புறநகர் சினிமா தியேட்டரில் திலீப் மோரே பாதி பார்த்த மராத்தி திரைப்படம்

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து – நாலு நாவல் அரசூர் வரிசையில் நான்காவது நாவல்

 

ஒடிந்து விழுவது போல் கதாநாயகி. அவளைப் படைத்தவனோ, உடுப்புத்  தைத்தவனோ, சரீர பாரத்தை எல்லாம் ஸ்தன பாரமாக மட்டும் உடம்பில் வடக்குப் பிரதேசத்தில் உருட்டி வைத்து மற்றப்படி குச்சிக் கால்களோடு அவளைப் புல் தரையில் வெட்டுக்கிளி போலத் தத்தித் தத்தி ஓட வைத்திருக்கிறான். அவளைக் கட்டி அணைத்துத் தூக்கித் தட்டாமாலை சுற்றுகிற மீசை மழித்த கதாநாயகனை ஒரு நூற்றுச் சில்லரைப் பேர் கிராண்ட் ரோடு சினிமா தியேட்டரின் பூச்சி ஊறும் நாற்காலிகளில் உட்கார்ந்து, பகல் காட்சியில் அசூயையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திலீப்பும் அந்தக் கூட்டத்தில் உண்டு.

 

அம்பலப்புழையில் திலீப் வேலை பார்க்கிற மங்களூர் ஓடு வேய்ந்த ஆபீஸில் பிஸ்கட் ராமா சாஸ்திரி என்ற நிர்வாகிக் கடன்காரனிடம் கையைக் காலை, பீஜத்தைப் பிடித்துத் தாங்கிப் பத்து நாள் மாத்திரம் லீவு சொல்லி பம்பாய் வந்தது நேற்று நடுப் பகலுக்குத்தான்.

 

உன் அம்மா உடம்பு ரொம்பவே படுத்திண்டு இருக்குடா திலீபா. சியாமளா கிட்டே நான் சொன்னேன்னு ஒரு வாரம் ரஜா சொல்லிட்டு வா.

 

பாட்டி எழுதிய இண்லண்ட் லெட்டரை மகா நிர்வாகியான சியாமளா பெரியம்மாளிடம் திலீப் காட்டியபோது திலீப் தனக்கு என்ன உறவு என்றே மறந்து போனவளாக அவள் சர்க்கார்த் தனமாகச் சொன்னாள் –

 

சாஸ்திரி சார் கிட்டே லீவு சொல்லிட்டுப் போ. அடுத்த மாதம் முதல் வாரம் கான்பரன்ஸ் இருக்கு. வேலை ஏகத்துக்கு உண்டு.

 

பாட்டி உனக்கு மாமியார் தானே பெரியம்மா? என் அம்மா உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உன் ஓரகத்தி தானே. அப்படி என்ன அலட்சியம் அவர்களைப் பற்றி? என்னைப் பற்றி? காசு இல்லாது போனதா?

 

கேட்க நினைத்ததை மனதிலேயே அடக்கிக் கொண்டு, பிஸ்கட் நாய் சாஸ்திரி காலை நேர ஏப்பத்தோடும், அவனுடைய அதிசுந்தரி வானரமுகி பெண்டாட்டி உடுத்திக் கிழித்த பட்டுப் புடவைத் துணியில் லாலேலா என்று கோமாளி உடுப்பு போல தைத்த கால்சராயோடும், வாயில் ஸ்கலித வாடை  அடிக்கும் தாம்பூலத்தோடும் உள்ளே நுழைந்தபோது லீவுக்காகத் திலீப் மன்றாட ஆரம்பித்தது வெற்றியில் முடிய சாயந்திரம் ஆனது.

 

ரொம்ப நன்றி சாஸ்திரி மாமா. அயோக்கியா, உனக்கென்ன நன்றியும் நமஸ்காரமும் நபும்சகனே. போய்ட்டு ஒரு வாரத்துலே ஓடி வந்துடறேன். உன் மயிர்பிடுங்கி மேனேஜர் பதவிக்காக இல்லேடா அல்பமே, பெரியம்மா ஏதோ மாசாமாசம் சம்பளமா விட்டெறியறாளே அந்தப் பணத்துக்காகத் தான் திரும்ப ஓடி வரேன். பாவம் உங்களுக்கு ஒரு வாரம் கொஞ்சம் அதிகம் வேலை. சும்மா மரச் சாமானை மத்தது வச்சுத் தேச்சுண்டு தானே உக்கார்ந்திருக்கே. குண்டி வணங்கி வேலை செய்யடா குண்டுசட்டி நரகல் புழுவே.

 

வடக்கே சூலம் தெற்கே ஈட்டி கிழக்கே கத்தி என்று பஞ்சாங்கத்தில் போட்டதோ என்னமோ காரணாமாகக் கிட்டத்தட்ட காலியாக இருந்த கம்பார்ட்மெண்டில், அவன் சுகமாக யாத்திரை செய்து பம்பாய் வந்தது நேற்றுப் பகலில்.

 

விச்சியா இருக்கியா என்று வரவேற்ற கற்பகம் பாட்டியிடம் அம்மா எங்கே என்று கேட்க, குடியிருக்கும் சால் காம்பவுண்டு சுவரை காட்டினாள் அப்போது.

 

கக்கூஸ் போற வழியிலே படுத்து வெயிலோ மழையோ சதா தூங்கிண்டே இருக்காடா உங்கம்மா. சாப்பாடும் வேணாம்கிறா. பயமா இருக்கு எனக்கு.

 

பாட்டி அழ ஆரம்பித்தாள். கிழிசல் பாயில் கிழிந்த கோரை போலக் கிடந்த அம்மாவைத் திலீப் பார்க்க அவன் கண்ணிலும் நீர் திரண்டது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன