அந்த ஊரில் யாரும் நடப்பதே இல்லை

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல் = வாழ்ந்து போதீரே. அதில் அத்தியாயம் 6இல் இருந்து

வசந்தியின் அப்பா சுந்தர வாத்தியார் பேசிய வினோத இந்தி புரியாமல் காப்பரசி மகத்துவமறியாது அதையும் தொட்டிலில் விட உத்தேசித்த அண்டை அயல் குழந்தைகளுக்காக ஜெயம்மா ஒரு பாக்கெட்டை பிரித்து ரெண்டு பிடியாக உள்ளே இருந்து எடுத்துச் சாப்பிட்டு, அதன் சேர்மானம் சொல்லி அதுகளையும் சாப்பிடவும், இலை போட்டபின் பந்திக்கு உட்காரவும் வைத்தாள்.

பந்தியில் பாயசம் பரிமாறிக் கொண்டிருந்தபோது கார் வந்து நிற்கும் சத்தம். சங்கரன் எட்டிப் பார்த்தான். ஏகமாக அம்பாசடரும், அடுத்த படியாக பியட் காரும் நிறைந்த தில்லியில் விசேஷமான இந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் கார் கொஞ்சம் தான் உண்டு. சங்கரனின் சிநேகிதனும் ஜாக்ரன் பத்திரிகை ஆசிரியருமான சந்தோஷிலால் குப்தா அதில் ஒருத்தன்

குப்தாக் கடன்காரனையும் வரச் சொல்லிக் கூப்பிட்டியா, பேஷ்.

வடையைக் கடித்துக் கொண்டே ஜெயம்மா சிலாகிக்க, ஞாயிற்றுக்கிழமை பகல் கானாவுக்கு அப்புறம் எப்பவாவது இப்படி குப்தா வருவது வாடிக்கை தான் என்றான் சங்கரன்.

சாப்பிட்டியாடா பிரம்மஹத்தி?

ஜெயம்மா குறையாத அன்போடு குப்தாவை விசாரிக்க, கழிச்சு கழிஞ்சு என்று விசித்திரமாக மூக்கை சுருக்கிக் கொண்டு பதில் சொன்னான் குப்தா.

அட பீடை, அது மலையாளம். எனக்கு அர்த்தமாகாது. நீ இந்தியிலேயே பேசு என்றபடி பரிமாறுகிற பெண்ணிடம் ஒரு இலை நறுக்கில் ரெண்டு வடையும் பால் திரட்டுப் பால் ஒரு குத்தும் வைத்து குப்தா உட்கார்ந்த அப்புறம் கொடுக்கச் சொன்னாள் ஜெயம்மா.

பாயசமும் கொண்டு போய் வை, தாராளமா குடிச்சுட்டு கழிஞ்சுண்டு கிடக்கட்டும்.

பந்திக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஹால் ஓரமாகக் குரிச்சி போட்டு குப்தாவை உட்கார வைத்தான் சங்கரனின் மைத்துனன்.

சாம்பார் குடிக்கறானான்னு கேளு முதல்லே. அப்புறம் வடையும் திரட்டுப்பாலும் தின்னுட்டு பாயசம் குடிக்கட்டும்.

ஜெயம்மா கேட்டதுக்காகக் காத்திருந்த மாதிரி எல்லாத்துக்கும் சரி என்றான் குப்தா.

ஒரு பெரிய கும்பா நிறைய முருங்கைக்காய் சாம்பாரும் வெள்ளிக் கிண்ணம், ஸ்டெயின்லெஸ் தட்டில் மற்றதும் ஸ்டூல் போட்டு வைக்கப்பட குப்தா ஆசையாக வடையைக் கடித்து அரசூர் நியூஸ் சொல்லு என்றான் சங்கரனிடம்.

எச்சக் கையோடு என்னத்தைச் சொல்ல?

சங்கரன் கை அலம்பி விட்டு ஒரு வெற்றிலையை சர்க்கரை உள்ளே வைத்துப் போட்டுக் கொண்டு, குப்தா எதிரே, கதை சொல்கிற சுவாரசியத்தோடு வந்து உட்கார்ந்தான். அப்படியான மதராஸி பானும் வேண்டுமென்ற குப்தாவின் கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டது.

தினசரி ஒரு நாள் விடாமல் ராமாயணம் பிரசங்கம் செஞ்சு முப்பது வருஷத்துலே முடிக்க திட்டம் போட்டிருந்த பஞ்சாபகேச சாஸ்திரிகள்கற பண்டிதர் அரசூர்லே இருந்தார். ராமர் காட்டுக்குப் போகும் முன்பா ஒவ்வொருத்தராச் சொல்லிண்டு போற இடத்திலே ரொம்ப நாள் சிக்கி பரலோகம் போயிட்டார். இப்போ தினம் அவர் கதை சொல்ற நேரத்திலே ஒரு குடத்திலே தண்ணியைக் கொண்டு வந்து சபையிலே நடுவிலே வச்சுட்டா அதிலே ஆவாஹனமாகி கதையைத் தொடரறாராம். என்ன, குரல் கொஞ்சம் சன்னமா இருக்கு, அதோடு தண்ணியிலே வர்றதாலே அடிக்கடி தொண்டை கட்டிப் போயிடறதாம்.

இதை அடுத்த ஞாயிறு சப்ளிமெண்டுக்கு ஊர் பேர் போடாம கதையா எழுதிட சொல்றேன். ரெண்டு வடையை மிதக்க விட்டு இன்னும் கொஞ்சம் சாம்பார் கொடு.

குப்தா வாயும் காதுமே உடம்பாக இருந்து மீதிக் கதை கேட்க ஆயத்தமானான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன