இந்த எழுத்தாளர்கள்

 

இரா.முருகன்

ரொம்பவே வித்தியாசமான பிறவிகள். கொம்பு முளைக்கவில்லைதான். றெக்கை அரும்பி, வக்கீல் ஆராமுது அய்யங்கார் (பிறப்பு 1890 – வைகுண்ட பதவி 1965) தோளுக்கு ரெண்டு பக்கமும் வழியும் அல்பாகா கோட்டின் மூணாவது, நாலாவது கை மாதிரி இடுப்பைத் தொட்டு அலையடித்துக் கொண்டிருக்காதுதான். ஆனாலும் ஆகாசத்தில் பறப்பார்கள். வம்பு வளர்த்துக் கொண்டு முட்ட வருவார்கள். தற்கொலை செய்து கொண்டு ஒண்ணாங் கிளாஸ் நரகங்களில் பேயிங் கெஸ்டாக போய்ச் சேர்வார்கள். அங்கே இருந்தபடி, இங்கே மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இதர எழுத்தாளர்களை வம்புக்கு இழுத்தபடி இருப்பார்கள் – ‘நீயும் வந்துடுய்யா’.நோபல் பரிசு வாங்கிய ஜப்பானிய எழுத்தாளர் யாசுனாரி காவபாட்டா எப்படி இறந்து போனார் தெரியுமா? முப்பாட்டன் வயசில் காவபாட்டா நச்சு வாயுவை சுவாசித்துத் தற்கொலை செய்து கொண்டார். அதுக்கு முழு முதல் காரணம் அவருடைய சிநேகிதனும் எழுத்தாளருமான யூகியோ மிஷிமா. கொஞ்சம் முன்னால் மேலே போய்ச் சேர்ந்தவர் அவர். சட்டு புட்டென்று முடிவு எடுக்காமல் ஒரு வருஷம் தீவிரமாக திட்டம் போட்டு மிஷிமா உசிரை விட்டது அபத்தமான நாடகம் மாதிரி.

மிஷிமாவும் ஒரு நாலு நண்பர்களும் 1970 நவம்பரில் டோக்கியோ நகரில் ஆபீஸ் லீவு விடாத ஒரு தினத்தில் அங்கே ஜப்பானிய தற்காப்புப்படை அலுவலகத்துக்குப் போனார்கள். தேமேன்னு ஆபீசில் உட்கார்ந்து சாயா குடித்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்த தலைமை ராணுவ அதிகாரியை நாற்காலியோடு சேர்த்துக் கட்டினார்கள். அப்புறம் என்ன? ஒரு கையில் மெகபோன், இன்னொரு கையில் ஒரு புல் ஸ்கேப் காகிதம். பால்கனிக்கு வந்து நின்றார் மிஷிமா. கீழே காவல் காத்துக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் என்னதான் நடக்குது பார்ப்போமேன்னு நின்ன இடத்துலேயே நின்னு தலையை உசத்திப் பார்த்தார்கள்.

மிஷிமா காகிதத்தை பார்த்து உரக்கப் படித்தார். புரட்சியை அறிவிக்கும் பிரகடனமாக்கும் அது. ஜப்பானில் அதிரடியாக புரட்சி ஏற்பட்டு, எண்பது வயசு சக்கரவர்த்திகளுக்கு உடனடியாக அதிகாரம் எல்லாம் கைமாற வேண்டும். அதுக்குத்தான் நாங்க பாடுபடறோம். உங்க ஆதரவை எங்களுக்கு அளிச்சு…

கீழே நின்ற ராணுவக்காரர்கள் அட போய்யா, இதுக்குத்தானா இந்த அலட்டல், யாரு ஆண்டால் என்ன, மாசச் சம்பளம் வந்தா சரி என்கிற மாதிரி கலைந்து போக ஆரம்பித்தார்கள். விடாமல் சத்தத்தை உயர்த்தி மிஷிமா புரட்சி ஓங்குகன்ன்னார் மிஷிமா. ஆடியன்ஸ் விசில் அடிச்சு கலாட்டா செய்து அவரை மேலே பேச விடாமல் தடுத்தார்கள். ‘என் தன்மானம் சப்ஜாடாக எகிறிடுத்து, சாவே வா’ என்று சோகத்தோடு மிஷிமா உள்ளே போனார். நாலு நண்பர்களும் கடமை அழைக்கிற தோரணையை முகத்தில் வழித்துப் பூசிக் கொண்டு கூடவே உள்ளே நடந்தார்கள்.

தலையை வெட்டுய்யா என்றார் மிஷிமா. ஆமா, ஜப்பானில் ராஜாவுக்காக தன் உயிரையே பலி கொடுக்கறபோது, வேறே யாராவது பக்கத்திலே ஒத்தாசையா நின்னு கத்தியாலே இந்தத் தியாகி தலையை வெட்டணும். இதுக்காக நியமிக்கப் பட்ட நண்பர் படு டென்ஷன் ஆகி, கத்தியை மிஷிமா கழுத்திலே வைக்கறார், எடுக்கறார். திரும்பி வைக்கறார். எடுக்கறார். வெட்டு விழற வழியா இல்லே.

‘இதுக்குத்தான், இன்னொரு எழுத்தாளரைக் கூட்டி வந்து கத்தியைக் கொடுத்திருக்கணும். கச்சிதமா இன்னேரம் காரியம் முடிஞ்சிருக்கும்.சரி, நீ நகரு.’

மிஷிமா கத்தியை மற்றொரு சிநேகிதர் கையில் கொடுக்கறபோது ஞாபகம் வந்துது – ‘ஆமா, சாவுக் கவிதை எல்லாம் மாஞ்சு மாஞ்சு எழுதி வச்சிருந்தேனே. கொண்டாந்தீங்களா?’ இதோ இருக்கு என்று நீட்டினார்கள் நண்பர்கள். ஏதோ அந்த அளவுக்காவது கொடுத்த காரியத்தை செஞ்சாங்களே. ராஜ தியாகம் செய்யும் எவரும் சாவு ராஜ கவிதை எழுதி வச்சுட்டு ராஜ பார்வை பார்த்தபடி கம்பீரமாக ராஜ உயிரை விடணும். அது ஜப்பானில் ராஜ மரியாதைக்குரிய ராஜ சம்பிரதாயம்.

மிஷிமா கவிதையைக் கடைசியாக சரி பார்த்ததும், அடுத்த நண்பர் கத்தியைத் தீட்டி அவர் கழுத்தைக் குறி வைக்க எல்லாம் சுபம். சுபம் என்ன சுபம்? காலமானதும் மிஷிமா முனைப்பா செய்ய ஆரம்பிச்ச காரியம் என்ன தெரியுமா?

தன் ஆப்த நண்பர், முன்னாடி சொன்னேனே, யாசுனாரி காவபாட்டா, அவர் கனவிலே புகுந்து சும்மா சுத்திச் சுத்தி வந்துட்டு இருந்தார். ‘என்னவே மிஷிமா, இதென்ன கூத்து?’ காவபாட்டா கனாவிலேயே கேட்க, ‘சும்மா லாந்திட்டுப் போக வந்தேன்யா, நீ பாட்டுக்கு உறங்கு’ ன்னு மிதந்து போயிட்டார். ஒரு ராத்திரி, ரெண்டு ராத்திரி கனவு இல்லே. கிட்டத்தட்ட இருநூறு நாள் அதே கனவு. வெள்ளி விழா, தங்க விழான்னு போஸ்டர் அடிச்சு கனவுச் சுவர்லே ஒட்டாததுதான் பாக்கி.

காவபாட்டா ஒரு முடிவுக்கு வந்தார். மிஷிமா போய் ரெண்டு வருஷம் கழிச்சு 1972-ல் இவரும் லைஃபை முடிச்சுக்கிட்டார். ‘உன் அலப்பாரை தாங்கலேய்யா, அதான் புறப்பட்டு வந்துட்டேன்’ ன்னு சேரிடம் சேர்ந்ததும், மிஷிமா கிட்டே அலுத்துக்கிட்டே, குளிக்க வென்னீர் கிடைக்குமான்னு விசாரிச்சிருப்பார் போல.

காவபாட்டாவும் சரி, மிஷிமாவும் சரி, ஏப்பை சாப்பை ஆசாமிகள் கிடையாது. ஜப்பானில், அதுவும் ஒரு மாநிலத்தில் பிறந்து, மூச்சு விட்டு, எழுதிக் குவித்து இத்தணூண்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த சராசரி எழுத்தாளர் இல்லை. உலகப் பிரசித்தியை கியாரண்டியாக வாங்கினவர்கள். அவர்கள் எழுதியதைப் படிக்காதவர்கள் கூட வாசித்து, யோசித்து மகிழ்ந்ததாக சரடு விட்டுப் பேர் வாங்கியது உண்டு. ஆனாலும் ‘முற்றும்’ போட ரெண்டு பேரும் தேர்ந்தெடுத்த வழிதான் விசித்திரம். அதுவும், காவபாட்டாவுக்கு நோபல் பரிசு கிடைச்சபோது சொற்பொழிவு செய்தார். நெட்டுலே தேடினா கிடைக்கும். படிச்சுப் பாருங்க. தற்கொலை கோழைத் தனம்னு ஓங்கி அடிச்சிருப்பார். என்ன செய்ய? மிஷிமா மெகா சீரியல் மாதிரி கனவிலே வந்து நச்சரிப்பார்னு அவருக்கு தெரியுமா என்ன?

இங்கிலாந்து கவிஞர் வில்லியம் ஹூ ஆடன்னு ஒருத்தர். அவர் தற்கொலை செய்துக்கலை. ஆனா, சினிமாவுக்குப் போனார். 1930-சொச்சம் வருஷத்துக் கதை இது. நம்ப ஊர்லே புதுமைப் பித்தன் சினிமாவுக்குப் போய், ‘அவ்வை என்று சொல்லி ஆளனனுப்பிக் கூப்பிட்டுக் கவ்வக் கொடுத்தடித்தால் கட்டுமா?’ன்னு அவ்வையார் படத்துக்கு வசனம் எழுதப் போய் திரும்பிய பீரியட். அப்போ, இப்போ இருக்கற மாதிரி பிரபல எழுத்தாளர்களுக்கு தமிழ் சினிமா புகுந்த வீடு இல்லை. கல்கி, விந்தன் தவிர மற்றவர்கள் சினிமாவோடு ‘வேணும், ஆனாஆஆஆ வேணாம்’ உறவு வச்சிருந்த நேரத்திலே தான் ஆடன் ஆங்கில சினிமாவுக்குப் போனது.

இங்கிலீஷ் ஒரு விசித்திரமான மொழி. பிறந்த இடம் என்னவோ இங்கிலாந்து. ஆனா, கோடி கோடியா பணம் சம்பாதிக்க சினிமா எடுக்கற இடம் அமெரிக்காவிலே ஹாலிவுட். பிரிட்டீஷ் சினிமா அப்பப்ப தலையைக் காட்டிட்டு காணாமல் போயிடும். பிரிட்டீஷ் நடிகர்கள் ஹாலிவுட் ஜோதியிலே கலந்தாலும், இங்கிலாந்து எழுத்தாளர்களை பொதுவா ஹாலிவுட் ஆட்டத்துலே சேர்த்துக்கறது இல்லே. ஆனா, 1930-களிலே, இங்கிலாந்திலே புத்தலை. அதுவும் டாக்குமெண்டரி படம் எடுக்கறதுலே. பிளாக் அண்ட் ஒயிட்டுலே பிரிட்டீஷ் டைரக்டர்கள் டாக்குமெண்டரி தயாரிக்க பணம் உதவி செய்தது பிரிட்டீஷ் சர்க்கார் துறைகள்.

இங்கிலாந்து அஞ்சல் துறைக்கு டாக்குமெண்டரி ஆசை வந்தது. ஜான் கிரியர்சன்ங்கிற பிரிட்டீஷ் இயக்குனரைக் கூப்பிட்டு ‘மதிப்புக்குரிய இங்கிலாந்து மகராஜா – ராணிக்காகப் படம் பிடிச்சுக் கொடுங்க’ன்னு அனுமதியை நீட்டினாங்க. அங்கே ஜெயில்லே போட்டாலும், ‘ஹர் மெஜஸ்டிஸ் ப்ளஷர்’னு தான் சமத்காரமாச் சொல்வாங்க. நியூஸ் ரீலுக்கு ராஜா சந்தோஷப்படக் கூடாதா என்ன?

கவிஞர் ஆடன் செஞ்சுட்டு இருந்த வாத்தியார் வேலையை உதறினார். அதுலே வாரம் அஞ்சு பவுண்ட் தான் வருமானம். சினிமாவிலேயோ வாரம் மூணு பவுண்ட் ஊதியம். 1938-ல் ஒருத்தன் லண்டன்லே குடித்தனம் நடத்தணும்னா கிட்டத்தட்ட மாதம் இருநூறு பவுண்டாவது வேணும். டாக்குமெண்டரி ஆடனுக்கு காலையிலே சிங்கிள் டீ, சிகரெட்டுக்குக் கூட மாசம் முப்பது நாளும் வராது. போதாக் குறைக்கு அவரை போஸ்ட் ஆபீசிலேயே ஓரமா ஒரு பழைய மர மேஜையை போட்டு உட்கார்த்தி வச்சு, ‘எழுதுங்க சார்’னு சொன்னாங்க. எழுதினா இங்க் ஊறும் காகிதம் ஒரு கட்டு அவருக்குன்னு சாங்ஷன் செய்தார் சூப்ரண்டண்ட்.

ஆடன் அந்த அழுக்கிலும், இரைச்சல்லேயும், நெரிசல்லேயும் பொறுமையா உட்கார்ந்து எழுதின ‘ராத்திரி வண்டி’ (நைட் மெயில்) இன்னும் அவர் பெயரைச் சொல்லிட்டு இருக்கு. அவர் குரல்லேயே கவித்துவமான ரன்னிங் காமெண்டரி கொடுக்கற அந்தப் படத்தை எடின்பரோ பட விழாவில் பார்த்தபோது நினைவு வந்துது – ஹூ கிராண்ட் நடிச்ச ‘நாலு கல்யாணம் – ஒரு சாவு’ படத்துலே சாவுக் காட்சியிலே டபிள்யூ.ஹெச்.ஆடன் கவிதையை ரொம்ப பொருத்தமா வாசிப்பாங்க.

‘ஆடன் டாக்குமெண்டரி வசனம் எழுதிக்கிட்டே தான் உயிரை விட்டாரா?’ என் கூட உட்கார்ந்து படம் பார்த்த வெள்ளைக்கார நண்பரைக் கேட்டேன். ‘ஸ்டாலின் கால சோவியத் யூனியன் டாக்குமெண்டரிக்கு ரஷ்யப் பாட்டு மொழிபெயர்க்கப் போனார்’ என்றார். ‘லெனின், உன் சமாதியைப் பார்த்தாலே சோகம் எல்லாம் தீரும்’னு கவிதை எழுதினாராம் ஆடன். அது 1940-களிலே. 1973-ல் (ஜப்பானில் காவபட்டா தற்கொலை செய்து கொண்டு ஒரு வருஷம் கழித்து) அமெரிக்கா போய், சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இறந்து போனார்’னு சொன்னார்.

‘அதான் 1940-லேயே தற்கொலை பண்ணிக்கிட்டாரே’ன்னேன். நோ ரிப்ளை.

(kumudam 14th Apr 2010)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன