யுத்த விமான பைலட் ஆகப் பணி புரிந்த அமேயர் அச்சன்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கு – சிறு பகுதி

நீங்க என்ன வாகனம் எல்லாம் ஓட்டியிருக்கீங்க அச்சன்?

கொலாசியம் மதுக்கடைக் காரனும் மறைந்த மெட்காபின் உற்ற தோழனுமான செபாஸ்தியன், தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அமேயர் பாதிரியாரிடம் விசாரித்தான். ஓவர்கோட்டை மேலே இழுத்து காது மடலை மறைத்தபடி அவர் ஒரு வினாடி யோசித்தார்.

 

வெறும் நாளில், நடக்கும்போதும், சைக்கிள் ஏறி கால்டர்டேல் பிரதேசத்துக் கல்பாளம் வேய்ந்த குறுகிய பாதைகளில் சுருதி கெடாமல் ரப்பர் டயரால் தட்டித் தட்டி ஓட்டிப் போகும் போதும் தெரியாத குளிரின் ஊடுருவும் தன்மை, லண்டன் போகும் நெடுஞ்சாலையில் விரையும் காரில் முன் வசத்து இருக்கையில் அமர்ந்து போகும் போது மனதில் பலமாக வந்து நிறைகிறது.

 

சிறுநீர் இந்த வினாடி போயே ஆகணும் என்று நெருக்கவும், கைகால்கள் கொஞ்சம் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்து சுகம் கொண்டாடி விட்டுப் போகலாமென ஒரேயடியாக ஓய்ந்து வரவும் குளிர் வாதனைப் படுத்துகிறது.

 

எனில், பயணம் போகாமல் தீராது. அழைப்பு விடுத்த அரண்மனைக் காரர்கள் அவரையும், மறைந்த மெட்காபின் அதிசயமான மோட்டார் காரையும் சேதன அசேதனப் பொருட்களுக்கான வேற்றுமை குறித்த போதமின்றி ஒரே நேர்கோட்டில் சீராகக் காண்கிறவர்கள். பாதிரியாரை ஒரு பென்ஸ் நாணயம் கூட யாத்திரைச் செலவுக்கென்று தராமல், அரண்மனைத் தோட்டத்துக்குக் காரோடு வரச் சொல்லி கூப்பிட்டு விட்டு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

 

இந்தக் காரை ஓட்டத் தெரிந்திருந்தால் அமேயர் கூட்டுக்கு ஆள் சேர்த்துக் கொண்டு இப்படிக் கிளம்பியிருக்க மாட்டார் தான். இந்தக் கார் மட்டும் என்ன, வேறு எந்தக் காரையும் அவர் ஓட்டப் படித்ததில்லை இதுவரை. கொலாசியம் மதுக்கடைக் காரன் செபாஸ்தியனும் அவனுடைய நிழல் போல சதா கூட வரும் உதவியாளனும் இன்றைக்குக் கூட்டிப் போகாவிட்டால் அவரால் அரண்மனை விருந்துக்குச் சகல கம்பீரத்தோடும் கிளம்பி இருக்க முடியாது.

 

அப்பன், நீங்கள் ராணுவத்தில் இருக்கும்போது தண்ணீரிலும் தரையிலும் ஓடியபடிக்குக் கண்ணி வெடி விதைத்துப் போகும் புது மோஸ்தர் ஜீப் ஓட்டியவர் என்று கேள்விப் பட்டேனே. உண்மைதானா அது?

 

செபாஸ்தியன் தன் கேள்வியைச் சற்றே மாற்றி அவரிடம் கேட்டான். அவனுக்கு இந்தக் கேள்விக்காவது பதில் சொல்லியே ஆக வேண்டும்.

 

உலக மகா யுத்த காலத்தில் எங்களுக்கு விமானம் ஓட்டப் பயிற்சி கொடுத்தார்கள். நான் தலைகீழாக விமானத்தைத் திருப்பி நிதானம் தவறாமல் ஓட்டுவதில் சிறப்புப் பயிற்சி எடுத்திருந்தேன். அதை நடப்பாக்கிக் காட்டுவதற்குள் போர் ஓய்ந்து விட்டது.

 

அமேயர் பாதிரியார் தனக்கு வேதாகம கீர்த்தனம் எத்தனை பாடத் தெரியும் என்று யாராவது கேட்டால் சொல்கிற, விலகி நின்று தகவல் மட்டும் அறிவிக்கிற குரலில் போர் விமானம் பற்றிச் சொல்ல, செபாஸ்தியன் அவரைப் புது மரியாதையோடு நோக்கினான்.

 

அவன் விமானத்தின் இஞ்சின் அறைப் பக்கம் கூட போனதில்லை. வயதான ஒரு பாதிரியார் யுத்த விமான பைலட்டாக, சாகசங்கள் செய்யும் திறமை வாய்க்கப் பெற்றவராக இருந்திருக்கிறார் என்பது அவனை நிலைகுலைய வைத்துப் போட்ட தகவல்.

 

அமேயர் பாதிரியார், ஏற்கனவே மரித்து விழுந்தவர்களைத் துப்பாக்கி எடுத்துச் சுடவும், ஏன், ராணுவத் தாவளத்தில் பினாயில் கலந்த தண்ணீரை அடித்து அடித்து ஊற்றிக் கழிப்பறை கழுவவும் கூட  லாயக்கற்றவர் என்று நினைத்ததற்காகத் தன்னையே சபித்துக் கொண்டான் செபாஸ்தியன்.

 

அடேயப்பா. என்ன ஆச்சரியம். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். விமானம் தவிரவும் வேறு நுட்பமான வாகனங்கள் ஓட்டி இருப்பீங்கன்னு நினைக்கறேன் ஃபாதர். மலைப் பாதையில் போகும் ராட்சச ட்ரக், போர்க் களத்தில் டேங்க் இப்படி.

 

அமேயர் பாதிரியார் சிரித்தார். அதெல்லாம் அவர் பரிசயப் படுத்திக் கொள்ளாதது. கொஞ்சம் யோசித்து மன்னிக்கக் கோரும் குரலில் அவர் தொடர்ந்தார் – மோட்டார் படகு அசுர வேகத்தில் ஆற்றில் ஓட்டிப் போயிருக்கேன். ரெண்டு தடவை படகு கவிழ்ந்து அடிபடாமல் தப்பிச்சேன். சோன் நதியில் ராத்திரி நேரத்தில் படகு ஓட்டினது ஒரு காலம். அது பிரான்ஸில் பெரிய ஆறு. எப்பவும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நதி.

 

செபாஸ்தியனின் உதவியாளன் ரெண்டு கையையும் வானத்தை நோக்கி உயர்த்தியபடி அமேயர் பாதிரியாருக்கு மங்களம் சொன்னான். பிரான்ஸ் என்ற ஒரு நாடு பக்கத்தில் கடல் கடந்து எங்கோ இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்த அப்பாவி மனுஷன் அவன். ஆற்றையும் படகையும் கூட அவன் அபூர்வமாகவே பார்த்திருக்கிறான்.

 

இவ்வளவு சிக்கலான யந்திர அமைப்பு இருக்கிற சமாசாரம் எல்லாம் ஓட்டி ஜெயித்து வந்திருக்கீங்க ஃபாதர். இந்தக் காரை ஓட்டறது சின்னப் பிள்ளை விளையாட்டாகத்தான் இருக்கும் உங்களுக்கு. வாங்களேன் ஒரு ஐந்து நிமிடம் ஸ்டியரிங் பிடியுங்க. நீங்களே ஓட்டிப் போயிடலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன