அலை ஓயாத அரபிக் கடல் பாடுகிறது

அரசூர் நாவல் 4 : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் இரண்டில் இருந்து
அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்டிருக்கிற நூல் இது

அலை ஓங்கி அடிக்குது அகல், தர்காவுக்கு இன்னொரு நாள் போகலாம்.

திலீப் அகல்யாவின் கையை இறுகப் பற்றியபடி நின்றான். அவள் இப்போது பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். நீ வரட்டா போ, நான் போயே தீருவேன் என்று அவள் ஓட வேண்டும்.

ஹை டைட், ஹை டைட் என்று ஒரு காவலர் அறிவித்துக் கொண்டே போக, அகல்யாவும் திலீபும் கடல் பாதையில் ஒருத்தர் பின்னால் ஒருத்தராக ஓட வேண்டும்.

எழுந்த அலையில் ரெண்டு பேரும் அடித்துக் கொண்டு போய் மஹாலட்சுமி கோவில் பின்னால் பாறை அடுக்கில் கொண்டு சேர்க்கப் பட வேண்டும். அங்கே அவளை இடுப்பில் கை சேர்த்து வளைத்து அணைத்துக் கொண்டு பின்னால் வந்து போகும் அலைகளைப் பார்த்தபடி பிதற்ற வேண்டும்.

இதுக்காக அலை அடிச்சுப் போகணுமா என்ன?

அகல்யா சிரித்தபடி அவன் உள்ளங்கையில் கிள்ளினாள்.

அவளுக்கு சின்னச் சின்ன சந்தோஷங்கள் மட்டுமே போதும். மகாலட்சுமி ஏரியாவோ, தாதரில் ரானடே ரோடு பாதையோரக் கடையோ, ஒரு பிளேட் சமோசா, இஞ்சி தட்டிப் போட்ட சாயா. பிளாட்பாரக் கடையில் நீலப் பூ போட்ட கர்ச்சீப். எப்போதாவது திலீப்பை தனியாக நிற்கச் சொல்லி விட்டு ஸ்தூல சரீர மராத்திப் பெண்ணை ஷாந்தி-தாய் என்று விளித்து காதில் ரகசியமாக அளவு சொல்லி வாங்கும் மார்க்கச்சை. வீட்டு முகப்பில் கட்டி, ஒரு வருடம் கழித்து எடுத்துப் போடும் ஜரிகைத் தோரணத்தில், ஜெய் மாதா தி என்று சுபமாக எழுதியது.

இது எல்லாத்துக்கும் மேல் இதில் கொஞ்சமாவது நிறைவேறிய சந்தோஷத்தோடு திலீப்போடு கை கோர்த்து நடப்பது.

பாந்த்ரா பேண்ட் ஸ்டாண்டில் சுற்றும் போது ஏதோ கட்டடத்தின் பின் பகுதிக்கு அவசரமாக இட்டுப் போய் இங்கிலீஷ் சினிமாவில் வருகிறது போல முத்தம் கொடுத்தான் திலீப். அதுவும் அகல்யாவுக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் பிடிக்கும் என்று சொல்ல மாட்டேன் என்று முரட்டுப் பிடிவாதம். திலீபுக்கு அது தெரியும். பாந்த்ரா போகலாமா என்று குருவி போல தலையைக் கவிழ்த்துப் பார்த்தபடி கேட்கிற சந்தோஷம் அவனுக்கும் வேண்டியிருக்கிற ஒன்று.

சரி, டாட்டா சொல்லிக்கலாமா?

அகல்யா கைக்கடியாரத்தைப் பார்த்தாள். யாதொரு சந்தேகமும் வரவழைக்காமல் வீட்டில் போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. மாசம் பிறந்து ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே அப்பாவிடம் கொடுத்து விட்டு ஐம்பது ரூபாயை மட்டும் மாசாந்திரக் கைச்செலவுக்காக வாங்கிக் கொள்ளும் அவளை எல்லோருக்கும் பிடிக்கும். வீடு திரும்பத் தாமதமாகும் ஒவ்வொரு கணமும் அவர்கள் பீதி அடைகிறார்கள். எல்லோருக்கும் பிடித்த நல்ல பெண்ணாக, அதற்கு வழி வகுக்காமல் அவள் இருப்பாள்.

ரயில்வே ஸ்டேஷன் வரைக்குமாவது கூட வரேனேடி செல்லக் குட்டி?

செல்லக் குட்டியை மகாலட்சுமி – போரிவாலி ஸ்லோ லோக்கலில் ஏற்றி விட்டு பஸ் பிடித்துத் திரும்பிக் கொண்டிருந்தான் திலீப். இனி ஒரு மாதமாவது அவளோடு இன்னொரு சந்திப்புக்காகக் காத்திருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன