புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 32 இரா.முருகன்


ஏர்ல் ஓஃப் லில்லி கேஸில். அல்லிக்கோட்டை பிரபு ஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது.

சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை உறுதி செய்து கொண்டார் ஆல்பர்ட் பிரபு. அவை எப்போதும் அணியத் தயாராக நானூறு வருடமாகப் புதியதாக இருப்பவை.

ஒரு ராத்திரி விடாமல் தினம் தூய்மையான ஆடைகளை அணிந்து, காலில் தூசு இல்லாமல் மின்னும் படியாகத் துலக்கிய பாதுகைகளையும் இட்டுக் கொண்டு அவர் நீள நெடுக நடப்பார். கீழ்வீடு முழுவதும், படியேறி மாடியிலும், வெளியே சிறு தோட்டத்திலும் காலாற நடப்பார். ஓர் அறையிலிருந்து மற்றொன்றுக்குள் கதவைச் சத்ததோடு சாத்தி, ஜன்னலை விரியத் திறந்து பிரவேசிப்பார்.

கோபம் தலையேற அவர் வெளியே வரும்போது கதவு அடித்துச் சார்த்திக் கொள்ளும். காற்றால் மரக் கதவும் ஜன்னலும் மூடியதாகவும் திறந்ததாகவும் நினைக்கிற மனிதர்களுக்கு அவ்வப்போது தன் உருவத்தைக் காட்டித் தருவார்.

தொலைவில் பார்த்தபடி நேராக நடை போட்டு வீடு முழுக்கச் சுற்றுகிற தன் இருப்பு வீட்டில் இருப்பவர்களுக்கு பயத்தைத் தருவதை அவர் கடைக்கண்ணால் மட்டும் பார்த்துத் திருப்தி அடைவார். முழுவதுமாகக் கண் விழித்துப் பார்த்தால், வீட்டுக்குள் இருப்பவன் பார்வையைச் சந்தித்து லகுவாக உதாசீனப்படுத்தி இளக்காரமாகப் பார்த்து விடும் அபாயம் உண்டு.

அந்தக் கஷ்டம் எதுவும் ஆல்பர்ட் பிரபு அனுபவிக்க உகந்ததில்லை.

வீட்டு முன்னறையில் மூன்று ஜோடி காலணிகளைப் பார்த்தார் ஆல்பர்ட் பிரபு. பெண்கள் அணியும், சற்றே பழைய ஒரு ஜோடி. புதியதாகத் தெரியும் ஆனால் சுருக்கம் விழுந்த, நல்ல தோலில் செய்த ஆண்களின் பாதரட்சை இன்னொரு ஜோடி. எந்த நிமிடமும் அடிப்பாகம் அற்று விழுந்து உபயோகிப்பவரைத் தரை தொட வைக்ககும் நைந்த ஜோடி ஷூக்களும் அங்கே உண்டு. பாதிரியார்களும் பிஷப்புகளும் அணிகிறவை அவை. நானூறு வருடமாக அப்படித்தான்.

ஆல்பர்ட் பிரபுவின் இந்த வீட்டுக்கு, அவருடைய அனுமதி இல்லாமல் யாரோ விருந்துக்கு வந்திருக்கிறார்கள். வீட்டில் கூட்டம் சேர்ந்திருக்கிறது.

புதிதாக வந்த ஆண்களின் உடம்பு வாடையும் பெண் வாடையுமாக வீடு, தங்கும் விடுதி போல தறுதலைத் தனமாக மாறி இருப்பதை அவர் கவனிக்கத் தவறவில்லை.

வந்தவர்கள் வெகு சுமாரான பண இருப்பு உள்ளவர்களாக இருக்கலாம். இந்த மாதிரியான உயர்குடி வசிப்பிடத்தில் அவர்கள் நுழையவே அனுமதி கிடைக்காது ஆல்பர்ட் பிரபு மூச்சு விட்டுக் கொண்டிருந்த காலத்தில்.

காலம் மாறி யார்யாரோ அவர் வீட்டுக்குள் சுவாதீனமாக நுழைந்து தூசி படிந்த காலணிகளை இஷ்டத்துக்குக் கழற்றிப் போட்டு விட்டு தங்கிக் கொள்கிறார்கள்.

ஆர்னால்ட் பிரபுவுக்கு எரிச்சல் ஏற்பட்டது. நடக்க வேண்டும். நடந்தபடி, பழகியவர்கள் தவிர புதியதாக யாரும் வந்து சேராமல், மேலதிகக் கூட்டம் கூடாமல் இந்த வீட்டைக் கல்லறை வளாகத்தின் அமைதிக்குக் கொண்டு போக வேண்டும். சத்தமும், சந்தோஷமும், சாப்பாடும் இல்லாமல் சீக்காளியாகப் புலம்பும் வீடு. அதுதான் பார்க்கத் தகுந்தது. மகிழ்ச்சியும் குழந்தைகளும் சகிக்க முடியாது.

எலிக்குஞ்சு போல இருக்கும் இந்தியனை இங்கே இருக்க அனுமதித்தது தவறாகப் போனது. இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து ரத்தத்தையும் மாமிசத்தையும் வழியில் தூவி அவன் படுக்கையைச் சுற்றித் தலையைக் கையில் இடுக்கிக் கொண்டு ஓடி, பெருஞ்சிரிப்பாக இரைந்திருந்தால் ஓடியிருப்பான்.

ஆனாலும் அந்த மனுஷனுக்குள் இத்தனை இளக்காரம் இருப்பதைத்தான் ஆல்பர்ட் பிரபுவால் தாங்கவே முடியவில்லை. பேராசிரியர் என்று சொன்னார்கள். அதிமேதாவி என்பதால் திமிரும் அலட்சியமும் அதிகமான கறுப்பன் அவன்.

தூங்குகிறானே, பதறி எழுந்து பயப்படட்டுமே, தொரதொரவென்று படுக்கையிலேயே மூத்திரம் கழித்து அலறட்டுமே என்ற நப்பாசையோடு காலி சாயாக் கோப்பையைத் தரையில் போட்டு உடைக்கப் போனால் எழுந்து அதைப் பிடுங்கி வைத்துவிட்டுப் போர்த்திக் கொண்டு திரும்பப் படுக்கிறான்.

கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினால் பதிலுக்கு இந்திய பாஷையில் ஏதோ சொல்கிறான். அந்த மொழி முழுக்கப் புழுத்த வசவுகளால் ஆனது மாதிரித் தெரிகிறது. ஒவ்வொருக்கொருவர் சுமுகமாக முகமன் கூறிக்கொள்ளக் கூட பரஸ்பரம் நாலு தலைமுறைகளில் வந்த பதினைந்து முதல் எண்பது வயதுக்கு உட்பட்ட பெண்கள், ஆண்களையும், அவர்களில் வளர்ப்பு மிருகங்களையும் வம்புக்கு இழுத்து சகல உறவும் கற்பித்து வையும் மொழியாக அது இருக்கலாம்.

ஆல்பர்ட் பிரபுவின் ஏழெட்டு தலைமுறை அப்படிப்பட்டவர்களாகவே இருந்தார்கள் என்பது அவரை யோசிக்க வைக்கிறது.

தொலையட்டும்.பெண்டாட்டியை ஊருக்கு அனுப்பி விட்டு ராத்திரி ஆலிங்கனத்தில் தொடங்கி அத்தனை சுகமும் தர பெண் துணை இல்லாமல், காயடித்த பன்றி போலச் சுருண்டு கிடக்கிறவனைச் சீண்ட வேணாமென்று பார்த்தால், ஆல்பர்ட் பிரபு காலை வீசி நடமாட அவருடைய வீட்டிலேயே ஆயிரம் இடைஞ்சல்.

கருத்து திரண்ட இளம் வயதுப் பெண் ஒருத்தி இரண்டாவது படுக்கையறையில் வாயைத் திறந்து கொண்டு மல்லாந்து கிடைக்கிறாள். அவளுக்குப் பக்கத்தில் மீசையும் தாடியுமாக அவளைக் கட்டியவனோ, இச்சித்துக் கலந்தவனோ.

ஆல்பர்ட் பிரபுவின் சுத்தமான வெள்ளையும் பழுப்புமான தாடி எங்கே, பேன் இழைந்து மூக்கில் ஏறும் இவன் தாடி எங்கே.

வெளியே உட்காரும் இருக்கையில் ஒருக்களித்துப் படுத்துக் குறட்டை விடுகிற வயோதிக பாதிரி எப்போது தன் பாதிரிக் குப்பாயத்தைத் துவைத்தாரோ. பிரஞ்சுக்காரர் என்று முகத்தில் எழுதியிருக்கிறது. வாரம் ஒருமுறை கழிப்பறைக்குப் போய், மாதம் ஒருமுறை குளிக்கும் சீலம் உள்ளவர்கள் அந்த மொழிக்காரர்கள் என்று ஆல்பர்ட் துரை உயிரோடு இருந்தபோது அறிந்திருந்தார்.

அது நானூறு வருடம் முன்பு. இப்போது முன்னேறியிருப்பார்கள் என்பதற்கு ஒரு முகாந்திரமும் இல்லை. ஆனாலும பிரஞ்சுப் பெண்களை ஆல்பர்ட் துரைக்குப் பிடிக்கும். குளிக்காததால், உன்னத லகரி ஏற்றும் அவர்களின் உடம்பு வாடையும்.

இவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்பதை விடக் கடலில் பயணமாவது நல்லது. பராக்குப் பார்ப்பதில் நேரம் கழிந்து போனால் விடிந்து போய் ஆல்பர்ட் பிரபு ஒன்றுமில்லாமல் திரும்ப வேண்டி நேரும். கருங்கடல் அலையடித்து வரட்டும்.

அவர் படிக்கட்டுகளில் மிதந்து மேல் தளத்துக்குப் போக எதிரே சமுத்திரம் விரிந்தது.

பெரிய கப்பல். ஆல்பர்ட் பிரபு வழிகாட்டித் தலைமை வகித்து நடத்திப் போகும் போர்க் கப்பல் அது. கொடிய பனிக்காலம். நான்கு கம்பளி ஆடைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அணிந்தும் குளிர் எலும்பைத் துளைக்கிறது. ஆழ்கடலில் தத்தளித்து சூறாவளியில் போய்க் கொண்டிருக்கிறது கப்பல்.

மேல் தளத்தில் இருந்து தொலைதூரம் பார்க்கிற ஆடிகள் மூலம் கண்ணைக் கவிந்து நோக்குகிறார் ஆல்பர்ட் பிரபு. தூரத்தில் மெல்ல அசைந்து வந்து கொண்டிருப்பது பிரஞ்சு நாட்டுக் கப்பல் என்று அதன் உருவத்தைப் பார்த்ததுமே தெரிகிறது. தொலைநோக்கு ஆடி மூலம் பார்வையில் மங்கலாகத் தெரியும் கப்பல் தட்டில் பறப்பதும் பிரஞ்சுக் கொடி என்று தான் தோன்றுகிறது. வழக்கமாக இந்த நேரத்துக்கு வருகிற கப்பல் தான் அது.

சற்றே வலப் பக்கம் திரும்பி நோக்கினார் ஆல்பர்ட் பிரபு. பெரிய பனிப்பாறை அங்கே கிழக்கு வடக்காகத் தட்டுப்படப் போகிறது.

கீழ்ப்படிதலுள்ள அவருடைய மாலுமிகளுக்கும் கடற்படை வீரர்களுக்கும் கடல் இரைச்சலை மீறிக்கொண்டு அவர் உத்தரவிடுவார் –

கப்பலை இடது பக்கம் திருப்புங்கள்.

மகா பெரிய தவறு நடக்கச் சில வினாடிகளே உள்ளன.

சின்ன வயசில் இருந்து மாற்றியே தான் நினைவில் படிந்திருக்கிறது. இடது பக்கம் திரும்பக் கண் சொல்லி, உடல் இயங்கினாலும், வாய் வார்த்தையில் அது வலது என்றே வந்து விழும். சாரட் வண்டிகளில் பயணம் செய்கிற போதும், குதிரைச் சவாரி செய்து வேட்டைக்குப் போகிற போதும் இடது பக்கம் போக வேண்டும் என்றால் ஒரு வினாடி யோசித்து மனதில் நிச்சயப்படுத்திக் கொண்டு சொல்வார் ஆல்பர்ட் பிரபு. படபடப்பிலோ மன அழுத்தத்திலோ உளைச்சலிலேயோ இருக்கும் போது இடம் வலமாகிப் பிசகாகி விடும்.

ஆல்பர்ட் பிரபு கடல் இரைச்சலை மீறி உரக்கக் கூவுகிறார் –

கப்பலை வலது பக்கம் திரும்புங்கள்.

மாலுமிகள் அவர் சொல்லை மீற முடியாது. சுக்கானை வளைத்துத் திருப்புகிறார்கள்.

பனிப்பாறை எழுந்து நிற்கப் போகிறது. தினமும் எழும். கப்பலை எதிர்கொள்ளும். அது சில்லுச் சில்லாகச் சிதறி உடைய, பாறை அதே படிக்கு நிற்கும். உயிர் போகிற வாதனையோடு குரல்கள். கையும் காலுமாக பனியில் துடிக்கும். கூக்குரலோடு பாறையில் தலை மோதும். சிதறி வழிந்து ஓசை தேயும்.

மேல் தளத்தில் ஆல்பர்ட் பிரபு. பாதகம் செய்தவன். மாபாதகம் செய்த பாவி. மன்னிப்பே இல்லை. தெரியும் அவருக்கு. நம்பிக்கை வைத்து வந்தவர்கள். இருநூறு பேர் இருந்தார்கள். திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்கள். நம்ப முடியாத திகில் முகத்தில். அதோடு அடுத்த வினாடி சாவு. மறக்க முடியாத முகங்கள். மறக்க முடியாத இறப்பு. ஆல்பர்ட் பிரபுவின் இறப்பும் கூட. தினமும் நடக்கிறது.

பனிப் பாறை எங்கே?

ஆல்பர்ட் பிரபு ஆச்சரியத்துடன் சுற்றிலும் தேடினார்.

பக்கத்தில் பிரம்மாண்டமாக ஏதோ ஊர்ந்து வந்தது. மீன். மிகப் பெரிய மீன். கதவுகள் விரியத் திறந்த வயிற்றோடு கூடியது. மீனின் வயிற்றுக்குள் கறுத்துத் தடித்த பெண் ஒருத்தி கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்ந்து கொண்டிருந்தாள். அந்த வயிற்றில் பலகணிகள் ஒவ்வொன்றாகத் திறந்து கடல் நீர் உள்ளே பொங்கி வழிய, சுற்றிலும் குப்பாயத்தை உயர்த்திப் பிடித்த பாதிரியார்கள் இலக்கின்றிப் பரபரப்பாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருத்தர் குப்பாயத்துக்குள் ஏதோ புத்தகத்தைத் திணித்துக் கொள்கிறார். கழுக்கு மொழுக்கென்று ஒருத்தன் கையை நீட்டிக் கொண்டு அவருக்குப் பின்னால் ஓடுகிறான். தூதரகம் என்று எழுதிய இரண்டு நிலைக் கட்டிடம் எல்லோருடைய வழியையும் அடைத்துக் கொண்டு முன்னால் எழுந்து நிற்கிறது. கடல் நீரில் அழுத்தமான நீலம் சிதற ஒரு பெரிய பறவை அந்தக் கட்டிட முகப்பில் நின்று ஆடிக் கொண்டிருக்கிறது. அதன் மேலே படியும் நீர்த் திவலைகளை ஆடிய படியே தலை குலுக்கி உதிர்த்துக் கொண்டிருக்கிறது ஆடும் அந்தப் பறவை.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆல்பர்ட் பிரபுவும் மீன் வயிற்றுக்குள் ஒரு பெரிய அலையில் கொண்டு தள்ளப்பட்டார். கட்டிட முகப்பை நோக்கி வேகமாக நகர்கிறது மீன்.

ஆல்பர்ட் பிரபு சுற்றுமுற்றும் பார்த்தார். எங்கேயிருந்து வந்தது இந்த மீன்? கடல் நீர் வழிவிட்டு வடிவது ஏன்? தட்டுப் படுகிற நிலப்பரப்பு எந்த ஊர்? மீனும் வறுவலும் விற்கிற கடையில் பழைய பத்திரிகைகளைக் கிழித்து சீராக அடுக்கிக் கொண்டிருக்கிறவன் யார்? பாதிரியாருக்குப் பின்னால் போன கழுக்கு மொழுக்கன் இல்லையோ இவன்? சைக்கிளில் வந்து இறங்கி அதைச் சுவரோடு சாய்த்து வைத்துவிட்டு உள்ளே ஏன் போகிறார் பாதிரியார்? நீலப் பறவை பறப்பது எங்கே?

அவருக்கு அர்த்தமாகியது. அவர் அந்தப் பெண்மணியின் கனவுக்குள் நுழைந்திருக்கிறார். முன்னறையில் உறங்கிக் கொண்டிருக்கிறவள். கறுத்துத் தடித்தவள். கிழங்கனைக் கட்டியவள். அல்லது ஆசை நாயகி.

அவள் மேல் இப்படி அப்படியென்று சொல்ல முடியாத ஆத்திரம் ஏற்பட்டது ஆல்பர்ட் பிரபுவுக்கு. அவளை அப்படியே எடுத்துப் போய் புரபசரின் பக்கத்தில் படுக்க வைக்கலாமா என்று ஒரு வினாடி தோன்றியது. வேணாம், அந்தப் பாதிரியார் பக்கத்தில் இடலாம். அங்கே ஒருத்தர் கிடக்கவே இடமில்லை. தடியனைக் கீழே போட்டு விட்டுப் பாதிரியாரை கட்டிலில் இடலாமா? அல்லது, இன்னும் ரசமாக, கறுப்பியை உருட்டி விட்டு, தடியன் பக்கத்தில் பாதிரியாரைக் கிடத்தலாமா?

எதுவும் வேண்டாம். நானூறு வயதில் இப்படியான அல்பமான காரியம் எதுவும் செய்ய அவருடைய கௌரவமும் அந்தஸ்தும் அனுமதிக்காது. செத்துப் போயிருந்தால் என்ன, இதெல்லாம் பெயரோடு சேர்ந்து இருக்கிற சமாசாரம் ஆச்சே. மேலும், அந்த மீன் வயிற்றில் இருந்தபடி கறுத்த பெண்ணைத் தூக்குவது அவரால் முடியாத ஒன்று. தடியனைச் சுமப்பதாக நினைக்கவே கை வலித்தது.

இந்த இழவை எல்லாம் பிறகு கவனித்துக் கொள்ளலாம். அவர் அடுத்து நடுவீட்டில் இருந்தாக வேண்டும். அதுதான் வழக்கமான நடைமுறை.

அவர் இடது பக்கமாகத் திரும்பினார். அது வலது என்று தோன்றியதை அழுந்தத் துடைத்தெறிந்தார். தினசரி இதுவும் நடந்தாக வேண்டும்.

கப்பல் மூழ்கி இறந்த அதே நிமிஷத்தில் வீட்டில் ஒரு விருந்து நடந்து கொண்டிருக்கிறது. தினமும் நடக்கும் விருந்து. அதே விருந்தாளிகள். அதே உணவு. மதுவும் கூட அதே தான். பாதி அருந்திய கோப்பைகள் நாளும் வரும்.

அவர் வாசலில் இருந்து படியேறி வந்தார். ஈரம் சொட்டச் சொட்ட கடல் படைத் தலைமை அதிகாரி உடையில் இருந்தார். திருமதி ஆல்பர்ட் பிரபுவைக் கண்கள் தேடின. அவள் உள்ளேயிருந்து விருந்துக்கான பதார்த்தங்களை வேலைக்காரர்கள் ஏற்படுத்தப்பட்ட வரிசையில் எடுத்து வர உத்தரவு கொடுத்துக் கொண்டிருப்பாள்.

இனி அவர் செய்ய வேண்டியதெல்லாம் அறையில் விருந்தினர்கள் யாரையும் பார்க்காமல் நேராக நோக்கியபடி நடக்க வேண்டும். அவர்கள் குழப்பத்தோடும் ஆச்சரியத்தோடும் அவர் முதுகுக்குப் பின்னால் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு நாளாவது சற்றே நின்று பின்னால் திரும்பி அவர்கள் முகத்தில் எழுதிய உணர்ச்சிகளைப் பார்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். முடிகிறதில்லை.

இந்த நேரத்தில் இவர் கடலில் ஏதோ தூரப் பிரதேசத்தில் எதிரிக் கப்பல்களையும் படகுகளையும் விரட்டிப் பிடித்து யுத்தம் செய்து கொண்டிருப்பாரே, இங்கே எப்படி வந்தார் என்ற வியப்பு நிச்சயமாக அந்த முகங்களில் இருக்கும். அப்போது அவர் சொல்ல முடியுமானால் –

மன்னிக்கணும், நான் இப்போத்தான் இறந்து போனேன், நடுக்கடல்லே வச்சு. நான் இல்லாவிட்டாலும் என் வீட்டு விருந்துக்கு வந்து சிறப்பித்ததற்காக உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லத்தான் நேரில் வந்தேன்.

ஆல்பர்ட் பிரபு நடக்க ஆரம்பித்தார். விருந்துக்கு வந்தவர்களும், பதார்த்தங்களின் மணமும், உற்சாகமான குரல்களும், மதுக் குப்பிகளில் நுரைத்துத் ததும்பும் ஒயினுமாக விருந்து மண்டபம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி அவர் முன் விரிந்தது. முகங்கள். ஒரு வினாடி சென்று, வியப்பால் விரியும் கண்களும், சங்கடமான மௌனமுமாக இந்தச் சூழ்நிலை இறுகும். ஆல்பர்ட் பிரபு எதையும் பொருட்படுத்தாது முன்னால் நகர்ந்து போய் சுவரில் படிந்து காணாமல் போவார்.

ஈர உடுப்புகள் கம்பீரமாக நடக்க அசௌகரியமானவை. என்றாலும் கப்பல் மூழ்கி எழுந்து வருகிறவர் உடுப்பு சுக்காக உலர்ந்திருப்பது சாத்தியமில்லை. ஷூக்களும் உள்ளே கடல் நீர் புகுந்து சத்தமெழுப்ப நடையின் வேகத்தைப் பாதித்தன தான்.

என்றாலும் கப்பல் படை தலைமை அதிகாரி ஆல்பர்ட் பிரபு நடந்தாக வேண்டும். இன்றும் என்றும் அந்த நடையில் கம்பீரம் துளிக்கூடக் குறையக் கூடாது.

ஆல்பர்ட் பிரபு மண்டபத்தின் நடுவே இருந்தார். இன்றைய நடை இன்னும் சில வினாடிகளில் முடியப் போகிறது. இனி இன்னொரு இரவு வரக் காத்திருக்க வேண்டும்.

காலில் ஏதோ இடறிச் சட்டென்று வேகத்தைக் குறைத்தது. தலை குப்புற விழுந்து விடும் அபாயம். வேண்டாம், விருந்துக்கு வந்தவர்கள் விரைவாக வந்து எழுப்பி விட முயற்சி செய்வார்கள். எப்படி வந்தீர்கள் என்று கேட்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால் என்றென்றைக்குமாக இது முடிவுக்கு வந்து விடலாம்.

காலில் இடறியது வாசலறை இருக்கையில் ஒருக்களித்துப் படுத்திருந்த பாதிரியார் என்று ஆல்பர்ட் பிரபுவுக்கு அர்த்தமானது. தூக்கத்தில் புரண்டு படுத்து விருந்து மண்டபத்தில் அவர் கால் பட்டு இடற உருண்டு கிடக்கிற கத்தோலிக்கர்.

ஆல்பர்ட் பிரபுவும் கத்தோலிக்கர் தான். அவர் எதிர்த்துப் போரிடுகிறவர்கள் யாரும் அப்படி இல்லை. மறுப்பாளர்கள். ஏசுவைத் தவிர சகலரையும் சகலத்தையும் மறுக்கிறவர்கள். ஆல்பர்ட் பிரபுவும் அவரோடு கப்பலில் வந்தவர்களும் இறந்து போனதில் அவர்களும் ஏதோ விதத்தில் காரணமானார்கள். அவர்கள் இல்லாமல் போயிருந்தால் கப்பல் செலுத்திக் கடலில் பயணப்பட்டுப் போயிருக்கவே வேண்டாமே. அவரும் விருந்தில் மதுவருந்திக் கொண்டிருப்பார்.

ஆல்பர்ட் பிரபு குனிந்து பார்க்க, அமேயர் பாதிரியார் எழுந்து தடுமாறித் தரையில் உட்கார்ந்தார். அரைக்கண் மூடியபடி லத்தீனில் எதையோ சொல்லி ஜபித்தார். அந்த வாசகங்கள் சரஞ்சரமாக வந்து விழ, பிரபு சற்றே நின்றார். பின்னால் விருந்து மண்டபமும் இரைச்சலும் வந்தவர்களும் போன இடம் தெரியவில்லை.

கால்டர்டேல் ஊர்க்காரர்கள் சார்பில் கேட்கிறேன். நீங்கள் உடனே வெளியேறி சாப்பாட்டுக்கடைக்கோ மதுக் கடைக்கோ போகலாம்.

தூக்கக் கலக்கத்தோடு பாதிரியார் சொன்னார். பரிசுத்தமானவற்றின் பெயரால் இல்லாமல் சராசரி வாழ்க்கையின் அடிப்படையில் அந்த புரோகிதர் கேட்டதை ஆல்பர்ட் பிரபு ரசித்தார். அவருக்கு நானூறு வருடம் கழித்து உலகம் எல்லா விதத்திலும் எளிமையாகப் போய்க் கொண்டிருக்கிறது. அது நல்லதே.

அன்பரே, இது என் வீடு. நீங்களும் உங்களோடு வந்த இந்தியக்காரர்களான தம்பதியும் தான் விருந்தாளியாக இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் வெளியேறினால் நன்றியுடையேனாக இருப்பேன். கப்பல் மூழ்கவும், விருந்து நடக்கும் போது நடந்து போகவும் எனக்கு நிறைய இடம் வேண்டி இருக்கிறது. இன்றைக்குக் கவிழ்ந்து விழுந்திருப்பேன். நீங்கள் இப்படி வழியில் கிடப்பீர்கள் என்று கொஞ்சமும் கருதவே இல்லை.

குற்றம் சாட்டுகிற குரலில் ஆனால் மரியாதையோடு ஆல்பர்ட் பிரபு சொன்னார்.

கொச்சு தெரிசா என்ற இந்தப் பெண் மயக்கமடைந்து விழுந்திருக்கா விட்டால் நாங்கள் யாருமே ராத்தங்கி இருக்க மாட்டோம். விடிந்ததும் போகலாம் என்று புரபசர் தான் இருக்கச் சொன்னார். ராத்திரிச் சாப்பாடாக ரொட்டியும், பழக்கூழும் கொடுத்தார். அறைக் கோடியில் ஜாம் போத்தல் உருண்டு கிடக்கும், பாருங்கள்.

அமேயர் பாதிரியார் அதே மரியாதையோடு சொன்னார். அவருடைய உறக்கத்துக்கு இடைஞ்சலாக யாரோ வந்து எழுப்ப வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர். அப்படித்தான் போதமானது அவருக்கு இதெல்லாம்.

நான் கடைசி அடி எடுத்து வைத்து மறையும் இடத்தில் போத்தல் உருண்டு கிடக்கிறது. பரவாயில்லை. இன்று ஒரு நாள் எல்லாமே தாறுமாறாக நடந்த வகையில் அதையும் சேர்த்துக் கொள்கிறேன். சமாதானமாக உறங்குங்கள்.

ஆல்பர்ட் பிரபு நின்றபடியே கை நீட்ட பாதிரியார் சுவரில் சாய்ந்திருந்தார்.

இந்தியாவில் கொச்சு தெரிசாவின் வம்சத்தில் அம்மிணி என்று ஒரு சின்னப் பெண் தட்டுப் படலாம். என்னை மாதிரி. ஆனால் என்னைப் போல இல்லை. தெரிசா அங்கே கருத்தரிக்கலாம். அநேகமாக அது பெண் சிசுவாக இருக்கும். அம்னி என்று பெயர் வைக்கச் சொல்லுங்கள். அம்மிணிக்கு பிடித்ததாக இருக்கும்.

ஆல்பர்ட் பிரபு தலையை ஆட்டியபடி நடந்தார். இதெல்லாம் அவருக்குச் சம்பந்தமில்லாத நினைவுகள். எங்கிருந்தோ வந்து புகுந்திருக்கின்றன. போகட்டும், யாருக்கும் கெடுதல் நினைக்காமல், அசுத்தமானதைக் கற்பனை செய்யாமல், தங்கந்தங்கமாக நல்லதாகத் தானே இருந்தது அதெல்லாம். அம்மணி. இந்த இந்தியப் பெயர் மட்டும் பிடிக்கிறது. யார் என்று தெரியாவிட்டாலும் அவள் விருப்பத்துக்கு உரிய பெண் குழந்தையாக இருந்திருப்பாள். இன்னும் இருப்பாள்.

ஆல்பர்ட் பிரபு ஜாம் போத்தலை எடுத்து சாப்பாட்டு மேஜையில் வைக்க முயன்று அதை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாமல் தோற்றார். அவர் பின்னால் திரும்பிப் பார்க்க, அமேயர் பாதிரியார் தூங்கி இருந்தார்.

விடிந்ததும் அமேயர் பாதிரியார் கால்டர்டேல் ரயிலைப் பிடித்தபோது கொச்சு தெரிசாவிடம் சொன்னார் –

புரபசரின் வீட்டு சொந்தக்காரர், அத்து மீறி வீட்டுக்குள்ளே வந்தோம்னு நேற்று ராத்திரி முழுக்க என்னோட சண்டை பிடிச்சார் தெரியுமோ. பெறகு சமாதானமாகி ஜாம் போத்தலை மேசை மேலே எடுத்து வச்சுட்டுப் போனார்.

கொச்சு தெரிசாவும் முசாபரும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

ஏர்ல்ஸ் கோர்ட் மதுக்கடையில் அவர் எப்போது படி ஏறி இருப்பார்?

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன