பாரதியாரும் ராய்ட்டர் செய்தியாக ருஷ்யப் புரட்சியும்

ருஷியாவிலே  ராஜாங்கப்  புரட்சி

என் ராயர் காப்பி கிளப் கட்டுரைத் தொகுதியில் இருந்து

ருஷிய – ஜப்பானிய யுத்தத்தின் ஆரம்ப முதலாகவே ருஷியாவில் உள்நாட்டுக்  குழப்பங்கள் தொடங்கி விட்டன. அது முதல் ராஜாங்கப் புரட்சிக் கட்சியாருக்கு  நாள்தோறும் பலமதிகரித்துக் கொண்டு வருகிறது.

அப்பால், மேற்படி யுத்தத்திலே ருஷியா தோற்றுப் போய்விட்ட பிறகு ருஷிய ராஜ  விரோதிகள் துணிவு மிகுந்தவர்களாகி, வெட்ட வெளியாகக் கலகம் செய்யத்   தொடங்கி விட்டார்கள். இதுவரை பெருங் கலகங்களும், சிறு குழப்பங்களுமாக  எத்தனையோ நடந்தன. அதிலெல்லாம் ராஜாங்கத்தாரே வெற்றியடைந்து  வந்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு தடவைக்கப்பாலும் ராஜ விரோதிகளுக்கு  வல்லமை மிகுதி உண்டாய் வருகிறது.

இப்போது மறுபடியும் பெருங் கலகம் தொடங்கிவிட்டது. ருஷிய  சக்கரவர்த்தியின்  சிங்காதனம் இதுவரை எந்தக் காலத்திலும் ஆடாதவாறு அத்தனை பலமாக இருக்க,  இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. பிரதம மந்திரியின் வீட்டு விருந்தின்போது  வெடிகுண்டெறியப்பட்டது, சைநியத் தலைவர்கள் கொலையுண்டாவதும், ராஜ  விரோதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் பிரசுரிப்பதும், எங்கே பார்த்தாலும்  தொழில்கள் நிறுத்தப்படுவதும், துருப்புகளுக்கும், ஜனங்களுக்கும் சண்டை  நடப்பதும், துருப்புகளிலே ராஜாங்கத்துக்கு விரோதமாகக் கலகமெழுப்புவதும்,  நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்வதும் ஆகிய கொடூர விஷயங்களைப்  பற்றித் தந்திகள் வந்தவண்ணமாகவே யிருக்கின்றன.

ராய்டர் தந்திகள் மொழிபெயர்ப்பை மற்றொரு பக்கத்திலே பதிப்பித்திருக்கிறோம்.  அதிலே விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். சுயாதீனத்தின் பொருட்டும்,  கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும், நமது ருஷியத் தோழர்கள் செய்து வரும்  உத்தமமான முயற்சிகளின்மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக!

(‘இந்தியா’ – 1.9.1906 – சுப்பிரமணிய பாரதியார்)

நான் தொடர்வது

1) காம்ரேட் என்பதற்கு ஒப்பான தமிழ்ச் சொல்லான ‘தோழர்’ என்பதை முதலில்  பயன்படுத்தியவர் தோழர் பாரதியாக இருக்கலாம். ருஷ்யப் புரட்சியை  யுகப்புரட்சியாகக் கண்ட அவர் கதைகளிலும் விளாதிமிர் இலியிச் லெனின் கடந்து  வருவதைக் காணலாம்.

2) கடந்து போன நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டுச் செய்திகள் ராய்ட்டர்  செய்தி நிறுவனம் அனுப்பும் தந்திகள் மூலமே பெரும்பாலும் இந்தியப் பத்திரிகைகளை வந்தடைந்திருக்கின்றன.  தந்தி என்பதால் சுருக்கமாகவே  இருக்கும் என்பதால், பத்திரிகை ஆசிரியர்களும் துணை ஆசிரியர்களும்  தாங்களாகவே வளர்த்துக் கொண்ட கடந்த, நிகழ்கால வரலாறு, புவியியல், அரசியல்  அறிவு சார்ந்தே அச் செய்திகளை விரித்து எழுத வேண்டிய கட்டாயம்.

எல்லாவற்ற்கும் மேல் ‘நியூஸ் சென்ஸ்’ என்ற, முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைத்  தகவல் குப்பையிலிருந்து பிரித்தறிந்து வெளியிட வேண்டிய அவசியமும் இப்போது  போலவே அன்றும் உண்டு. பாரதி என்ற மகாகவிஞன், எப்படி ஒரு தலை சிறந்த பத்திரிகையாளனாகவும் இருந்தான் என்பதை என்பதை இந்தியா பத்திரிகை வழங்கிய செய்திகளே சொல்லும்.

3) ராய்ட்டர் நிறுவனம் 1851-ல் லண்டனுக்கும் பாரீஸ¤க்கும் இடையே பங்குச்  சந்தை விலை விவரங்களைத் தந்தி மூலம் செய்தியாக அனுப்புவதற்காகத்  தொடங்கப்பட்டது. அதற்கு இரண்டு வருடம் முன்னாலேயே அது பங்குச் சந்தை  விலைவிவரங்களைச் செய்திகளாக அனுப்பத் தொடங்கியிருந்தது – புறாக்காலில்  கட்டி!

விவரங்களுக்கு : ராய்ட்டர் நிறுவனத்தின் இணையத் தளம்

http://about.reuters.com/aboutus/history/

4) இந்தியாவில் முதல் இந்திய விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த காலத்தை (1857)  அடுத்துப் புகைவண்டியும், தந்தியும் வந்ததாக வரலாறு சொல்கிறது.  தந்தி தமிழகத்தில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை.

ரயில் தமிழகத்தில் இன்னும் இருபது வருடம் கழித்தே வந்தது என்று தெரிகிறது –

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் ‘என் சரித்திரம்’ நூலில் தான் 1878ஆம் ஆண்டு  மேற்கொண்ட ஒரு புகைவண்டிப் பயணம் பற்றிக் குறிப்பிடுவது  :

“பகல் பனிரெண்டு மணிக்கு (திருவாவடுதுறையில் இருந்து சிதம்பரத்துக்கு) ரெயில்  வண்டியிலேறிச் சென்றோம்.  ரெயில் வண்டி புதிதாக வந்த காலமாதலின் அதில்  ஏறிச் செல்வது விநோதமாக இருந்தது. அதிகக் கூட்டமே இராது. வண்டிக்கு  இரண்டு பேர்களுக்கு மேல் இருப்பது அருமை. நாங்கள் சிறிது நேரம் எங்கள்  இஷ்டம் போல் தனித்தனி வண்டிகளில் ஏறிச் சிரம பரிகாரம் செய்துகொண்டோம்.

பிறகு ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம். யாவரும்  ஒன்றாகப் படித்தவர்களாதலால்  வேடிக்கையாகப் பல விஷயங்களைப் பற்றிப்  பேசினோம்.  ரெயில் வண்டியில் பிரயாணம் செய்வதைப் பற்றி ஒவ்வொருவரும்  ஒவ்வொரு பாடல் செய்ய வேண்டுமென்று செய்யத் தொடங்கினோம். எல்லோரும்  செய்யுள் இயற்றத் தெரிந்தவர்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை  வைத்துப் பாடல் இயற்றிச் சொன்னார்கள். ஒரே பொருளைப் பற்றிப் பலவகையான   கருத்துக்களமைந்த பாடல்களாதனின் அவை ரஸமாக இருந்தன. நான் இரண்டு  மூன்று செய்யுட்களை இயற்றிச் சொன்னேன். அவற்றில் ஒரு வெண்பாவின் முற்பகுதி  மாத்திரம் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது.

“உண்ணலாம் தூசும் உடுக்கலாம் நித்திரையும்

பண்ணலாம் நூல்கள் படிக்கலாம்….”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன