காராபூந்தி வந்த இலக்கியக் கூட்டம்

இது 15 வருடம் முன் நடந்தது. என் ‘ராயர் காப்பி கிளப்’ கட்டுரைத் தொகுதியில் இடம் பெற்ற கட்டுரை.

காராபூந்தி வந்த இலக்கியக் கூட்டம்

 

சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.

இங்கே எழுத வந்தது ஒரு அவஸ்தையைப் பற்றி.

வெங்கடசாமிநாதன் பேச வந்தார். க.நா.சு, அமிதாப்பச்சன், ஜோதிபாசு, மிதுன் சக்கரவர்த்தி, வண்ணநிலவன், சிமெண்ட் டால்மியா, சோ என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோதே லேசாகத் தொடங்கியது. (இவர்கள் எல்லாம் எப்படி ஒரே கோட்டில் வருகிறார்கள் என்று எல்லோரும் ஒரு வாரம் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் சொல்கிறேன்).

எழுத்தாளர் ஐராவதம் பேசும்போது சுத்தமாக ஒன்றுமே கேட்காமல் போனது. நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்டெல்லா புரூஸையும் ஞானக்கூத்தனையும் பார்க்க அவர்களும் சங்கடத்தோடு என்னைப் பார்த்தார்கள். அவ்வளவுதான் அவர்களால் செய்யமுடிந்தது.

மேடையில் உட்கார்ந்திருந்த  எழுத்தாளர் சி•பிடாட் காம் வெங்கடேஷ¤க்கு மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பி ‘எத்தனை பக்கம் பேசப் போகிறீர்’ என்று விசாரித்தேன். ஒன்பது பக்கம் ஏ•போர் சைசில் என்று பதில் கொடுத்தார்.

வெங்கடேஷ் பேச எழுந்து வந்தார்.

இவர் பேசுவதாவது முழுசும் காதில் விழ வேணுமே என்று எழுத்தாளர் விட்டல்ராவைத் தள்ளிக் கொண்டு நான் முன் வரிசையில் போய் உட்கார, இன்னும் பலமாகப் பின்னால் இருந்து மழைக்காலக் கடல் போல் சத்தம்.

இது பொறுப்பதில்லை என்று நண்பர் விருட்சம் அழகியசிங்கரிடமும், ழ ராஜகோபாலனிடமும் முறையிட, ஞானக்கூத்தன் பரிந்துரைக்க, அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு பின்னால் ஓடினார்கள். ஊஹூம், சத்தம் கூடியதே ஒழியக் குறைந்ததாகத் தெரியவில்லை.

வெங்கடேஷுக்குத் தொண்டுள்ளமும் அதிகம். தொண்டை வளமும் அதிகம். கொண்டு வந்த காகிதத்தை போடியத்தில் வைத்து விட்டுச் சுபாவமாகக் குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தார். இப்படிப் பேசினால்தான் எடுபடும் என்றார் விட்டல்ராவ்.

தட்டில் காராசேவையும், பிஸ்கட்டையும் வைத்துக் கொண்டு ஒருத்தர் மேடைக்கு ஓடி எல்லோருக்கும் கொடுத்து, பேசிக் கொண்டிருந்த வெங்கடேஷுக்கும் தட்டை நீட்ட, நானும் ஞா.கூ சாரும் ரசித்துச் சிரித்தோம். வெங்கடேஷுக்கும் சிரிப்பு வந்திருக்கும். அத்தனையையும் மீறி அவர் நன்றாகப் பேசினார்.

ஆனாலும் இந்த மாதிரி இலக்கிய விழாக்களில் நான் பேசுவதாக இல்லை – விழா நடந்து கொண்டிருக்கும்போதே சிற்றுண்டி வினியோகம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்று யாராவது அவசரச்சட்டம் பிறப்பிக்கும் வரை.

அதுவும் பாரதி வசித்த திருவல்லிக்கேணி வீடு போன்ற இலக்கியப் புனிதத் தலங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும்போது சாப்பாடு, சிற்றுண்டி விநியோகத்தை அறவே விட்டொழிக்க வேண்டும்.

சுற்றி நூறு வாய்கள் காராபூந்தி கொறித்துக் கொண்டு இருக்கும்போது கவிதையில் மரபுத் தொடர்ச்சி பற்றிப் பேசச் சொல்வது போல் அபத்தமான விஷயம் ஏதுமில்லை.

பிச்சமூர்த்தி புகழ் வாழ்க. கிருஷ்ணா ஸ்வீட் காராபூந்தியும் அது பாட்டுக்கு வாழ்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன