Live – At Rehearsalsஒத்திகை நேரம்

(குறிப்புகள் எழுதப் பட்ட நாள் – 10.11.2013)

நாடக ஒத்திகை (லைவ்) 12

//மகளுக்கு ஒரு தந்தை எழுதிய கடிதங்கள் .. ஜவஹர்லால் நேரு .. அப்பாவோட favourite leader,,. favourite book.. favourite mode of communication…லெட்டர்.. கடிதம்.. all old world charm.. சுகத்தை சொல்றதுக்கும் துக்கத்தை பகிர்ந்துக்கறதுக்கும் போஸ்ட் கார்டும் இண்லெண்ட் லெட்டரும் தான் அப்போ எல்லாம்…சின்ன பிள்ளையிலே பார்த்திருக்கேன்.. போஸ்ட்மேன் வீடு வீடா வந்து கடிதாசு வந்திருந்தா கொடுத்திட்டுப் போவாரு.. எங்க பாட்டியம்மா அவசரமா வாங்கி மேலோட்டமா பார்ப்பாங்க.. நாலு மூலையும் மஞ்சள் குங்குமம் தடவி லெட்டர் வந்திருந்தா கல்யாணம் கல்யாணம்னு சொல்லிக்கிட்டு அவங்களே பிரிப்பாங்க… ஆனா. கருப்பு தீத்தி வந்துதோ, போச்சு.. உடனே என் கிட்டே கொடுத்துடுவாங்க.. மாடப் பிறையிலே வைடா குழந்தே.. நாளைக்கு நான் குளிக்கப் போகிற முந்தி படிச்சுக்கறேன்னு கெஞ்சுவாங்க..தூரத்து சொந்தத்திலே ஏதாவது சாவுச் செய்தியா இருக்குமாம்.. படிச்சா உடனே குளிக்கணுமாம்.. பகல்லே குளிச்சா ஜலதோஷம் பிடிக்குமாம்.. பயம்.. நான் காமிக்ஸ் வாங்க காசு பத்தாட்ட ஏதாவது பழைய கடுதாசுலே கருப்பு இங்க் தடவி ‘பூட்ட கேஸ் .. பூட்ட கேஸ்.. படிக்கட்டுமா இல்லே காசு தர்றியா கெளவி’ன்னு அவளைத் தொரத்துவேன்..
//

பாலாஜி ஒரே ஒரு முறை தான் இதைப் படித்தார்… ஒரு காற்புள்ளி அரைப்புள்ளி விடாமல் அழகாகச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். தெரிந்திருந்தால் இவரை இன்னும் பேச விட்டிருப்பேனே!

—————————————-
நாடக ஒத்திகை (லைவ்) 11

எழுத்துக்காரர் ஒத்திகை.

ஒத்திகை தொடங்கும் முன் ஸ்லாக் ஹவரில் கவிதா என்னிடம் கேட்டார்.

ஏன் சார் எப்பப் பார்த்தாலும் லேப் டாப்பிலே ஏதோ எழுதிட்டு இருக்கீங்க?

நான் தான் எழுத்துக்காரர் கவிதா..

”The prime of Miss Jean Bradey’ படிச்சிருக்கீங்களா கவிதா? Muriel Spark எழுதினது..

படிச்சதில்லே சார்

படிங்க.. ஃபெமினிஸ்ட், போஸ்ட் மார்டனிஸ்ட்.. டைட்டில், ஆதர் நேம் நினைவிலே வச்சுக்குங்க

ஏன் சார்?

இன்னிக்கு ஒரு வரி உங்க டயலாக்கிலே சேர்த்திருக்கேன்.. பரணன் பாலாஜிக்கு க்யூ கொடுக்க..

மூரியல் ஸ்பார்க் தமிழ் நாடக மேடைக்கு வரட்டுமே..
——————————————
நாடக ஒத்திகை (லைவ்) 10

//
MANSION RESIDENT 2
உனக்கு லேகியமே வேணாம். பார்த்தாலே ரிஷி கர்ப்பம் தான்.

MANSION RESIDENT 3
அப்படீன்னா?

MANSION RESIDENT 2
உஸ்மான் ரோடு கோமதி சங்கர் மிட்டாய்க்கடையிலே சோன் பப்டி வாங்கிக் கொடு. சொல்றேன்.

MANSION RESIDENT 3
இப்பவா, பூட்டி இருக்குமே.

MANSION RESIDENT 1
நாதன்ஸ்லே புல் மீல்ஸ் போயிடலாமா..

MANSION RESIDENT 3
நாதன்ஸ்லே இந்த நேரத்திலே இடம் கிடைக்கும்னா நினைக்கறே? எவன் மோர் சோறு தின்னுக்கிட்டு இருக்கான்னு பார்க்கணும். அவன் சளப் பளப்புன்னு அசை போடறதை லட்சியமே செய்யாம டோக்கனை டேபிள்லே தண்ணியைத் தொட்டு வைக்கணும்.

MANSION RESIDENT 2
எதுக்கு தண்ணி?

MANSION RESIDENT 3
பேப்பர் டோக்கன் Fan காத்துலே பறந்திடுமே.

MANSION RESIDENT 1
நான் அவன் இலை ஓரமா ஒரு சோத்தை எடுத்து அதைத் தொட்டு ஒட்டி வச்சிடுவேன்.

MANSION RESIDENT 2
மகா ஊழல் பேர்வழி மச்சான் நீ. உன் கூட சாப்பிடறதே
(விளம்பரப் பட உச்சரிப்பில்)
கிருமித் தொற்றை உண்டாக்கும். மற்றும் தேக ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும்.. ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடினால்…

MANSION RESIDENT 1
ஓகே ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே. நாம் இப்போது இரவு சாப்பாடுக்காக அடுத்த தெரு ஆந்திரா மெஸ் போகிறோம்.

//

1970 பிற்பகுதியில் சென்னை தி நகரில் பேச்சலர்ஸ் மேன்ஷன் வாழ்க்கையில் ஒரு சில நிமிடங்கள். என் சொந்த வாழ்க்கையும் கூட.

இப்போதும் உஸ்மான் ரோடில் கோமதிசங்கர் மிட்டாய்க் கடை இருக்கிறது. நாதன்ஸ் ஹோடடல் இல்லை. ஆந்திரா மெஸ்ஸும்.
——————————————-
நாடக ஒத்திகை (லைவ்) 9

ஆழ்வார் ஒத்திகை.

//கிருஷ்ணசாமி இல்லேப்பா. நாராயணசாமி முதலியார். கே.என் அப்படீன்னு இனிஷியல்லே தான் பிரபலம். அவர் கிளப்பிலே பேட்மிண்டன் விளையாட எங்காத்துப் பக்கமாத்தான் இருக்கு.. கார்லே போறார். நான் வீட்டு வாசல்லே வேஷ்டியைத் திரிச்சு மூக்கிலே விட்டுத் தும்மிண்டு இருந்தேன். தலையிலே ஒரே கொடச்சல். வந்த மனுஷர் அரைக் கட்டுலே நிஜாரும் கையிலே பந்து மட்டையுமா முன்னாலே நிக்கறார். எனக்குக் கையும் ஓடலே, காலும் ஓடலே. வாங்கோன்னு சொல்றதுக்கு முந்தி தடதடன்னு உள்ளே நுழைஞ்சவர் கண்லே கூடத்துலே மாட்டியிருந்த அனுமார்தான் பட்டார். எப்பேர்க்கொத்த ரூபம் ஓய். இப்படிப் புழுதி அடைய விட்டிருக்கீரே. பூஜை ஏதாவது பண்ணறீரான்னேன். என்.ஜி.ஓ வருமானத்துலே வயத்தைக் கழுவறதே உம்பாடு எம்பாடு. பூஜைக்கு எங்கே ஸ்வாமி போவேன்னேன். முதலியார் என்ன சொன்னார் தெரியுமோ? //

ஆழ்வார் தன்னுள் ஆழ்ந்து சொல்ல, நெல்சன் முகத்தில் ஆச்சர்யம், தவிப்பு, அவசரம் என்று மாறி மாறித் தெரிய கண்கள் அங்கும் இங்கும் அலைபாய அவருக்கு ரியாக்‌ஷன் தருகிறார். நன்றாக வந்திருக்கிற காட்சி இது.

நாராயணசாமி முதலியார் என்ன சொல்லியிருப்பார்?
———————————
நாடக ஒத்திகை (லைவ்) 8

ஆழ்வார் ஒத்திகை நடக்கிறது. ஆழ்வாராக டி டி சுந்தர்ராஜன். சந்திக்கும் இளைஞனாக நெல்சன் இளங்கோ.

ராத்திரி நேரத்தில், 1980 தென் சென்னைத் தெருவில் கை கூப்பிச் சேவித்தபடி டி டி எஸ் நம்மாழ்வார் பாசுரத்தை மெய்மறந்து சொல்கிறார். அவருக்கும் கேட்டும் பார்த்தும் சுற்றி இருக்கும் நமக்கும் கண் கலங்குகிறது.

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி மண்ணில்
உளவன் அவன்சீர் வளம் மிக்கவனூர் வினவி திண்ணமென்
இளமான் புகுமூர் திருக்கோளூரே.

பெருமாளே. உன் சேவடி செவ்வித் திருக்காப்பு.
—————————————-
நாடக ஒத்திகை (லைவ்) 7

மதிய உணவு நேரத்தில் மேடை ஒளியமைப்பு நிர்வாகியான காளீஸ்வரியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஒரு இண்டக்ரேடட் லைட்டிங் ப்ளான் இல்லாம வேலை ஆரம்பிக்கறது இல்லே..

அது போதுமா காளி? லைட்ஸ் ஆன் சரிதான்.. fade out-ம் முக்கியமில்லையா? எழுத்துக்காரர்லே செண்டர் ஸ்டேஜ், ஆஃப் ஸ்டேஜ் ரெண்டிலேயும் பத்து செகண்ட் இடைவெளியில் ஆக்‌ஷன், அப்பப்ப ரெண்டுலேயும் ஒரே நேரத்திலே ஆக்‌ஷன்.. லைட்டிங் ப்ளான் மட்டும் போதும்கிறீங்களா?

போதவே போதாது.. செண்டர் ஸ்டேஜ், ஆஃப் ஸ்டேஜ் ரெண்டும் எப்போ லைட்.. என்ன மாதிரி.. எந்த ஆக்டர் எந்த க்யூ கொடுத்ததும் லைட்ஸ் ஆன்.. எல்லாம் தெரியணும்.. நானும் ஒரு பெர்மார்மர்னு நினைச்சுப்பேன்.. மேடைக்கு முன்னால் இருக்கும் பெர்மார்மர்..ஸ்கிரிப்ட் முழுக்கத் தெரியணும்.. இப்போ இங்கேயும் தெரிஞ்சு வைச்சிருக்கேன்.. கரெக்டா வரும் பாருங்க..

வரும். கிரிஷ் கர்னாட் நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்த இளம்பெண் ஆச்சே காளி.
———————————–
நாடக ஒத்தகை (லைவ்) 6

மதிய உணவுக்குப் பிறகு சிலிக்கன் வாசல் தொடர்கிறது.

சோலையின் நனவோடையாக..

சாயந்திரம் ஆறு மணிக்கே வீட்டுக்குப் போய் அள்ளிப்போட்டு முழுங்கிட்டு நல்ல்ல்லா தூங்கணும்… … தூங்கணும்.. ஈரமான தரை.. …தலகாணியை மிதிச்சுக்கிட்டு ஓடுற மகனோட ரப்பர் பந்து முதுகுலே மோதற சத்தம்… டிவி சீரியல்லே அழற சத்தம் .. சரோஜா திட்டற சத்தம்.. சமையல் கட்டில் பாத்திரம் உடைபடுகிற மாதிரி சத்தம்.. ஹோன்னு ஏசி பிளாண்ட் சத்தம்.. சூசைராஜின் இருமல் சத்தம்.. துரையின் வெந்த சேப்பங்கிழங்கு குரல்.. மாலதி வளைச்சத்தம், சிரிப்புச் சத்தம்,…Receptionist Fonseka குழைஞ்சு குழைஞ்சு டெலிபோன்லே விசாரிப்பு.. May I know who is this? Oh Chandy… how are you? Could you please hang on for a second? Shall check up whether the boss is on the prowl.. lion? Paper tiger… ha ha..கம்ப்யூட்டர் பின்னறையில் பழைய லைன் பிரிண்டர் சத்தம்.. ஹோன்னு பெரிசா.. அருவி விழற மாதிரி.. ஐந்தருவி.. குற்றாலம்.. குளிக்கப் போறவங்க சத்தம்..குழந்தை அழற சத்தம்.. சார் மசாஜ் நாலு ரூபா.. மங்குஸ்தான் பழம் வேணுமா சார்?அருவிக்கரை தோசைக்கடை.. சட்டுவம் சதா தோசைக்கல்லு மேலே உராயற சத்தம்..சார்வாளுக்கு இன்னும் ரெண்டு தோசை வைக்கட்டா.. சாப்பிட்டு அருவியிலே குளிங்க.. குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க… சாப்பிட்டு திரும்ப குளியல்.. அருவி அலுக்காது.. நம்ம கடை தோசையும்..

அப்படியே அதே படிக்கு நல்லா வரணும் பெருமாளே..
—————————–
நாடக ஒத்திகை (லைவ்) 5

நண்பர் Jayaraman Raghunathan ரகு ஒத்திகையைப் பார்க்கவும், நண்பர்களோடு உரையாடவும் வந்திருக்கிறார். கையோடு ஒரு பெரிய பெட்டி நிறைய கேக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவதால் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் அனைவரும்.
————————-
நாடக ஒத்திகை (லைவ்) 4

சிலிக்கன் வாசல். சூசையாக ரோஹன் ஐயர்.

‘என்ன சோலை, துரை ரோடு விட்டுட்டானா?’

இல்லே தம்பி.. Rod.. ராடு விட்டுட்டானா?

ரோடு விட்டுட்

ரோஹன் நாயர்:-)

அப்படியே விட்டாச்சு.. அதுவும் நல்லாத்தான் இருக்கு
———————————–
நாடக ஒத்திகை (லைவ்) 3

சிலிக்கன் வாசல். நடுநாயகமான சோலை கதாபாத்திரம். சூரஜ் அனுபவித்துச் செய்கிறார். வசனம் பேசும்போது எமோட் செய்வதை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கச்சிதமாக்கி இருக்கிறார் இயக்குனர் டிடிஎஸ். எப்போதாவது வசனம் மறந்தால் அவன் எமோட் செய்வதை இப்போது நான் ரசிக்கிறேன்.
——————————–
நாடக ஒத்திகை (லைவ்) 2

சிலிக்கன் வாசல். சாப்ட்வேர் கம்பெனி உள்ளூர் நிர்வாகியாக பாலாஜி. எத்தனை பெரிய டயலாக் ஆக இருந்தாலும், ஒரே தடவை பார்த்து விட்டு சர்வ சாதாரணமாகப் பேசுகிற நேர்த்தி அபாரம் –

கான்பிடன்ஷியல் ரிப்போர்ட் ஒரு நிமிட சாம்பிளாக அவர் குரலில் வருகிறது இப்படி –

Though the skill set of both Solai and Susai as well as their relative dot net and B to C as well as B to B portal experience is same, I observe Soosai is a better fire fighter and game changer than Solai.. ´

எனக்கே நடுவில் வார்த்தை இடறுகிறது.. பாலாஜி ஒரே டேக் தான்.. kudos to him
——————————–
நாடக ஒத்திகை (லைவ்) 1

சிலிக்கன் வாசல் ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. கடைசிக்கு முந்திய காட்சி. காத்தாடி ராமமுர்த்தி அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

’இங்கே யாருப்பா டைரக்டர்? டி டி எஸ், நீயா? நாப்பது வருஷமா செஞ்சும் நடிக்க வரல்லேன்னு டைரக்ட் பண்ண வந்துட்டியா?’

என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு ‘இவர் யாரு? நாடக ஆசிரியரா? பார்த்தாத் தெரியலே..’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன