புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 44 இரா.முருகன்


எழுந்திரு. ஊர்வலம் வந்துட்டு இருக்கு.

பாதி ராத்திரிக்கு கொச்சு தெரிசா முசாபரை எழுப்பினாள்.

கண்ணூரை மழை நனைத்த ராத்திரி அது. இன்னும் விடிய வெகு நேரம் இருந்ததாக கூகை ஒன்று அவ்வபோது அறிவித்துப் பறந்து போக, தங்குமிடத்து ஜன்னல்களினூடே குழல் விளக்கின் ஒளி விட்டு விட்டுக் கசிந்து கொண்டிருந்தது.

பெரிய மின்விசிறி ஒன்று நிலத்தைக் கெல்லி அசைக்கிறது போல காற்றைக் கிளப்பிச் சுழல, அறையெங்கும் விதையோடியிருந்த குளிர், மங்கலான இரவு விளக்கை ஈசல்கள் மொய்த்துப் பறந்து மழை வாசனையைப் பரப்பியிருந்த அந்தப் பின்னிரவில் தெரிசா ஒரு சொப்பனம் கண்டாள்.

ஒரு பிராமணன். மடியில் மரச் சிலுவையைக் கட்டிக் கொண்டு வருகிறான் அவன். உச்சிக் குடுமியும், காதில் கடுக்கனும், கச்சமாக அணிந்த வேட்டியும். முகத்தில் கருகருவென்று ஒரு வாரத் தாடியுமாக, மெலிந்து கருத்தவன். மங்கல வாத்தியம் ஒலிக்கிற வீட்டுப் பின்புறத்தில் இருந்து அவன் அவசரமாக வெளியேறுகிறான். ஓரமாகக் குரிச்சி போட்டு ஒரு வயசன் இருக்கிறான்.

ஏகத்துக்கு வயதான அந்தக் கிறிஸ்துவன், பூணூலும் தலையில் சரிகைத் தலைப்பாகையுமாக, நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தபடி, இவனை நிற்க வைத்துப் பேசுகிறான்.

சிரிப்பும், பூவாடையும், சாப்பாட்டு வாடையும், தள்ளுமுள்ளுமாக இருந்த கல்யாண வீட்டில் ஒரு சின்னப் பெண்ணாக, லட்டு உருண்டையைக் கடித்தபடி கொச்சு தெரிசா நிற்கிறாள். இடுப்பில் பட்டுத் துணியைப் பாவாடையாகச் சுற்றியவள். அங்கே பரபரப்பாக அலைந்து கொண்டிருக்கும் பெண்களில் ஒருத்தி முகத்தைச் சுளித்தபடி வருகிறாள். கொச்சு தெரிசாவைக் கையைப் பிடித்து இழுத்துத் தலையில் குட்டுகிறாள். தெரிசா அவளிடமிருந்து விலகி ஓடுகிறாள்.

ஏண்டி லங்கிணி, எப்பப் பாரு, தீனி தான். தொடைக்கு மேலே பாவாடை நிக்கறது. கடங்காரி, எட்டும் பொட்டும் திகஞ்சும் நாணம் இல்லியா? இன்னும் முல குடிக்கற குஞ்ஞா என்ன? உனக்கே நாளைக்கு நாலஞ்சு குடிக்க இடுப்பிலே ஏறிடும். பொசைகெட்டவன் ஒருத்தன் அதுக்கும் பங்குக்கு வந்து கூடவே படுத்துப்பான்.

அவள் படபடவென்று வறுவலுக்கு வெந்த உருளைக்கிழங்கு சீவுகிற மாதிரி வார்த்தை உதிர்த்தபடித் துரத்தி வந்து தெரிசா பின்னலை இழுக்கிறாள்.

கண்ட கழுவேறிக்கெல்லாம் குப்பாயத்தையும் அடி வஸ்திரத்தையும் அழிச்சுக் காட்டப் போறியாடி மிண்டை? லஜ்ஜையில்லே? ரவிக்கையை கீழே இழுத்து விடுடி சாரதே. நன்னா இழு. ரெண்டும் பெரிசாயிண்டிருக்கு. இந்த ரவிக்கை போறாது இனிமேல். ஏண்டி சாரதே, உன்கிட்டே தான் சொல்றேன். காதுலே விழலியா?

கீச்சு கீச்சென்று அந்தப் பெண் பேசுகிறாள். மங்கல வாத்தியத்தை ஓங்கி உயர்த்தி வாசிக்கிற சத்தம். தெரிசா குரலை உயர்த்துகிறாள்.

ஐயோ நான் சாரதே இல்லே.

சரி இல்லே. நீ தெரிசாள். எதோ லோலா போலான்னு பொண்ணு பேரு. பேர்லே என்னடி இருக்கு? எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் வீங்கியாறது.

தெரிசா தலையில் மறுபடி குட்டு விழுகிறது. குட்டிய வலி துக்கமாகத் தொண்டையை அடைக்கிறது.

நான் அந்த தெரிசாள் இல்லே. அது வல்ய தெரிசா. என் அத்தைப் பாட்டி. நான் கொச்சு தெரிசா.

தெரிசா விக்கி விக்கி அழுகிறாள். கீச்சென்று இரைந்த அந்தப் பெண் உறைந்து போய் நிற்கிறாள். சட்டென்று பாசமாக தெரிசாவை அணைத்துக் கொள்கிறாள்.

என் கண்ணே, நான் என் பொண்ணு சாரதா, அந்த லண்டி முண்டைன்னு நெனச்சுட்டேன். நீ அவளுக்குக் கொள்ளுப் பேத்தியா? நன்னா இருடி கொழந்தே. நன்னா இரு.

அந்த ஸ்திரி கல்யாண ஹோமப் புகையில் கண்ணைக் கவிந்து கொண்டு பழுப்புக் காகிதமும் கடுக்காய் மசிக் கட்டைப் பேனாவுமாக உட்கார்ந்து சதுரமும் செவ்வகமும் முக்கோணமுமாக வரைந்து கணக்குப் போட்டுக் கொண்டிருந்த யார் தோளில் இருந்தோ அங்க வஸ்திரத்தை இழுத்துப் பிடுங்குகிறாள்.

என் துணியை எதுக்கு உருவறேடி பொண்ணே? யந்திரம் நிர்மிச்சு தேவதைகளை கொண்டு வந்து நிறுத்தணும். கணக்குப் போட விடமாட்டேங்கறியே.

ஜோசியரே, யந்திரம் எல்லாம் அவசரம் இல்லே. இருந்தாலும், நீர் தொப்பையைக் காட்டிண்டு யந்திரம் நிர்மிச்சா தேவதைகள் வரமாட்டேன்னு சொல்லாது.

என் அங்கவஸ்திரம் உனக்கு எதுக்கு?

என் நாலாம் தலைமுறைப் பேத்திக்கு மாரை மறைக்க வஸ்திரம் வேண்டியிருக்கு. தாரும் ஓய். உமக்கும் இந்த மேல் வஸ்திரம் வேண்டித்தான் இருக்குன்னு தெரியும். ஆனா, உம்மை விட அந்தப் பொண்ணுக்கு முக்கியம்.

அதுனாலே?

ஜோசியர் பாதி சிரிப்பும் மீதி அசௌகரியமுமாகக் கேட்கிறார்,

ஓதியிடும் போது அங்கவஸ்திரம் வரும். ஜோரா சுத்திக்குங்கோ.

கீச்சு கீச்சென்று இரைந்தபடி தெரிசாவின் தோளைச் சுற்றி சந்தனமும், குங்குமமும், வயோதிகனின் வியர்வையும் கலந்து வாடை அடித்த வஸ்திரத்தைப் போர்த்தி தெரிசாவிடம் சொல்கிறாள் அந்த முதுபெண் –

என் கண்ணே. மீரட் கத்திரிக்கோல் வாங்கி வச்சிருக்கேன். வலிக்காம களைஞ்சு விடறேன். சுத்தமா இல்லாட்ட சீலைப் பேன் வந்து குடியேறிடும். சமத்தோன்னோ.

பாட்டித் தள்ளே அப்புறமா வரேன்.

முதுபெண் தெரிசாவின் இடுப்புக்குக் கீழே கை சுட்டியதைப் பார்த்துச் சிரித்தபடி தெரிசா தெருவுக்கு ஓட அங்கே ஒரு ஊர்வலம். குருத்தோலைகளைச் சுமந்து கொண்டு ஆணும் பெண்ணுமாகப் போகிறவர்களோடு கழுத்தில் குரிசும் பஞ்சகச்ச வேஷ்டியுமாக அந்த சிலுவைக்கார பிராமணரன் ஆர்மோனியம் வாசித்தபடி நடக்கிறான். குரல் பிசிறடிக்கப் பாடுகிறான்.

பற்றுவை கிறிஸ்துவில்
உற்றவர்தானே அவர் என்றும்
உற்றவர்தானே அவர்.

வா குழந்தே. பாவாடையை நன்னா இடுப்பில் முடிஞ்சுண்டு வா. இல்லியோ நீ பாட்டுக்கு ஓலையைப் பிடிச்சுண்டு போவே. பாவாடை பாதையிலே கிடக்கும்.

அவன் நின்று, தெரிசாவை பிரியத்தோடு கூப்பிடுகிறான்.

நீயே பாடிட்டுப் போ வல்ய முத்தச்சா. நான் வரலே.

தமிழும் மலையாளமுமாகச் சரளமாகப் பேசியபடி தெரிசா ஓடுகிறாள். தெரு முக்கில் சத்தம். இன்னொரு ஊர்வலம். நெற்றி நிறையக் குங்குமத்தோடு ஒரு கிழவி பாடிக் கொண்டு போகிறாள். மயில்கள் அவளைத் தொடர்கின்றன.

தோரணம் நாட்டக்
கனாக் கண்டேன் தோழீ நான்
கனாக் கண்டேன் தோழீ நான்.

அவளுக்கு இந்த வரிகள் புரிகிறது போல் இருக்கின்றன. இந்த பாஷையை அவள் ஒரு ஜென்மம் முழுக்கப் பேசியிருக்கிறாள். இப்படிப் பாடியும் இருக்கிறாள்.

சாரதே வா.

தலைமுறைகளின் வாத்சல்யம் குரலில் பிரவகிக்க, பாடி வந்த பெண் கூப்பிடுகிறாள்.

முசாபர் கிட்டே சொல்ல வேண்டாமா?

கொச்சு தெரிசா குளிரில் நடுங்கிக் கொண்டே கேட்கிறாள்.

பகவதித் தள்ளை கூப்பிடறான்னு சொல்லுடி கண்ணு. அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்.

தெரிசா ஊர்வலம் வந்து கொண்டிருப்பதைச் சொல்லி முசாபரை எழுப்பினாள்.

இருட்டிலும் மழைக் குளிரிலும் எந்த ஊர்வலம் வருது?

போய்ப் பாரு. வந்துட்டிருக்காங்க.

தெரிசா சொல்லியபடி எழுந்து தூக்கக் கலக்கத்தோடு செருப்புகளைத் தேட ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் ஊர்வலம் வாசலில் நின்றால் அவள் போய்க் கலந்து கொள்வாள் என்பதை முசாபரை விட்டுச் சொல்லச் சொன்னது பாதியில் நின்றது.

முசாபர் ஜன்னல் பக்கம் நின்று எட்டிப் பார்த்தான். காற்றில் வந்த மழைத் திவலைகள் முகத்தை நனைக்க, அவசரமாகப் பின்வாங்கினான்.

கனவு கண்டியா என்ன, தூங்கு.

அவன் அலுத்துக் கொண்டு அவளைப் படுக்கையில் தள்ளி போர்வையை மேலே இழுத்து விட்டான். பக்கத்தில் படுத்து நித்திரை போகலாமா என்று யோசிப்பது போல் கொஞ்ச நேரம் நின்று விட்டு அவன் கட்டிலுக்கு நடந்தான். இந்தியப் பயணத்தில் கட்டில்கள் இந்த இருபது நாளில் ஒரு முறையும் இணையவில்லை.

இடி வலுத்து வந்த போது, ஜன்னலைச் சார்த்தி விட்டுத் தூங்கலாம் என்று இழுத்தால், அந்தச் சாளரங்கள் மரக் கட்டை வைத்து அடைக்க இடம் கொடுக்காமல் தீனமாக முனகிக் கொண்டு நின்றன. கண்ணாடித் தடுப்புகள் நல்ல வேளையாக ஏறி இறங்க, அறைக்குள் இருந்து தற்காலிகமாக இடியோசை விடைபெற்றது. மின்னல் மட்டும் அவ்வப்போது கசிந்து சுற்றுப்புறத்தை ஜொலிக்க வைத்துப் போனது.

தெரிசா திரும்ப நித்திரை போயிருந்தாள். யார் கனவையோ அவள் காண்பது போல் முகத்தில் சிரிப்பு கும்மாளி கொட்டிப் படர்ந்து நிறைந்திருந்தது.

இந்த மலையாளப் பிரதேசத்தில் போன வாரம் கால் பட்டது முதல் அவள் சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருக்கிறாள்.

முசாபருக்குத் தெரிகிறது. எப்படி என்று சொல்ல முடியாது. என்றாலும் அமேயர் பாதிரியார் சுட்டிக் காட்டும் சாத்தானின் ஆக்கிரமிப்பு இல்லை இது.

ஒரு வேளை முசாபர் தன் முன்னோர் பூமிக்கு, அது ஹைதராபாத் அருகே இருக்கிறதாக மட்டும் தெரியும், அங்கே போனால் அவனும் ஏதாவது விதத்தில் மாற்றத்தை அனுபவிப்பானோ என்னமோ.

முசாபர் மறுபடி எழுந்து மின்விசிறியை நிறுத்தினான். குளிர் அதிகமாக இருந்தது. மின்னலில் தெரிசாவின் வகிட்டில் ரத்தச் சிவப்பைத் தீற்றின மாதிரி என்ன அது? பக்கத்தில் போனபோது சிந்தூரம் என்று போதமானது.

நேற்றைக்கு மூஸ் வைத்தியரைப் பார்த்து விட்டு வரும்போது பகவதி காவு என்று பெயர் சொன்ன இடத்தில் ஒரு நிமிடம் நுழைந்தார்கள். அங்கே பூசாரிகள் கொடுத்தது.

நேற்றைய பொழுது முழுக்க, தெரிசா தன்னைத் தானே எதற்கோ தயார்ப்படுத்திக் கொண்டிருந்ததாக முசாபர் உணர்ந்தான். அவள் எதிர்பார்த்தது அற்புத அனுபவங்களாக இருக்கலாம் அல்லது படிப்பினை தரும் கணங்களாக, மனதுக்குப் பிடித்தவர்களோடு மனதுக்குப் பிடித்ததைப் பேசி, பார்த்து, கேட்டு, சுவைக்கிற நிமிடங்களாக இருக்கக் கூடும். முசாபரோடு ராத்திரி முழுக்கத் தூங்காமல், களைப்பு வராமல் நீளும் கலவியில் மெல்ல லகரி மேலேறி உச்சம் காண எதிர்பார்த்து இருந்திருக்கலாம். கண்களில் தட்டுப்படும் எதிர்பார்ப்பின் பரபரப்பை மறைத்து சாதாரணமாக வலம் வரச் சிரமப்பட்டுப் போனாள் தெரிசா.

நேற்று தெரிசாவும் முசாபரும் சந்திக்கப் போன எடத்வா மதுசூதனன் மூஸ் வைத்தியருக்கு எழுபத்தைந்து வயசு. அவர் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதை நிறுத்தி பதினைந்து வருடமாகி விட்டது. ஆனாலும் அவர் ஒழித்துக் கொடுத்த இடத்தில் வைத்தியர்களாக உள்ள மகனும் மருமகளும் தினமும் ஒரு நோயாளியின் பொருட்டாவது அவரைக் கலந்தாலோசிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி.

மூஸ் வைத்தியரைச் சந்தித்ததுமே தெரிசா கிட்டத்தட்டப் பரவச நிலைக்கு வந்துவிட்டாள். பின்னே இல்லையா? அவளுடைய வம்ச வரலாறு முழுக்க அவருக்குத் தெரிந்திருந்தது. மட்டுமில்லை, கொச்சு தெரிசா வந்த கண்ணூர்த் தலைமுறைகளைத் தொடங்கிய முப்பாட்டன் ஜான் கிட்டாவய்யனில் இருந்து தெரிசாவின் பாட்டி தீபஜோதி அம்மாள் வரை அவளுடைய உற்றாரோடு நேரடியாகப் பேசிப் பழகிக் கூடி இருந்தவரும் கூட அந்த மூஸ் வைத்தியர்.

அவருக்கு எட்டு வயதான போது ஜான் கிட்டாவய்யன் இறந்து போனாராம். அதை நேற்று நடந்தது போல் மூஸ் வைத்தியர் விவரிக்க, தெரிசா கண்களில் நீர் திரண்டது.

விருச்சிகம் மாசம் பிறந்தாச்சு. விருச்சிகப் புலரியாச்சே. சபரிமலைக்கு மாலை போட்டுக்கணும். லட்டு எங்கே? மூஸ் வைத்தியருக்குக் கொடு. அந்த கொச்சனுக்கும் கொடு. இதென்ன என் பூணூல்லே குரிசு? யார் மாட்டினது?

சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்து கிழக்கே பார்த்து, கழுத்தில் இல்லாத சிலுவையைப் பிடித்தபடி கிட்டாவய்யனாக அரற்ற, முசாபருக்கே மனசு கரைந்து போனது. அது என் முப்பாட்டனாக்கும் என்று பெருமையும் உணர்ச்சி வசப்படுதலுமாக தெரிசா அவன் கையை அழுத்தித் துக்கத்தைப் பகிர்ந்தாள்.

இதிலே எடத்வா மூஸ் வைத்தியர்னு அறியப்பட்டவர் என் முத்தச்சன் கேசவன் மூஸ். அவர் சொன்ன கொச்சன், சாட்சாத் நான் தான். எவ்வளவு பெரிய மனுஷர், இந்தப் பையனை மறக்கலே பார்.

ஒரு சிரிப்போடு இடித்துக் கூழாக்கிய வெற்றிலையை மென்றபடி நிறைவோடு சுற்றும் முற்றும் பார்த்த மதுசூதனன் மூஸ் மேல் தெரிசாவுக்கு அளவு கடந்த மரியாதை வந்திருந்தது என்பது அவள் பார்வையிலேயே முசாபருக்குத் தெரிந்தது.

கிட்டாவய்யன் கண் மூடிய நிமிடங்களைத் தன் தாத்தன் எடத்வா கேசவன் மூஸ் வைத்தியர் விவரித்ததையும் தெளிவாக நினைவு வைத்திருந்தார் மதுசூதனன்.

மரணத் தறுவாயில் ஜான் கிட்டாவய்யருக்குக் குரல் எழும்பலை. எல்லா வார்த்தையும் வாக்கியமும் சேர்ந்து ஒரு ஒற்றை இழையா அவர் வாயில் அடைச்ச மாதிரி. தீனமாக ஏதோ முணுமுணுத்தார். வயசரோட கால் நீண்டு தடவினதிலே வாசல் பக்கத்தில் இருந்த பால் செம்பு படியிலே உருண்டது. உள்ளே மிச்சம் இருந்த பால் வாசலை நனைச்சு மண்ணில் ஒரு சொட்டு மிச்சம் இல்லாம கலந்து காணாமல் போனது. தீபம் தீபம்னு பேத்திக்கு வைக்க வேண்டிய பெயரை முணுமுணுத்தார் அவர். அப்புறம் ஜான் கிட்டாவய்யர் கண் திறக்கவே இல்லை.

ஒரு நிமிடம் சுவர்க்கோழி சத்தம் மட்டும் ஒலிக்க எடத்வா மதுசூதனன் மூஸ் வைத்தியர் மௌனமாக இருந்தார். அப்புறம் ஏகப்பட்ட சிரிப்போடு கிட்டாவய்யர் கண்ணூரில் பிரபலமாக நடத்திய ஓட்டலைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். மூஸ் வைத்தியர் பள்ளிக்கூட நாட்களில் கிட்டத்தட்ட தினசரி சாயந்திரம் இனிப்பும் கோப்பியும் தேடி அங்கே தான் போவாராம். சாப்பிட்டதற்காக ஒரு காசு போலும் வாங்கினது இல்லையாம்.

தினசரி ஒரு இனிப்பும், எள்ளெண்ணெயும் தேங்காய் எண்ணெயும் மணக்க மணக்க பருப்பு வடையும் உளுந்து வடையும் சுவியனும் மற்றதுமாக சாயந்திரம் கரும்பலகையில் விவரம் எழுதி வைப்பார்களாம். ஒரு மணி நேரத்தில் இனிமேல் நாளைக்குத்தான் என்று அடுத்த பலகை. இல்லை என்று எழுத மனமிருக்காதாம்.

கடையில் பரபரப்பாக விற்றழிந்தாலும் வீட்டில் காப்பியும் தேத்தண்ணீரும் நாவேறாமல் ஜாக்கிரதையாக இருந்தாராம் கிட்டாவய்யர். அவர் மகன் வேதையன் கடைக்கு வருவதே அபூர்வம் என்றாலும், துர்க்கா பட்டர் என்ற அவருடைய ஆப்த சிநேகிதர், துளு பிரதேசத்து பிராமணரான அவர் தான் வியாபாரம் முழுக்கப் பார்த்துக் கொண்டாராம். அவர் போனதோடு கடையும் போச்சென்றார் மூஸ்,

அப்புறம் ராத்திரி எட்டு மணி ஆகியிருந்தாலும் பொருட்படுத்தாமல் கண்ணூர்க் கடைவீதியில் கிட்டாவய்யர் ஓட்டல் இருந்த இடத்துக்கு அவர்களை இட்டுப் போனார். தெரிசா பரவசத்தின் உச்சத்தில், தரையில் மிதக்கிற தோதில் நடந்து போனாள் அப்போது. மூஸ் வைத்தியர் அவர்களோடு லயனல் பாதிரியாரின் காரில் கடைவீதிக்குப் போகும்போது தெரிசாவுக்கு இன்னொரு முறை பரவசம் ஈந்தார்.

குழந்தே, உன் பாட்டி தீபஜோதி அப்படியே அவளை உரிச்சு வச்ச மாதிரி நீ பிறந்திருக்கே. இதே தெளிவும் அழகும் நல்ல மதுரமான பேச்சும் சிரிப்பும் தான் தீபஜோதிக்கும். என் வயது தான். பலபேர் தீபத்தைக் கட்டிக்க தயாரா இருந்தாங்க. நான் கூட வெட்கத்தை விட்டு துர்க்கா பட்டரம்மாவன் கிட்டே கேட்டேன். தீபத்தோட அச்சன் அம்மைக்கு இல்லாத சுவாதீனம அந்தக் குடும்பத்திலே பட்டருக்கு, வைத்தியருக்கெல்லாம் பொண்ணு தரதில்லேன்னுட்டார் அவரானா.

பெருங்குரலெடுத்துச் சிரித்தார் மூஸ் வைத்தியர்.

அவர் மட்டும் சரி என்று சொல்லியிருந்தால் தானும் கிறிஸ்துவராகி இருப்பேன் என்றார் மூஸ், ஐயய்யோ, அப்படி எல்லாம் சொல்ல வேணாம் என்று அவசரமாகத் தடுத்தாள் தெரிசா.

ஓட்டல் இருந்த இடத்தில் நாலு மாடி கட்டி ஏகப்பட்ட விளக்குகள் ராத்திரியைப் பகலாக்கி மின்ன, ஒரு நகைக்கடை இருந்தது. பக்கத்தில் ஓடிய குறுக்குச் சந்தைக் காட்டி அந்த வழியாகத்தான் தான் தினசரி ஓட்டலுக்கு வருவது என்று சொன்னார் மூஸ். ஓட்டல் எப்படி அமைந்திருந்தது, யாரெல்லாம் இருந்தார்கள் என்று சொல்லி வரும்போது சட்டென்று மறுபடி சிரித்தார் அவர்.

ஒரு மாதம் போல நாங்க யாருமே இங்கே போகலே. சர்வர் ஒருத்தன் மேலே பயம். வெளியூர்ப் பையன் ஒருத்தனை ஏடாகூடமான எடத்துலே அழுத்தி கடிச்சுட்டான்.

முசாபருக்கு இந்தத் தகவல் தான் சுவாரசியமாக இருந்தது. எழுபது வருடம் முன்பு சகல விதமான நபர்களும் இந்த மண்ணில் நடமாடி இருக்கிறார்கள். இங்கிலாந்து பரபரப்புக்குச் சற்றும் குறைந்ததில்லை இங்கே பசியும், தீனியும், காமமும்.

திரும்பும்போது வைத்தியரை வீட்டில் இறக்கி விடக் கார் நின்றது. கையில் வைத்திருந்த துணிப்பையை அவசரமாக தெரிசாவிடம் நீட்டினார் மதுசூதனன் மூஸ். உள்ளே இருந்து ஒரு பழைய நோட்டுப் புத்தகம் எட்டிப் பார்த்தது.

மறந்தே போச்சு குழந்தே. இது உங்க வல்ய வல்ய முத்தச்சன் ஜான் கிட்டாவய்யர் செய்த கீர்த்தனங்கள். எல்லாம் கிறிஸ்துநாதர் மேலே. உங்க கொள்ளுத் தாத்தன் வேதையன் இந்த வாய்மொழி பாட்டை எல்லாம் மலையாளத்திலேயும் இங்கிலீஷ்லேயும் எழுதி வச்ச பழைய நோட்டு இது. முதல்லே ஒரு பாட்டு மட்டும் கிறுக்கலா இருக்கும். எங்க தாத்தா எடத்வா கேசவன் மூஸ் எழுதி வச்சது. இதைப் பாடிட்டுத்தான் கிட்டாவய்யர் மரிச்சது.

பாட்டை இங்கிலீஷ் எழுத்தில் மனதுக்குள் படித்தாள் தெரிசா.

சிற்றின்பம் உண்டென்றால்
பேரின்பம் உண்டென்று
சற்றேனும் பார்மனமே – சிந்தித்து
உற்றதொரு பானை அரிசி
பதமென்று அறிந்திட
பற்றுவை கிறிஸ்துவில்
உற்றவர்தானே அவர்.

இதை எப்படியாவது புத்தகமாகப் போடணும்னு கிட்டாவய்யருக்கு மட்டுமில்லே வேதையன் அம்மாவனுக்கும் ஆசை இருந்தது. எப்போ எங்க தாத்தா கிட்டே இது வந்து சேர்ந்ததுன்னு தெரியலே. ஆனா, பத்திரமா வச்சிருந்தேன். இனி உன்னோடது இது. சந்தோஷமா எடுத்துப் போய் வீட்டுக்காரனோடு எல்லா பாக்கியத்தோடும், எல்லா சுகத்தோடும் தீர்க்காயுளா இரும்மா தீபஜோதி.

மூஸ் சொன்னபோது தெரிசா முகத்தில் தென்பட்ட எல்லையற்ற நிறைவும், மகிழ்ச்சியும், பிரியமும், தீபஜோதியும் அவருக்கு இஷ்டமாக இருந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன