உன்னைப்போல் ஒருவன்

 

மே 1 2009 வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பு

உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பதினோரு மணிக்கு வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. பெருவாரியான அச்சு, தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் திரு கமல் ஹாசன் அவர்கள் படத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்தார்.

திரு. மோகன்லால், இயக்குனர் சக்ரி டலோடி, இசையமைப்பாளர் செல்வி ஸ்ருதி ஹசன், ஒளிப்பதிவு இயக்குனர் மனோஜ் சோனி ஆகியோரோடு படத்தின் வசன கர்த்தாவான நானும் பாடலாசிரியரான நண்பர் மனுஷ்யபுத்ரனும் கலந்து கொண்டு சுருக்கமாக உரையாற்றினோம்.

படத்தைப் பற்றி வெளியிடப்படும் பத்திரிகைக் குறிப்பு இது –உன்னைப் போல் ஒருவன்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், யுடிவி மோஷன் பிக்சர்ஸின் கூட்டுறவோடு தயாரித்து அளிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘உன்னைப் போல் ஒருவன்’. தமிழோடு தெலுங்கிலும் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் படத்தின் பெயர் ‘ஈநாடு’. ராஜ்கமல், இன்னொரு நிறுவனத்தோடு இணைந்து கூட்டுத் தயாரிப்பாக உருவாக்கும் முதல் படம் இது.

ஏற்கனவே மகத்தான வெற்றி பெற்ற இப்படக்கதை தமிழில் இப்போது ஆழ்ந்த உள்ளடக்கத்தையும் நட்சத்திர வெளிச்சத்தையும் பெற்றிருக்கிறது. திரு கமல் ஹாசன் அவர்களும் திரு மோகன்லால் அவர்களும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று திரையைத் தீப்பற்ற வைக்கும் வெப்பத்தோடு மோதும் திரைக் காவியம் இது.

படத்தின் இயக்குனர் சக்ரி டொலேடி அமெரிக்காவில் புளோரிடா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். அவர் இயக்கும் முதல் படம் இது. ஆனாலும் சக்ரி தமிழ்த் திரைக்குப் புதியவர் இல்லை என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆம், திரு கமல் ஹாசனின் ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் போட்டோகிராபர் குட்டிப்பையனாக வந்து கலக்கிய குழந்தை நடிகர் தான் இவர். சமீபத்தில் தசாவதாரம் படத்திலும் கமல் அவர்களின் அமெரிக்க நண்பராக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக இன்னொரு இளைய தலைமுறை நட்சத்திரம் அறிமுகமாகிறார். அவர் செல்வி ஸ்ருதி ஹாசன். ஹாலிவுட் மியூசிக் இன்ஸ்ட்டிட்யூட்டில் முறையாக மேற்கத்திய இசையைக் கற்ற ஸ்ருதி தொழில்முறை இசைக் கலைஞரும் தனிப்பாடலாசிரியரும் ஆவார். அவருடைய தனித்துவம் வாய்ந்த புதுமையான இசையமைப்பு படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

ஆங்கிலப் படங்களுக்கு இணையான தொழில் நுணுக்கச் சிறப்போடு திரைப்படங்களை தயாரிப்பதில் ராஜ்கமல் எப்போதும் முன்னணியில் இருக்கிறது. புத்தம்புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ரெட் கேமிராவில், 4கே ரெசல்யூஷனில் இப்படம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலே முதல்முறையாக ரெட் கேமிராவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் திரைப்படம் இது.

இரண்டு முக்கியமான படைப்பாளிகளை ராஜ்கமல் இப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு பரிச்சயப்படுத்துகிறது. எழுத்தாளர் திரு. இரா.முருகன் வசன கர்த்தாவாக அறிமுகம் ஆகிறார். கவிஞர் மனுஷ்யபுத்ரன் பாடல் ஆசிரியராக அறிமுகமாகிறார். இவர்கள் ஏற்கனவே இலக்கிய உலகில் பிரபலமானவர்கள்.

படத்தின் மூலக்கதை ‘எ வென்ஸ்டே’ என்றாலும், ராஜ்கமல் உருவாக்கும் இப்படம் வேறுபட்ட சிந்தனைகளையும் முழுமையான சமூக, கலாச்சாரப் பார்வையையும் கொண்டுள்ளது. பலதரப்பட்ட திறமைகளின் சங்கமம் மற்றும் உலகத் தரத்தில் பெரும் பணச்செலவில் நடைபெறும் தயாரிப்பு இவற்றால் படத்தின் உள்ளடக்கமும் தரமும் மேலும் கூடுகிறது.

மும்பைத் திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளராக அறியப்படும் திரு.மனோஜ் சோனி இப்படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு ஒளிப்பதிவாளராக அடியெடுத்து வைக்கிறார்.

திரு.கமல் ஹாசனின் ‘ராஜபார்வை’ திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டரான திரு.தோட்டா தரணி இப்படத்தின் ஆர்ட் டைரக்டர்.

திரு.மோகன்லால் பங்குபெறும் பல முக்கியமான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு கூடுதல் ஒலிப்பதிவு விரைவில் துவங்குகிறது. மே மாத இறுதிக்குள் தமிழ், தெலுங்கு பதிப்புகளின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விடும்.

ராஜ்கமல் இந்தப் படத்தை ஜூலை மாதமே வெளியிடத் தயாரான நிலையில் உள்ளது. ஆனாலும் டாக்டர் கமல் ஹாசன் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க, இப்படம் ஆகஸ்டில் வெளியிடப்படும். ஆகஸ்டில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? ஆகஸ்ட் 12, 1959-ல் ஏ.வி.எம்மின் ‘களத்தூர் கண்ணம்மா’ வெளியானது. அப்படத்தின் பொன் விழா மாதமான ஆகஸ்ட் 2009-ல் ராஜ்கமல்-யூடிவி மோஷன் பிக்சர்ஸின் ‘உன்னைப் போல் ஒருவன்’ வெளியாவது பொருத்தம் தானே?

உன்னைப் போல் ஒருவன் பற்றிய மற்ற பல சுவையான தகவல்கள் இனி வரும் நாட்களில் தொடர்ந்து வெளியாகும். இப்படத்தைப் பற்றிய சுடச்சுட செய்திகள் பெற, www.unnaipoloruvan.com இணைய தளத்திற்கு வருக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன