Viswaroopam – Novel – Review by Mr.Senthil Nathanவிஸ்வரூபம் நாவல் – திரு.செந்தில் நாதனின் விமர்சனம்

திரு முருகன் அவர்களுக்கு,

இரண்டே நாளில் படித்து முடித்தேன். இங்கேயும் அங்கேயும் அலைபாயும் கதை என்றாலும், கீழே வைக்க விடாமல் செய்தது உங்கள் நடை. வார்த்தை விளையாட்டுக்கள் அமர்க்களம். முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்த வனப்பு மிக்க மலையாள எழுத்துக்கள் உவமையில் இருந்து நாவலின் இறுதி வரையிலும் தொடர்ந்த அந்த நடை தான் நாவலின் பெரிய பலம்.

மகாலிங்கையர் கரும்புத் தோட்டத்தில் பால் கொடுக்கும் பெண்ணை அடிக்க அந்த நேரத்தில் குழந்தைக்குப் பால் கொடுக்கும் ஆப்பிரிக்கப் பெண், இரண்டு மூன்று பத்திக்களில் வந்தாலும் முத்திரை பதித்துப் போகும் நாணிக்குட்டி, என ஆரம்பித்து கதையின் anti hero மகாலிங்கையர் வரை அனைத்து பாத்திரங்களாகவும் மாறி எழுதியிருக்கிறீர்கள். சமீபத்தில் சிறந்த வாசிப்பனுபவம் தந்த தமிழ் நாவல். சல்மான் ருஷ்டீ போல வார்த்தை விளையாட்டுகளில் அதிகம் self indulgence செய்யாமல் கதைக்குப் பொருத்தமான அளவிலேயே இருந்தது.

ஒரு சிறு எடிட்டிங் பிழை என நினைக்கிறேன். மகாலிங்கையனை சிறையில் பார்க்கும் போது தெரிசா “இருந்தாலும் தாமஸைக் கொன்றிருக்க வேண்டாம்” என்று கூறுகிறாள். இரண்டு மூன்று முறை. அவள் கணவன் பீட்டர் அல்லவா? ஒருவேளை மாய யதார்த்த வாதத்தில் அவள் மறுமணம் செய்ததை நான் தான் மறந்து விட்டேனோ என்று பின்னோக்கி சென்று பார்த்தால் அப்படியும் தெரியவில்லை. அது பிழை தானா, இல்லை நான் தான் அந்த இழையை விட்டுவிட்டேனா என்று ஒரே குழப்பம்.

மிக்க நன்றி முருகன், இந்த நாவலை எழுதியதற்கு.

செந்தில் நாதன்

—————————

மிக்க நன்றி செந்தில்நாதன்.

அது பிழைதான். பீட்டர் என்று இருக்க வேண்டும். சுட்டியதற்கு நன்றி. நாவலை இவ்வளவு கவனமாகப் படித்திருக்கிறீர்கள் என்று அறிய மகிழ்ச்சி. அடுத்த வெளியீட்டில் திருத்திக் கொள்கிறோம்.

அன்புடன்
இரா.மு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன