நடைப் புத்தகம்

 

நடேசன் பூங்காவில் வேகு வேகென்று சுற்றி விட்டு மெரினா காந்தி சிலைப்பக்கம் கையில் ஒரு புத்தகத்தோடு போய்ச் சேர்ந்தால், அங்கே புத்தக தினம் தொடர்பான- நடை – ஓட்டம் – கூடியிருந்து குளிர்தல் வகையறா நடவடிக்கைகளே கண்ணில் படவில்லை. சேட்டுகள், சேட்டாணிகள், உலக மெனிஞ்சிடிஸ் தின நடைஞர்கள், வியர்த்த ஜப்பானியர்கள் இத்யாதி.

உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை காலை ஏழு மணிக்கு நடை. புத்தகப் பரிமாற்றம் இப்படியான பரிபாடி. இன்றைக்கு என்று தானே சொனனார்கள்.
மௌலியிடம் தொலைபேசியில் உறுதி செய்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். உழைப்பாளர் சிலையை அடைந்தபோது சாவகாசமாகக் கிளம்பி வந்து கொண்டிருந்த ஊர்வலத்தில் கலந்து திரும்ப காந்தி சிலைக்கு நடை. மூத்த எழுத்தாளர்கள் சா.கந்த்சாமியோடு நிறையப் பேசிக் கொண்டே நடக்கிற சந்தோஷம்.

அசோகமித்திரன் ’விடை பெறுதல்’ பற்றிச் சொன்னேன். இன்னொரு நண்பர் இங்கே பகிர்ந்து கொண்ட கருத்தை அவரும் சொன்னார்.

கூட வந்த நண்பர்களில் நினைவு இருக்கும் பெயர் கீரனூர் ஜாகீர்ராஜா

காந்தி சிலையை அடைந்து இரண்டு நிமிட உரைகள் – சா.கந்தசாமி, மேலாண்மை, எஸ்.ரா, இரா.முருகன், அரசு ….

நான் கையில் கொண்டு போயிருந்த ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைத் தொகுப்பை விட்டுவிட்டு வேறு யாரோ கொண்டு வந்த நஜ்ருல் இஸ்லாம் பற்றிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

இன்னொருத்தர் நான் கொண்டு வந்த புத்தகத்தைப் புரட்டி விட்டு அங்கேயே வைத்தார்.

’தி.ஜானகிராமன் முன்னுரை எழுதின புத்தகம். நல்லா இருக்கும். படிச்சுப் பாருங்க’.

என்னமோ, அந்த நிமிடத்தில் ஒரு புரவலனாக நான் செயல்பட்டு அந்தப் புத்தகத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்று ஒரு பலமான நினைப்பு. அவர் எடுத்தாரா திரும்ப வைத்தாரா என்று பார்க்க மனம் இல்லாமல் நகர்ந்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன