நிலக்கரி ரயில் இஞ்சின் போல சத்தமிடும் தீக்குச்சி திரை அழகி

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசை 4 – அடுத்த சிறு பகுதி

 

பாட்டி அழ ஆரம்பித்தாள். கிழிசல் பாயில் கிழிந்த கோரை போலக் கிடந்த அம்மாவைத் திலீப் பார்க்க அவன் கண்ணிலும் நீர் திரண்டது. 29 ஃபெப் 2024

 

பாட்டி நான் பக்கத்து சால் தாய்டே மூலம் அட்டண்டர், அதான் அம்மாவைக் கவனிச்சுண்டு பகல் பூரா இங்கேயே இருக்க ஆள் ஏற்பாடு செஞ்சுடறேன். உனக்கும் உதவியா இருப்பா. இன்னும் ரெண்டே மாசம். பெரியம்மாவோட  ஃபோல்க் ஆர்ட் ஃபோரம் ஆபீஸ் இங்கே திரும்பிடும். அப்புறம் ஆபீஸ் போய்ட்டு வந்து நானே பார்த்துப்பேன். பணம் எல்லாம் எதேஷ்டமா இருக்கு.

 

பாட்டி முகத்தில் கொஞ்சம் போல் நிம்மதி தெரிந்தது. புத்தி பேதலித்திருக்கும் பிரசித்தி பெற்ற மராட்டிய லாவணி நாட்டியக்காரி ஷாலினி மோரேக்குப் பணிவிடை செய்து ஓய்ந்து போயிருந்தாள் அவள். மருமகளானால் என்ன, சாதம் ஊட்டுகிறதும், பீ துடைக்கிறதும், உடுதுணி மாற்றுவதும் அலுக்காமல் எத்தனை வருடமாக அவள் செய்து வருகிறாள்! வீட்டுக்காரன், நாட்டுப் பெண் என்று அவள் சிஷ்ருஷைக்கு இதுவரை ரெண்டு பேர் வந்தாச்சு. அதில் ஒருத்தரை எல்லா உபசாரத்தோடும் மேலே அனுப்பியும் ஆனது.

 

இன்றைக்குக் காலையில் முதல் வேலையாக தாய்டே மூலம் அம்மாவுக்கு உதவி செய்ய ஆள் நியமித்து அட்வான்ஸ் பணமாக ஆயிரம் ரூபாயும் கொடுத்து ஒரு கடமை முடித்தான் திலீப்.

 

அடுத்து கட்சி ஆபீஸுக்குப் போய் கார்ப்பரேஷன் எலக்‌ஷனுக்கு கட்சி வேட்பாளர்களை முடிவு செய்கிறதைப் பற்றிக் கேட்க வேண்டும். எப்படியாவது அவன் இருக்கும் வார்டுக்கு நிற்க வைக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நின்று ஜெயித்தால் அவன் எங்கேயோ போய் விடலாம்.

 

எல்லா நினைவும் கனவுமாக லோக்கல் டிரெயின் ஏறப் போனபோது தான் ஸ்டேஷனில்  கூட்டமே இல்லாததைக் கவனித்தான்.  ஸ்டேஷன் பெட்டிக்கடைக் காரன் சொன்னான் –

 

இன்னிக்கு புத்த பூர்ணிமா. லீவு நாளாச்சே. மறந்துட்டீங்களா திலீப் அண்ணா?

 

ஆர்வம் எல்லாம் உடனே தணிய, எடுத்த அடி திரும்ப வீட்டுக்குப் போகாமல் வேறே என்ன செய்யலாம் என்று யோசிக்க, கமர்தீன் நினைவில் வந்தான்.

 

கிராண்ட் ரோடு, பெடர் ரோடு வட்டாரங்களில் நயம் வெளிநாட்டு சரக்குகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கிற கமர்தீன் திலீப்பின் பால்யகால சகா.

 

அம்பலப்புழை வெக்கையும்  உச்சி மண்டையில் துளைத்துப் புகும் கேரள வெய்யிலின் உஷ்ணமும் குறைக்க கூலிங் கிளாஸ் வாங்க கமர்தீனைப் பார்க்கக் கிளம்பினதும் தாமதமாகியது. அவன் மஸ்ஜித் பந்தர் சரக்கு கொள்முதலுக்குப் போயிருந்தான். இன்னும் ரெண்டு மணி நேரத்தில் வந்து விடுவான் என்றார்கள் அண்டை அயலில். குறைந்தது ரெண்டு மணியாகுமாம்.

 

சும்மா கிராண்ட் ரோடில் சுற்றி வருவதைத் தவிர்க்க சினிமா தியேட்டரில் புகுந்து இன்னும் இரண்டு மணி நேரம் இந்த நிழல் கதாநாயகியின் உருட்டித் திணித்த முலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க விதித்திருக்கிறது திலீப்புக்கு.

 

அம்பலப்புழை ஆபீசில் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அவன் நினைத்துக் கொண்டபோது கூட்டமாக விசில் அடிக்கும் சத்தம். திலீப் திரையைப் பார்த்தான்.

 

ஊஊஊ என்று காண்டாமிருகம் போலவோ, நிலக்கரி பற்ற வைத்து ஓட்டும் ரயில் இஞ்சின் போலவோ ஊளையிடும் அந்தத் தீக்குச்சி அழகியைப் பின்னால் இருந்து அணைக்க அடி மேல் அடி வைத்து நெருங்கி வருகிறான் கதாநாயகன். அழகான முன்பாரம் கொண்ட பெண். அவளுக்கு வாய் நாறும்.  திலீப்புக்கு எப்படியோ தெரியும். அது கவலைப்பட விஷயமில்லை. எல்லா துர்வாடையோடும் அவளை விடிகாலைக் கனவுகளுக்கு இடைபட்ட போர்வை நேரங்களில் அவன் அனுபவிப்பான். அந்தக் கதாநாயகி அகல்யாவாக உருமாறிக் குதித்து வரும்போது அவன் அடுத்த தூக்கத்துக்குப் போயிருப்பான்

 

மழைக்காலமும் தீபாவளியும் முடிந்து அடுத்த குறுகிய வேனல் காலம் எட்டிப் பார்க்கும் பொழுது இது.  கடகடத்துச் சுழலும் கூரை மின்விசிறிகள் வெக்கையைக் கூட்டிப் புழுக்கத்தை சர்வ வியாபகமாக நிறுத்தி வைக்க, குளோசப்பில் உதட்டைச் சுழித்து அழகு காட்டும் கதாநாயகி, குச்சியில் செருகிய ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி கண்ணடிக்கிறாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன