New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 12 இரா.முருகன்

அமேயர் பாதிரியார் கொலாசியம் மதுக் கடைக்குள் நுழைந்தபோது அங்கே ஒரு சங்கடமான அமைதி நிலவியது. அந்தச் சங்கடத்தை அவரும் உணர்ந்தார். ஒரு முப்பது நாற்பது ஜோடிக் கண்கள் ஆச்சரியத்தில் நிலைக்க, அதில் சரிபாதியாவது கால்கள் உயரமான மதுக்கடை முக்காலிகளில் இருந்து குதித்து இறங்கிக் கூடிய மட்டும் திடமாக நின்றன.

யாரோ அவருக்குப் பிதா, சுதன் பெயரால் வரவேற்புச் சொன்னார்கள். அவருக்காக, கணப்பு அருகே நல்ல இடத்தை ஒதுக்க வேறு யாரோ கையில் பாதி மாந்திய மதுக் கோப்பையோடு முன்னால் வந்தார்கள்.

மதுக்கடை விளக்குகள் ஒவ்வொன்றாக உயிர் பெற்று எரிய, மதுக்கோப்பைகளை ஜாக்கிரதையாக அருகில் வைத்துவிட்டு குடித்துக் கொண்டிருந்த ஆண் பெண் அடங்கலாக எல்லோரும் சேர்ந்து அவர் வருகையைச் சிறப்பிக்க, விடாமல் கை தட்டினார்கள்.

சங்கோஜத்தோடு அங்கீகரித்துக் கொண்டு எதிரே விரல் நீட்டினால் கண்ணைக் குத்தும் தூரத்தில் அழுக்கு கோட்டும் எண்ணெய் வடியும் மூஞ்சியுமாக நின்றவனை உத்தேசமாக என் நல்ல நண்பரே என்று விளித்தார் பாதிரியார்.

சகல வர்க்க மதுபானமும் பேதமில்லாமல் தீர்க்கமாகக் குடித்து, தொட்டால் கனிந்து தோல் உள்வாங்குகிற பழமான பதத்தில் இருந்த அவன் அமேயர் பாதிரியாரின் இரண்டு காலையும் கட்டிப் பிடித்து எதற்காகவோ மன்றாட நினைத்துக் குனிந்து அப்படியே உருண்டான்.

பேசக் கூப்பிட்டால் முட்டக் குடித்து விட்டுக் காலில் தட்டி இவன் ஒன்றுமில்லாமல் போன விநோதம் என்ன என்று யோசித்தபடி, யாரென்று பார்க்காமல் பொதுவாகப் பார்த்து, பாதிரியார் சற்றே குரல் உயத்திக் கேட்டார் –
ப்ரியமானவர்களே, ஆண்டர்சன் எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?

அவர்களில் எவ்வளவு குடித்தாலும் தரக்கேடில்லாத நிதானத்தில் இருக்கிறவர்கள் சொல்லத் தயாராகவே இருந்தார்கள். ஆனால், எந்த ஆண்டர்சன்?

இந்த கொலாசியம் மதுக்கடையை நிர்வகித்து நடத்துகிற செபாஸ்தியன் ஆண்டர்சன் என்ற நம் மந்தையின் சிற்றாடு.

அவரை மரியாதை நிமித்தம் வலிக்காமல் கையைப் பற்றியும், பின்னால் இருந்து மெல்ல உந்தியும் தேவையென்றால் நாலு பேராகக் கிடை மட்டத்தில் வைத்துச் சுமந்தும் செபாஸ்தியன் இருக்கும் உள்ளறைக்குக் கொண்டு போக அல்லது கூட்டிப் போக அந்தக் கூட்டத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்தது.

அமேயரின் பாதிரிக் குப்பாயத்தின் இடுப்புப் பகுதியில் இரண்டு கடிதங்கள் துருத்திக் கொண்டிருப்பதை எல்லோரும் பார்த்தார்கள். அவற்றை அவ்வப்போது உள்ளே தள்ளிக் கொண்டு பாதிரியார் இண்டு இடுக்கு விடாமல் தண்ணீர்ப் பரப்பில் பூத்திருக்கும் தாமரைப் பூக்களின் இடையே தடாகத்தில் மிதந்து போகும் அன்னப் பறவை போல் உள்ளறைக்குப் போனார்.

இரண்டு கடிதங்களும் இன்றைக்கு தபாலில் வந்தவை. இங்கே கொண்டு வர ஒன்று போதும். ஆனாலும் அவசரமாகக் கிளம்பும் போது ரெண்டையுமே குப்பாயத்தில் திணித்துக் கொண்டார் அவர். ஞாபகமாக இங்கே காட்ட வேண்டிய கடிதத்தைக் காட்டி வேலையை முடித்துப் படி இறங்க வேண்டும்.

நாலு பேர் உட்காரப் போட்டது போன்ற கருப்பு லெதர் பிதுங்கி வழியும் இருக்கையில் அமர்ந்து இருந்த செபாஸ்தியன் பெரிய மேஜைக்குக் குறுக்கே கை நீட்டி அமேயர் பாதிரியாரை எதிர் நாற்காலியில் அமரச் சொல்லி வேண்டினான். பிறகு அது போதாது என்று படவோ என்னமோ மெல்ல நாற்காலிச் சிறையில் இருந்து எல்லாப் பக்கமும் திரும்பி வளைந்து விடுபட்டு, மேஜையைக் கடந்து பாதிரியாரின் அடுத்து வந்தான்,.

சர்ச் என்னிடம் ஏதாவது நன்கொடை எதிர்பார்க்கிறதா அச்சன்?

செபாஸ்தியன் சட்டென்று விஷயத்துக்கு வந்து விட்டான்.

அமேயர் பாதிரியார் வியாழக்கிழமை ராத்திரி எட்டு மணிக்கு பியர் குடிக்க கொலாசியம் மதுக்கடைப் படி ஏறி இருக்க மாட்டார் என்று அவனுக்குத் தெரியும். அவரைக் கொண்டு செலுத்துவது மாதாகோவில் நிர்வாகம், புதுப்பித்தல், மந்தையை வழிநடத்தல் இப்படியான ஈசுவர சிந்தனை சார்ந்த விஷயங்களாகவே இருக்கும் என்பதை செபஸ்தியன் அறிவான். அவன் மனைவி சிறுசபை என்ற ப்ராட்டஸ்டண்ட் வகுப்பில் பட்டவள் என்றாலும், வீட்டுக்காரனான செபாஸ்தியன் சார்ந்திருக்கும் ரோமன் கத்தோலிக ஆலயத்துக்குச் சுவர் எழுப்பக் காசு தர மாட்டேன் என்றா சொல்லப் போகிறாள்? எல்லாச் சபையும் இறுதியில் சொர்க்கத்தில் எல்லா தேவ மொழியிலும் அறிவிப்புப் பலகை வைத்த ஒரே இடத்தில் தானே முடியும்?

அமேயர் பாதிரியார் தன் சபைக்கு வெளியே எப்போதும் நல்ல மரியாதையையே எதிர்கொண்டிருக்கிறார். மெட்காப் உயிரோடு இருந்த காலத்தில் அவன் என்ன தான் கோவிலையும், அங்கே சுருதி தப்பி பியானோ வாசித்து எந்தக் குரலிலும் ஒத்துச் சேராமல் பிரார்த்தனை கீதம் பாடுகிறதையும் இதே கொலாசியம் மதுக்கடையில் உட்கார்ந்து, வெளியே குடை பிடித்து நடக்கிற அவர் காது படவே கிண்டல் செய்திருக்கிறான்.

ஆனால் புது வீடு வைக்க நினைத்தபோது மெட்காபுக்கு முதலில் நினைவு வந்தது அமேயர் பாதிரியாரைத் தான். வீட்டையும் தன்னையும் வாழ்த்தி ஆசீர் சொல்ல வரவேண்டும் என்று வேண்டி வழக்கமாக எல்லோரும் தரும் ஐந்து பவுண்டுக்கு மேலேயே இன்னொரு ஐந்து பவுண்ட்டுமாக மொத்தம் பத்து பவுண்ட் தட்சிணை வைத்தபோது அவருக்கு அது இஷ்டமாக இல்லை.

பத்து பவுண்டுக்கு போப் ஆண்டவரே வந்து கிரேஸ் சொல்லி பிரார்த்தனை நடத்தி விட்டு எல்லோர் நெற்றியிலும் குரிசு வரைந்து ஆசி சொல்லி, ஒரு ஓரமாக நின்று, சகலரோடும் கை குலுக்கி விடைபெற வேண்டும் என்று அவனுக்கு எதிர்பார்ப்பு இருந்ததாக அவருக்குப் பட்டது தான்.

காசு கொட்டிக் கிடக்கிற யாருக்குத் தான் பத்து பவுண்ட்டைப் பாதிரியாரிடம் விட்டெறிந்தால் திருச்சபையே ஊழியத்துக்கு அணி வகுத்து முன்னால் வந்து நிற்கும் என்று ஒரு வினாடியாவது தோன்றாமல் போகும்?

எடின்பரோ பிரதேச ஸ்காட்லாந்துக் கார்ர்கள் பாதிரியாருக்கு நாலு பவுண்டும், பேக்பைப் இசைக்கருவி தம் பிடித்து வாசிக்கிற வித்வானுக்குப் பத்து பவுண்டும் தருகிற சீலத்தைக் கடைப் பிடிப்பதாகச் சொல்வது உண்மையாக இருக்கலாம். பாதிரியார்கள் மூச்சைப் பிடித்து நிறுத்தி திருவசனம் சொல்ல வேண்டியதில்லை. அதுவும். பேக்பைப் வாசிக்கிறவன் மூச்சை வாத்தியத்தில் செலுத்தி நடந்த படியே இனிமையாக, அபஸ்வரம் சற்றும் தட்டாமல் வாசிக்க வேண்டியிருப்பதால் அவனுடைய ஊழியத்துக்கு பாதிரி ஊழியத்தை விட ஸ்காட்லாந்தில் மதிப்பு அதிகமாம். இந்தத் தரப்படுத்தலோடும் ஒப்பு நோக்குதலோடும் ஒப்பிட்டால் இங்கே கால்டர்டேலில் மெட்காபோ, இந்த செபாஸ்தியனோ மற்ற புதுப் பணக்காரர்களோ அமேயர் பாதிரியாரைத் தாங்கு தாங்கென்றல்லவா தாங்குகிறார்கள்.

சமாதானமும், அன்பும், ஈசுவரச் சிந்தனையும் என்றும் உம்மிடம் இருக்கட்டும். உம் ஆத்மா ப்ரியத்தோடு சகல உயிரிலும் உயிர்க்கட்டும்.

அமேயர் பாதிரியார் குரிசு வரைந்த போது பின்னால் சத்தம். மதுக்கடையில் சத்தம். என்னவென்று பார்த்தார் அவர்.

நட்ட நடுநாயகமாக ரெண்டு மர நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டு ஒருத்தன் ஏறி நிற்கிறான். ஒரு கிளாஸ் பியரையோ பிராந்தியையோ ஒற்றை மடக்கில் குடிக்கும் அவன் அந்தத் திரவம் கழுத்துக்குக் கீழே போகாமல் வாயிலேயே அடைத்தபடி நிறுத்துகிறான். ஒரு வத்திக் குச்சியைப் பற்ற வைத்து வாயில் இருந்து அருவியாகத் துப்பும் திரவத்தின் மேல் தெளிக்க அந்த இடம் பூரா தீச்சிதறல்.

அவனுக்கு முகம் வெந்தெல்லாம் போகவில்லை என்பதை ஆசுவாசத்தோடு கவனிக்கிற பாதிரியார் அடுத்து எல்லோரும் கூட்டமாகக் கைதட்டுவதையும் வியப்போடு கவனிக்கிறார். இதெல்லாம் பாதிரியார்களுக்கானதில்லை.

ஒரு பெரிய கூர்மூக்கு கண்ணாடிக் கோப்பையில் ஆப்பிள் ஜூஸ் நிரப்பி எடுத்து வந்த கொலாசியம் மதுக்கடைச் சிப்பந்தியை அமேயர் பாதிரியாருக்குத் தெரியும். அவனுடைய அப்பனும் மனைவியும் விடாது சபைக்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு வருகிறவர்கள். அப்பங்களின் அளவு குண்டூசி முனையளவு சிறுத்துப் போனதாகவும், மாஸ் நேரத்தில் கொடுக்கும் ஒரு துளி ஒயின் கூட புளிப்புக் காடியாகிப் போன வினோதம் நடப்பதாகவும் ஒரு ஞாயிறு விடாமல் பிரசங்கம் முடிந்து சங்கீதம் நடக்க பியானோவைப் பிராண்டிக் கொண்டிருக்கும் போது அந்த ரெண்டு பேரும் புகார் சொல்வதை அமேயர் பாதிரியார் அறிவார்.

ஆப்பிள் பழச் சாறு கொடுத்து விட்டு அப்பத்தின் அளவைச் சற்றே பெரியதாக்க வேண்டியதன் அவசியத்தை அவன் பாதிரியாரிடம் வலியுறுத்த நேரம் காலம் பார்க்காமல் உத்தேசித்திருக்கக் கூடும். அவன் மேல் தப்பில்லை. பாதிரியார் தானே அவனைத் தேடி கொலாசியம் மதுக்கடையில் படி ஏறி இருக்கிறார்.

அமேயர் பாதிரியார் ஆப்பிள் பழச் சாறைக் கையில் வாங்கி ஒரு மடக்கு பருகினார். எல்லாம் சரியாக, உத்தேசித்திருந்ததற்கு மேல் எவ்வளவோ சிறப்பாக நடைபெறுகிறது என்ற நம்பிக்கையும் ஆசுவாசமும் மனசைக் கிலேசம் ஏதுமில்லாமல் லேசாக்கின.

பொதுவாக பாதிரியார்களுக்கே உரித்தான, அன்பையும் நேசத்தையும் மிகச் சரியாக ஒவ்வொரு மந்தை ஆட்டுக்கும் ஒரே அளவில் பகிர்ந்தளிக்கிற படியாக, ஒரு புன்சிரிப்பு சிரித்தார் அவர்.

மூத்த பாதிரியார்களுக்கும் தாடி வைத்த, மெலிந்து கருத்த சற்றே இளைய பாதிரிகளுக்கும் அதிகமாக சித்திரிக்கிற வசீகரம் அந்தப் புன்னகை.

குருத்துவக் கல்லூரியில் ஆகமம் சொல்லிக் கொடுக்கிறபோது வகுப்பு எடுக்கிற பாதிரியார்களின் உடம்பு மொழியிலும், சிரிப்பிலும் அமேயரும் இதர மாணவர்களும் கற்றுக் கொண்டது மழிக்காத தாடியைத் திருத்துதலும், அவ்வப்போது பொங்கி வர வேண்டிய சின்னச் சிரிப்பும். புன்னகையின் பின்னணியில் சற்றே தெரிந்து மறையும் பற்களைச் சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவமும் அவர்களால் உணரப்பட்டது அப்போது.

அமேயர் பாதிரியாரின் புன்னகை அதன் இயல்பான நேரமான பத்து வினாடிகளுக்கும் அதிகமாகக் கூடுதல் ஒரு வினாடி நேரம் நின்று செபாஸ்தியனை அவர் முன் குனிந்து வணங்க வைத்தது. அவனுடைய உதவிக்காரனோ, இப்போதே மாதா கோவிலுக்கு ஓடி, வரும் ஞாயிறு காலைப் பிரார்த்தனைக்கு ஆயத்தமாக வெளியே காத்திருக்கவும் தயார் என்ற மனநிலையைப் புலப்படுத்திக் கொண்டு துடிப்பாக நின்றான்.

அமேயர் பாதிரியார் அவசரமாகத் தன் பாதிரிக் குப்பாயத்தில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து கொலாசியம் மதுக்கடைக்கார செபஸ்தியனுக்குப் படிக்கக் கொடுத்தார். இன்னொரு மடக்கு ஆப்பிள் ரசம் சுவைத்து உலகம் போகிற போக்கு குறித்து திருப்தி தெரிவிக்கிற முகபாவத்தோடு அடுத்த புன்சிரிப்புக்கு ஆயத்தம் செய்தார் அவர்.

கண்ணை இடுக்கி, பொறுமையாகக் கடிதத்தைப் படித்த செபஸ்தியன் உடனே பாதிரியாரோடு கை குலுக்க முற்பட்டான். அது மரியாதையாகாது என்று பட, உதவிக்காரன் முதுகில் பலமாகத் தட்டி அவனிடம் சந்தோஷமான ஒரு அறிவிப்பை உரக்க வெளியிட்டான் –

இந்த நிமிடத்திலிருந்து இன்னும் ஒரு மணி நேரம் யாரும் கொலாசியம் மதுக்கடையில் பியர் குடிப்பார்களானால், அதெல்லாம் காசு ஏதும் வாங்காது வழங்கப் படுகிறது. லாகர், ஏல், ஸ்டவுட் என்று எந்த வகையில் பட்ட பியர் என்றாலும் இந்தப் பொன்னான பொழுதில் இலவசம்.

அந்த மகிழ்ச்சியான அறிவிப்பு கொலாசியம் மதுக்கடையே அதிரக் கைத்தட்டும், குரல் ஒலியுமாக வரவேற்கப்பட்டது. எல்லோரும் சேர்ந்து கைதட்டவும், தான் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்று கொண்டிருக்கலாகாது என்று பட அமேயர் பாதிரியார் வலது கையைத் தூக்கி எல்லோருக்கும் வாழ்த்து சொல்வதாக அசைக்க இன்னொரு தடவை கைத்தட்டு உயர்ந்தது.

அச்சன், எங்களோடு இருந்து ஒரு ஜாடி பியர் மாந்திப் போக வேணும்.

கடையின் எல்லா மூலை முடுக்கில் இருந்தும் அவரை விளிக்க, செபாஸ்தியன் கைகாட்டி எல்லோரையும் அவர்களுடைய உற்சாகத்தையும் மேலே உயர்ந்து பொங்கி லாகர் பியராக வழியாமல் நிறுத்தி வைத்தான்.

இந்தக் கொண்டாட்டம் நம் பெருமதிப்புக்குரிய அமேயர் பாதிரியாருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஊரோடு சிறப்பித்து மகிழ

என்ன அழைப்பு அது? கொலாசியத்தில் பியர் அருந்தவா?

நாக்கு துடுத்த ஒருத்தன் கிண்டலாகக் கேட்க, அவன் உடனே வெளியேற்றப் பட்டான். ஆயிரம் முறை மாப்பு சொல்லியபடி அவன் வெளியே நின்றே குடிக்க அனுமதி கேட்டதை செபாஸ்தியனோ சக குடியர்களோ லட்சியம் செய்யவில்லை.

என்ன அழைப்பு அது? யார் விடுத்தது?

தகவல் அறிய விரும்பும் குரல்கள் உயர்ந்தன. புன்சிரிப்போடு சுற்றும் பார்த்தான் செபாஸ்தியன். தொண்டையைக் கனைத்தபடி அறிவித்தான் –

வாடிகன் புனித நகரத்தில் சங்கைக்குரிய போப் ஆண்டவர் அருகில் இருந்து இறை ஊழியம் செய்ய அமேயர் அச்சனுக்கு அழைப்பு வந்திருக்கிறது.

இன்னொரு தடவை கைத்தட்டும் ஹோவென்ற பேரிரைச்சலும் எழ, செபஸ்தியன் குரல் அதை எல்லாம் மீறி ஒலித்தது.

இந்தப் பட்டணத்திற்கு இதுவரை கிடைத்தவற்றில் உச்சபட்ச மரியாதையும் வெகுமதியும் இதுவாகத் தான் இருக்கும். அமேயர் பாதிரியாரின் இடையறாத இறை ஊழியத்தையும், மாதாக் கோவில் பராமரிப்பில் ஈடுபாட்டையும், இசைக்குழுவுக்குப் பயிற்சி அளிப்பதில் குன்றாத ஆர்வத்தையும் நாம் எல்லோரும் அறிவோம். இந்த ரோமாபுரி அழைப்பு இந்த ஊருக்கே விடப்பட்ட அழைப்பு என்று பெருமை கொள்ளலாம். அன்புக்குரிய அமேயர் பாதிரியார் ரோமாபுரிக்குப் பயணம் வைக்கும்போது இன்னொரு கொண்டாட்டத்தை இன்னும் பெரிய தோதில் நாம் ஏற்பாடு செய்வோம்.

செபாஸ்தியன் பெருமையோடு அறிவிக்க, அமேயர் பாதிரியார் அவசரமாக அவன் கையில் இருந்து கடிதத்தைத் திரும்ப வாங்கக் கை நீட்டினார்.

கொஞ்சம் இருங்க, இன்னொரு முறை படிச்சுட்டுக் கொடுத்துடறேன்.

செபாஸ்தியன் சொல்ல, கொலாசியத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் கூச்சலுக்கு இடையே குரல் எழுப்ப முயற்சி செய்து, எழாமல் போக, கையை வேகமாக அசைத்து செபாஸ்தியன் கையில் இருப்பதை அவன் படிக்க விடாமல் தொட்டு அசைத்து ஒரு வழியாகப் பிடுங்கியும் விட்டார் அமேயர் பாதிரியார்.

ஏமாற்றத்தோடு நின்ற செபாஸ்தியன் கையில் பாதிரிக் குப்பாயத்தில் கை விட்டு எடுத்த இன்னொரு கடிதத்தைக் கொடுத்து விட்டு, வாடிகன் கடிதத்தை வெகு பத்திரமாக உள்ளே வைத்தார் அவர்.

செபாஸ்தியனுக்குத் தன் கண்ணையே நம்ப முடியவில்லை. இந்தக் கடிதத்தில் உள்ள முத்திரை லண்டன் மாநகரில் அரச குடும்பம் வசிக்கும் அரண்மனையில் இருந்து வந்ததல்லவா.

அமேயர் பாதிரியார் அடுத்த வாரம் அரண்மனை விருந்துக்கும் அரசியாரோடு பேச்சு வார்த்தைக்கும் அழைக்கப் படுகிறார். மறைந்த ரிச்சர்ட் மாண்ட்கோமரி மெட்காப், அவனுடைய மனைவி தெரிசா மெட்காப் என்ற கொச்சு தெரிசா முசாபர் அலி ஆகியோருக்குச் சொந்தமான, அமேயர் பாதிரியார் பொறுப்பில் இருக்கும் அதி நவீனமான மோட்டார் வாகனத்தையும் பார்வையிட அரசியார் விரும்புகிறார். எனவே சங்கைக்குரிய அமேயர் பாதிரியாருக்கு சகல மரியாதையோடும் பிரியத்தோடும் இந்த அழைப்பு வெளியிடப்படுகிறது.

சரிதானா நான் படித்தது?

செபாஸ்தியன் குனிந்து அமேயர் பாதிரியாரின் செவிகளில் உரக்கக் கேட்க அவர் கையமர்த்தினார்.

அந்தப் பிசாசு பிடித்த காரை எனக்கு ஒட்டிப் போக முடியாது. மெட்காபின் உயிர் நண்பன் நீதானே. காரை ஒட்டிப் போக உன் துணை எனக்கு வேணும். நீ ஊருக்கு எங்கேயாவது கிளம்பி விடுவாய் என்பதால் மதுக்கடை என்றாலும் பரவாயில்லை என்று உன்னைத் தேடி வந்தேன். உதவி செய்வாயா சகாவே?

செபாஸ்தியன் மெய்மறந்து நின்றான். உதவியாளனை ஒரு முறை கரகரவென்று உயர்த்திப் பிடித்துச் சக்கரம் போலச் சுற்றிக் கீழே தொப்பென்று போட்டான். கரையுடைந்த உற்சாகத்தோடு அறிவித்தான் –

இந்த ஒரு மணி நேரத்தில் யாரும் இங்கே எதுவும் குடிக்கலாம். ஜின்னும் எலுமிச்சை ரசமும், பிராந்தியும் வென்னீரும், விஸ்கியும் சோடாவும், டெக்கிலாவும் சிராங்காய் உப்பும், வோட்கா, ரம், பியரும் எல்லாம் இலவசம்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன