தினை அல்லது சஞ்சீவனி – ஆழிப் பேரலை அடித்துப் போன பெருவெளியில் மூலிகை தேடும் படலம்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து


மருத்துவர் பகடு பூட்டிய ரதம் செலுத்தி, என்றால், எருது பூட்டிய வில்வண்டி ஏறி புறநகர் வந்து சேர்ந்தபோது குற்றுச் செடிகள் முளைத்த தரிசு முழுக்கக் குதங்கள் உயர்ந்திருக்கக் கண்டாரேயன்றி மூலிகை ஏதும் முளைத்திருக்கப் பார்த்திருந்தாரில்லை.

ஆயுள் நீட்டிக்கும் மருந்து உண்டாக்கத் தேவையான ஐந்து மூலிகைகளில் இரண்டு, மழை பெய்த ராத்திரிகளில் மலர்ந்து விடியலில் உதிர்ந்து போகும் வகையானவை. மீதி மூன்றில் இரண்டு, சகஜமாகக் கிட்டும் நாயுருவியும் நெல்பரணியும். ஏகமாகக் கிடைக்கும், தேடிப் போகும்போது தான் காணாமல் போகும்.

அப்புறம் அந்த ஐந்தாவது மூலிகை, அதன் பெயரைக்கூட சத்தம் போட்டுச் சொல்லக் கூடாது. அபூர்வமான மூலிகை அது. எவ்வளவு அபூர்வம் என்றால் ஐநூறு வருடத்துக்கு ஒரு முறை தான் பூப்பூத்து முளைவிடும்.

ஆக அந்த ஐநூறு வருடக் குறிஞ்சி பூத்து இலைவிட்டுச் செழிக்கும் காலத்தில் தான் ஆயுள் நீட்டிக்கும் மருந்து காய்ச்சப்படும். எல்லாமே விரைவாக நடந்து விட வேண்டியது. இல்லையோ, குட்டிச்சுவராகப் போய்விடும் எடுத்த முயற்சி எல்லாம்.

இன்னொன்று அந்த ஐநூறு வருடக் குறிஞ்சியைச் சித்திரத்தில் கூட யாரும், மருத்துவர் அடக்கம், பார்த்ததில்லை. இலை நீலம், அகலம் கையளவு, நீளம் விசும்பளவு என்று சித்தரித்த வெண்பாவில் அடையாளம் ஓரளவு தெரியும். எனில் விசும்பளவு நீளம் என்றால் ஆகாயம் வரை நீண்டிருக்குமா?

மருத்துவர் மனதில் மருகினார். அப்போது தான் நினைவு வந்தது விசும்பு தேவலோகமும் தான் என்று. வானம் பார்த்து மல்லாக்க மலர்ந்திருக்கும் மூலிகை. அந்த அடையாளம் மட்டும் போதாதே.

பின், விசும்பென்றால் இதுவும் தான். சன்னமான அழுகை. கண்ணீர் பெருக்கி சத்தமின்றி அழுவது. அந்த மூலிகை இலையைத் தொட்டால் கண்ணில் நீர் வரும்.

போதும் இந்த அடையாளங்களோடு அடையாளம் கண்டுவிடலாம். மலையடிவாரத்திலும், தேவைப்பட்டால் மலையும் ஏறி மூலிகைகளைத் தேடுவதை உடனே தொடங்கினார் மருத்துவர்.

அவருடைய தகப்பனார் பச்சையப்ப மருத்துவரும், அவருக்கு அவர் தந்தை வெள்ளைச்சாமி மருத்துவரும் சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று ஐநூறாண்டு காலங்கள், அதாவது ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக இந்த ஆயுசு நீட்டிப்பு மருந்து பயன்படுத்தவே படவில்லை.

மருந்து உருவாக்கியதே அதற்கும் ஐநூறு ஆண்டு முன்பு சரியாகச் சொன்னால் முதற்சங்க காலத்து லெமூரியா கண்டத்தைக் கடல் கொண்டு போன ஆழிப் பேரலை காலத்தில் தான்.

அதன்பின் கோகர் மலையில் உயிர்கள் இறைவன் அருள் கொண்டு மீண்டும் உயிர்த்தன. அவற்றில் மானுட ஆயுளை நீட்டிக்கும் மருந்தை இடைச்சங்க காலச் சான்றோர் உருவாக்கினர்.

அந்த நாகரிகத்தையும், கலாசாரத்தையும், மலைவாழ் உயிர்களையும் அடுத்த சுனாமி ஆழிப் பேரலை அடித்துப் போக, முதல் சங்க நகரும் பள்ளியும் கிராமமும் கடல் திருப்பித் தந்து போனது.

உயிர் நீட்டிக்கும் மருந்து இடைச்சங்க கால உருவாக்கம் என்றாலும் வாய்மொழி விவரங்கள் தவிர எழுதிய ஓலை ஏதும் இல்லை அது குறித்து. அது இப்போது கடைச்சங்க காலத்தில் இடைச்சங்க காலத்துக்கு ஐநூறு வருடம் அடுத்து வாய்மொழியாக நீலன் மருத்துவரிடம் அடைந்தது.

சாரதி, இங்கே பல தரத்தில் குதம் தானுண்டு. மூலிகை பார்க்க பின்னொரு நாள் வரலாம். இப்போது மலைநோக்கிப் பகடு செலுத்து.

மருத்துவர் ரதமேறி அமர பகடுகள் ஜல்ஜல்லெனச் சதங்கை ஒலித்து ஓடத் தொடங்கின
———————————————————–

மலைச் சுவட்டில் புதியதாகக் கொத்திய படிகள் ஏறி மருத்துவர் மலை ஏகினார். மலையோரக் குறுநிலத்தில் கொடுந்தமிழ் உரைவீச்சு நடத்துவோர் மலை சவிட்டி எனக் கூறும் வழக்கம் ஓர்த்தார் எனில் நினைவு கூர்ந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன