புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 31 இரா.முருகன்


தட்டிய கதவைத் திறக்கப் போகிறவர் மேல் சட்டையில்லாத உடம்பில் நச்சுப் பாம்பு ஒன்றைத் தவழ விட்டுக் கொண்டு, தலைமுடியைச் சாய்வாக மடக்கிக் கட்டியவராக இருப்பார் என்று எதிர்பார்த்தாள் கொச்சு தெரிசா.

அவர் ஆறடி உயர்ந்து, இடுப்பில் மிகச் சிறிய கருப்புத் துண்டை இறுகக் கட்டி, புகைக்கூண்டில் படிந்த கரும் சாம்பலை உடம்பு முழுவதும் பூசி இருப்பார் என்று அமேயர் பாதிரியார் ஏனோ ஊகித்திருந்தார்.

முசாபர், தன் முக ஜாடையில், கண்ணில் மையிட்டு, மணிக்கட்டில் மல்லிகைப் பூச்சரம் சுற்றியிருந்த ஒருத்தரை எதிர் நோக்கியிருந்தான். கதவு திறக்கும்போது, மீன் வாடை அடிக்கத் தொடங்கியிருக்கும் வாடிய ரோஜாமாலை அணிந்து, பிரேதம் போன்ற முகக் களையோடு அவர் வருவார் என்று தோன்ற நின்றிருந்தான்.

யாரும் கதவைத் திறக்கிற வழியாக இல்லை.

முசாபர் கதவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமேயர் பாதிரியாரைப் பார்த்துச் சிரித்தான்.

புகைக்கூண்டு வழியா குறளிப் பிசாசு மாதிரி உள்ளே போயிடலாமா, ஃபாதர்?

அவனுக்குக் களி துள்ளிக் கொண்டு மனம் கும்மாளம் போட்டது. ஆலிவர் வீதியில் இருந்து ஐந்து நிமிட நடையில் ஏர்ல்ஸ் கோர்ட் பாதாள ரயில் நிலையம் போகும்போது அவனுக்கு தேவைப்பட்ட பத்து நிமிடத்தை அவன் முழுக்கப் பயன்படுத்தி இருந்தான்.

சிநேகிதன் ஒருத்தன், எட்வர்ட்னு பேரு. இங்கே தான் பக்கத்துத் தெருவில் இருக்கான்.

முசாபர் மெல்ல ஆரம்பித்தபோதே தெரிசாவுக்கு இது எங்கே போய் நிற்கும் என்று தெரியும்.

எட்வர்ட் மூச்சு விட்டுட்டிருக்கானான்னு விசாரிச்சுட்டு வந்துடறேன், நீங்க ஸ்டேஷன்லே செங்குத்தாக் கீழே இறங்கி ஒரு ஐந்து நிமிடம் ரயில் பாதையில் திரியற பெருச்சாளிகளைப் பார்த்துக்கிட்டு நில்லுங்க. சுவாரசியமான ஜந்துக்கள் அவை எல்லாம். ஆட்டுக்குட்டிகளை விட சாது.

அவன் சொல்லியபடி போன இடம் ஏர்ல்ஸ் கோர்ட் மதுபானக் கடை என்று பாதிரியாருக்குப் புரிந்தது. சுற்று வட்டாரத்தில் பிரபலம் அடைந்த, நூறு வருடமாக நடக்கிற கடை அது. போன வருடம் கூட ஒரு ஞாயிற்றுக்கிழமை சண்டே அப்சர்வர் பத்திரிகையில் படம் பிடித்துப் போட்டிருந்தார்கள். அது இல்லாமலும், வாய்மொழித் தகவலாக மான்செஸ்டரிலும் கால்டர்`டேலிலும் கடையின் புகழ் பரவித்தான் இருந்தது.

கொச்சு தெரிசாவுக்கு மனதில் நிரந்தரமாகக் குடியேறிய ஆசை ஒன்று உண்டு. லண்டனுக்குப் போய்த் தொழில் அபிவிருத்திக்கு முயற்சி செய்ய வேணும் என்பதே அது. இந்த ஏர்ல்ஸ் கோர்ட் மதுக்கடை ஓரமாக மீனும் வறுவலும் விற்கிற கடை போட்டால் ஒரே வருடத்தில் வியாபாரம் மளமளவென்று விருத்தியாகும் என்று திடமாக நம்ப ஆரம்பித்திருந்தாள் அவள். மதுக்கடைக்கே நேரில் போய் வசதி விவரம் பார்த்து வரவும், தக்கவர்கள் கிடைத்தால் விசாரிக்கவும் அவளுக்கு ஆவல். பாதாள ரயில் வண்டி நிலையத்தில், பாதிரியாரோடு பேச ஏதுமில்லாமல் சும்மா உட்கார்ந்திருக்காமல், அவரை அனுப்பி வைத்து விட்டு மதுக்கடையைப் பார்க்கிற காரியத்தை முடிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

முசாபர் என் முந்தைய புருஷன் மெட்காஃபை விட கொஞ்சமே மேம்பட்ட குடிகாரன் அச்சா. மெட்காஃபாவது முழு பாட்டில் விஸ்கி குடித்தாலும் கார் ஓட்டுவான். உப்புச் சப்பற்ற விஷயத்துக்கு சண்டை போடுவான். இவன், இந்த முசாபர் ஒரு தேக்கரண்டி லகரி வஸ்து எதையும் மாந்தினாலும் போதை தலைக்கேறி உருண்டு விடுவான். போய் அவனைக் கடைத்தேற்றிக் கூட்டி வரேன்.

அவள் பணிவாகச் சொல்ல, அதுவும் நல்லதே என்று அமேயர் பாதிரியார் தனியே நடந்தார். நடைபாதை ஓரம் புத்தகம் விற்கிற கடையில் ஐம்பது பென்ஸுக்குப் ஒரு புத்தகம் என்று தருவதாக ஆசை காட்டி ஒரு வயசன் கூவிக் கொண்டிருந்தது கேட்டு சற்றே நின்றார்.

சிருங்காரம் சொட்டும் கதைகள். கேமிரா உடைகிற அபாயத்தில் நெருக்கமாக வைத்து எடுத்த சம்போக படங்கள் பக்கத்துக்குப் பக்கம். ஐம்பது பென்ஸ் மட்டும்.

அவன் தலையைக் குனிந்து கொண்டு உச்சரித்தது முழுவதும் காதில் பட, பாதிரியார் துள்ளிக் குதித்து தெருவை அவசரமாகக் கிடந்தார். முசாபர் காதில் இந்தக் கிழவன் கூவுவது விழாமல் இருக்க வேணும்.

அரை மணி நேரம் அவர் வருகிற போகிற ரயில்களைப் பார்த்துக் கொண்டிருக்க, முசாபர் ஆடிக் கொண்டே வந்தான். கூடவே கொச்சு தெரிசா. அவளும் சுதி ஏற்றிக் கொண்டிருக்கிறாள் என்று பாதிரியாருக்கு விளங்கியது.

தொழில் அபிவிருத்தி பற்றி விசாரிக்கும் போது, சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் தீரப் பரிசீலிக்க வேணாமா அச்சா, அதான்.

அவள் வெகுளியாகச் சொன்னாள்.

இப்படி ஆணும் பெண்ணுமாக, தம்பதியாக ரெண்டு குடிகாரர்களோடு போய் முன்பின் அறிமுகமில்லாத இந்தியப் பேராசிரியரைச் சந்தித்து, அவருக்கே நிச்சயமில்லாத எதையோ பற்றி விசாரிப்பது தேவையா என்று பட்டது. ரெண்டு தரப்பிலும் இணங்கி வருவது சிரமமாக இருக்கக் கூடும். திரும்பி விடலாமா என்று யோசித்தார் அவர்.

இல்லை, அது வாதிக்கனில் இருந்து அவருக்குக் கடிதம் எழுதிய தெக்கே பாதிரியாருக்கு அவமரியாதை செய்வதாகி விடும்.

லெமனேட் பத்து பென்ஸுக்கு விற்ற ரயில்வே நிலைய வெளிவாசல் கடையில் தலா ரெண்டு எலுமிச்சை ரசம் கொச்சு தெரிசாவுக்கும் முசாபருக்கும் பாதிரியார் வாங்கித் தந்தார். சிறிது யோசித்துத் தானும் ஒரு குவளை எலுமிச்சை பானம் குடித்தார். அவர் நடத்திக் கூட்டி வந்த ஸ்திரியும் புருஷனும் சுபாவமானவர்களாகி, பாதிரியாரோடு பாதாளா ரயில் தளத்துக்கு இறங்கினார்கள்.

அரைமணி நேரத்தில் இங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். இந்திய புரபசரோடு அரை மணி, ஒரு மணி நேரம் தேவையானதைப் பேசி முடித்து, வழியில் எங்கேயாவது இந்திய விடுதியில் கோதுமை ரொட்டியும் காரமான கோழி இறைச்சியும் கழித்து ஆலிவர் ரோடு விடுதிக்குத் திரும்ப ராத்திரி பத்து மணியாகலாம்.

பாதிரியார் இன்னொரு தடவை காலிங் பெல்லை அழுத்தி, எதற்கும் இருக்கட்டும் என்று வாசல் கதவையும் பலமாகத் தட்டினார்.

உடனே அந்த வாசல் திறந்தது.

கதவைத் திறந்தவர் ஐந்து அடிக்கும் குறைவானவராக இருந்தார். கறுத்து மெலிந்த, கைகளை மூடி விரல்கள் மேல் வழிந்து தொங்கும் முழுக்கைச் சட்டையும், பைஜாமாவும் அணிந்தவர். குரல் கணீரென்று இருந்தது. அமேயர் பாதிரியார் கவனித்தது வழக்கம்போல் அவருடைய நல்ல ஆங்கிலத்தையும்.

நீங்கள்?

அவர் பாதிரியரைக் குறித்து சந்தேகம் எழாதவராக முசாபரைக் கேட்டார். அவன் பெயர் சொன்னான். அது மட்டும் போதாதென்று பட, கொச்சு தெரிசா தான் இந்திய வம்சாவளி என்று சொல்லி கைப்பையில் இருந்து பாஸ்போர்ட்டைக் காட்டினாள். அது வேண்டாமென்று கை அசைத்து அவர் பாதிரியாரைப் பார்த்தார். யாரென்று சொல்லுங்க, கேட்கிறேன் என்கிறதான முகபாவம்.

வாதிக்கன்லே இருந்து எனக்கு தென்னிந்திய பாதிரியார் எழுதினார். இவங்க.

ஓ, தெக்கேபரம்பில் ஈ.

அவர் முடிக்கக் கஷ்டப்பட்டார். ஈ என்று ஏதோ சொல்ல உத்தேசித்து உள்ளே கூட்டிப் போனார். ஈ என்று இன்னொரு முறை உரக்கச் சொல்லி, உட்காரக் கை காட்டினார். எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி ஈ ஈ என்றார் ரெண்டு முறை. தொண்டையில் ஏதோ சிக்கிய அவஸ்தை.

முசாபர், அமேயர் பாதிரியாரை விளக்கம் கேட்கிறதுபோல் பார்த்தான். அவர் ஒரு அவுன்ஸ் கருணையை உதட்டில் தேக்கி கண்ணால் அதை உறிஞ்சி முசாபர் மேல் பொழிந்து விட்டு, பூர்த்தி செய்தார் –

அவரே தான், ஈப்பன் தெக் தெக்.

வீட்டுக்காரர் கலகலவென்று சிரித்தார்.

ஈப்பன் எனக்குத் தொண்டையிலே சிக்கினா தெக்கேபரம்பில் உங்களுக்கு.

தான் பாஸ்போர்ட்டைக் காட்டியதால் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு இப்படி இரண்டு பேரும் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று சந்தேகித்திருந்த தெரிசா, எல்லாம் தீர்ந்து சமாதானமானதை சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டாள்.

ஆனாலும் இந்திய வம்சாவளி என்று பொறித்த பாஸ்போர்ட் தரும் அந்தஸ்தும், முசாபருக்கு மறுக்கப்பட்ட அன்பான வரவேற்பு தனக்கு இந்தியத் தூதரகத்தில் கிடைத்த பெருமையும் இன்னும் அவளுக்குள் தங்கியிருந்து சுய உருவத்தை அவள் கற்பனையில் பெருக்கிக் காட்டிக் கொண்டிருந்தது. கால்டர்டேல் நகரசபை மேயர் போல பிரமுகராக சகல மரியாதையோடும் அவள் இந்தியாவில் வரவேற்கப்பட்டு சகல உபசாரங்களும் அளிக்கப் படக்கூடும். பாதிரியாரோடு அவள் இங்கே சந்திக்க வந்திருக்கும் காலேஜ் ஆசிரியர் பத்மன் அவற்றில் முதல் மரியாதையை இப்போது அவளுக்கு வழங்குவார்.

வட்ட மேசையைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சாப்பாட்டு மேஜை அது. என்றாலும் தூசி படிந்து இருந்ததைப் பாதிரியார் கவனித்தார். உட்கார்ந்தபடிக்கே அறைச் சுவர்களையும் கூரையையும் தலையைச் சுழற்றிப் பார்த்தார். மிக அழகான வேலைப்பாடு கொண்ட ஒரு பெரிய சுவரோவியமும், தேவதாரு மர கர்டர்களும் விதானம் விரித்து வெள்ளைச் சாந்து பூசிய தூண்களுமாக இருந்த அறை.

லண்டன் கென்சிங்க்டன் பகுதியில் மிடுக்கும், கம்பீரமும் ஆணவமும் கலந்து வரிசையாக அணிவகுத்து நிற்கிற இப்படியான வீடுகள் பணம் படைத்த யார்யாருக்கோ சொந்தம் என்பதை அமேயர் பாதிரியார் அறிவார். இந்த உடமையாளர்களில் பலரும் வெளி தேசக்காரர்கள். அமேயர் பாதிரியார் நாளும் குறிப்பாக ஞாயிறு தோரும் கொண்டாடி, கரிசனத்தோடு திருப்பலி நடத்தி, சங்கீதம் பாடக் கேட்டிருந்து, பிரசங்கமும் செய்து, சகலரையும் ஏசுவின் பெயரால் ஆசிர்வதிக்கும் கத்தோலிக்கத் திருச்சபையைச் சார்ந்தவர்கள் இல்லை அவர்கள் எல்லாரும்.

குடியும் குடித்தனமும் வீடு முழுக்கக் குழந்தைகளுமாக இருந்து, கட்டியவளுக்கு, ஞாயிற்றுக்கிழமை ஆட்டுக்கறி வைக்க மாமிசம் சுத்தப்படுத்திக் கொடுத்து விட்டு வந்த ஆயர்கள் திருப்பலி தரும் ஏசு பெயர் தாங்கிய மற்ற திருச்சபைகளைச் சேர்ந்தவர்களும் இல்லை அவர்கள்.

கென்சிங்டன் வீட்டு உடமையாளர்கள் வளைகுடா நாடுகளில் வியாபாரிகள். அவர்கள் முசாபர் போல இஸ்லாமியர்கள். அதிலும் பிரிவுகள் உள்ளதாக அமேயர் பாதிரியார் அறிவார். பேரீச்சம் பழமும் பெட்ரோலும் விற்றே உலகில் சகல சௌகரியங்களையும் சுகங்களையும் வாங்கியவர்கள். கென்சிங்க்டன் வீடுகளைப் பெருமை நிமித்தம் பெரும் விலை கொடுத்து வாங்கி வருடத்தில் வந்து தங்கும் சில நாட்கள் தவிர வெறுமனே பூட்டி வைப்பவர்கள் என்றும் கேள்வி. இத்தனை வருடத்தில் லண்டன் வரும்போதெல்லாம் ஆலிவர் வீதி விடுதியில் தங்கினால் காலையில் உலவ வரும்போது இங்கே இலக்கில்லாமல் நீள நடப்பது அமேயர் பாதிரியாரின் வழக்கம்தான். அப்போதெல்லாம் ஏதாவது ஒரு கதவு எங்கேயாவது திறந்து பிரஞ்சிலோ, மேட்டிமைத்தனமான ஆங்கிலத்திலோ சங்கைக்குரிய அமேயர் திருமேனி என்று அவரைக் கூவி விளித்து உள்ளே அமர்த்தி, தேநீர் கொடுத்து, தேவ வார்த்தை சொல்லக் கூடுமென்று அவர் கற்பனை செய்வதுண்டு.

முதல் தடவையாக கென்சிங்க்டன் வீடு ஒன்றினுள் பிரவேசிக்க அவருக்கு வாய்த்திருக்கிறது. தனியாக வராமல் ரெண்டு ஆட்டுக் குட்டிகளையும் இட்டு வந்தாலும், அவரைச் சுற்றித்தான் நடவடிக்கைகள் என்றாகியிருக்கிறது.

மனைவி பேற்றுக்காக இந்தியாவுக்குப் போயிருப்பதால் தான் தனியாகத் தான் இருப்பதாக அறிவித்தார் பத்மன். வாரம் ஒருமுறை வீடு சுத்தம் செய்வதாகவும், தனக்காக ஆழாக்கு சோறாக்கிப் பாலோ, புளிக்க வைத்து தயிரோ கலந்து சாப்பிடுவதாகவும் தெரிசா கேட்டபோது தெரிவித்தார்.

எங்க கடை இங்கே இருந்தா தினமும் சாயந்திரம் சுடச்சுட மீனும் வறுவலும் கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செஞ்சிருப்பேன்.

முசாபர் பேராசிரியரிடம் அன்போடு சொன்னான்.

நான் சுத்த சைவம்.

பத்மன் சிரித்தார். முசாபருக்கு அதற்கு அப்புறம் பத்மன் பற்றிய சுவாரசியம் போயே போய்விட்டது.

உள்ளே போய்த் தேநீர் தயாரித்து எடுத்து வரப் போனார் பேராசிரியர் பத்மன். அந்த கென்சிங்டன் வீட்டை இன்னொரு முறை நாற்காலியில் இருந்து எழுந்து அறைக் கோடிக்கு நடந்தபடி, கூரையிலும், சுவர்களிலும், ஜன்னல் வழியாகவும் நிதானமாகப் பார்த்து ரசித்தார் அமேயர் பாதிரியார்.

பத்மன் சாயா கோப்பைகளோடு வந்த போதே பாதிரியார் அவரைக் கேட்டார் –

இங்கே வீட்டுக்கான குடக்கூலி அதிகமாக இருக்குமில்லையா? உங்கள் பல்கலைக் கழகம், இந்த விஷயத்தில் திருச்சபை எங்களுக்குக் காட்டுவது போல் கஞ்சத்தனம் காட்டாமல் இருப்பது போற்ற வேண்டியது.

அப்படி இல்லை. இந்த வீடு மிகக் குறைந்த வாடகைக்குக் கிட்டியது.

பத்மன் சொல்லியபடி தேநீரை உதடு படாமல் அருந்த, அமேயர் பாதிரியார் கோப்பையை இதமான சூட்டோடு சத்தமெழ உறிஞ்சினார்.

பதுமனின் திணறலான பேச்சு இப்போது அமேயர் பாதிரியாருக்கு சகஜமாகப் பழகி இருந்தது. தரக்கேடில்லாத தேநீர் உண்டாக்கத் தெரிந்த அவர் மீது ஏசுவை விசுவாசிக்காதவர் என்ற விமர்சனத்தையும் மீறி அபிமானமும் வந்து கவிந்தது.

குறைந்த மாத வாடகைன்னு சொன்னீங்களே. ஒரு ஐம்பது பவுண்ட் இருக்குமா?

முசாபர் ஆர்வத்தோடு கேட்டு விட்டுக் கொச்சு தெரிசாவைப் பார்த்தான். அந்த நிலவரத்தில் லண்டனில் வீட்டு வாடகை இருந்தால் கால்டர்டேலை விட்டு இங்கே சட்டியும் பானையும் மூட்டை கட்டி எடுத்து வந்து குடித்தனம் போட்டுவிடலாம் என்று அவன் உத்தேசிருந்ததை அறிவேன் என்பதாக அவள் சிரித்தாள்.

வீடே கிடைக்கிற போது, கீகடமான ஒரு இடத்தில் பலகை அடைத்து ஒரு மீனும் வறுவலும் கடை போட்டால் காலம் இடைஞ்சல் இன்றிப் போகும் என்ற நினைப்பில் அவளும் பத்மனைப் பார்க்க, அவர் அவசரமாகச் சொன்னார் –

ஐம்பது பவுண்டில் இங்கே வீடு கிடைக்கணும் என்றால் ஒன்றுக்கு நாலு பிசாசுகள் தங்க வேண்டி வரும். எனக்கு ஒண்டுக் குடித்தனமாக ஒன்றே ஒன்று கிடைத்ததால், இருநூறு பவுண்ட் மாதம் மட்டும் வாடகையாக அடைக்கிறேன்.

அவர் மேலும் சொன்னதில் இருந்து கென்சிங்டன் வீடு அவ்வப்போது பேயோட்டம் இருப்பதாக எல்லாரும் சொல்வதால் குடிபுக யாரும் வராமல் இருபது வருடம் சும்மா பூட்டித்தான் கிடந்ததாம். பத்மன் இதற்கெல்லாம் அசருகிற பரம்பரையில்லை என்பதாலும் பரம்பரையிலேயே அமானுஷ்ய ஆத்மாக்களோடு பேசுகிற வம்சாவளியில் வந்தவன் என்பதாலும், கற்றும், படித்தும், விவாதம் செய்தும், எழுதி அச்சுப் போட்டும் சிந்தித்த எல்லாம் விஞ்ஞான பூர்வமானவை தவிர வேறொன்றுமில்லை என்பதாலும், பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துத் தான் துணிந்து போய் வீட்டுக்காரரைச் சந்தித்ததையும் வந்தவர்களுக்கு அவர் விளக்கினார். சாதாரணமாக கென்சிங்டனில் இப்படியான வீடுகள் பத்து மடங்கு அதிகமான வாடகையில் கம்பெனி நிர்வாகிகளுக்கே கிட்டும் என்றும் சொன்னார்.

இந்த வீட்டு வாசலில் பிளைவுட் அடித்து ஒரு மீனும் வறுவலும் விற்கிற கடை போடலாமா?

தடாலடியாக விசாரித்தான் முசாபர். போக வர இருநூறு மைல் தினமும் கால்டர்டேல் போய் வந்து கடை திறந்து வியாபாரம் செய்து பூட்டி முடியுமா என்று கொச்சு தெரிசா கவலைப் பட்டாள். ஆனாலும் அடிப்படையில் அப்படியான யோசனை அவளுக்குப் பிடித்திருந்தது.

வாசல்லே பிளாட்பாரத்திலேயே நாலு ப்ளாஸ்டிக் ஸ்டூல் போட்டுட்டா போதும். வாடிக்கையாளர்கள் கையில் தட்டை ஏந்தியபடியே சாப்பிட்டு முடித்துப் போயிடுவாங்க.

வியாபாரக் கனவுகளோடு, குரல் குழறத் தொடர்ந்தான் முசாபர்.

கால்டர்டேலில் அப்படித்தான் வியாபாரம் நடப்பதாகவும், பியர் குப்பிகளோடு வந்தவர்கள் கூட காலிடுக்கில் புட்டியை இடுக்கியபடி பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருந்து சாப்பிடுவதாகவும், இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் மீனோடு பியரும் விற்பனைக்கு இறக்கலாம் என்று யோசனை தருவதாகவும் தெரிசா தெரிவித்தாள்.

மதுக்கடை எல்லாம் ஆண்டவருக்கு விரோதமானது. திருப்பலி நேரத்தில் வழங்கும் சொட்டு ஒயினைக் கர்த்தரின் ரத்தமாக விசுவாசித்து அருந்துவதல்லாமல் வேறேதும் பானங்களை மிடாக் குடியர்களாக மாந்தி போதை தலைக்கேறி உருண்டு கிடப்பதை தெய்வம் தம்பிரான் நிச்சயம் விரும்ப மாட்டார்.

அமேயர் பாதிரியார் அறிவித்தார். முசாபர் அவர் மந்தையில் இல்லை தான். காலம் கனியும் போது இந்தப் பாவத்தைக் களைய குடிக்காதே என்று அவனுக்குத் தனியாக போதனை செய்து கிறித்துவத்தில் ஏற்றிக் கொள்ள அவருக்கு நினைவு இருக்குமோ என்னமோ. தேவையான நேரம் இப்போது தான். தடுத்தாட்கொள்ள வேண்டியதும் இன்றே தான்.

பத்மன், லண்டன் மாநகராட்சி, தெருக்களில் நடைபாதையை வெகு கவனமாகப் பராமரிப்பதாகவும், கடையோ, வாகனமோ, வளர்த்து மிருகமோ அங்கே ஆக்கிரமித்தால் ஆக்கிரமிப்பு உடன் அகற்றப்பட்டு கடும் தண்டனை கிட்டும் என்றும் விளக்கினார்.

இவர்கள் போகாத இத்தனை ஊர்களுக்கும் வழிகேட்டு வந்ததன் நோக்கம் அவருக்குக் கொஞ்சமும் மனசிலாகவில்லை. ஆனாலும் அமேயர் பாதிரியார் அடுத்தபடியாகக் கேட்ட கேள்விகளுக்கு சிரத்தையாகப் பதில் சொல்லி வந்தார்.

புரபசர் சார், இவள் அதாவது இந்தச் சின்னப் பெண் தெரிசா. இந்திய வம்சாவளியிலே வந்தவள். கால்டர்டேலிலே இவள் வீட்டு முன்னே ஒரு மயில் ஆடினது.

அதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகுது அச்சன்? பறவைகளைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே?

ஆமா, அவை விதைக்கிறதில்லை, அறுக்கிறதில்லை. ஆனாலும் மயில் என்கிற விசித்திரப் பறவை இங்கே வந்து. உங்க இந்திய வேதத்தில் மயில் வருமோ?

மயில் வரும் ஆனா அந்த வேதத்தில் பிரிட்டனும் கால்டர்டேலும் வராது.

பாதிரியாரோடு பத்மனும் சிரிக்க, என்ன என்று புரியாமல் தெரிசா முசாபரைப் பார்த்தாள். அவன் கண்கள் மூடியிருந்தன்.

பறவைக்கு என்ன விசாவா, பாஸ்போர்ட்டா? நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் என்று பறக்கறது வழக்கமாச்சே. வழக்கமாகத் தட்டுப் படுகிற இடம் தவிர்த்து ஆயிரக் கணக்கான மைல்கள் கடந்து போய் வேறெங்கேயாவது தட்டுப்படறதை அவ்வப்போது பத்திரிகையில் படிக்கிறோமே, சரிதானே அச்சன்?

அது சரிதான் ஆனால் மயிலால் அவ்வளவு தூரம் ஆசியாவிலேருந்து கடல் கடந்து இங்கிலாந்துக்குப் பறக்க முடியுமா? உடம்பிலே பெரும் பாரமான தோகையைச் சுமந்தபடி கொஞ்ச தூரம் பறந்தாலும் அது களைச்சுப் போய் உட்காராதா?

இதை இன்னொரு மயில் கேட்டிருந்தால் புரிஞ்சுக்க முடியும் அச்சன். நாளைக்கே பெங்குவினுக்கு பறக்கற சக்தி கூடி வந்தா துருவப் பிரதேசத்தில் இல்லாம அது ஆப்பிரிக்கக் கண்டத்துலேயோ தார் பாலைவனத்திலேயோ கண்ணுலே பட வாய்ப்பு இருக்கே? உங்களுக்குத் தெரியாததில்லே. இது இது இங்கே இப்படி இப்போ இருக்கணும்கற நியதி எதையும் வச்சுக்கிட்டு பிரபஞ்சமும் அண்டசராசரமும் இயங்கறதில்லே. நியதி இருந்தா இல்லே நியதி மீறிய நிகழ்ச்சி?

அது என்னமோ சரிதான், ஆனால் கால்டர்டேலில் ஏன்?

பாதிரியார் விடாமல் பிடித்தார். அவருக்கு இதைப் பற்றி ஒரு அபிப்பிராயம் உருவாகி இருந்து அதை உறுதிப்படுத்திக் கொள்ளத் தன்னிடம் குடைந்து குடைந்து கேட்கிறார் என்று பத்மனுக்குத் தோன்றியது.

முசாபர் கண் திறந்து பார்த்தான். இந்தப் படிப்பாளிகள் ரெண்டு பேரும், புரியாத விஷயங்களைப் பற்றி இன்று இரவு முழுவதும் சர்ச்சை செய்து கொண்டிருக்க உத்தேசித்திருக்கலாம். அவனுக்கு வலுவாகப் பசி எடுத்துக் கொண்டிருக்கிறது. தெரிசாவைக் கூட்டிக் கொண்டு திரும்ப வேண்டியதுதான். பாதிரியார் எல்லா சந்தேகமும் தீர்ந்து சாவகாசமாக வந்து சேரட்டும்.

கால்டர்டெல் இல்லைன்னா லண்டன். அதுவும் இல்லேன்னா எடின்பரோ. எங்கே இருந்தாலும் அந்தப் பறவை அந்நியம் தானே. கால்டர்டேலில் சுற்றுப் புறம் சுத்தமாக இருக்கலாம். காற்றும் லண்டன் மாதிரி வாகனப்புகை இல்லாமல் இன்னும் சுவாசத்தில் இலை வாடையையும் பூ மணத்தையும் ஓடற தண்ணீரோட மெலிசான பச்சை வாசனையையும் நலுங்காமல் கொண்டு வரலாம். அதெல்லாம் காரணமாகி வழி திருப்ப கால்டர்டேலுக்கு மயில் பறந்து வந்திருக்கலாம்.

தெரிசா வீட்டு முகப்புக்கு அது வந்தது ஏன் என்று அமேயர் பாதிரியார் கேட்க உத்தேசித்து, அது அங்கேயானல் என்ன, தான் ஊழியம் செய்து பணியெடுக்கும் சர்ச்சைச் சார்ந்த வீட்டு முன் முற்றத்தில் தான் ஆனால் என்ன, ஊருக்கு வந்தது, வீட்டுக்கு வருவதில் என்ன சிக்கல் என்று தோன்ற சும்மா இருந்தார்.

சர்ச்சில் ஒருவேளை அது வந்து ஆடியிருந்தால்? வாய்ப்பு இல்லை. ஞாயிற்றுக்கிழமை அவருடைய கட்டாயத்தின் பேரில் வருகிற கூட்டம் தவிர மற்ற நாளில் அவர் மட்டும் தூபம் அசைத்துக் காட்டி சின்னதாகப் பிரார்த்தனை செய்து ராச்சாப்பாட்டுக்குப் போகிற ஆள் அரவமில்லாத இடம் அது. பிரசங்கம் கேட்க உட்காருவதற்காகச் செய்து நிறுத்திய மர பெஞ்சுகளின் தொகுதியும், பிரார்த்தனை நடத்தி ஆசீர்வதிக்கும் ஆராதனை பீடமும், சொற்பொழிவு செய்யும் மேடையும் எல்லாம் சின்ன இடத்தை அடைத்தபடி நெருக்கி அமைந்த மரவேலை அமைப்புகள்.

கேட்பவர்கள் பாதி பிரசங்கத்தில் தலைபோகிற வேலை நினைவு வந்த மாதிரி எழுந்து ஓட இடம் கொடுக்காத சிறு இடைவெளிகளை அமேயர் பாதிரியார் நன்றியோடு நினைத்துக் கொண்டார். அந்தக் குறுகிய வெளியில் மயில் என்ன, தட்டாரப்பூச்சி கூட சிறகு விரித்து ஆட முடியாது.

கொச்சு தெரிசாவின் வம்சாவளி பற்றி உங்களுக்குத் தெரியும்னு சொன்னாரே தெக்கே?

பாஸ்போர்ட்டில் இருக்கு எல்லாம்.

தெரிசா முனகினாள்.

அவள் ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்ந்து கொண்டிருந்தாள். மீனின் வயிற்றில் பலகணிகள் ஒவ்வொன்றாகத் திறந்து கடல் நீர் உள்ளே பொங்கி வழிய, சுற்றிலும் குப்பாயத்தை உயர்த்திப் பிடித்த பாதிரியார்கள் இலக்கின்றிப் பரபரப்பாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். நீலம் சிதற ஒரு மயில் ஆடிக் கொண்டிருக்கும் தூதரக மாளிகை முகப்பை நோக்கி வேகமாக நகர்கிறது அந்த மீன்.

ஆடி அலைக்கழிக்கும் படகில் தனியாக கதிகெட்டு நிற்கும் பயணியாக அவள் சுவரைப் பற்றிக் கொள்ள நகர்கிறாள்.

அமேயர் பாதிரியார் நிறுத்திப் பிடிக்கும் முன்பே கொச்சு தெரிசா தரையில் விழுந்திருந்தாள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன