இறந்தும் கொடுத்த மேலை சிவப்புச் சிந்தனையாளர்கள்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் வரிசையில் 4வது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியானது. அந்நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் இருந்து

திலீப்புக்கு அப்பாவின் புத்தகங்கள் நினைவு வந்தன. உயர ஸ்டூலைத் தேடினான். அதில் போன வருடம் விநாயக சதுர்த்திக்கு வந்த விநாயகர் பொறுமையாக இன்னும் நின்று கொண்டிருந்தார்.

இன்னும் ஒரு மாதத்தில் அடுத்த சதுர்த்தியே வரப் போறது, இன்னுமா என்னை அனுப்பி வைக்கலே என்று திலீப்பைக் கேட்டார் அவர். அவன் பதில் சொல்லாமல் அவரைப் படியிறக்க, நீ மட்டும் அந்த சிவத்த குட்டியோடு பேண்ட் ஸ்டாண்டு, மகாலட்சுமின்னு சமுத்திரக் கரையிலே திரியறே, என்னை அந்த சமுத்திரத்திலே கரைச்சு வழியனுப்பிட்டு அடுத்த வருஷம் வான்னு சொல்லத் தெரியலே என்று கமுக்கமாகத் தலையில் குட்டினார்.

மேலே லாஃப்ட்டில் தலை இடிக்க ஒரு பக்கம் மண்டையே பள்ளமாகிற அளவு இடது கையால் பரபரவென்று தேய்த்துக் கொண்டு லாப்டில் சிரமப்பட்டு கால் மடித்து அமர்ந்தான் அப்போது திலீப். மனசு அகல்யா என்றது. அவளை அங்கே ஏற்றி விட்டுக் கூடவே தானும் உட்கார்ந்து கொண்டால் எப்படி சுகமாக இருக்கும் என்று கற்பனை தறிகெட்டுப் பறந்தது. இங்கே லேடீஸ் டாய்லெட் எங்கே இருக்குன்னு பாருங்கோ என்றாள் அகில்.

சிரித்துக் கொண்டே புரட்டக் கூடிய புத்தகம் இல்லை சேர்மன் மா ஸ்ட்ஸே துங்கின் சிவப்புப் புத்தகம் மராட்டி மொழிபெயர்ப்பு. அப்பாவை கட்சித் தலைமை கேட்க மொழிபெயர்த்துக் கொடுத்து கையில் காசு வராமல் அலைய வைத்த புத்தகம் அது. நூறு காப்பி தருகிறேன், விற்றுக் காசு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கடைசியாக வந்தார்கள். அப்பா ரொம்ப யோசித்து ஒரு வழியாகத் தாதர் பிளாட்பாரத்தில் வைத்துக் கூவி விற்கத் தீர்மானித்தபோது கட்சியில் இருந்து ஸ்டாண்டர்ட் காரில் வந்து ஒரு கவரில், என்ன கணக்கோ, முன்னூற்றுப் பதினேழு ரூபாய் கொடுத்து விட்டு வவுச்சரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, சமாதானமாக இருக்கச் சொல்லிப் போனார்கள். அம்மாவுக்கு மருந்து வாங்கியது போக வீட்டுக்கு ஒரு சீப்பு வாழைப் பழம் வாங்க மராட்டி பேசிய மா ஸ்ட்ஸே துங் வழி வகுத்தார் அப்போது.

லெனின் என்ன பேசினார் என்று ஒரு பெரிய புத்தகம். அவர் பேச நினைத்ததாக மற்ற ஆட்கள் நினைத்ததும் கூட்டிச் சேர்த்தோ என்னமோ ஆயிரம் பக்கம் இருக்கும் அது. மராத்தியில் மொழி மாறிய லெனின் பேச்சு இருபது காப்பி லாஃப்டில் இருந்தது. காகிதம் மக்கிப் போய் ஆனால் ஒரு தடவை கூட யாரும் கையாளாமல் புழுதியில் புதுக்கருக்கு அழிந்தும் அழியாமலும் கிடந்தது. அந்தக் காகிதப் பொதியில் சொல்லத் தகும் நிலையில் இருந்த கடைசி ஆறு காப்பிகளைப் பக்கத்தில் தனியாக எடுத்து வைத்தான் திலீப். மார்க்ஸ், எங்கேல்ஸ், ஹோ சி மின் என்று மற்றத் தலைவர்களும், சோவியத் படைப்பாளிகளும் இப்படிக் காகித நிலையைக் கருத்தில் கொண்டு, எந்தப் பட்டியலில் போக வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டார்கள். கரையானுக்கு ஆட்பட்டவர்கள் தெருக்கோடி குப்பைத் தொட்டிக்கு, ஒரு சல்யூட் அடித்து திலீப்பால் அனுப்பப் பட்டார்கள். மற்றவர்கள் இரண்டு பெரிய மூட்டையாக மெரின் லைன்ஸ் புத்தகக் கடை இருக்கும் பிளாட்பாரத்தில் குடியேறி அவர்களின் ஆசிர்வாதப் பணமாக இருநூற்றுப் பதினைந்து ரூபாய் திலீபுக்குச் சம்பாதித்துக் கொடுத்தார்கள். அம்மா ஆஸ்பத்திரி விட்டு டாக்ஸியில் சாலுக்கு வந்து இறங்க அவர்கள் அளித்த ஆதரவு மகத்தானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன