.

ஆமா, தோகை உதிர்ந்து விழுந்தால் கஷ்டம் தான். அதுதானா என்னமோ, பெண்கள் இந்த நடனத்தை ஆடுவதில்லை. உடுத்தி வந்தா ஒரு அழகு. உதிர்ந்து விழுந்தா இன்னொரு அழகு. எனக்கு ரெண்டும் பிடிக்கும். அனுபவிக்கத்தான் கொடுப்பினை இல்லை.

அவன் முகத்தை நாலு கிலோ பனை நுங்கு மேலே அழுத்தும் நிதானத்தில் நிறுத்திச் சொன்னான். கண்கள் சிக்கென்று உடுப்பு இடையில் பொருந்தி மார்பை உயர்த்திக் காட்டும் அவளுடைய வனப்பில் ஈடுபட்டுத் தரை தாழ்ந்தன.

அவள் சிரித்தாலும் அந்த பதிலைத் தான் அவனிடம் எதிர்பார்த்தாள் என்று சங்கரனுக்குத் தெரியும். தெரிசா சண்டை போட வந்தவள் இல்லை. அவள் உரக்கப் புகார் சொல்லிக் கொண்டு வந்தது? என்னோடு உடல் கலக்க வா என்று பெண் மயில் தாபம் தழைத்தேறிய குரல் கொண்டு அகவித் தோகை இல்லாமல் ஒய்யாரமாக நடந்து இணையை அழைப்பது போலத் தானோ?

எதுவோ இருக்கட்டும். இன்னும் கொஞ்சம் அவளைப் பேச வைக்க வேணும்.

சரி, அப்புறம் எங்கே எல்லாம் போனீங்க?

அப்புறம் நாங்க அரசூர் போனோம் என்றாள் தெரிசா. சங்கரனுடைய மனம் அர்ஜுன நிருத்தமாகத் துள்ளியது. மனதைச் சுற்றி உடுத்த நாசுக்கும் ஜாக்கிரதையுமான மயிற்பீலி உதிரட்டும். சங்கரனுக்காக விடிந்த நாள் இது.

நீங்க ஏன் பந்தலில் இல்லாமல், இங்கே இருக்கீங்க? தெரிசா விசாரித்தாள். உன்னோடு தனியாக இருக்கத்தான் என்று அதிரடியாகப் பதில் வந்தால் என்ன சொல்வாள்? மத்திய சர்க்கார் அமைச்சரக சூப்பரெண்டெண்ட் அப்படிச் சொல்ல முடியாது. இந்தியில் பேச வைக்கவே விடாப்பிடியாகக் கேள்வி கேட்கிறவர்களுக்குப் பதில் தரும் போது அப்படிச் சொல்லலாம் தான். அவர்கள் மொழியைப் பற்றித்தான் கவலைப் படுவார்கள். பதிலை இல்லை.

பந்தலில் ஒலிபெருக்கி இரைச்சல் மறுபடி எழுந்தது. தொடர்ந்து கணீரென்ற குரல் –

இப்போது மாலை நாலு மணி. ஏழு மணி வரை நாட்டுப்புறக் கலைகள் பற்றிய முதல் நாள் கருத்தரங்கு நடக்கும். இன்றைய கலை நிகழ்ச்சிகள் ஏழு மணி முதல் இரவு பத்து வரை தொடரும். மான்ய மந்திரிஜி கிருஷ்ணன் நீலகண்டான் அங்ஙேயையும், மான்ய மந்திரிஜி கோட்டைச்சாமி அத்தேஹத்தையும் நிகழ்ச்சியை நடத்தித் தர அன்போடு மேடைக்கு அழைக்கிறேன்..

இந்த அறிவிப்பைச் செய்தது திருவனந்தபுரம் செக்ரெட்டேரியட்டில் முக்கிய அதிகாரியான வெர்கீஸ் சாண்டி. சங்கரனோடு மதுரைக் கல்லூரியில் கூடப் படித்தவன். சாண்டி மூலம் தான் தெரிசாவுக்கு தங்குமிடம் பார்க்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எரணாகுளம் வரைக்கும் தேடச் சொல்லியிருக்கிறார்கள் மினிஸ்டர் கிருஷ்ணன் மற்றும் கோட்டைச்சாமி.

கிருஷ்ணன் நீலகண்டான் என்று சாண்டி அழைத்தது சங்கரனுக்கு வினோதமாக இருந்தது. நீலகண்டான் இல்லை நீலகண்டன் என்று குறுக்கச் சொல்லித் தரலாம் தான். சாண்டி அதை அப்படியே பிரயோகித்து கோட்டைச்சாமியையும் குறுக்கிக் கொட்டைச்சாமி ஆக்கி விடக் கூடும்.

இதில் யார் உங்க மினிஸ்டர்? நீல நீல

தெரிசாவின் புன்னகையில் ஒரு வினாடி மயங்கிய சங்கரன் நிலைப்படுத்திக் கொண்டு அவர் இல்லை இவர் என்றான் கை சுண்டி. அவள் பார்க்க சிரமப்பட்டு எம்பிப் பார்க்க, சட்டென்று தெரிசா கையைப் பற்றி சரியான திசையில் விரல் நீட்ட வைத்தான். மனசு லகரியில் மிதந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணன் பேச ஆரம்பிக்கும்போது ஆகிருதியான ஒரு நடுவயதுப் பெண் அவர் பக்கத்தில் நெருங்கி நின்று லெதர் அட்டையில் பொதிந்த ஒரு டயரியையோ, புத்தகத்தையோ அவரிடம் கொடுத்தாள். சாண்டி உடனே மைக் உயிர்த்திருப்பது கருதாமல், சொன்னது –

திருமதி கிருஷ்ணன், நீங்களும் மேடையில் அமரலாமே. அர்ஜுன நிருத்தம் ஆராய்ச்சிக் கட்டுரையை அடுத்து நீங்கள் தானே படிக்கப் போவது?

மினிஸ்டர் கிருஷ்ணன் தேவைக்கு அதிகமான பரபரப்போடு எழுந்து இவர் காரியதரிசி என்று விளக்கம் சொன்னது அணைக்காத மைக் மூலம் கேட்டது. விழா ஏற்பாடுகளை முன்கை எடுத்துச் செய்த சியாமளா கிருஷ்ணன் எதுவும் பேசாமல் எழுந்து கலாசார ஆய்வு மையக் கட்டடத்துக்குள் கோபமும் அழுகையுமாக வந்து நுழைந்ததை தெரிசாவும் சங்கரனும் பார்த்தார்கள்.

தெரிசா எழுந்து நின்று மரியாதை தெரிவிக்கும் முன், சியாமளா தன் அறைக்குள் கதவடைத்துப் போய்விட்டாள். தெரிசா சங்கரனை என்ன விஷயம் என்று பார்வையால் கேட்க, அவன் அரைச் சிரிப்பும் ஒரு கண் சிமிட்டலுமாக மேடையிலும் அறையிலும் கண் பரத்திச் சேதி சொன்னான். தெரிசாவுக்கு அவன் நெருங்கி வந்து கொண்டிருந்தான் என அவளுடைய கள்ளச் சிரிப்பு சொன்னது.

ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டின் தூதுவரும் சிறந்த ஆங்கில எழுத்தாளருமான வைத்தாஸ் இக்வனோ ரெட்டி இப்போது ஆப்பிரிக்க, ஆசிய மக்கள் நிகழ்கலை வெளிப்பாடுகள் பற்றி உரை நிகழ்த்துவார்.

சாண்டியின் குரல் அழைக்க, போய்த்தான் கேட்போமே என்று தோன்றியது சங்கரனுக்கு. தெரிசாவை விட்டு எங்கும் போகப் போவதில்லை அவன்.

அரசூரில் அவள் தன் வீட்டைப் பார்க்கப் போனதையும், தியாகராஜ சாஸ்திரி உதவியால் மதுரைப் பண்டிதரச் சந்தித்ததையும் தெரிசா சொல்ல, சுவாரசியம் குன்றாமல், இடைவெட்டாமல் கேட்டபடி இருந்தான் சங்கரன்.

இதைப் பார்த்தீர்களா?

தெரிசா தோளில் மாட்டி இருந்த பையில் இருந்து எடுத்து நீட்டிய வம்சாவளி கூறும் குடும்ப மரங்களின் படங்களை நம்ப முடியாத ஈர்ப்போடு பார்வையிட்டான் சங்கரன்.

கடைசி படத்தில் வம்சாவளி கூறும் மரத்தின் வலப் பகுதி இறுதிக் கண்ணியாக தெரிசா முசாபர் என்ற பெயரைக் காட்டி இது நான் என்றாள் தெரிசா. இடப் பகுதி இறுதிக் கண்ணியாக அரசூர் சங்கரன் கொள்ளுப் பேரனும் அரசூர் சாமிநாதன் மகனுமான சின்னச் சங்கரன் என்ற பெயரில் தொட்டு இது நான் என்றான் சங்கரன்.

அதிசயங்கள் நிகழ்வது சகஜமென்பது போல் கைதட்டல் சத்தம் ஆர்பரித்துக் கொட்டி முழக்க, மின்சாரம் தடைப்பட்டது. இருட்டில் தெரிசாவின் தோளில் பற்றிய கரத்தை அவள் எதிர்பார்த்துக் கன்னம் பதித்துத் தோளோடு இறுக்கிக் கொண்டாள். அந்த அண்மை அவளுக்கு வெகுவாக வேண்டியிருந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன