மிளகு பெருநாவலில் இருந்து – வல்லூர் ராமானுஜ கூடம் சத்திரத்தில் ஒரு காலை நேரம்

வழியில் தென்படும் முதல் சத்திரத்தில் சாரட் வண்டிகளை நிறுத்தச் சொல்கிறேன். அடுத்த பத்தாவது நிமிடம் வல்லூர் ராமானுஜ கூடம் என்று பெயர் எழுதிய வழிப்போக்கர் சத்திரத்தை அடைந்து நிற்கின்றன.

முதல் சாரட்டில் வந்த பாதுகாப்பு வீரர்கள் சாரட்டில் இருந்து கீழே இறங்கி சத்திரத்துக்குள் பிரவேசிக்கிறார்கள். வாசலில் இருந்து எட்டிப் பார்த்து விட்டு காலணிகளைக் கழற்றி உள்ளே ஓடுகிறதைப் பார்த்து புன்னகைக்கிறேன். நான் இது தொடர்பாகக் கொடுத்திருந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளே இருந்து நெற்றி நிறைய, தோள்களில், வயிற்றில் வடகலை நாமம் அணிந்திருந்த ஒரு முதியவர் காதில் செருகிய பூணூலோடு இரைந்து கொண்டு வருகிறார்-

இன்றைக்கு வேலைக்காரி வராமல் நானே பெருக்கித் துடைத்து குளித்து வந்து சமையல் பண்ணிண்டிருக்கேன். உப்புமா மட்டும்தான் செஞ்சிருக்கு. உப்புமா. ஒருத்தொருத்தருக்கும் மூணு சேர் உப்புமாவும், ஒரு ஆழாக்கு மோரும் கொடுக்கப்படும். கூட்டம் போடாமே ஒருத்தருக்கு பின்னாடி இன்னொருத்தரா நிண்ணுக்குங்க;.

அவர் பாட்டுக்கு சத்தம் போட்டுக்கொண்டு உப்புமா வைத்த வெங்கல உருளி மேல் பித்தளைக் கரண்டியால் லொட்டுலொட்டென்று தட்டியபடி திரும்ப சொல்கிறார் ஒவ்வொருத்தருக்கும் மூணு சேர் உப்புமா, ஒரு ஆழாக்கு மோர்.

பாதுகாப்பு வீரர்கள் அவர் வாயைப் பொத்தி மரியாதை காட்டச் சொல்ல விரைய நான் வேண்டாம் என்று சைகை செய்கிறேன். எத்தனை சுவாரசியமான மனிதர். நான் என்ன, முகலாய சக்கரவர்த்தி அக்பர் வந்தால் கூட ஒரு ஆழாக்கு மோரும், மூணு சேர் உப்புமாவும்தான். அதென்ன உப்புமா? புது விஷயமாக இருக்கே. இப்படி ஒரு பலகாரம் உண்டா என்ன?

நான் எதற்கும் இருக்கட்டும் என்று பிடவைத் தலைப்பை தலையில் முக்காடாகப் போட்டுக்கொண்டு உள்ளே போகிறேன்.

இந்தாம்மா பரதேவதை, பின்னால் தண்ணி பிடிச்சு வச்சிருக்கறது போறுமான்னு பாரு. இல்லேன்னா ஸ்ரமம் பார்க்காம ரெண்டு வாளி கிணத்துலே இரைச்சு பீப்பாய்லே கொட்டிட்டு கால் அலம்பிண்டு வந்துடேன். உனக்கு நாலு சேர் உப்புமாவா தர்றேன்.

எனக்கு சிரிப்பு பீறிட்டு எழுகிறது. சுவாமிகள் திருநாமம் என்ன என்று பவ்யமாக விசாரிக்கிறேன்.

ஏண்டியம்மா அதை தெரிஞ்சிண்டாத்தான் தண்ணி ரொப்புவியோ. அப்படின்னா கேளு நான் மாண்ட்யா செலுவ கேசவ ஐயங்காரன். இந்த வைஷ்ணவ சத்திர தர்மாதிகாரி. இப்போ தண்ணி இறைக்க போறியாடியம்மா?

பாதுகாப்பு வீரர்களில் துடிப்போடு நின்ற இளைஞர் ஐயங்காரைப் பார்த்து சிரிப்போடு விசாரிக்கிறார், நான் வேண்டாம் வேண்டாம் என்றாலும். எனக்கு இந்த காட்சி நீடிக்க ரொம்ப ஆசை. இவர்களுக்கோ இது எனக்குச் செய்யப்படும் மரியாதைக் குறைச்சலாம்.

ஓய் ஐயங்கார் ஸ்வாமின், நீர் யாரென்று நினைத்து அம்மாவை கிணற்றில் தண்ணீர் சேந்தச் சொல்கிறீர்? அவர் இந்த பூமியை ராஜ்யபரிபாலனம் செய்கிற ஸ்ரீமதி அப்பக்கா மகாராணி ஓய்.

ஐயங்கார் ஒரு வினாடி என்னைப் பார்க்கிறார். ரொம்ப சந்தோஷம். உப்புமா நாலு சேர் மோர் ஒரு ஆழாக்கு தரையிலே உக்காந்து சாப்பிடலாம். பெருக்கி வச்சுட்டேன் என்றபடி வாழை இலையை வரிசையாக விரிக்கிறார்.

நான் முதலில் ஓரமாக இருந்த இலைக்கு முன் உட்கார்ந்து அடுத்து என் கூட்டத்தைக் கைகாட்டுகிறேன். கொஞ்சம் தயங்கி அவர்கள் வந்து மூன்றடி தொலைவில் இலையை மாற்றிப் போட்டு உட்கார்கிறார்கள். திவ்யமான உப்பிட்டு கரண்டி கரண்டியாக வட்டிக்கிறார் ஐயங்கார்.

சரியாக மூன்று கரண்டி உப்பிட்டு ஒவ்வொருவருக்கும் போட்டு எனக்கு ராணி என்பதால் நான்கு சேர் அதாவது நான்கு கரண்டி இலையில் வார்க்கிறார். முடித்து விட்டுக் கையலம்பிப் புறப்படும் போது மண்சட்டி குவளையில் அளவுக் குவளையால் ஒரு ஆழாக்கு மோர் ஊற்றி எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். நான் முதலில் எடுத்துக்கொண்டு கைகாட்ட மற்றவர்களும் எடுத்துக் கொள்கிறார்கள். எலுமிச்சைச் சாறு பிழிந்து, மிளகாயும் கொத்தமல்லியும், சன்னமாக இஞ்சியும் அரிந்து போட்டு அமிர்தமாக்கிய மோர் அது.

ஐயங்காரிடம் நன்றி சொல்லிப் புறப்பட்டோம்.

நன்னா இருந்ததா, சந்தோஷம். உப்புமாவில் எலுமிச்சை சாறு அரைக்கால் குவளை கலந்திருக்கலாம். முந்திரிப் பருப்பு முழிச்சிண்டு இருக்க நெய் கொஞ்சமா ஆரம்பத்திலே ஊத்தி வறுத்து வச்சு கடைசியா சேர்த்திருக்கலாம் என்று கவனத்தோடு சொன்னார்.

நான் சொன்னேன் – நாளையிலிருந்து உம் சத்திரத்துக்கு தினசரி இரண்டு வீசை முந்திரிப்பருப்பும், ஒரு படி பசுநெய்யும் தர ஆக்ஞை பிறப்பிக்கறேன் என்று சொல்கிறேன்.

செலுவ ஐயங்கார் நமஸ்காரம் செய்து நிற்க நாங்கள் வெளியேறுகிறோம். ஏப்பம் விட்டது யார்?

8 பலம்=1 சேர்; 5சேர்=1 வீசை(426.67 கிராம்); 3.5 சேர்=28 பலம்; 8 ஆழக்கு= 1 படி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன