புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 43 இரா.முருகன்

எல்லாப் பத்திரிகைகளும் ஒரே மாதிரி இல்லை.

முசாபர் உற்சாகமாக விளக்கிக் கொண்டிருந்தான். பவுலோஸ் சகோதரர் மிகுந்த ஈடுபாட்டோடு கேட்டபடி முன்னால் அமர்ந்திருந்தார். அவர் பார்த்திருக்காத, கேட்டிருக்காத விஷயம் இதெல்லாம். கோயம்புத்தூர் கடந்து தூரதேசம் என்று எங்கும் போனதில்லை அவர். கோவை போனபோது கூட வெள்ளை வெளேரென்று பச்சரிசிச் சோறை ரெண்டு நாளுக்கு மேல் சாப்பிட முடியாமல் திரும்பி விட்டார்.

சவுக்காரம் போட்டுத் துவைத்த மாதிரி ஏன் இப்படிச் சோறு இருக்க வேணும்? மெல்லிய சிவப்பில் வடித்து, ஒரு துண்டு மீனும், பலாக் கறியும் சேர்த்துச் சாப்பிடுவதில் இருக்கும் ரசம் வருமா என்று கோயம்புத்தூர் சகோதரர்களிடம் சொன்னபோது ஒரு குவளையில் இன்னும் கொஞ்சம் புளித்தண்ணீர் கொண்டு வந்து வைத்து இதுதான் ரசம் என்றதை அவர் எத்தனையோ பேரிடம் சொல்லிச் சிரித்திருக்கிறார். இந்த இங்கிலீஷ்கார முசல்மானிடம் இன்னும் சொல்ல நேரம் வரவில்லை. உலகம் தெரிந்த, எல்லா சூழ்நிலையிலும் சிரிக்கத் தெரிந்த மனுஷன் இந்த முசாபர் ரெஹ்மான்.

சாப்பாட்டுக் கடை தான் வைத்திருக்கிறானாம். ஓரியண்ட் பிஷ் அண்ட் சிப்ஸ் என்று மீனும் வறுவலும் மட்டும் விற்கிற கடை. எவ்வளவு தெரிந்திருக்கிறது இவனுக்கு? இங்கிலாந்து போல ஐரோப்பிய தேசங்களில் வசித்தாலே குளிரும் வளமுமான சூழ்நிலையும் காரணமாக எல்லாம் புத்தியில் வேகம் ஏறி விடும்போல.

முசாபர் சொன்னான் –

மீனை வறுக்கறது அவ்வளவு கஷ்டமில்லை அண்ணா. உருளைக் கிழங்கு தான் அழ வச்சிடும் சில நேரம். ரொம்ப வறுத்துட்டா கரகரன்னு பாம்பே மசாலா மாதிரி ஆகித் தூக்கிக் கொட்ட வேண்டியதுதான். சீக்கிரம் எடுத்துட்டா வாயிலே ஒட்டிட்டு, சாப்பிட வந்தவங்க, காசு திரும்பக் கேட்பானுங்க. மெதுக் மெதுக்குனு, கடிச்சா நாக்குலேயே சுத்தி திரும்பச் செல்லமாக் கடிக்கற பதத்திலே வறுவல் இருக்கணும். அது என்ன மாதிரின்னு உங்க கிட்டே எப்படிச் சொல்றது. எப்போவாவது மடாலயம் விட்டு வந்து கல்யாணம் செஞ்சுக்கற ஐடியா வந்தா லெட்டர் போடுங்க, அப்போ வந்து சொல்றேன். இப்போதைக்கு விரலைக் கடிக்கற மாதிரி மெத்துன்னு இருக்கறதா வச்சுக்கலாம்.

கொஞ்சம் தயங்கி பவுலோஸும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டார். முசாபரானால் முடிக்காமல் சிரிக்கிறான். கையை இடுப்பில் வைத்துக் குனிந்தும், அகற்றி வீசி எழுந்தும் தோளைக் குலுக்கியும் அவன் நகைக்கிற ஒய்யாரம் சொல்ல ஒண்ணாது.

ஏதோ பத்திரிகை விஷயமாக பேச ஆரம்பிச்சீங்களே.

பவுலோஸ் ஞாபகப்படுத்த திரும்ப உற்சாகமானான் முசாபர்.

கொச்சு தெரிசாவும் அமேயர் பாதிரியரும் பக்கத்தில் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறார்கள். பாதிரியாருக்கு ரத்த அழுத்தம் பார்க்க வேண்டியிருக்கிறதாம். தலை சுற்றலும் காங்கையுமாக இருக்கிற சுகவீனம்.

எங்கேயும் இலக்கு வைத்துப் போய்ப் பார்க்கவும், அபிப்பிராயம் சொல்லவும் என்று கட்டாயம் இல்லாமல் முசாபரின் விருப்பத்துக்கு, இங்கே குருசுப்பள்ளி தங்குமிடத்தில் பகலெல்லாம் தங்கி இருக்க அமேயர் பாதிரியார் தயவில் இடம். இலவசமாகவே சோறும், ரொட்டியுமாகச் சாப்பாடு. பக்கத்து அறையில் இருந்து சுத்தியல் கிடைக்குமா என்று கேட்டு வந்த பாதிரிப் படிப்பு படிக்கும் சகோதரன் பவுலோஸோடு சுகமான அரட்டை. வேறே என்ன வேண்டும் முசாபருக்கு? இன்னொரு சாயா கிடைத்தால் நன்றாக இருக்கும். சாரமில்லை.

அது இருக்கட்டும். பத்திரிகையா, எந்தப் பத்திரிகை?

கொஞ்சம் யோசித்து, பேச வந்தது முழுக்க மனசில் நிறைய முசாபர் மேஜை மேல் தொடுக்கி உட்கார்ந்தபடி வார்த்தை சொல்லத் தொடங்கினான்.

எல்லாப் பத்திரிகையும் ஒரே மாதிரி இல்லைதான். மீனையும் வறுவலையும் சும்மா பிளேட்லே வச்சு கொடுத்தா எண்ணெய் ஊறிடும் பதார்த்தத்திலே. கஸ்டமர் எல்லாருக்கும் வயிறு கலகம் செஞ்சு ஜீரணம் ஏடாகூடமாகி பர்பர்பர்னு முழக்கத்தோடு நகர்ந்துக்கிட்டிருப்பாங்க. அதுனாலே தான், நியூஸ் பேப்பர்லே வைச்சுக் கொடுக்கணும். பேப்பரோடு மீனையும் வறுவலையும் அப்படியே பிடிச்சு ஒரு அழுத்து. பிழிஞ்சு, எண்ணெய் கம்மி ஆக்கிட்டு சாப்பிட்டா பிரச்சனையே இல்லே. எந்தப் பத்திரிகையிலே வச்சுத் தரணும்னு ஒரு எழுதாத விதிமுறை இருக்கு அண்ணா.

பவுலோஸ் சகோதரருக்கு இது எல்லாம் புதுத் தகவல்கள். தெரிந்து கொள்ள வேண்டியவை. எதற்காக என்று கேட்டால் அவருக்குத் தெரியாது.

முசாபர் ரகசியம் சொல்கிறது போல் அவரிடம் தெரிவித்தான்.

கார்டியன் பத்திரிகையிலே கொடுத்தா கச்சிதமா எண்ணெய் குடிக்கும். சன் பத்திரிகையில் சுத்திக் கொடுத்தா ஒரே அஜீர்ணம்தான். சன்னுலே முதல் பக்கத்திலே பின் அப் போட்ட பிறந்தமேனி பொண்ணுங்க படம் இருக்குதில்லே? அதுங்களைப் பாக்கறதுக்கு அசங்காம குலுங்காம பேப்பரை எடுத்துப் போயிடுவாங்க. பத்திரிகை இருந்தா இல்லே எண்ணெய் உறிஞ்சறதுக்கு?

சொல்லி முடிப்பதற்கும் தெரிசா திரும்பி வருவதற்கும் சரியாக இருந்தது.

தலையைச் சுற்றி மப்ளரைப் போர்த்திக் கொண்டு கார்பனேட் மிக்சர் வாடையோடு நின்ற அமேயர் பாதிரியார் முகத்தில் நோயாளிக் களை ஏறியிருந்தது.

மரியாதை மிகுந்த டாக்டர்கள், ஆசிர்வாதம் கேட்கிற நர்சுகள், மன்றாடச் சொல்கிற படுத்த படுக்கையான நோயாளிகளும் குடும்பங்களும் என்று அவருக்கு வேண்டிய ஒரு சூழலில் இருந்துவிட்டு வந்த நிம்மதியும் திருப்தியும் தெரிந்தது அவரிடம்.

லேசான கிருமித் தொற்று ஏற்பட்டு உடம்பு சூடு அதிகமாகி இருக்காம். ரத்த அழுத்தம் எப்பவும் போல

அவர் மருந்து சீசாவை பெருமைக்குரிய வெகுமதி போல உயர்த்திக் காட்டிவிட்டு குப்பாயத்தில் வைத்துக் கொண்டபோது லயோனல் பாதிரியாரும் வந்துவிட்டார்.

ரோமாபுரியில் அமேயரின் நண்பர் இவரைச் சந்திக்கச் சொல்லியிருந்தார். கொச்சு தெரிசாவின் குடும்ப மரம் அவருக்கும் பிரியமான தேடலாகப் போயிருக்கிறது.

அமேயர் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே என்று ஆலோசனை சொன்னார் லயோனல். ஜீப்பில் வெய்யில் நேரத்தில் தூசு துப்படையோடு சிறு பயணம் போக உடல்நிலை இடம் கொடுக்குமா என்று சந்தேகப்பட்டார் அவர்.

அதெல்லாம் ஒரு குழப்பமுமில்லை என்று அமேயர் கிளம்பி விட்டார்.

நகரத்தில் ஒரு வைத்தியரைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருப்பது. பரம்பரையாக ஆயுர்வேத வைத்தியக் குடும்பத்தில் வந்த அவர் அந்தப் பகுதியில் எல்லாக் குடும்பங்களையும் தொழில் முறையில் மட்டுமில்லாமல் சிநேகிதமாகவும் அறிந்தவராம். கொச்சு தெரிசா தரப்பு விவரங்கள் அவரிடம் இருக்கலாம்.

உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கறோம். குருத்துவக் கல்லூரி ப்ரின்சிபாலா, நீங்க பாடம் எடுக்க, நிர்வாகம் செய்யன்னு பரபரப்பா இருப்பீங்க. எங்களுக்காக அந்த ரொட்டீனை முறிச்சு கூட வர்றீங்க. எல்லாம் முடிச்சுட்டு சாயந்திரம் வந்தாக்கூட சரிதான். நாங்க இங்கே வேடிக்கை விநோதம் பார்க்க வந்தவங்க. நீங்க ஊழியம் செய்யறவங்க. அதுலே குறுக்கிடக் கூடாது.

லயோனல் அப்படி ஒண்ணும் இல்லை என்றார். திட்டமிட்டுக் காரியமாற்றுகிறவர்களின் தன்னம்பிக்கை அவர் குரலில் மிளிர்ந்தது.

இன்றைய பாடங்களை எல்லாம் சகோதரர் எடுக்க ஏற்கனவே ஏற்பாடு செய்தாகிவிட்டது. ரோமாபுரி நண்பருக்காக இது கூட நான் செய்ய மாட்டேனா என்ன? வாங்க, போய்ட்டு வந்துடலாம். வழியிலே நீங்க பார்க்க சில இடம் உண்டு.

முசாபர் தானும் வரவேண்டுமா என்பது போல் பார்த்தான். இங்கேயே இருந்து இன்னொரு சாயா குடித்து ஒரு உறக்கமும் போட்டால் சுகமாக இருக்கும்.

போகிற இடத்திலெல்லாம் விநோதம் காட்சிக்கு வரும். முசாபர், கிளம்பு.

தெரிசா சொல்லி அவனை எழுப்பி விட்டாள்.

கார் சீரான வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது. லயோனல் வாகனத்தைச் செலுத்தியபடியே பேசிக் கொண்டு வந்தார். அவர் பேசாவிட்டாலும் அமேயர் அவரைப் பேச வைத்துவிடுவார். முன் சீட்டில் வாய் மூடி உட்கார்ந்து போனால் அவருக்கு உறக்கம் வந்துவிடும். தூங்குகிற ஒரு பயணியோடு, அவர் சக பாதிரியாக, இறை ஊழியக் காரராக இருந்தாலும் வாகனத்தில் போக ஓட்டுகிறவர்கள் விரும்புகிறதில்லை. தெரிசாவின் முதல் கணவன் மெட்காஃப் தடியனின் பெட்ரோல் தேவைப்படாத காரில் அவர் உட்கார்ந்து வந்தபோதும் அதுதான் நிலைமை என்று அறிந்து கொண்டார். என்ன வித்தியாசமானதாக இருக்கட்டுமே, வாகனத்தைச் செலுத்துகிறவன் ஒரு வினாடி கண் மூடினாலும் விபத்து ஏற்படலாம். அதற்குத் தான் துணைபோகக் கூடாது என்பதில் அமேயருக்கு உறுதி இருந்தது.

லயோனல் இந்தப் பகுதிக்கு வந்து இருபது வருஷமாகிறதாம். இங்கே யட்சித் தொந்தரவு இருந்ததால் டயோசிஸ் என்ற பேராயத்தில் இருந்து அவரை அனுப்பி வைத்தார்களாம்.

எனக்கு முந்தி, கன்னடம் பேசுகிற பாதிரியார் இங்கே ஊழியத்தில் இருந்தார். ஆனால் இந்த யட்சிகளோ கன்னடம் தெரியாதவர்கள். பாண்டித் தமிழிலும் மலையாளத்திலும் இவர்களோடு கதைக்க பல மொழி அறிந்தவர்களை அழைத்துப் போக வேண்டி இருந்தது. இந்த உதவியாளர்கள் ஒரு கோப்பை சாயா, நாலு ஆசீர்வாதங்கள், ஒரு துண்டு கேக், நெற்றியில் ஒரு குரிசு வரைதலோடு போக மாட்டார்களே. மொழிபெயர்ப்பு வேலைக்குக் காசு கேட்டார்கள்.

ஆயத்தில் பணம் குறைவாக இருந்ததால், மலையாளமும் தமிழும் அறிந்த பாதிரியாரைத் தேடினார்கள். லயோனல் சம்மதிக்க அவரை அனுப்பினார்களாம்.

யட்சிகளை சந்தித்திருக்கீங்களா?

பின்சீட்டில் இருந்து ஆர்வமும் வியப்புமாக தெரிசா கேட்டாள்.

லயோனல் பாதிரியார் காரை நிறுத்தி இறங்கினார். எதிரில் சாயாக் கடையில் இருந்த யாரிடமோ ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச தூரம் தான், வாங்க.

அவர் காட்டிய இடத்தில் ஒரு ரெட்டை மாடிக் கட்டடம் ரொம்பப் பழையதாக நின்று கொண்டிருந்தது. யாரும் அதில் வசிப்பதற்கான அடையாளம் இல்லாமல் பொட்டல் காட்டில் நிற்கும் அந்த மனையைச் சிறு முட்செடிகள் சூழ்ந்திருந்தன.

இதான் சாவக்காட்டு வயசன் கட்டின வீடு.

லயோனல் சிரித்தபடி சொல்ல தெரிசாவும் மற்றவர்களும் புரியாமல் பார்த்தார்கள். யாரோ பெரியவரின் வீடாக இருக்கலாம். இப்படி ஒரு பெயரை தெரிசாவின் குடும்ப மரத்தில் பார்த்ததாக அமேயர் பாதிரியாருக்கு நினைவு இல்லை.

நூற்றைம்பது வருஷம் முன்பு கிறிஸ்துநாதரின் வேதத்திலே ஏறின பிராமணன் இந்த சாவக்காட்டு வயசன். ஆதரவு இல்லாம நாயைப் போல சுற்றிக்கிட்டு இருந்தவருக்கு இங்கே நிலத்து அடியிலே தான் புதையலும், வேறே ஏதோ ரசாயனமும் கிடைத்ததுன்னு கதை போகும்.

வீட்டுக்குள் போக தெரிசா ஆர்வம் காட்டினாள். கட்டிடம் இடிந்து விழுகிற ஸ்திதியில் இருக்கு என்று லயோனல் நினைவூட்டினார்.

ஒரு ஓரமாக நின்று பார்த்துட்டு உடனே வந்துடறேன்.

பதிலுக்குக் காத்திராமல், அவசரமாக ஓடினாள் தெரிசா.

பகல் நேரத்திலும் சாத்தான் வந்து இந்த ஸ்திரியிடம் ஒண்டியிருக்கிறான், அதுவும் தான் கண்ணின் இமை போல அக்கறையாகப் பாதுகாத்துக் கொண்டு வரும்போது. ஹைட்ரஜன் பலூனில் காற்று ஏறின மாதிரி ஓசைப்படாமல் பிசாசு நுழைகிறது.

நினைக்கவே கஷ்டமாக இருந்தது அமேயருக்கு. லயோனல் பாதிரியாரின் ஒத்துழைப்பைக் கேட்கலாமா என்று யோசித்தார். வேண்டாம், அந்த அளவுக்குப் போய்விட்டால் அப்புறம் ஹைட்ரஜன் பலூனில் காற்று இறக்கக் கஷ்டப்படுவது மட்டுமில்லை, பலூனும் எகிறிப் பறந்து விடக்கூடும்.

அவருக்கு லயோனல் பாதிரியார் மேல் கொஞ்சம் மன வருத்தமும் தான். குடும்ப வரலாறு தெரிந்து கொள்ள உதவி செய்கிறேன் என்று சொல்லி விட்டு, இப்படி யாரும் இல்லாத, முள்ளுச் செடி மண்டிய கட்டடங்களுக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்த வேண்டிய அவசியம் என்ன வந்து சேர்ந்தது?

தெரிசா வெயிலுக்குப் பாந்தமாக, உடுத்தியிருந்த புடவையின் தலைப்பை முக்காடாகப் போட்டுப் போனது பாதிரியாருக்குச் சற்றே ஆசுவாசத்தைக் கொடுத்தது. இங்கத்திய கிறித்துவப் பெண்கள் மாதாகோவிலுக்குத் தொழப் போகும்போது தரிக்கிற கோலமாச்சே இது.

ரொம்ப மணி நேரம் போனது போல அடுத்த ஐந்து நிமிடமும் போக, தெரிசா திரும்பி வந்தாள்.

இனி இவளை எங்கேயும் தனியாக விடக்கூடாது என்று அமேயர் பாதிரியார் முசாபரிடம் சொல்ல, அவன் சுற்றிப் பறந்த தட்டாம்பூச்சிகளை லாகவமாகப் பிடித்து ஒரு வினாடி கழித்து விடுவிக்கிற விநோத விளையாட்டில் மூழ்கியிருந்தான்.

பிஷ் அண்ட் சிப்ஸ் கடை இன்னும் ஒரு மாதம் அடைத்துப் பூட்டினால் அவன் நிலை தளர்ந்து போய்விடுவான். தெரிசாவை விட அவளுடைய கடையை ரொம்ப நேசிக்கிற மனுஷனாக அவனைக் கண்டு கொண்டிருக்கிறார் அமேயர் பாதிரியார்.

தெரிசா திரும்பி வந்தபோது சிரித்துக் கொண்டே வந்தாள்.

யாருமே இல்லாத இடம்னு சொன்னீங்களே. உள்ளே தொழுவத்திலே பசுமாடு கட்டி வச்சிருக்காங்க. அதுவும் பாருங்க. நான் கால்டர்டேல்லே இருந்து வரேன்னு தெரிஞ்சு அது என்னோடு இங்கிலீஷ்லே பேச ஆரம்பிச்சுடுச்சு.

என்ன கேட்டது?

முசாபர் ஆர்வத்தோடு விசாரித்தான்.

அவன் பக்கத்தில் நெருங்கிக் காதோடு சொன்னாள் தெரிசா –

இதுக்கெல்லாம் சோம்பல் கூடாது, முசாபரை ஒரு தடவை மேலே இருக்கச் சொல்லுன்னுது.

அவன் சங்கடமாக நெளிந்ததைப் பார்த்து அவள் திரும்பவும் சிரிக்க, லயோனல் கை காட்டி அமர்த்தினார்.

இந்த இடத்தோட பழைய சரித்திரம் அது. நான் சொன்னேனே, சாவக்காட்டு வயசன். சாவக்காட்டானுக்குப் பழம்பானையிலிருந்து ஒரு குப்பியில் ஏதோ திரவம் கிடைத்ததாகப் பிரஸ்தாபம். அவன் தூக்கி எறிந்த அந்தப் பலா இலையை மேய்ந்த, தெருவிலே போன மாடு ஒன்று அரைகுறையாகத் துரைத்தனப் பாஷையில் இரைய ஆரம்பித்தது. மாட்டுக்காரன் சாவக்காட்டு வேதக்காரன் வீட்டில் ஏறி அவனிடம் பிராது கொடுத்தான். இப்படி என் பசுமாட்டை ராஜ தூஷணம் செய்ய வைத்து விட்டீர்களே. இது கறக்கிற பாலும் இனி விலை போக மாட்டாதே. ஊரில் ஒருத்தனாவது அதைக் கையால் தொடவும் துணிவானா? மாட்டைப் பழையபடி ஆக்கிப் போடும். இல்லாத பட்சத்தில் நீரே அதை எடுத்துக்கொண்டு அதுக்குண்டான பணத்தை அடையும் என்று சொன்னான்.

அப்புறம்?

இன்னும் சிரிப்பு அடங்காத நிலையில், தெரிசா கேட்டாள்.
சாவக்காட்டான் மறுபேச்சு பேசாமல் மாட்டை அவன் சொன்ன விலை கொடுத்து வாங்கிக் கொட்டிலில் கட்ட அது ராத்திரி முழுக்க ஏதோ அன்னிய பாஷையில் பிரலாபித்துக் கொண்டிருந்தது. அது கறந்த பாலை வீணாக்க மனம் இல்லாமல் தினசரி சுண்டக் காய்ச்சி வெல்லப்பாகு சேர்த்து அம்பலத்தில் பாதியும், கொடுங்கல்லூர் பள்ளியில் மீதியுமாக விநியோகிக்கக் கொடுத்தான். பகவதி அம்பலத்தில் கொடியேற்றம் நடக்கிற போது பகவதி இங்கே வருதாம். அந்தப் பசுவும் இங்கே கரையும்னு நம்பிக்கை. நேற்றைக்கு கொடியேற்றம்.

லயோனல் சொல்லிக் கொண்டே நடந்தார்.

இருந்தாலும், இத்தனை காலம் கழிச்சு எப்படி அந்தப் பசு மாடு?

எல்லாம் உன்னைப் பிடிக்கப் பார்க்கிற சாத்தானுடைய வித்தை. பாதுகாப்பாக இரு மகளே.

அமேயர் பாதிரியார் யாரிடமும் பதிலை எதிர்பார்க்காமல் காரில் ஏறினார். தெரிசா அந்த மனையில் மண்ணைக் கையில் எடுத்து சிரத்தையோடு நெற்றியில் தரித்துக் கொண்டதை அவர் பார்க்கவில்லை.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன