அமுதசுரபி தீபாவளி மலர் 2014

அமுதசுரபி தீபாவளி மலர் 2014

வெள்ளிக்கிழமைகளின் கதை

சிறுகதை இரா.முருகன்

——————————————–
எங்கள் தலைக்கு மேல் ஒரு வாடிக்கையாளர் உண்டு.. கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வாய்க்கும் எல்லா வாடிக்கையாளர்களும் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து அதிகாரம் செய்யறவங்க தானேன்னு கேட்கறீங்களா? உண்மைதான். ஆனாலும் இந்த வாடிக்கையாளர கொஞ்சம் விசேஷம். கோடிக் கணக்கில் பிசினஸ் நடத்தும் இண்டர்நெட் மளிகைக்கடையான இஞ்சி டாட் காம். கைப்பிடியில் கஸ்டமர் வாய்க்க, நாங்களே கூப்பிட்டுத் தலையில் ஏற்றிக் கொண்ட தலையாய குடைச்சல்.

எங்கள் ஆபீஸ் குடி கொண்ட அதே கட்டிடத்தின் மூணாம் மற்றும் நாலாம் மாடியை இந்த இஞ்சி டாட் காம் முழு மொத்தமாகப் பிடித்துக்கொண்டு, கீழே, எதிர் கட்டிடத்திலே, அடுத்த தெருவிலே என்று சிதறி இருக்கற எங்களை சதா பீதியடைய வைக்கிறார்கள்.

ஏன் சிதறி இருக்கீங்கன்னு கேட்டா எங்க பாஸ் கிஷன்லால் மோதிலால் சேத்ஜியைத்தான் கை காட்டணும். போகிற நாட்டில், ராத் தங்குகிற ஊரில் பெரிய கட்டிடம் எதாவது கண்ணில் பட்டால் உடனே அதை வாங்கிப் போட்டு விடுவார். அப்புறம் நாங்கள் அங்கே சாவகாசமாக ஆபீஸ் திறப்போம். அப்படித் திறந்த இந்த ஆபீஸில் கட்டுச் சோற்றிலே வெருகை வச்சுக் கட்டின மாதிரி எங்க பாஸ், இஞ்சி.காம் கம்பெனிக்கும், முக்கிய கஸ்டமராச்சேன்னு இடம் கொடுத்துட்டார். வெருகு தெரியுமில்லையா, ஓநாய். ஆமா, ஓநாய்.

’ஏம்பா, இஞ்சி டாட் காம்னு ஏதோ ஆரம்பிச்சு அம்போன்னு விட்டுட்டே’?.

வந்தாச்சு. கோவிச்சுக்காதீங்க. இஞ்சி டாட் காம் இயங்கறதுக்காக சிக்கலான கம்ப்யூட்டர் சாஃஃப்ட்வேர் செய்து கொடுத்ததே நாங்க தான். மளிகைக்கடை மென்பொருளிலே என்னய்யா சிக்கல் வரப் போகுதுன்னு கேட்டா, உங்களுக்கு மென்பொருள் புரிஞ்சாலும் மளிகைக்கடை பிசினஸ் புரியலேன்னு அர்த்தம். கோவிச்சுக்காதீங்க, உள்ளதைத் தான் சொல்றேன்.

’ஏகக் கோளாறு.. உடனே வாங்க’

மேல் மாடியில் இருந்து தெய்வங்கள் டெலிபோனில் நெருப்பு கக்கின. பாத்ரூமில் கழிவுநீர் அடைத்துக் கொண்டாலும், மளிகைக்கடை சாப்ட்வேர் எழுதினவங்களைத்தான் கூப்பிடுவது வாடிக்கை.

இஞ்சி டாட் காம் சேவையில் ஈடுபடுத்திக் கொண்ட தொண்டர் குழாமுக்கு நானே தலைவன். உறவுக்குக் கைகொடுத்து தலை வெட்டி வெட்டி ஒட்டப்படும் ரிலேஷன்ஷிப் ஹெட். எனக்கு சக ஊழியர்கள் முன்னூறு பேர்.

டயானா நீலமேகம் என்ற பிராஜக்ட் மேனேஜரையும் அந்த இளம் பெண் நிர்வகிக்கும் குழுவில் மென்பொருள் பூச்சி பிடிக்கும் சில போராளி என்ஞினியர்களையும் உடனே மேலே அனுப்பி வைத்தேன். இங்கே பூச்சி என்றால் பழுது என்று பொருள் கொள்ள வேண்டும்.

நால்வர் அணி போய்ச் சேர்ந்ததுமே என் மொபைல் அலறியது.

‘ரிலேஷன் ஹெட்.. இன்னும் ரெண்டு நிமிஷத்தில் இங்கே இருக்கணும்..’

கட்டிட லிப்ட்கள் காலையிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்ட விஷய்ம் தெரிந்தவர்கள் அவர்கள். படி ஏறி ஓடினேன்.

உள்ளே சட்டமாக நாற்காலி போட்டு இஞ்சி டாம் காம் அதிகாரிகள் ஏழு பேர் உட்கார்ந்திருக்க, டயானா நீலமேகமும் குழுவும் விசாரணைக் கைதிகள் போல அவர்களுக்கு முன்னால் நின்றிருந்தார்கள். என்னையும் அங்கே போய் நிற்கச் சொல்லி சோனியான இளைஞனாக இருந்த ஒரு அதிகாரி, கை காட்டினான். .

குழைந்த சிரிப்போடு டையை நேராக்கிக் கொண்டேன். முடிந்தால் அதை விட்டத்தில் மாட்டித் தொங்கி விடலாம்..

வரிசையாக அர்ச்சனை தொடர்ந்தது.

‘அமெரிக்காவில் அளவு முறை பவுண்ட், காலன். நம்மூர்லே கிலோ, லிட்டர். சமயத்துலே அமெரிக்காவில் நல்லெண்ணெய் ஆர்டர் செஞ்சா லிட்டர் ரேட்டை எடுத்துத் தப்பா கணக்கு போடறீங்க..’

’நூறு கிராம் சுக்கு சுங்குவார்ப்பேட்டையிலே டெலிவரி கேட்டது, சமயத்துலே சான் பிரான்ஸிஸ்கோவிலே யார் வீட்டுக்கோ போகுது’.

’அமெரிக்க டாலர்லே பணம் அடைச்சா, ஆஸ்திரேலிய டாலரில் வரவு வைக்குது, சமயத்துலே’.

சமயத்துலே. அந்த வார்த்தையை பிடிச்சுக்குங்க. வாழ்வு ஆதாரம் அது. பின்னே இல்லாம? மென்பொருள் என்றாலே, எப்போவாவது இப்படி தடம் மாறிப் போகிறது தான். டேட்டாபேஸ் குழப்பங்களில் இவையும் அடக்கம்.. தப்பு ஏற்பட்டதும் கையோடு பிடித்துத் திருத்தி விட்டால் பிரச்சனை கிடையாது. இஞ்சி டாம் காம் சேனைக்கும் இது தெரியும். என்றாலும் காய்ச்ச நாலு பேர் கிடைத்த தெம்பில் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

’உங்க மென்பொருள் ஒரு நாய் போல ஓடுது.. இரைச்சு மூச்சு வாங்கி.. ரன்ஸ் லைக் எ டாக் ’

திடீரென்று ஒரு எஜமான் சொல்ல அங்கே மயான அமைதி நிலவியது.

’நாய் நாய் நாய் போல ஓடுது.. ’

திரும்பத் திரும்பச் சொல்லியபடி ஜன்ம விரோதிகளாக எங்களைப் பார்த்தவன், கோஷ்டியிலேயே சிறியவனான அந்த சோனி அதிகாரி. உத்திரப் பிரதேசக் காரன் என்று இங்கிலீஷ் உச்சரிப்பு சொன்னது.

அவன் மேலும் சிரித்துக் கொண்டே விரிவாக்கியது – ’மகா மோசம். நாய் போல.. ஆண் நாய் போல.. பெண் நாய் போல.. பிட்ச்.’.

டயானாவை நோக்கிச் சொன்னான். டயானா முகத்தைப் பார்த்தேன். கோபம் இறுதி கட்டத்தை அடைந்து அழுகையாக எந்த வினாடியும் வெடிக்கலாம்.

‘நீங்க எல்லாம் போகலாம். நாளை மதியத்துக்குள்ளே எல்லாம் சரியாக்கணும்’

இஞ்சி டாம் காம் அதிகாரிகள் எல்லோரும் பிய்த்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். காகிதக் கோப்பை ஒன்று மேசையில் கிடந்தது. டயானா அதைத் தரையில் வீசி செருப்புக் காலால் ஓங்கி மிதித்தபடி வெளியே போனாள்.

எனக்குள் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது. இந்த நிமிடம் அந்த சோனி உ.பி பையன் திரும்பி வந்தால் கீழே தள்ளி அவனைக் காகிதக் கோப்பையாக்க வெறி.

’புகார் கொடுக்கப் போறேன்.. பெண்ணை அவமதிக்கற கஸ்டமர்.. பெண் நாய்னு கூப்பிடத் தயங்காதவன்’, டயானா சொன்னாள்.

ஆபீஸ் வந்து சேர்ந்திருந்தோம். நான் கதாநாயக வெறி எல்லாம் அடங்கி கம்ப்யூட்டர் கம்பெனி சிறு தெய்வமாக மறுபடி ஆனேன்.

டயானா.. அவசரப் படாதே.. உன்னையோ வேறே யாரையுமோ குறிப்பிட்டு நாய்னு அவங்க சொல்லலே..

கூட வந்த இளவட்டர்கள் மூன்று பேரும் என்னை வன்மையாக மறுத்தார்கள்.

இல்லே சார், அவன் முகத்தில் தெரிஞ்ச குரூரமான சந்தோஷம்.. நிறுத்தி நிதானமா நாய்னு ரெண்டு தடவை.. அப்புறம் பெண் நாய்னு வேறே..’

‘பிட்ச்-ங்கறான் என்னை பார்த்து.. நீங்க எதிர்த்து ஒரு வார்த்தை கேட்கலியே’

டயானா முகத்தை இறுக வைத்தபடி என்னைப் பார்த்தாள்.

‘செண்டர் ஹெட் கிட்டே நேரே போறேன்’.

அவள் என்ன தடுத்தும் கேட்காமல் மையத் தலைவர் கோபிநாதன் நாயரின் கேபினுக்குள் நுழைய நானும் பின்னாலேயே ஓடினேன்.

உட்காரச் சொன்னார். வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பாட்டிலைக் கவிழ்த்து ரெண்டு பேருக்கும் நல்ல பழுப்பாகச் சுக்கு வெள்ளம் கொடுத்தார். அதைப் பார்த்ததுமே பாத்ரூம் நினைப்பு வர எழுந்திருந்தேன்.

ஐந்து நிமிடம் கழித்து திரும்பியபோது டயானா அவர் கேபினில் இல்லை. ஆபீஸில் குளிர் சாதனம் சரியாக வேலை செய்வது, தடையில்லாமல் தண்ணீர், பினாயில் ஊற்றி தரையை தினசரி சுத்தம் செய்தல் இன்னோரன்ன அத்தியாவசியத் தேவைகளை நிர்வகிக்கிற அட்மின் மேனேஜர் ஷேக் அப்துல்லாவும் அறுபது வ்யது மதிக்கத் தக்க ஒரு சாஸ்திரிகளும் கோபி நாயர் முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். பெரும்பான்மை விருப்பப்படி, பிரதி வெள்ளிக்கிழமை, ஆபீசில் பூஜை செய்து ஆரத்தி காட்ட அவரை அமர்த்தியிருப்பதாக அப்துல்லா சொன்னான்.

டயானா என்று நான் சொல்ல ஆரம்பிக்கும் முன் சாஸ்திரிகளுக்குக் கை கொடுத்தபடி நாயர் கூறியது – ‘அவசரப்படாதே.. ஆறப்போடு’.

அடுத்து. கிடுகிடுவென்று சில காரியங்கள் நடந்தன. நாயரிடம் நான் சொன்ன யோசனைப்படி டயனாவோடு வந்த மூன்று இளவட்டங்களுக்கும் ஆறு மாதம் ஆஸ்திரேலியா ஆபீஸில் வேலை என்று ஓலை எழுதி நீட்டினோம். அவர்கள் அடுத்த வெள்ளியன்று பெண் நாயை மறந்து விமானத்தில் பறந்தார்கள்.

அதற்கும் அடுத்த வெள்ளி. இன்னொரு திடீர் திருப்பமாக, இஞ்சி டாட் காம் அதிகாரியாகத் தாண்டிக் குதித்த உத்தரப் பிரதேசத் தேசல் பையன் அங்கே கால் கடுதாசி கொடுத்து விட்டு எங்கள் கம்பெனியில் சேர்ந்தான்.

அதுக்கும் அடுத்த வெள்ளிக்கிழமை மாசாந்திர உலா வந்த எங்க சேத்ஜி சைனா பஜார் பக்கம் கீகடமான சந்தில் புராதனமான கட்டிடத்தைப் பார்த்து சொக்கிப் போய் வாங்கிப் போட்டார். அதுவும் சரியென்று இஞ்சி டாட் காம் ஜப்பானிய கிளைகளுக்கு சேவை புரியும் மையத்தை அங்கே துவக்கினோம். ஜப்பான் மெகா ப்ராஜக்டுக்கு உப தலைவன.மாஜி இஞ்சி உ.பி பையன்.

அந்த ஜப்பான் பிராஜக்ட் தலைவரிடம் சொன்னேன் – ‘டயானா, உன் நேரம் இது.. எத்தனை தடவை வேணும்னாலும் அவனை நீ நாயேன்னு விளிக்கலாம்.. வாலைக் குழைச்சு வருவான். வாய் பேசாது இருப்பான்..’

டயானா, கண்ணாடியைத் துடைத்துப் போட்டபடி சிரித்தாள்-

’ இங்கே இருந்து அதை எல்லாம் செய்யமுடியாது என்பது தெரிஞ்சு நான் வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.. .. அடுத்த வெள்ளி இஞ்சி டாட் காம் கம்ப்யூட்டர் துறை தலைவியாக வேலைக்கு சேர்றேன்.. அவசியம் அந்த ஆளையும் கூட்டிக்கிட்டு வாராந்திர மீட்டிங்குக்கு வந்துடுங்க’.

அடுத்த வெள்ளிக்கிழமை மாலை.. இருங்க சார். ஆபீஸ் பூஜை நேரத்திலே ஃபயர் அலாரம் கூவுது.. பார்த்துட்டு வந்து சொல்றேன்.

(இரா.முருகன்)

.

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன