சோழ பிரஹ்மஹத்தி, மதறாஸி சாம்பார் குடிக்கறதுக்கே வந்து சேர்ந்தியே

அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது வாழ்ந்து போதீரே நூலில் இருந்து

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு

வேறே என்ன விசேஷம் உங்க ஊர்லே என்று இலைக்கு முன்னால் கொஞ்சம் சிரமத்தோடு இருந்து தயிர் சாதத்தை ரசித்துக் கொண்டிருந்த ஜெயம்மாவும் கேட்டாள்.

அங்கே இப்போ மனுஷர்கள் எல்லாம் விதி முடிஞ்சு சாகறது திரும்ப நடக்கறது ஆனா, மிருகங்கள் ஆயுசு நீண்டு போயிருக்காம். சீரியஸா ஒரு தோஸ்த், தியாகராஜன்னு பேரு, எனக்கு போஸ்ட் கார்ட் போட்டிருக்கான். அங்கே சீனியர்மோஸ்ட் சாஸ்திரிகளாக்கும்.

உங்க ஊர்லே எல்லோருக்கும் தரைக்கு அரை அடி மேலே கோழி, கரப்பான் பூச்சி மாதிரி பறக்கற வழக்கம் உண்டோ?

குப்தா சிரிக்காமல் கேட்க, ஜெயம்மாவுக்குப் புரை ஏறி விட்டது.

அரசூர்லே பறக்காட்ட என்ன, அம்பலப்புழையிலே உண்டே. எங்க சிநேகா மன்னி அப்பா ஆலப்பாட்டு வயசர். கோயில் கொடி மரத்தை நனைச்சுண்டு திந்தோம்னு பறந்தாரே. அதை இந்த மனுஷருக்கு யாராவது சொல்லணும் என்றாள் யாருக்கும் கேட்காத குரலில், பகவதி.

உள்ளே குட்டி பகவதி அசந்து தொட்டிலில் உறங்க குஞ்ஞம்மிணி சீராக ஆட்டிக் கொண்டிருந்தாள்.

காத்துலே என்ன அழகா தொட்டில் ஆடறது பாருங்கோ.

வசந்தியின் தம்பி வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்ள வந்த மேல் ப்ளாட் பஞ்சாபிப் பேரிளம் பெண்ணை வெறித்தபடி சங்கரனிடம் சொன்னான். நல்ல வேளையாக அவள் இடுப்பு சற்றும் தெரியாத படிக்கு சூடிதாரில் வந்திருந்தாள்.

வம்பும் வாய்க்கு ருசியான சாப்பாடுமாகக் கடந்து போன பகல் அது.

அடுத்த வாரம் குப்தா வீட்டுலே சத்சங்க் ஆரம்பம்.

ஜெயம்மா பேசப் புதிதாக விஷயம் கிடைத்த சந்தோஷத்தில் அறிவித்தாள்.

ஒரு மாசம் நடக்குமே? ராத்திரி பன்ரெண்டு மணி போல ஆகிடும். டோலக்கும் கஞ்சிராவுமா அத்தனை பேர் சேந்து ராம நாமம் சொல்றது குளிருக்கும் மனசுக்கும் இதமா இருக்கும்.

வசந்தி சொன்னாள். சங்கரனும் அவளும் போன வருஷம் தினசரி கலந்து கொண்டு விட்டு ஸ்கூட்டரில் பத்திரமாக வந்து சேர்ந்து இஞ்சி தட்டிப் போட்ட சாயா குடித்துத் தான் உறங்கப் போகிற நியமம். இந்த வருஷம் குட்டி பகவதி பிறந்து அதையெல்லாம் ரத்து செய்து விட்டாள்.

ஆமா, வாய் உலர கத்திக் கத்திப் பாடினா, நீர்க்கக் கரைச்சு வச்சு பானகம் கொடுப்பான். பிரசாதம்னு தொன்னை தொன்னையா கொண்டக்கடலை சுண்டலை கொடுத்து அனுப்பிடுவான் கழுதை விட்டை கை நிறையன்னு.

ஜெயம்மாவுக்குப் பிடிக்கும் தான் அந்த அகண்டநாம பஜனையும் கூட்டாக இருந்து பாடுவதும், சுடச்சுட ரொட்டியும் ஆலு சப்ஜியும் சாப்பிடுவதும். இருந்தாலும் குப்தாவை எதற்காவது கிண்டல் செய்ய வேண்டும்.

அவசரமான மொழிபெயர்ப்பையும் குப்தாவுக்கு அவளே செய்தாள். லட்சம் பிரதி வட மாநிலங்களில் தினம் விற்று ஊர் உலக நிலவரம் அறிவிக்கும் தினசரிப் பத்திரிகையின் ஆசிரியரான அவன் கொஞ்சமும் கோபமோ சங்கடமோ இல்லாமல் ஜெயம்மாவின் கிண்டலை சகஜமாக ஏற்றுக் கொண்டது மட்டுமில்லை, ரசித்துச் சிரிக்கவும் செய்தான். குப்தா சொன்னது-

பகவான் பிரசாதத்தை கழுதை விட்டைன்னு சொன்னா அடுத்த ஜன்மத்திலே ஜெயா தீதீ கர்த்தபமாத்தான் பிறக்க வேண்டி வரும். ரொம்ப ஒண்ணும் பெரிசா வித்தியாசம் இருக்காது தான்.

அட சோழ பிரம்மஹத்தி. சாம்பார் குடிக்கறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கியே.

ஜெயம்மா அவனை அவனுடைய பத்திரிகையை மடக்கிக் கொண்டு முதுகில் அடித்து, இன்னும் கொஞ்சம் சாம்பாரும் ஓரம் கருகிய ரெண்டு வடையும் சுவாதீனமாகச் சமையல் கட்டில் போய் எடுத்து வந்து அவனுக்குக் படைத்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன