உடையாத பலூன் கவிதை இரா.முருகன்

உடையாத பலூன்
—————

போன வாரம், சரியாக எட்டு நாள் முன்பு
பாப்பாவுக்குப் பிறந்தநாள்
வீடு அலங்கரித்தோம்
காகிதத் தோரணம் தொங்க விட்டோம்
முகமூடி அணிந்து குழந்தைகள் ஆட
பாட்டு ஒலிபரப்பினோம்
அடுமனைக்கு தொலைபேசி
கேக்கும், சமோசாவும், சர்பத்தும்
வரவழைத்தோம் நல்ல விருந்து.

பெரிய பலூன்களை ஊதி ஊதி
குழந்தைகள் கையில் கொடுத்தோம்
கதவிலும் ஜன்னல்களிலும் ஒட்டவைத்தோம்
பாப்பா கையிலும் பலூன் பிடித்து
அங்குமிங்கும் ஓடினாள் ரம்யமாக.
எல்லா பலூனும் அப்புறம் உடைய
பாப்பா கை பலூனுக்கு ஆயுசு கெட்டி.

பிறந்தநாள் வாழ்த்து பாடியபோது
மடியில் எல்சா பொம்மையோடு
பலூனும் இருத்திக் கொண்டு
பாப்பா சிரித்தாள் மகிழ்வோடு
உடையாத பலூனில் வரைந்த முகமும்
கூடவே நகைத்தது சத்தமின்றி.

அடுத்தநாள் முன்னறையில்
தனியாக மிதந்த பலூனை
புன்சிரிப்போடு பாப்பா தொட்டாள்
எழுந்து மேலே பறந்தது
விளையாட்டென்று; பாப்பாவுக்கு
ஆன் லைன் வகுப்பு நேரமாச்சு
பலூனை ஒதுக்கி ஓடினாள்.

இரண்டு நாள் கழித்தும்
உடையாத பலூன் பெருமையோடு
பாப்பா பின்னால்
மிதந்து போனது அவள் அறியாது
தோளில் தொட்ட பலூனை போவென்று
தட்டி அகற்றினாள் ஸ்லைம் பொம்மை
செய்ய களியுருட்டிய குட்டி தேவதை.

ராத்திரியில் பாப்பா உறங்கப் போக
முகத்தில் மோதிய உடையாத பலூன்
தனக்குத் தெரிந்த கதைசொல்ல
சிரித்த முகத்தோடு மிதந்தது.
தொந்தரவு பண்ணாதே போ என்று
பாப்பா பலூனை அடித்து விரட்டினாள்.

அப்புறம் மூன்று நாளாக
எல்லோர் காலிலும் மிதிபட்டு
கழிவறைக்குள் பறந்து
உதைபட்டு வெளியே மிதந்து
எல்லாக் கதைகளோடும்
பலூன் இன்னும் உடையாமல்
மின்விசிறியில் இன்னும் மாட்டாமல்
மிதக்குது நாள் முழுதும் ராவிலும்

உபயோகம் முடிந்து
நாள்சென்ற பலூனுக்கு
உடைந்தால் நிம்மதி
சுவர்களில் கதவில்
ஜன்னலில் முட்டுது மோதுது
இன்னும் உடையவில்லை.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன