புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 41 இரா.முருகன்


காயலில் படகு நகரத் தொடங்கியதும் அமேயர் பாதிரியார் பாட ஆரம்பித்தார். பிரஞ்சுப் பாட்டு.

அன்றொரு தினம் நின்று பாடினேன்
காற்றில் கலந்த பாடல் ஒன்று
புல்வெளி எங்கும் சுற்றித் திரிந்து
நதிநீர்த் திவலை சிதறி நனைத்து
பறவைச் சிறகில் தீற்றிப் பறந்து
பனிமலைச் சிகரம் ஆரத் தழுவி
திரும்பி வந்து என்னைச் சூழும்.
பாடுகிறேன் ஒரு பழைய பாடல்
பழைய சிநேகிதர் வருக.

மனம் விட்டுப் பாடி எத்தனை காலம் ஆகி விட்டது. நீஸ் நகர கதீட்ரல் பாடல் குழுவில் சிறுவனாகச் சேர்ந்த போது பாடுவதே வாழ்க்கையாக வேண்டும் என்று எவ்வளவு ஆசைப் பட்டிருப்பார் அவர். கூடவே ஒரு மிரகூ இசைப் பட்டறை வயலினும் வாங்கி வீட்டில் இருத்த வேண்டும் என்று மனம் சதா ஏங்கிய பருவம்.

வயலின் வாசிக்கச் சொல்லித் தந்த திபொராவின் பூப்போன்ற நீண்ட விரல்கள்.

ஆண்டவனே, அந்த நினைவுகள் வேண்டாமே. த்யு மெ பார்தன். மன்னியும்.

இனிமைக்குள் கசப்பாக, கசப்பில் இனிக்கிறதாக சங்கடமான பழையது எதுவும் திரும்ப வரவேண்டாம்.

பிரான்ஸ் தேசத்தில், நீஸ் நகரத்திலிருந்து இருபது மைல்கல் தூரத்து மலைச் சரிவில் அவர் பிறந்த கிராமம். அழகான பெயர் அதற்கு.

முவான் சார்த்து.

சாக்லெட் கொண்டு செய்து நிறுத்தியது போல சின்னஞ்சிறு மாதாகோவிலும், மலைச்சரிவில் சுருண்டு நெளிந்து போகும் குறுகிய தெருக்களும், மாட்டுப் பட்டியும், சிறு கல் மண்டபங்களுமாகக் கண்ணில் நிறைந்து நிற்கும் கிராமம்.

முவான் சார்த்து, இன்னும் இயல்பு மாறாமல் அப்படியே இருக்கிறது. வீட்டு வாசல்களில் கார்களும் உள்ளே சத்தம் தணித்து வைத்த டெலிவிஷன் பெட்டிகளில் மொணமொணவென்று இங்கிலீஷ் நிகழ்ச்சிகளும் மட்டும் புதிது அங்கே.

முதல் டெலிவிஷன் கிராமத்தில் எட்டிப் பார்த்தபோது அமேயர் பாதிரியார் குருத்துவக் கல்லூரியில் படிக்க நீஸ் நகரம் வந்து விட்டிருந்தார். ஆனால் ரேடியோ பெட்டிகள் எடித் பியாஃபும் ஷாஸு பெஹசன்ஸும் பாடிய பாடல்களாக சாஷன் இசையை நாள் முழுதும் பொழிந்த அதற்கு முந்திய காலத்தில் அவர் கிராமத்தில் தான் எட்டு வயதுச் சிறுவனாக இருந்தார். அவர் வீட்டில் ரேடியோப் பெட்டி வாங்க வசதி இல்லை என்பதால், கூடப் படித்த லூயி வீட்டில் தான் ரேடியோவும், அவ்வப்போது அவன் அம்மா தயவில், சீராக வெண்ணெய் தடவிச் சுட்ட ரொட்டியும், நாக்கில் எச்சில் ஊறச் செய்யும் சுவையான கோழி மாமிசமும்.

நானே ரேடியோ பெட்டி செய்திருக்கேன்.

லூயி ஓடி வந்து சொன்னான். கரகரவென்று க்வார்ட்ஸ் கல்லில் தேய்த்த ஒயர்ச் சுருளை இன்னொரு பக்கம் அட்டை ஓடு செய்து பொருத்திக் காதில் வைத்துக் கொள்ளச் சொன்னான் அவன்.

அட்லாண்டிக் கடல் சத்தம் கேட்கும்.

லூயி ஆசை காட்ட, பக்கத்தில், எதிரே, நாய் குலைக்கும் சத்தம் தான் கேட்டது. வீட்டுக்குப் பின்னால் கண்டாமண்டா என்று சகலமானதையும் போட்டு வைத்த காரேஜுக்குப் போகலாம் என்றான் லூயி.

அங்கே இன்னும் தெளிவா அட்லாண்டிக், பசிபிக் ரெண்டு கடலும் காதில் படும்.

லூயி கூட அந்த காரேஜுக்குப் போனான் பனிரெண்டு வயது அந்த்வான் அமேயர்.

வேண்டாம், அதெதுக்கு என்றார் அமேயர் பாதிரியார் அந்த்வான் அமேயர் பையனிடம்.

நினைக்காதே. அதெல்லாம் நினைக்கத் தகுந்ததில்லை. அறியாமல் செய்த பாவம்.

வேணாம், நிறுத்திப் போடு. சாத்தான் உனக்குள் வர நேரம் பார்க்கிறான்.

லூயிப் பையன் அந்த்வான் அமேயரை இடுப்பில் ஆரம்பித்து கீழே எங்கெல்லாமோ தொட்டுத் தடவிக் கொண்டிருக்க, எல்லாக் கடலும் ரேடியோ அட்டை இல்லாமலே அந்த்வான் அமேயர் காதில் கேட்டது.

போதும் நிறுத்து. அஸ்ஸெ அரட்தெ.

அமேயர் பிரஞ்சில் உரக்கச் சொல்லியபடி பாட்டைத் தொடர்ந்தார்.

லூயி அப்புறம் ஜிப்சிகளோடு போனான். அது அவன் அம்மா இறந்ததற்கு அப்புறம்.

ரெண்டு வருடம் கழித்து தண்ணீர்த் துறையில், பலாச மரத்தில் செய்து தங்க முலாம் பூசிய கோலைப் பிடித்தபடி நின்று எல்லா வியாதியையும் சுவஸ்தமாக்குவேன் என்று அறிவித்தான் லூயி. அவன் அப்போது சிவப்பு நிற அங்கி அணிந்து, மஞ்சள் நிறத்தில் ஒரு பட்டுச் சால்வையைக் கவனமான அலட்சியத்தோடு தோளில் போர்த்தி இருந்தான்.

கல்லறைத் தெரு ழாக் காலைச் சாய்த்து வந்து லூயி முன்னால் மண்டியிட்டு விழுந்தது அமேயர் நினைவில் வந்தது. இதுவும் கடந்து போகட்டும் என்று மனதின் கோடியில் அவர் குந்தியிருந்து ஒரு வினாடி பிரார்த்தனை செய்வதை அவரே பார்க்க முடிந்தது.

ழாக் தனக்கு சர்க்கரை வியாதி முற்றிப் போய், கல்லீரல், சிறுகுடல், இதயம், சிறுநீரகம், கை நகம் எல்லாம் விஷமடைந்து விட்டதாக அழுதான்.

லூயி அவனைத் தூக்கி நிறுத்தி அவன் இடுப்பில் கை வைக்க, அந்த்வான் அமேயர், ழாக் கண்ணில் குறுகுறுப்பை எதிர்பார்த்து கேரேஜிலிருந்து பார்த்தான்.

லூயி, அவனை அங்கே தொடு.

போ, சாத்தானே ஒழிந்து போ. புழுத்து அழுகி நரகத்தில் மலப் புழுவாக நெளி.

அமேயர் பாதிரியாரின் பாட்டு நிற்க அவர் சாபம் ஈரமான வெளியில் உஷ்ணம் பரத்தியது.

காயலில் படகோடு பறந்த சிறு பறவை எதுவோ திகைத்து வட்டம் கறங்கி அப்பால் போய் வானத்தில் உயர, படகு உள்ளே இருந்து கொச்சு தெரிசா மேல் தளத்துக்கு வந்தாள்.

அச்சன் பாட்டை நிறுத்தினதென்ன?

கொச்சு தெரிசா கேட்டாள். இந்தப் பிரதேசத்துப் பெண்ணு போல தலையைச் சுற்றி ஒரு வஸ்திரத்தை அணிந்து, சின்ன மூக்குத்தியும் தரித்த வடிவான இந்தியக் கிறிஸ்தியானிப் பெண்ணாக இருந்தாள் அவள். மெட்ராஸில் விமானம் இறங்கினதுமே அவள் இப்படியும் இன்னும் கூட நுட்பமாகவும் மாறித்தான் போனாள்.

யாரோடு தர்க்கம் அச்சா?

லூயி என்றார் சிரித்தபடி அமேயர் பாதிரியார். அவன் காலில் ழாக் விழுந்து அவனைத் தூக்கி நிறுத்தியது வரை சுருக்கமாகச் சொன்னவர், லூயி தொட்டது பற்றி ஜாக்கிரதையாகத் தவிர்த்தார்.

ஆற்றங்கரையில் பெருங்கூட்டமாக நிற்க, ழாக்கைப் பீடித்த வியாதிகளை எப்படி லூயி சுவஸ்தமாக்கினான் என்று அவர் சொன்னது பாதியில் நிற்க படகு, துறைக்கு வந்தது.

ஒரு குவளை சாயா கிடைக்குமா?

முசாபர் படகு உள்ளே இருந்தபடிக்கே கேட்டான்.

அதெல்லாம் கிடைக்கிற இடமாக விசாரித்துக் கொண்டு படகை இனிமேல் நிறுத்தலாம். சாயா குடிக்கத்தானே இந்தியாவுக்கு வந்திருக்கோம்?

தெரிசா சொன்னாள்.

படகை இரண்டு தினத்துக்கு மொத்தக் குத்தகை எடுத்து வந்ததால் காயலும் நதியும் கடந்து தூசி எதுவும் உடலில் படியாது, வெப்பம் தலையைச் சுடாது, வியர்வை வழியாது, நீரோடு போய் நீரோடு நின்று நீரோடு திரும்ப முடிவதில் தெரிசாவுக்கு அலாதி இன்பம்.

நடந்து போகிற தூரத்தில் தான் குரிசுப் பள்ளி இருக்கு மதாம்மா.

துடுப்புக் கோலை ஆழத் துழாவிப் படகை நிறுத்தியபடி படகுக்காரன் தெரிவித்தான்.

கொச்சு தெரிசா படகுக்குள் தன் செருப்புகளைத் தேடி அணிந்து கொண்டு, ஜாக்கிரதையாக மரப் பலகை ஏறிக் கரைக்கு வந்தாள். அமேயர் பாதிரியார் பாதிரிக் குப்பாயத்தைத் தோளில் சுமந்தபடி கால் சராயும், கைத்தறிச் சட்டையுமாக அடுத்து வந்தார்.

குளித்து விட்டு வரலாமா என்று தோன்றியது பாதிரியாருக்கு. நேற்று ராத்திரி குளித்தது. இனி இன்று மாலை தான் அடுத்த குளியல். நிறைய தண்ணீர் மேலே விழுந்தால் தோல் காய்ந்து போகிற சங்கடம் வேறே. ஊமைச் சொரியல் உயிரை வாங்கும் அப்புறம். பால்யத்தில் அவதிப் பட்டிருக்கிறார்.

லூயி, அந்த்வான் அமேயரை இடுப்புக்குக் கீழே தடவிய போது கூட.

தூரப் போ சாத்தானே. உன்னை எனக்குத் தெரியும் என்றார் அவர்.

முசாபர், வரலியா என்று கேட்டாள் தெரிசா. அவன் திரும்பவும், சாயா கிடைக்குமா என்று விசாரித்தான்.

நானும் உன்னைப் போல இப்போத்தானே இங்கே முதல் தடவையா வரேன். சாயாவும் மற்றதும் கிடைக்கற சௌகரியம் எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?

தெரிசா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முசாபர் லுங்கியைத் தழைத்து இடுப்பில் இழுத்துச் செருகிக் கொண்டு வெறுங்காலோடு மரப் பலகையில் கால் வைத்தான்.

தெரிசா சத்தம் போட்டாள் – –

அதையும் அவிழ்த்துப் போட்டுட்டு சும்மாவே வர வேண்டியது தானே.

முசாபர் சிரித்தான். அவளை ஒரு வினாடி நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே போய் செருப்புகளை அணிந்தபடி திரும்பினான். அவன் இன்றைக்கு முழுக்க லுங்கியோடு திரிய முடிவு செய்திருப்பதாகத் தோன்றியது தெரிசாவுக்கு. அதை முழங்காலுக்கு மேலே இந்தப் பிரதேசத்து மனுஷர்கள் போல உயர்த்திச் செருகிக் கொண்டு நடமாடாமல் இருந்தால் போதும்.

மரப் பலகையில் முசாபரின் கால் சற்றே வழுக்க நிதானப் படுத்தி நின்றான். ரப்பர் செருப்பு அறுந்து போயிருந்தது.

வரலை என்று அறிவித்து விட்டான் முசாபர்.

சாயா, செருப்பு ரெண்டும் இங்கே கிடைத்தாலே ஒழிய மேலே போவதற்கில்லை என்று திட்ட வட்டமான முடிவு அது.

படகுக்காரனுக்கு அசிஸ்டெண்ட், எஸ்தப்பன் என்ற பெயருடைய வயதான கிறிஸ்தவன் ஒரே வினாடியில் அவனுக்குப் பிரச்சனை தீர உதவி செய்தான்.

எஸ்தப்பன் கடவுளின் தூதர் என்றான் படகுக்காரன். லூயி போல இருக்கும் என்று அமேயர் பாதிரியார் நினைத்தார். ழாக்கின் வியாதி எல்லாம் சுவஸ்தம் ஆகி அவன் படகுத் துறையில் சகலரும் காணக் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி லூயி புகழை ஓங்கிச் சொல்லிக் கொண்டிருந்தது அவருக்கு நினைவு வந்தது.

காசு போதாது என்று லூயி கூட சண்டை போட்டபடி படகுத் துறையில் கட்டிப் புரண்டதும், லூயி போர்த்தியிருந்த மஞ்சள் சால்வையை உருவி எடுத்து ழாக் போர்த்திக் கொண்டு நடக்க, அந்தச் சால்வையில் இருந்து புகையும் நெருப்பும் கசிந்து அது முழுக்க எரிந்து போனதும் அமேயர் பாதிரியாருக்கு நினைவு வந்தது.

மதாம்மா, துணிக்குப் பூட்டற ஊசி ஒண்ணு கொடு.

எஸ்தப்பன் கேட்டபடி தெரிசா கொடுத்த சேப்டி பின், முசாபரின் செருப்பை நடக்க வாகாகத் திரும்ப ஆக்கியது. அறுந்த வாரோடு லாகவமாக அதை இசைத்துச் செருகிக் காலில் படாமல் பின் குத்தியிருந்தான் எஸ்தப்பன்.

வர்க்கியே. ஓ வர்க்கியே.

கரையில் நின்றபடியே எஸ்தப்பன் அவனுடைய சோனி உடலுக்குப் பொருந்தாத பெருஞ்சத்தத்தில் கூவக் கரையில் இருந்து தேசலாக யாரோ பேசும் சத்தம்.

எஸ்தப்பன் திரும்ப இரைந்தான்.

சாயப்பன் மாருக்கு சாய் உண்டாக்கி வையடொ.

முசாபர் படகு இறங்கி இருபது அடி நடந்தபோது திருப்பத்தில் சாயாக் கடையும் அங்கே அவனை எதிர்பார்த்து சூடான சாயாவும் காத்திருந்தன.

அற்புதம் தான் என்றாள் தெரிசா. அமேயர் பாதிரியார் எதுவும் சொல்லவில்லை.

இந்த ஊர் பெயர் என்ன?

அமேயர் பாதிரியார் கேட்க, பக்கத்தில் உட்கார்ந்து சாயா குடித்துக் கொண்டிருந்த உள்ளூர்க்காரன் அவரை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு கிளாஸைத் திரும்ப வாய்க்கு உயர்த்தினான்.

அமேயர் பாதிரியார் கடைக்குப் பின்பக்கம் போய் நின்று பாதிரியார் குப்பாயத்தை அணிந்து திரும்ப வந்து அதே மனுஷனிடம் அதே கேள்வியை மீண்டும் கேட்க, அவன் மரியாதையாக எழுந்து நின்று பதில் சொன்னான்.

இது நெடுமுடி, அச்சோ.

சொல்லி விட்டு பரம சங்கடத்தோடு பாதி குடித்த கிளாசைத் திரும்ப வைத்துவிட்டு கணக்கில் எழுதச் சொல்லியபடி அவன் மெல்ல நடந்து போனான்.

அவன் முழுக்க குடித்து முடிந்த பிறகு தான் பாதிரி உடுப்போடு வந்திருக்கலாம் என்று அமேயர் பாதிரியாருக்குத் தோன்றியது.

மேலும், ஊர்ப் பெயரும் மற்றதும் தெரிந்து என்ன ஆக வேண்டும்? வேடிக்கை விநோதம் பார்க்க வந்த பூமியில் ஒரு பகுதிக்கும் மற்றதுக்கும் வித்தியாசம் இருந்தால் தான் என்ன, இல்லாவிட்டால் தான் என்ன? முடிந்தவரை எல்லாம் பார்த்து முடித்து நாலு புகைப்படமும், பத்து பக்கமாவது வரும் பிரயாணக் குறிப்புமாக ஊர் திரும்ப அல்லவா உத்தேசித்து வந்தது?

பாதிரியார் கேட்காமலேயே குரிசுப் பள்ளிக்கு எப்படிப் போக வேண்டும் என்று சாயாக் கடையில் தடித்துக் கூடிய கூட்டமே விளக்கி உதவ வந்தது. ஓரிருவர் அவரையும் தெரிசாவையும் அங்கே நேரே கொண்டு போய் விடவும் தயாராக முகம் பார்த்தபடி இருந்தார்கள்.

ஊரில் முசாபரைச் சுற்றி இருக்கும் கூட்டத்தை விட அதிகமானது, அமேயர் பாதிரியாரின் வாய் பார்த்து நிற்க இங்கே திரண்டது. கூட்டத்தில் இருந்து ஒரு சிறுவனை முன்னால் தள்ளி விட்டு அவனுடைய அப்பன் முறையிட்டது அவனுடைய சைகை மூலம் அர்த்தமானது பாதிரியாருக்கு. –

தினசரி இவன் ராத்திரி படுக்கையில் மூத்திரம் போய் உபத்திரவமாகிறது. வீடு முழுக்க சதா மூத்திர வாடை தான். வெளுத்த பாதிரியார் ஒரு மந்திரம், ஒரு பிரார்த்தனை செய்து உடனே குணப்படுத்த முடியுமானால் நன்றாக இருக்கும்.

இன்னொரு பெண் காதுப் பக்கம் தலைமுடியை நீக்கிக் காட்டினாள். அங்கே அவள் காது பாதி தான் இருந்தது. அது வளர உள்ளூர் மருத்துவன் கொடுத்து பிரதி தினமும் மூணு வேளையாக ஒரு வருடம் போல சாப்பிட்ட மருந்து அவளுடைய உள்காதை வளர்த்து விட்டது. மேலும், இப்போது ராத்திரி சதா கடல் இரைச்சல் கேட்ட மணியமாக இருப்பதால் தூக்கம் கெடுகிறது. அவள் கடல் தீரத்தில் இருந்து வெகு தூரத்தில் இருந்தாலும் காதுக்குள் கடல் வந்துவிடுகிறது.

கொச்சு தெரிசா வீட்டில் எப்போதாவது கேட்டுப் பழகிய மொழி மெலிதாக நினைவு வர இதை ஒரு மாதிரி பாதிரியாருக்கு மொழி பெயர்த்துச் சொன்னாள் அவள். சரியாக இருக்கும் என்று அவளுக்குத் தெரியும். அந்தப் பரிதாபமான பெண்ணின் உட்காது பார்க்கும்போது தெரியாவிட்டாலும், அவள் உபாதை புரியும்.

பாதிரியார் அற்புதங்கள் செய்ய வந்திருக்கிறாரா என்று முசாபரிடம் ஒருத்தன் மலையாளத்தில் கேட்க அவன் புரிந்தது போலச் சிரித்தான்.

சினிமா நடிகர் மாதிரி அவன் சிரிப்பதாக அங்கே பொதுவான கருத்து நிலவியது. கூட்டத்தில் ஓரமாக நின்ற ஒரு பட்டை பிரேம் மூக்குக் கண்ணாடிக் காரன், நடந்தபடி பாடிக் கொண்டிருக்கும் அந்த சினிமா நடிகன் நடித்த புதுப் படம் தற்போது ஊரில் திரையிடப்படுவதாக முசாபரிடம் சொன்னான். கொச்சு தெரிசா ஆர்வம் காட்டிக் கேட்டாள்.

அவளுக்கு இந்தப் பகுதியில் எல்லாமே, எல்லோருமே மனதுக்கு இசைந்து இருப்பதாகத் தோன்றியது இது முதல் முறையாக இல்லை. பச்சைப் பசேலென்று வயலும் வரப்பும் கூப்பிடு தூரத்தில் கடலும், காயலுமாக அவளுக்கு பிரியமான மந்திர பூமி இது. அவளுடைய முன் தலைமுறைகள் பிறந்து தவழ்ந்த மண்.

அச்சோ, கல்லீரல், கணையம், சிறுகுடல், உதர விதானம், தண்டுவடம், சிறுநீரகம் எல்லாம் செயலற்றுப் போனது. மாற்றித் தாருங்கள்.

ழாக் கெந்தி நடந்து வந்து அமேயர் பாதிரியார் காதில் சொல்ல அவர் அவசரமாக எழுந்தார். நாசம். சாத்தான் அல்லவோ இந்த நினைப்பும் பிரமையும் எல்லாம்.

தேநீருக்காக பணம் அடைத்துக் கொண்டிருந்த கொச்சு தெரிசாவிடம் அவர் சொன்னார் –

போகலாமா, திருப்பலி முடிஞ்சுடும் மாதாகோவில்லே.

இங்கிருந்து நகராவிட்டால், அடுத்து லூயியும் வருவான். க்வார்ட்ஸ் கட்டி ரேடியோவில் கடல் ஓசை கேட்க வீட்டுப் பின்புறம் வரச் சொல்லி வற்புறுத்துவான். சாத்தான் நல்லொழுக்கத்துக்கும் பண்பாட்டுக்கும் முற்றிலுமாக விரோதமானவன். அமேயர் பாதிரியார் அதனை நன்கறிவார்.

நான் முன்னாலே போறேன்.

அமேயர் பாதிரியார் நடக்கும்போது பாதையில் குறுக்கே தாழப் பறந்த மயில் அவருக்கு முன்னால் குறுகுறுவென்று ஓடியது.

சாத்தான் இப்படியும் வரலாம்.

அமேயர் பாதிரியார் சொல்ல, கொச்சு தெரிசா இருகை உயர்த்தி இங்கே இருக்கிறவர்கள் போல மெய்மறந்து கும்பிட்டாள்.

கழிப்பிடம் இருக்குமா?

பின்னால் இருந்து முசாபர் குரல் தொடர்ந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன