The fan and the mirrorஉக்கமும் தட்டொளியும்


திருப்பாவை – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். 20
திருவெம்பாவை -20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். 20

//

1)திருவெம்பாவை – இங்கு முடிவடைகிறது. சைவத்தில் இருபது நாள் தான் பாவை நோன்பு. வைணவம் மார்கழி முழுவதும் தொடரும். திருவண்ணாமலை ஈசனைத் திருவெம்பாவையில் விளித்துப் நெக்குருகப் பாடிய மணிவாசகர் ஆனந்தக் களிப்பே பிரதானமாகப் பாடியவை பத்து திருப்பள்ளியெழுச்சி பாடல்கள். திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானை இப்பாடல்களில் எழுப்புகிறார். திருவெம்பாவையைத் தொடர்ந்து இந்தப் பத்தையும் ஓதுவது சிவநெறி.

இந்தப் பாடல் பற்றி தமிழ் வெர்ச்சுவல் பல்கலை உரையிலிருந்து –

//முதற்பாட்டில், இறைவன் தனக்கு முதலும் முடிவும் இல்லாதவன் என்று கூறினார். இப்பாடலில், இறைவன் உலகத்துக்கு முதலாகவும் முடிவாகவும் இருக்கிறான் என்றனர். இதனால், தனக்கு ஒரு முதலும் முடிவும் இல்லாதவனே உலகுக்கு முதலும் முடிவும் செய்ய முடியும் என்பது விளங்குகிறது. ‘தோற்றமாம் பொற்பாதம்’ என்பது முதலாக இறைவனது ஐந்தொழில்களும் கூறப்பட்டன. ‘காணாத’ என்பது இறைவனது மறைத்தல் தொழிலைப் புலப்படுத்தியது. புண்டரிகம் உருவகமாய்த் திருவடியை உணர்த்திற்று. இறுதியிலுள்ள ‘போற்றி’ எச்சம். இது, பெண்கள், மார்கழி நீராட்டின் பெருமை கூறியபடியாம்.

‘ஆற்றுநீர், குளத்து நீர்’ என இடம் பற்றி வழங்குதல் போல, ‘மார்கழி நீர்’ எனக் காலம்பற்றி வழங்கப்படும். இனி, ‘மார்கழியில் நீராடுக’ என்றும் பொருள் கூறலாம்.
//
நன்றி http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=116&pno=274

2) திருப்பாவை ‘உக்கமும் தட்டொளியும்’ இங்கே உக்கம் என்பது விசிறி. தட்டொளி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி. ஏழாம் நூற்றாண்டில் (மொஹஞசதாரோ நாகரிக காலத்தில் இருந்து) நம்மிடையே இருப்பது இந்த முகம் பார்க்கும் கண்ணாடி. இது உலோகத்தை மெருகேற்றி (polish) உண்டாக்குவது. இன்றும் கேரளத்தில் ஆரன்முள கண்ணாடி பிரசித்தம். இதே படிதான் உலோகத்தால் செய்யப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டு தமிழ்ப் பழக்கம் இன்னும் அங்கே தொடர்கிறது. எட்டு மங்கலச் சின்னங்களில் (‘அஷ்ட மாங்கல்யம்’) இந்த ஆரன்முள கண்ணாடியும் ஒன்று.

சரி, நோம்பு நூற்கும் பெண்கள் விசிறி, கண்ணாடி இந்த இரண்டை மட்டும் கேட்கிறார்களே? காரணம் என்னவாக இருக்கும்? பாவை நோம்பு எப்படி நோற்பது என்பது குறித்த விரிவான விளக்கம் கிடைத்தாலே இதற்கு விடை கிடைக்கும்.

இந்தப் பாவைப் பாடலுக்கு சுவாரசியமான மணிப்பிரவாள உரை – பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் சுவாமிகள் எழுதியது
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=761&ml=1

One comment on “The fan and the mirrorஉக்கமும் தட்டொளியும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன