விடிவதற்கு வெகு முன்பே அவர்கள் புறப்பட்டார்கள். ஆடிஆடிப் போன காளை வண்டி

மனை                        பகுதி 8

 

நடு இரவிலும் உறங்காத மனை.

 

மற்ற மனைக்காரர்கள் எல்லாம் வந்து பேசியபடி இருக்க, கார்த்தியாயினியின் உடலைப் பழந்துணியால் மூடி இருந்தது. குழந்தை நந்தினி அழுதழுது பகவதியின் மடியில் உறங்கிப் போயிருக்க, சித்ரனுக்காகக் காத்திருந்த பகவதி.

 

குரல்கள்..அடங்கி ஒலிக்கிற குரல்கள்.

 

‘புழைக்கு அப்புறத்து மாப்ளாமாரைக் கூப்பிட்டால் அப்புறப்படுத்தி விடலாம்’.

 

‘உள்ளூர்க்காரர்களே போதும்’.

 

‘வேண்டாம்… சமயம் கிடைக்கும் போது சொல்லிக் காண்பிப்பார்கள்’.

 

‘ஏதேது.. சம்பந்தம் வைத்துக் கொள்வது கூட உஷாராகச் செய்ய வேண்டிய காரியம் போலிருக்கே..  பீடைக்கும் எள்ளும் தண்ணீரும் இரைத்தாகணுமோ’.

 

‘நீலகண்டன் இப்போது சுதாரித்துக் கொண்டு விட்டான். படியிறங்காமலேயே ரெட்டைப் பப்படமும் பிரதமனுமாக நினைத்த போதெல்லாம் விருந்துதான்’.

 

‘நீரும் தான் கதகளி ஒப்பனைப் பெட்டி வாங்கி வைத்துக் கொண்டு காத்திருக்கிறீர்.. என்ன பிரயோஜனம்? நீரே போய் ஆடினால் தான் உண்டு’.

 

ஒரே நேரத்தில் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து, சூழ்நிலை உறைக்க, அங்கே சங்கடமான மௌனம் நிலவியது.

 

தூரத்தில் கொளுத்திப் பிடித்த திரிகள் தெரிந்தன. யாரோ கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

யார்? கள்ளிக்கோட்டை சாமுத்ரிக்குத் தகவல் போய், என்ன விஷயம் என்று விசாரிக்க ராஜ சேவகர்கள் வருகிறார்களா?

 

வந்தால் என்ன? நம்பூதிரிகளின் பேச்சை மீறி சாமுத்ரி என்ன செய்ய முடியும்?

 

இல்லை.. இது ராஜசேவகர்கள் இல்லை. முன்னால் மூலிகை சஞ்சியோடு வருவது சித்ரன் நம்பூதிரி. கொஞ்சம் பின்னால் கதகளி குஞ்ஞுண்ணி. நாணிக் குட்டியின் கணவன். தீ ஜுவாலையில் அவன் முகத்தில் கள் மயக்கம் இல்லை..

 

குஞ்ஞுண்ணி பின்னால்… குஞ்ஞுண்ணியோடு, உழைத்துக் கருத்த உடல்களோடு வரிசையாக..

 

மூத்த நம்பூதிரி திருப்தியாகச் சிரித்தார்.

 

‘நல்லதாகப்  போனது.. சித்ரன் விஷயம் தெரிந்து ஆள் படையோடு வந்து விட்டான்.. என்ன இருந்தாலும் மனையின் மானப் பிரச்சனை இல்லையா.. அனாதைச் சவத்தோடு எத்தனை மணி நேரம் காத்துக் கிடப்பது .. ராத்திரி சாப்பிட முடியாமல் போனது. இதெல்லாம் விலகிக் காலையில் சேர்த்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம். அப்புறம் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். துர்மரணம். மனைக்குப் பாவம் பிடிக்காமல் தடுத்து நிறுத்த ஒரு யாகம் கூட வேண்டியது தான்.

 

‘குஞ்ஞுண்ணி.. இந்தத் தென்னோலையை முடை.. கண்ணாரா.. மற்றதை சித்தம் பண்ணு..’

 

சித்ரன் பரபரப்பாகக் கட்டளை பிறப்பித்தபடி வந்தான்.

 

‘சித்ரா..’

 

மூத்த நம்பூதிரி அவனருகில் வந்து குரல் தாழ்த்தினார்.

 

‘இந்த சவத்துக்குப் பிறந்ததும் உள்ளே தான் பழியாகக் கிடக்கிறது. உன் வீட்டுக்காரி அதற்குப் பாலும் நெய்யும் ஊட்டி உறஙக வைத்துக் கொண்டிருக்கிறாள், உறங்கட்டும். அப்படியே.. சரி, வேண்டாம்.. சிசு ஹத்தி.. அந்தக் குட்டிப் பிசாசை மெல்ல அப்புறப்படுத்திப் புழையின் அக்கரையில்

கண்காணாத இடத்தில் போட்டு விடச் சொல்லு. பிழைத்துப் போகட்டும்..’

 

சித்ரன் நிமிர்ந்து பார்க்க, பகவதியும் வாசலில் வந்து நின்றாள்.

 

‘என் அண்ணியின் சவ சம்ஸ்காரம் முடியட்டும். என் குழந்தையை என்ன செய்ய வேணும் என்று நானும் என் மனைவியும் அப்புறம் முடிவு செய்வோம்’.

 

கம்பீரமாக ஊரே கேட்க உயர்ந்தது சித்ரன் குரல்.

 

பகவதிக்குப் புல்லரித்தது. கண்கலங்கி, உதடுகள் துடித்தன.

 

யட்சி.. அடி யட்சி.. எங்கேயாவது பக்கத்தில் இருக்கிறாயா? இதையெல்லாம் பார்க்கிறாயா? எனக்கு ஒரு துன்பமுமில்ல்லை. மனுஷ இனத்துப் பெண்ணானாலும் நான் துன்பப்பட மாட்டேன். நான் ஒரு திருமேனியை வேளி கழிக்கவில்லை. ஒரு மனிதனைக் கைப்பிடித்திருக்கிறேன். ரத்தமும், சதையும், பண்பும், பாசமும் இழைந்து சேர்ந்த ஒரு மனிதனை.

 

‘என்னடா வேதாளம் வேஷ்டியோடு வந்ததே என்று பார்த்தேன். உன் கோணல் புத்தி உன்னை விட்டுப் போகுமா,, இந்த அனாதைச் சவம் உனக்கு அண்ணியா? வேதம் உருவிட்ட உன் நாக்கில் சனிதான் புகுந்திருக்கிறது. சனி நாக்கில் இல்லை. உன் கையைப் பிடித்துக் கொண்டு வந்து குடும்பம் நடத்துகிறது. கலி. கலிதான். சம்சயமில்லை’.

 

மூத்த நம்பூதிரியின் குரல் உணர்ச்சிவசப்பட்டு பிசிறடித்தது.

 

’கலி தான். நிச்சயம் இது கலிகாலம் தான். இந்தக் கலி முற்றும்போது நீங்கள், யாரோ உழைத்துக் கொட்ட உட்கார்ந்து சாப்பிட முடியாது. நாலும் ஐந்தும் கல்யாணம் செய்து அறியாப் பெண்களை எச்சிலுக்காகச் சண்டை போட வைத்து ரசிக்க முடியாது. பந்தம் புலர்த்துகிறேன் என்று தரவாடுகளில் படுத்து எழுந்து உடுத்த வேட்டியில் மண்ணையும் கூடப் படுத்த பெண்ணையும் சேர்த்து உதறிவிட்டு வர முடியாது. கீழ்ச்சாதி என்று ஒதுக்கி நிறுத்தி, மார்புத் துணியை விலக்கி மரியாதை செய்ய வைத்து ரசிக்க முடியாது. கலி முற்றத்தான் போகிறாது. அப்புறம் மனுஷன் மனுஷனை மதிக்க வேண்டியிருக்கும். தெய்வங்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை.’

 

‘சகோதரத் துரோகி. நீ முதலில் வெளியேறி ஒழி. இன்னும் ஒரு வேளை நீ இங்கே தங்கினால் நான் வெளியே போய் விடுவேன்..’

 

குரல் நடுங்க உள்ளே நடந்து போனார் மூத்த நம்பூதிரி.

 

‘எல்லாம் தயார்’.

 

‘நீலகண்டா.. வா.. அக்னியைக் கையில் வாங்கு. கொலைகாரா..மகாபாவி..வா வெளியே..’

 

சித்ரன் உள்ளே பார்த்துக் கூப்பிட்டான்.

 

நீலகண்டன் வரவேயில்லை.

 

கொளுத்திய பந்தங்கள் உயர்த்திப் பிடித்து வயல் வரப்புகளின் ஊடே அந்த ஊர்வலம் மெல்ல நடந்தது.

 

சித்ரன் அக்னியோடு முன்னால் நடந்தான்.

 

 

 

மனை             பகுதி   9

 

விடிய ஒரு நாழிகைக்கு முன்னரே அவர்கள் புறப்பட்டார்கள்.

 

பகவதி குழந்தையைத் தோளில் சுமந்து வந்தாள்.

 

இருளில் மூழ்கிக் கிடக்கிற மனை. வாசலில் ஒரு கணம் நின்றாள்.

 

‘யட்சி.. அடி யட்சி.. இருக்கிறாயா?’

 

‘பேதைப் பெண்ணே. நான் உன் மனதில் கலந்து கரைந்து அடித்தளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறேன். நீ சந்தோஷமாக இருக்கிற கணங்களில் எல்லாம் நான் இறங்கி வருவேன்.  இடவப்பாதி மழையின் சரங்களில் ஏறி இறங்கி, சாரலில் சிதறிச் சிரிப்பேன். நந்தினியின் சிரிப்பில் எதிரொலிப்பேன். விடியலில் நீ குளித்து உடலும் மனமும் குளிர்ந்து வரும்போது காதில் ரகசியம் பேசுவேன். நீயும் சித்ரனும் திருவனந்தபுரத்தில் தொடங்கப் போகிற வாழ்க்கையும், மேம்படும். காலம் காலமாகப் புகழ் பரவும். விரைவிலேயே எல்லாம் மாறும் இங்கே. எல்லாம் பொய்யாக, பழங்கதையாக.. எல்லாம் மாறும். தெய்வம் நின்று கொல்லும். பெண்கொலை புரிந்த பாவிகளை.’

 

‘பகவதி, என்ன நின்று விட்டாய்? சீக்கிரம் வா.. நாணிக்குட்டியும் குஞ்ஞுண்ணியும் காத்திருப்பார்கள்’.

 

‘அவர்களும் நம்மோடு வருகிறார்களா?’

 

காளை வண்டி புறப்பட்டது.

 

‘ஆமாம். நீலகண்டனின் பாவச் சுமை குறையட்டும். ஒரு நல்ல கதகளி ஆட்டக்காரன் திரும்ப அரங்கேறட்டும்.’

 

‘எல்லாம்… இதெல்லாம்..’

 

‘நடக்கும்.. நிச்சயமாக நடக்கும்..இல்லையா, நந்தினி?’

 

குழந்தை தூக்கத்தில் சிரிக்க, வண்டி நகர்ந்தது.

 

(நிறைவு)


பின்கதை இழை – சித்ரன் நிறுவிய ஆயுர்வேத மருத்துவ மனை கேரளத்தில் மிகப் பிரபலமானதாகவும் அவருக்குப் பிறகு அவருடைய மகள் நந்தினி தம்ப்ராட்டி அந்த மனையை இன்னும் பிரபலமாக்கியதாகவும் கேள்வி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன