’சக்கர பொங்கலும்’ கவிமணி கவிதையும்

உச்சி வெய்யில் பட்டை உரிக்காத அபூர்வமான ஒரு மத்தியானப் பொழுதில் வடக்கு உஸ்மான் வீதிப் போக்குவரத்துக்குக் குறுக்கே நீந்திக் கடந்து போனால் இரண்டு பெயர்ப் பலகைகள் அருகருகே இருந்து வா, வா என்று காலைப் பிடித்து இழுக்கின்றன.

மோர்க்கூழும், கொழுக்கட்டையும், புளி உப்புமாவும் மணக்க மணக்க விருந்து படைக்கும் ‘சக்கரப் பொங்கல்’ உணவு விடுதி ஒரு பக்கம். பா.ராகவன் குமுதம் ஜங்ஷன் ஆசிரியராக இருந்தபோது இந்த ஓட்டலைப் பற்றி முதல் பக்கத்தில் நேர்த்தியான வாழையிலை லே-அவுட்டோடு எழுதி இப்போது அதற்கு cult status வந்து, சதா நெரியும் கூட்டம். உள்ளே போகவே முடியவில்லை.

வயிற்றுக்குணவு இல்லாதபோது படிக்கவாவது ஏதாவது வாங்கலாம் என்று அருகே உள்ள ந்யூ புக்லேண்ட்ஸில் நுழைந்தபோது சட்டென்று கண்ணில் பட்டது ‘கவிமணியின் கவிதைகள்’.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் கவிதைகள் முழுவதும்  அடங்கிய ஆய்வுப் பதிப்பு. வெளியீடு ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதின் தொடக்கத்திலும் எழுதப்பட்ட கவிதைகளைக் கொண்ட இந்தப் புத்தகம் தரும் மனநிறைவை இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின்  எந்தப் படைப்பும் தரமுடியும் என்று தோன்றவில்லை.

காகம் கரைதல் கேளீரோ?

கதவைச் சற்றே திறவீரோ?

ஆகஇரண்டு கணப்பொழுதுக்கு

அப்பால் இங்கே தங்கோமோ.

தேகம் அலுத்துச் செல்வோமோ.

சென்றால் மீண்டும் வாரோமோ.

வாகின் அமைந்த சாலைஇதன்

வாயில் காக்கும் காவலரே.

 

கவிமணியின் எளிமையும் சந்தமும் குழந்தைமையும்  கண்ணைக் குளமாக்குகின்றன. மினிமலிசம், டீகன்ற்ஸ்டர்க்ஷன், ரீடர்லி டெக்ஸ்ட், ரைட்டர்லி டெக்ஸ்ட் –   போங்கப்பா.

எத்தனை பெரியவர்கள் நம்மிடையே உலவிப் போயிருக்கிறார்கள். நாம் அவர்களைக் காலம் கடந்தாவது புரிந்து கொண்டு மதிக்கிறோமா?

இன்னும் ஒரே ஒரு பாட்டு. ஆம், பாட்டுத்தான். கீர்த்தனை. கவிமணி எழுதியது.

கதிரைக் காண்பதெப்போ?

இராகம் நாதநாமக்ரிய – தாளம் திச்ர ஏகம்

பல்லவி

களை பறிப்ப தெப்போ? – கண்ணில்

கதிரைக் காண்ப தெப்போ?

அநுபல்லவி

விளைநில முழுதும் – அடர்ந்து

மீறிமே லோங்கும்       (களைபறிப்ப)

சரணம்

உள்ள உரத்தையெல்லாம் – ஊரை

உறிஞ்சு கின்றதையோ!

கொள்ள உணவின்றிப் – பயிரும்

குறுகிப் போகுதையோ!

குறுகும் பயிரினைக் – காணில்

கும்பி எரியுதையோ!

அறு கணிந்தவனே! – சிவனே!

ஆதி பராபரனே!     (களைபறிப்ப)

(சக்கர பொங்கல் ஹோட்டலை வடக்கு உஸ்மான் வீதியில் தேட வேண்டாம். அது இழுத்து மூடப்பட்டு ஏகப்பட்ட காலம் ஆகிறது)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன