மயிலாடும் போது அன்னபூரணி என விளித்து சோறு கேட்டு வந்த பைராகி

அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே இவை நான்கும் சேர்ந்து அரசூர் நாவல் தொகுதியாக கிட்டத்தட்ட 2000 பக்கங்களில் விரியும் கதை. அபூர்வமான தமிழ்ப் புத்திலக்கியத் தொகுதி இது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு.

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து அடுத்த சிறுபகுதி.

சத்சங்கும் அகண்ட நாம பஜனையும் தில்லி முழுக்கக் கொடி கட்டிப் பறக்கிறது. தெற்கத்தி மனுஷர்கள், வடக்கர்கள், மீன் வாசனையோடு கிழக்கில் இருந்து வந்த முக்கோபாத்தியாயா, சட்டோபாத்தியாயா வகையறாக்கள், இன்னும் மேற்கில் இருந்து நாசுக்காக வந்து சேர்ந்த காசு கனத்த தேஷ்பாண்டே, அப்யங்கர், கினி, தந்த்வாடேக்கள் என்று எல்லோரும் பங்கு பெறும் ஆராதனை இது.

வீடு வீடாக ராத்திரியில் ராமர் பட்டாபிஷேகப் படத்துக்கு ஜவந்திப்பூ மாலை போட்டு இருத்தி, விளக்கேற்றி வைத்து, ராம் ஏக் ராம் தோ ராம் தீன் என்று ஒவ்வொரு ராம் சொல்லும்போதும் கணக்கை ஏற்றி பதினாயிரம் ராம் வந்ததும் நீர்க்கப் பானகம் கரைத்துக் கொண்டாடுகிற ஆராதனைகள் அமர்க்களமாக அரங்கேறுகின்றன.

கோல்ஃப் லிங்க்ஸிலும், லோதி காலனியிலும் வீடு தவறாமல் இது நடக்க, தெருக் கோடியில் பிளாட்பாரத்தில் சட்டமாக உட்கார்ந்து, கட்டிடத் தொழிலுக்காக வந்த பீகாரிகளும் உத்தரப் பிரதேச பையாக்களும் இதே படிக்கு ராத்திரி தோறும் ராம் ஏக் ராம் தோ கணக்கோடு சாமான்ய ராம பஜனை செய்கிறார்கள். அது காடாவிளக்கு பஜனை என்பது தவிர வித்தியாசமில்லை.

பஜனையா? நான் வர முடியாதே. கேரளா போறேன்.

சின்னச் சங்கரன் குறைப்பட்டதாகத் தொனித்துச் சொல்ல பிடார் ஜெயம்மா அவனை ஒரு கைத் தள்ளலில் ஒதுக்கினாள்.

இவன் ஒருத்தன். என்னடி சுப்பின்னா எட்டு மணிக்கு தயார்னு இங்கே வேறே எதுவும் குப்பை பொறுக்க இல்லாட்ட கேரளத்துக்கு ஓட வேண்டியது. வசந்தி, இவனை கொஞ்சம் நோட் பண்ணி வை. அங்கே டட்டடாண் பின் அப் பொண்ணுகள், கறுப்பும் செகப்புமா நிறைய ஓமனக்குட்டிகள் உண்டு. உனக்குத் தான் தெரியுமே. எப்படித்தான் தலைமுடி தரை வரைக்கும் வருமோ, ரதிகள்.

வசந்தி உள்ள படிக்கே பயந்து போனாள். எதுக்கு இப்போ கேரளாவும் மண்ணாங்கட்டியும். வீட்டோட இருக்கணும் என்று கல்சுரல் மினிஸ்டிரி அண்டர் செக்ரட்டரியை மிரட்ட அவன் பூனையாகிக் கூழைக் கும்பிடு போட்டு குப்தாவை ஆதரவுக்காகப் பார்த்தான்.

அந்தப் பேர்வழியோ வழிச்சு வார்த்த வடையையும் விடாமல் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு வசந்தியிடம் சொன்னது – பெஹன் ஜீ, இவன் செய்யக் கூடியவன் தான். ஜெயம்மாவும் நானும் இங்கே வேலி தப்பாம பார்த்துப்போம். கேரளுக்கு யார் இவன் கூடக் கழுதை மேய்க்கப் போறது?

அடே, தர்ப்பையை வறுத்து நாக்குலே போட்டுப் பொசுக்க. அது கேரள் இல்லே. கேரளம். இப்படித் தப்புத் தப்பா எழுதியே பெரிய பத்திரிகைக்காரன் ஆயிட்டே.

ஜெயம்மா செல்லமாகக் குப்தாவின் கையை எடுத்து வைத்துக் கொண்டு சொல்லி பாவம்டா சங்கரன், விட்டுடுவோம் அவனை என்றாள்.

கேரளத்துலே என்ன தலை போகிற வேலை? குப்தா விசாரித்தான். அதானே என்றாள் வசந்தி சந்தேகம் குறையாமல்.

எங்க மினிஸ்டர் அங்கே கான்பரன்ஸ் தொடங்கி வைக்கிறார். நாம் போனோமே அம்பலப் புழை. அங்கே தான். நாட்டுப்புறக் கலைகள் விழா.

நைச்சியமாக வசந்தியைப் பார்த்துக் கொண்டு சொல்ல உள்ளே குழந்தை அழும் சத்தம். ஃபீடிங் டைம் என்று வசந்தி உள்ளே போனாள்.

இவனுக்கும் வேல இல்லே இவனோட மினிஸ்டர் அந்தத் தீவட்டித் தடியனுக்கும் தான்.

ஜெயம்மா சொல்லி விட்டுச் சிரித்தாள்.

ஒரு தடவை அந்தப் பீடைக்கு கேரளா வாசனை காட்டிட்டி வந்தாச்சு. மாசா மாசம் ஏதாவது சாக்கை வச்சுண்டு டூர் அடிக்கறான். ஒட்டடைக் குச்சிக்கு கையும் காலும் மொளச்ச மாதிரி இருந்துண்டு ஆகிருதியான மலையாள ஸ்திரியைத் தேடி எச்சல் வடிச்சபடி போனா, அவ ராபணான்னு இடுப்பிலே தூக்கிண்டு போய் சமுத்திரத்திலே வீசி எறிஞ்சிடுவா, போடா போய்க்கோன்னு.

பயமுறுத்தும் குரலில் சொன்னாள் ஜெயம்மா. சரிதான் என்றபடி குப்தா வாசலுக்கு நடந்தான்.

வாசலில் யாரோ கூப்பிடுகிற சத்தம். கோசாயி உடுப்பும் முகத்தில் மண்டிய தாடியுமாக ஒர் பைராகி. அப்படித்தான் தெரிந்தது சின்னச் சங்கரனுக்கு. பகவதிப் பாட்டி அரசூரில் சந்தித்த பைராகிகளின் மூணாம் தலைமுறையாக இருக்கும். சாமியாருக்கு ஏது தலைமுறை? அவனுக்குச் சிரிப்பு வந்தது.

வசந்தியின் அப்பா வாசலுக்குப் போய்ப் பார்த்து விட்டுத் தன் இந்தியைப் பரிசோதிக்க வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் பைராகியிடம் கேட்டார் –

விசேஷம் நடக்கற வீடுன்னு கண்டுபிடிச்சு சாப்பாட்டைக் கொண்டான்னு வந்திருக்கியே? எல்லாம் தீர்ந்து போச்சு. போய்க்கோ.

பைராகி முறைத்ததில் சப்தநாடியும் ஒடுங்கிப் போனார் அவர். சங்கரன் வெளியே வர, பைராகி முறையிட்டான் –

உங்க வீட்டுலே தான் பிக்ஷை ஏத்துக்கச் சொல்லி உத்தரவு. போடறதுன்னா போடு. இல்லேன்னா ஜலமும் வாயுவும் எதேஷ்டமா இருக்கு. போறேன்.

அதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் இரு.

பிடார் ஜெயம்மா பைராகியை நிற்கச் சொல்லி விட்டு சமையல் அறைக்கு வந்தாள். சாதம், உருளை ரோஸ்ட், பரங்கிக் காய்ப் பால் கூட்டு, திரட்டுப் பால், தேங்காய் அரைத்து விட்ட பூஷணிக்காய் சாம்பார், எரிசேரி, அவியல், எலுமிச்சை ரசம், கட்டித் தயிர் என்று கிண்ணம் கிண்ணமாக ஒரு பெரிய தட்டில் எடுத்துப் போய் பைராகியிடம் நீட்டி, அங்கே உக்காந்து சாப்பிட்டுப் போ என்றாள் கருணையோடு.

அன்னபூரணி என்று ஓங்கி விளித்து அவளை பைராகி கும்பிட்டு வாசலில் ஓரமாகக் குந்தி இருந்து சாப்பிடும்போது, தோட்டத்தில் சத்தம்.

சங்கரன் திரும்பிப் பார்க்க மயில் மறுபடி பறந்து வந்து சேர்ந்திருந்தது. பைராகி சங்கரனைப் பார்த்துச் சிரித்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன