The lion is awake சிங்கமும் குழகரும்

திருப்பாவை – 23, 24

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். 23

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய். 24
//
திருப்பள்ளி எழுச்சி – 3, 4

கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு.
தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்;
துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
//

திருப்பாவை 23

1) மழைக்காலத்தில் நெடுந்துயில் கொண்ட சிங்கம் எழுவதைச் சொல்லோவியம் ஆக்கிய ஆண்டாளின் தமிழுக்கும் அதன் பின் அவள் பக்திக்கும் தலை வணங்குவோம்.

வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து, முழங்கிப் புறப்பட்டு – சோம்பல் முறிக்கும் சிங்கத்தோடு மொழியும் வளைந்து நெளிந்து நேராகி முழங்கி நிற்கிறது.

//வேர்மயிர் பொங்க – சிங்கத்தின் ஸடைகளில் ஜாதிக்கு ஏற்றதொரு பரிமளமுண்டாதல் அறிக. கிடந்துறங்கும்போது உளைமயிர்கள் நெருக்குண்டு அமுங்கிக் கிடக்குமாதலால், உணர்ந்த வுடனே அவற்றை மலரச் செய்வது சாதியல்பு. அங்ஙனமவற்றை மலரச்செய்வதற்காக, எப்பாடும் போந்து உதறும். எப்பாடும் – எல்லாப் பக்கங்களிலும் என்றபடி. பேர்ந்து – பெயர்ந்து என்றவாறு. பெயர்தல் – அசைதல். மூரி என்று – சோம்பலுக்குப் பெயர்’ “மூரி நிமிர்ந்து” என்றது – சோம்பல் தீரும்படி நிமிர்ந்து என்றபடி.
// பிரதிவாதி பயங்கரர் உரை
2) அறிவுற்று சொல்லுக்கு இங்கே பொருள் கிடைத்தது.
// அடியோடு அறிவில்லாததொரு வஸ்துவுக்கு அறிவு குடிபுகுந்தமை தோன்றும்’ சிங்கம் பேடையைக் கட்டிக்கொண்டு கிடந்துறங்கும்போது அறிவிழந்திருக்கும். கண்ணபிரானும் அடியார் காரியத்தைச் செய்ய நினைத்து உணர்வதற்கு முன்னர் அறிவற்றதொரு பொருளாகவேயன்றோ எண்ணப் படுவன்.// நன்றி பிரதிவாதி பயங்கரர் உரை http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=766

3) அறிவுற்று, தீவிழித்து என்று வரிசையாக வரும் ஒன்பது வினைச் சொற்களும் நவ நரசிம்மர்களுக்கு – ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒன்றென- ஆனது சிறப்பு என்றார் ஆழ்ந்த வைணவ அறிவு கொண்ட என் நண்பர் ராம்குமார் நாராயணன். அகோபில மடத்து அன்பர். தென்கலையின் ஆழ்வார் தமிழ்த் திருவமுதும் வடகலை ஏத்தும் சுவாமி வேதாந்த தேசிகனின் வடமொழி, தமிழ் அழகும் உணர்ந்து துய்க்கும் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

திருப்பாவை 24

1) வேல் கையில் பிடித்த திருமாலை இங்கே சந்திக்கிறோம். ஆயர் கையில் வேல் பற்றி சங்க இலக்கிய வரிகள் கிட்டும்.

2) ராமாவதாரமும், வாமனனும் முழுவதாகச் சித்தரிக்கப்படும்போது, மகாபாரதத்துக்கு முற்பட்ட கிருஷ்ணாவதாரமே திரும்பவும் கொண்டாடப் படுகிறது.

3) ‘“அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி, வேல்போற்றி!” என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரஸமிருக்கிறபடி…(வேல்போற்றி.) வெறுங்கையைக் கண்டாலும் போற்றி! என்னுமவர்கள், வேல்பிடித்த அழகைக் கண்டால் போற்றி! என்னாதொழிவாரோ? – பிரதிவாதி பயங்கரர்

4)இன்று+யாம் =இன்றியாம்; இன்றுயாம் இல்லையாம். நன்னூல் சூத்திரத்தைச் சான்று காட்டுகிறார் உரையாசிரியர். ’யவ்வரின் இய்யாம்’ – இரண்டாம் சொல் யவில் தொடங்கினால், புணர்ச்சிவிதிப்படி இகரமாக்கி விடுமாம். யாம் எமக்கு அந்நியமாகிப் போனதால் இந்த சூத்திரத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லைதான்.

திருப்பள்ளி எழுச்சி 3

உரை – பதப்பொருள் : தேவ – தேவனே, திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே, யாவரும் அறிவு அரியாய் – யாவராலும் அறிதற்கு அரியவனே, எமக்கு எளியாய் – எங்களுக்கு எளியவனே, எம் பெருமான் – எம் தலைவனே, பூங்குயில் கூவின – அழகிய குயில்கள் கூவின, கோழி கூவின – கோழிகள் கூவின, குருகுகள் இயம்பின – பறவைகள் ஒலித்தன, சங்கம் இயம்பின – சங்குகள் முழங்கின, தாரகை ஒளி ஓவின – நட்சத்திரங்களின் ஒளி மழுங்கின, உதயத்து ஒளி ஒருப்படுகின்றது – உதயகாலத்து வெளிச்சம் தோன்றுகிறது, நமக்கு – எமக்கு, விருப்பொடு – அன்புடன், நல் – சிறந்த, செறிகழ – நெருங்கிய வீரக்கழலையணிந்த, தாள் இணை காட்டாய் – திருவடிகள் இரண்டனையும் காட்டுவாயாக, பள்ளி எழுந்தருளாய் – பள்ளியெழுந்தருள்வாயாக.// நன்றி tamilvu

திருப்பள்ளி எழுச்சி 4

1) உரை – பதப்பொருள் : திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே, என்னையும் – அடியேனையும், ஆண்டுகொண்டு – அடிமை கொண்டு, இன் அருள் புரியும் – இனிய அருளைச் செய்கின்ற, எப்பெருமான் – எம் தலைவனே, இன் இசை – இனிய ஓசையையுடைய, வீணையர் யாழினர் – வீணையையுடையவரும் யாழினையுடையவரும், ஒருபால் – ஒரு பக்கத்தில் (உள்ளார்), இருக்கொடு தோத்திரம் இயம்பினர் – வேதங்களோடு தோத்திரங்களைச் சொல்லுவோர், ஒருபால் – ஒரு பக்கத்தில் (உள்ளார்), துன்னிய – நெருங்கிய, பிணைமலர் – தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய, கையினர் – கையையுடையவர், ஒருபால் – ஒரு பக்கத்தில் (உள்ளார்), தொழுகையர் – வணங்குதலையுடையவரும், அழுகையர் – அழுகையையுடையவரும், துவள்கையர் – துவளுதலையுடையவரும், ஒருபால் – ஒரு பக்கத்தில் (உள்ளார்), சென்னியில் – தலையின்மீது, அஞ்சலி கூப்பினர் ஒருபால் – இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் (உள்ளார்), அவர்களுக்கொல்லாம் அருள் புரிய, பள்ளி எழுந்தருளாய் – பள்ளி எழுந்தருள்வாயாக.// நன்றி tamilvu

2) மாலையில் தான் எத்தனை வகை. பழந்தமிழில் அந்தப் பூச்சரத்தை அனுபவித்து அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

துன்னிய பிணைமலர்’ என்றது, நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மாலை வகை என்றபடியாம். ‘பழக மாமலர் பறித்திண்டை கொண்டிறைஞ்சுவார்பாற் செறிந்த, குழகனார்’ என்ற திருஞானசம்பந்தர் வாக்கினால் இண்டை, கண்ணி முதலிய மாலை வகையினைக் கொண்டு வழிபடுவார்.

மழைக்காலத்து சிங்கத்தில் இருந்து கோடிக்கரை குழகருக்கு வந்து விட்டோம். பூங்குழலியோடு பொன்னியின் செல்வன் அடுத்து மனதை நிறைக்கும் முன் நிறைவு செய்வோம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன