மிளகு – பெரு நாவலில் இருந்து – ஏரிக்காவலரின் விநோத அனுபவம்

நேற்று ராத்திரி நான் தான் ஏரிக்குக் காவல் சக்கரவர்த்தினியம்மா. எப்பவுமே நான் தான். என்னை ஏரிக்காவல் கந்தய்யான்னு கூப்பிடுவாங்க. நாற்பது வருஷமா காவல் இருக்கேன். ஆனா நேற்று ராத்திரி எப்படியோ அசந்துட்டேன். ஏரிக்குள்ளே எங்கே இருந்துன்னு இவங்களுக்கு தெரியாம நீர்வரத்து ஏறிட்டிருந்திருக்கு. இன்னும் அரை மணி நேரம் அப்படியே விட்டிருந்தா ஏரி உடைஞ்சிருக்கும்.

தொண்டை கமற நிறுத்தி, தொடர்கிறார் கந்தய்யா.

நடுராத்திரிக்கு பூ வாடை. கண்ணைத் திறந்தா அம்பாள்  கொண்டை போட்டு சித்தாடை கட்டிக்கிட்டு காலில் தண்டையும் போட்டு வந்து ஏரிக்கரையில் என் குடிசைக்குள்ளே நுழைஞ்சுட்டு இருக்கறாங்க. கந்தா எழுந்திருன்னு எங்கம்மா குரல்லே நாலு தடவை சொல்லி அழைக்கறாங்க. ஏதோ கனவுன்னு நான் மறுபடியும் உறங்கப் போறேன். குறிபார்க்கற குறமகள் வச்சிருக்கற பிரம்பு  கையிலே வச்சிருக்காங்க அதனாலே என் முதுகில் சுறீர்னு ரெண்டு தடவை அடிச்சு என்னை எழுப்பிட்டு உடனே வெளியே போயிடறாங்க.

அப்படியா? நான் வியப்பை குரலில் கொண்டு வந்து விசாரிக்கிறேன்.  நம்புவதாக குரலும் முகபாவமும் காட்டுவதால் என்ன குறைந்து போச்சு. அவர் பரவசத்தோடு தொடர்கிறார் –

நான் வெளியே போய் என்ன நடந்ததுன்னு தெரியாமலேயே ஏரியோட வடகிழக்கு பகுதி ஓரமாக நீருக்குள்ளே போறேன். மூச்சு பிடித்து முங்கி ஆழத்திலே கண்மறைவாக வச்சிருக்கற சக்கரத்தை வலமிருந்து இடதாக திருப்பறேன். நிலத்தடி தண்ணீர் ஊற்று நீர் ஏரியில் கசிவது நின்னுபோகுது. அதுக்குள்ளே ஏரி உடையப் போகுதுன்னு உங்களுக்கு விடிகாலையிலே சந்தேசம் அனுப்பிட்டாங்க போல் இருக்கு.

நான் கந்தய்யாவைத் தோளில் தட்டிப் பாராட்டிப் பின்னால் பார்க்க கருவூல அதிகாரி வராகன் பையை என்னிடம் தருகிறார். உள்ளே இருந்து பத்து விராகன் காசுகளை கந்தய்யாவிடம் தருகிறேன்.

பிரமாணியும் மற்றவர்களும் என்னைக் கைகூப்பி வணங்கறாங்க. அபயராணி வாழ்கன்னு காலைப் பறவைகள் பயந்து தூரமாகப் பறக்க, வாழ்த்தொலி முழக்கி டமாரங்களை அடிச்சு சங்கு முழக்கறாங்க.

நான் ஏரிக்காவல் கந்தனிடம் கேட்கறேன். நிலத்தடி தண்ணீர் எப்படி திறந்தது? சில சமயம் நீர் அழுத்தத்தாலே அந்த விசை இடம் வலமாகத் திரும்பி நீர் வரத்து தொடங்கறது நடக்கறதுதான் என்று சாதாரணமாகச் சொல்கிறார் கந்தையா.

அதை கண்டுபிடித்து தண்ணீருக்குள்ளே முங்கு நீச்சல் போட்டுப்போய் விசையை வலம் இடமாக்கி நிறுத்தற திறமையை இதுவரைக்கும் யாருக்கும் கத்துக்கொடுக்காமல் ரகசியமாக வச்சிருக்கறது தப்பு. ஊர்லே ஒரு பத்து பேருக்காவது சொல்லிக் கொடுக்கணும் என்று கட்டளை இடுகிறேன்.

எல்லோரும் அமைதியாக இருக்க, பிரதானி சொல்கிறார் –அம்மா, அவங்களுக்கு கத்துக்க ஆசைதான். ஆனால் முங்குநீச்சல் கற்றுக்கொள்ள மூச்சை அடக்க வேண்டீருக்கே. அதுக்குத்தான் பயம்.

பிரமாணி சிரிக்க, இரண்டு இளைஞர்கள் நான் வர்றேன் என்று முன்னால் வருகிறார்கள். நான் அவர்களை வரவேற்பதுடன் பிரமாணியிடம் சொல்கிறேன் – ஏதோ ஒரு காலத்தில் எதிரிகளிடமிருந்து நீர்நிலையை காப்பாத்த இப்படி விசைகளை மறைவாக வைத்திருக்காங்க. உங்களுக்கு விருப்பம் என்றால் அந்த விசையை இன்னும் அதிக உயரத்தில் தண்ணீர் மட்டத்துக்கு மேலே நிர்மாணம் செய்து இயக்கறதை எளிமைப் படுத்தலாம்.

எல்லாம் செய்து என்னை அடுத்த செவ்வாய்க்கிழமை காலையில் உள்ளாலில் சந்தித்து நிலைமை பற்றி தகவல் சொல்ல ஆணையிடறேன். மகாராணி சித்தம் என்று தலை வணங்கி நிற்கிறார்கள்.

படம் நன்றி விக்கிமீடியா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன