சதுர்த்தி முடிந்து பொறுமையாகக் கடலில் கரைய நின்ற விநாயகர்

அரசூர் நாவல் நான்கு – வாழ்ந்து போதீரே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து

அகல்யாவும், சிரிப்பும், பேல்பூரியும், உயர்ந்து பொங்கும் கடல் அலைகளும் இல்லாத உலகம் அவன் போக வேண்டியது. அதுவும் இந்த ஆறு மாதத்தில் அவனுக்கு ஏற்கனவே அனுபவமான ’கொஞ்சம் போல் நிம்மதி’ சூழல் கூட இல்லை. அப்பா காணாமல் போனதில் தொடங்கியது இது.

பரமேஸ்வரன் நீலகண்டன். ஐம்பத்தேழு வயது. தாடையில் மிகச் சரியாக நடுவில் நீளமாகக் கீழே இறங்கும் ஒரு வெட்டுத் தழும்பும், இடது புறங்கையில் பாம்பு கொத்தினது போல் பக்கத்தில் பக்கத்தில் இரண்டு மச்சங்களும் கொண்ட சதைப் பிடிப்பு இல்லாத, வெளுத்த மனுஷர். இடது முட்டிக்குக் கீழே கால் இல்லாதவர். ஆங்கிலம், மராட்டி, தமிழ், சம்ஸ்கிருதம் மொழிகளில் புலமை கொண்டவர். டில்லியில் இருந்து பம்பாய்க்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது நாக்பூரில் காணாமல் போய்விட்டார். ஒரே மகன் திலீப் பரமேஸ்வரன். மனைவி, லாவணிக் கலைஞர் அம்பேகாவ் ஷாலினி மோரே. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும் இந்த முதியவரைப் பற்றிய விவரங்கள் அறிந்தவர்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்.

காவல்துறை மாநிலம் சார்ந்த ஒன்று என்றாலும், திலீப்பின் மினிஸ்டர் சித்தப்பா முன்கை எடுத்ததால், மாநிலம் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டிச் சகலமானவர்களுக்கும் சேதி சொல்லப் பட்டது. கோவாவிலும் இது நடந்தது.

பதினைந்து நாள். ஒரு மாதம். ஆறு மாதம். பரமேஸ்வரன் நீலகண்டன் என்ற இடதுசாரி சிந்தனையுள்ள, ஒரு காலை இழந்த அறுபத்தாறு வயதான மனிதர், மிச்சமிருக்கும் காலோடு எந்தக் கண்டத்திலும் ஏது நாட்டிலும் எந்த வேலையும் செய்து வருமானம் ஈட்ட ஆர்வம் காட்டியவர், இன்னும் எங்கோ உயிரோடு இருக்கிறார் என்று யாரும் நம்பத் தயாராக இல்லை.

ஆனாலும் அவர் காணாமல் போவதற்கு முன்பு தில்லியில் போய் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தது, அமைச்சரின் சகோதரர் நீதிக்குப் போராட்டம் என்ற சிறிய செய்தியாக பம்பாய் நகரின் மத்தியானப் பத்திரிகை ஒன்றில் அச்சுப் போட்டு வந்து ஆயிரம் பேராவது படிக்கக் கிடைத்தது.

எப்படியோ யார் மூலமோ அந்தச் செய்தி அதிகார யந்திரத்தை அசைத்து பரமேஸ்வரனின் மனைவி ஷாலினி-தாய்க்கு அவளுடைய நாட்டுப்புறக் கலைஞர் பென்ஷனை மீட்டுக் கொடுத்தது. அந்த முன்னூறு ரூபாயில் தான் ஒற்றை அறைக் குடியிருப்பில் திலீபும் அம்மாவும் தங்க வேண்டியிருக்கிறது.

அம்மாவை ஆஸ்பத்திரியில் இருத்தி கவனித்துக் கொண்டதற்கே அப்பாவுக்கு அவ்வப்போது வந்த வருமானம் தான் காரணம். அவர் உறுப்பினராக இருந்த இடதுசாரிக் கட்சிக்காக அவர்களுடைய வருடாந்திர மாநாட்டு வெளியீடுகளைத் தமிழிலும் மராத்தியிலும் மொழி பெயர்ப்பதை சிரத்தையாகச் செய்து வந்தார் திலீப்பின் அப்பா. அந்தக் கட்சியில் எத்தனை பேர் இருந்தாலும் போனாலும் திரும்பி வந்தாலும், வருடம் ஒரு மாநாடும் உள்கட்சி மோதலும், தேர்தலும் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது மட்டுமில்லை, அங்கே பதவிக்கு வருகிறவர்கள் எல்லோரும் இங்கிலீஷில் மட்டும் தான் யோசித்து எழுதக் கூடியவர்கள். மற்ற மொழிகளில் அவர்களுடைய கருத்துகள் கடந்து போக வேண்டியுள்ளது.

திலீப்புக்கும் நல்ல இங்கிலீஷ் வசப்பட அப்பா வழி காட்டியிருந்தால் திலீப் அவர் செய்த சாஸ்வதமான மொழிபெயர்ப்பு வேலையைத் தொடர்ந்து அவனுக்கும் அவ்வப்போது காசு வந்திருக்கும். அந்தக் கட்சி இன்னும் நூறு வருடம் இப்படியே தள்ளாடியபடி இருக்கும் என்பதிலும் ஆங்கிலத்தில் சிந்திப்பதையும் விவாதிப்பதையும் நிறுத்த மாட்டார்கள் என்பதிலும் மற்ற மொழிக்காரர்கள் அந்தச் செய்திகளை ஆர்வத்தோடு என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதிலும் திலீப்புக்குச் சந்தேகமில்லை.

அம்மாவை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து கூட்டி வரவும் அப்பா தான் உதவினார். அப்போது அவர் காணாமல் போய் நாலு மாதம் ஆகியிருந்தது. அம்மாவை ஆஸ்பத்திரியில் இருத்திப் பராமரிக்கக் காசு இல்லாதது வீட்டுக்குக் கூட்டி வர ஒரு காரணம். காசு தராததால் அவளைப் பட்டினி போட்டிருந்தார்கள் என்று அண்டை அருகில் மற்ற நோயாளிகளைக் கவனிக்க இருந்தவர்கள் சொன்னார்கள்.

நம்மாத்து பொண்ணை பட்டினி போடறதாவது. மினிஸ்டர் கிருஷ்ணனோட மன்னியாக்கும் இந்தக் கிறுக்கச்சி. போய்ச் சொல்லி உடனே கூட்டிண்டு வாங்கோடா.

பேரன் திலீப்பையும் பேத்தி ஜனனியையும் விரட்டியவள் கற்பகம் பாட்டி தான்.

அவளை வீட்டில் வைத்து யார் கவனிப்பது என்று மூத்த மருமகள் கேட்டபோது, பாட்டி மினிஸ்டர் மகனின் பங்களாவில் இருந்து கிளம்பி விட்டாள்.

நீங்க யாரும் என் மாட்டுப்பொண்ணைக் கவனிக்க வேண்டாம். நான் கவனிச்சுக்கறேன். அந்தக் கிழவருக்கு ஆயுசு முடியறவரை பீத்துணி தோச்சுப் போட்டு, மூத்தரம் தொடச்சு விட்டு, கொழந்தை மாதிரி தாடையைத் தாங்கிப் பருப்புஞ் சாதம் ஊட்டியே என் ஜீவன் முடியும்னு எதிர்பார்த்தேன். அது இன்னமும் இருக்கு. இங்கே இவளுக்கு ஊழியம் பார்க்கத்தான் மிச்ச பிராணன்.

கற்பகம் பாட்டி வற்புறுத்திக் கூட்டி வரச் சொன்னபோது திலீப்பிடம் ஆஸ்பத்திருக்கு அடைக்க வேண்டிய பணம் இல்லை. வருமானம் இருந்தால் தானே காசும் பணமும் புழங்கும். மிட்டாய்க் கடை வைத்திருக்கும் மதராஸிகள் மேல் விரோதம் வளர்க்கும் கட்சிக்காரர் பாலகிருஷ்ண கதம் கூட மதராஸி ஓட்டலை உடைத்து நொறுக்க திலீப்பை இப்போதெல்லாம் அழைப்பதில்லை. அவன் பாதி மதராஸி என்பது அப்பா தில்லியில் ஆர்ப்பாட்டம் செய்தது தொடங்கி, காணாமல் போனதுவரை செய்தியானதில் நிறைய வெளிச்சம் போடப்பட்டு விட்டது. அதை விட முக்கிய காரணம், பாலகிருஷ்ண கதம்-ஜீயின் மூத்த மகள் ஒரு மதராஸி சோக்ராவைக் காதல் கல்யாணம் செய்து கொண்டாள் என்பது. அந்தப் பையனின் குடும்பம் மதராஸிலும் ஆந்திராவிலும் நாலைந்து பெரிய மதராஸ் ஓட்டல்களை வெற்றிகரமாக நடத்துகிறார்களாம்.

எல்லாம் சேர்ந்து ஷாலினி-தாய் ஆஸ்பத்திரியில் பிணைக் கைதியாக இன்னும் ஒரு வாரம், கேவலம் இருநூறு ரூபாய் ஃபீஸ் அடைக்க முடியாததினால் கழிக்க வேண்டி வந்தபோது தான் திலீப்புக்கு அப்பாவின் புத்தகங்கள் நினைவு வந்தன. உயர ஸ்டூலைத் தேடினான். அதில் போன வருடம் விநாயக சதுர்த்திக்கு வந்த விநாயகர் பொறுமையாக இன்னும் நின்று கொண்டிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன