டாக்டர் பாஸ்ட் என்றொரு காவியம் நாடகமானது

என் ‘வேம்பநாட்டுக் காயல்’ மின்நூலில் இருந்து

எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டர் குழுவின் பாஸ்ட் நாடகத்தைப் பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இரண்டு பாகமாக அமைந்த நாடகம். ஒவ்வொரு பாகமும் இரண்டு, இரண்டேகால் மணி நேரம் நிகழக்கூடியது. ஒரே நாளில் நிகழ்த்தப்படும் போது பார்க்கப் போனால், பிற்பகலிலிருந்து ராத்திரி பத்து மணி வரை நாடகம் பார்க்க, கொட்டகைக் கடையில் பியர் குடிக்க, மூத்திரம் போக, சாயந்திரம் தட்டுக்கடையில் சூடாக டோநட், சாயா, பக்கத்து டிராவர்ஸ் தியேட்டரிலும், அஷர் ஹால் இசையரங்கிலும் அடுத்து என்ன நிகழ்ச்சி, எப்போது என்று விளம்பரங்களை மேய்வது, லோத்தியன் வீதி பங்களாதேஷ் சாப்பாட்டுக் கடையில் ரொட்டி, ராத்திரி போஜனம், திரும்ப நாடகம் என்று தொடர்ந்து செலவழிக்க வேண்டி வரும்.

நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கிட்டத்தட்ட இருபது பவுண்ட் கட்டணம். ஆனாலும் எடின்பரோ லைசியம் தியேட்டரில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக ‘பாஸ்ட்’ அவை நிறைந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் இரண்டாம் வாரம் வரையான காட்சிகளுக்குக் கணிசமாக நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

அரங்கில் நுழைந்தபோது கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. இரண்டு பக்கத்திலும் வெள்ளைக்கார மூதாட்டிகள் கையில் பைனாகுலரோடு அமர்ந்திருக்க, நடு இருக்கையில் உட்கார வேண்டிய கட்டாயம்.

நாடகம் உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

ஐரோப்பிய இலக்கிய சாதனைகளை யார் பட்டியல் போட்டாலும் தவறாமல் இடம் பெறுவது ஜெர்மன் கவிஞர் கதே எழுதிய கவிதை நாடகமான பாஸ்ட் (Faust). பதினேழாம் நூற்றாண்டு மத்தியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியப் பகுதி வரை வாழ்ந்த கதே அரசியல், கலை, இலக்கியம் என்று எல்லா வகையிலும் பரபரப்பாக விளங்கிய இந்த இரண்டு நூற்றாண்டுகளின் சிந்தனை ஓட்டங்களையும், அவற்றை மீறிய அசாத்தியப் படைப்பு ஆற்றலையும் இந்தக் கவிதை நாடகத்தில் வடிக்க எடுத்துக் கொண்ட காலம் கிட்டத்தட்ட அறுபது வருடம். அவருடைய வாழ்நாள் சாதனை என்று தயங்காமல் சொல்லலாம் இரண்டு பாகமாக அமைந்த இந்தப் படைப்பை.

ஹோமரின் கிரேக்க இதிகாசமான இலியாதில் வரும் நாயகி ட்ராய் நகரப் பேரரசி ஹெலன், சாமானியர்கள்,சாத்தான், தெய்வம், மிருகங்கள் என்று கிட்டத்தட்ட நூறு கதாபாத்திரங்கள் கொண்ட இந்தப் படைப்பை மேடையேற்றுவது அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும். லைசியம் தியேட்டர் நாடகக் குழுவினர் இதை அனாசயமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அதுவும் போன நூற்றாண்டு இலக்கியப் படைப்பை நவீன மேடை உத்திகள், பின் நவீனத்துவ நாடகமொழி இவற்றின் அடிப்படையில், நிகழ்கால பிரக்ஞையும், காலப் பிரமாணமும் கச்சிதமாகப் பொருந்திவரும்படிக்கு.

உடலுறவு பற்றி சதா உதிர்க்கப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் நாடகம் முழுக்க விரவி இருப்பதைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். தமிழ்ச் சூழலில் இதுதான் நிகழ்கலையான நாடகம் என்று தெரிவிக்கப்பட்டு நிகழ்த்தப்படும்போது பார்வையாளர்களாக இருந்தும், நாடகப் பிரதியை வாசித்தும் வளர்ந்தவர்களுக்கு, என்னதான் ஐரோப்பிய நாடக வளர்ச்சி பற்றிய புரிதல் இருந்தாலும், உடலுறவை கிட்டத்தட்ட நிகழ்த்திக்காட்டும் காட்சியமைப்புகள் அதிர்ச்சியை உண்டாக்கக் கூடும். கூட்டப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி போன்றவை இவை.

கதேயின் நாடக நாயகன் டாக்டர் பாஸ்ட் வானளாவிய அதிகாரம் கிடைக்க ஏங்குகிறான். உலகத்தின் சகலமான இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். கேட்டதைத் தருகிறேன் என்று முன்வருகிறான் மெபிஸ்டபிலிஸ் என்ற பெயரில் வரும் சாத்தான். ஒரே ஒரு நிபந்தனை. பாஸ்ட் சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தரவேண்டும். எந்த ஒரு இன்பத்தை அனுபவிக்கும்போது அதில் அமிழ்ந்து வெளியேறி அடுத்த இன்ப அனுபவத்துக்கு வர முடியாமல் போகிறதோ, அப்போது பாஸ்ட் சாத்தானுக்கு அடிமையாகி விடுவான். ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தரும் பாஸ்ட்டும், அவன் கூடவே மெபிஸ்டபிலிஸும் போகிற வெளி, உள் பயணங்களின் ஒழுங்கமைவு ஜாக்கிரதையாகக் குலைக்கப்பட்ட தொகுப்பு தான் ‘பாஸ்ட்’ நாடகம்.

‘இன்பத்தின் எல்லைகளை அனுபவிக்க வேணும்’ என்கிற பாஸ்ட் உடல் சார்ந்த இன்பத்தின் எல்லைகளைத் தொடும்போது தயங்குகிறான். ‘எல்லைகளை அனுபவிக்க வேண்டும். ஒரு எல்லைக்கு உட்பட்டு’ என்று திருத்திச் சொல்கிற பாஸ்ட் இந்தக்காலத் தயக்கமும், குழப்பமும் கலந்த மதிப்பீடுகளின் பிரதிநிதி.

சுழலும் நாடக மேடை. மேடைக்குள் மேடையாக இன்னொரு அரங்கம், மேடையைச் சுற்றிக் கவிந்து பிரம்மாண்டமான புத்தக அலமாரிகளாக, சுற்றிச் சூழ்ந்து இறுகும் கூண்டுகளாக, பாத்திரங்கள் அவ்வப்போது ஏறி இறங்கி, இருந்து அபிநயிக்கும் மேடை வெளியாக பிரம்மாண்டமான இரும்புச் சட்டகங்கள். பின்னால் திரையில் அவ்வப்போது விடியோ ப்ரஜெக்ஷனாக கோள்கள், வானப்பரப்பு என்று விரியும் காட்சிகள். மேடையில் பொதுவாகவும், சூழும் இருளுக்கு நடுவே குறிப்பிட்ட இடத்திலும் படரும் ஸ்ட்ரோபிக் ஒளியமைப்பு. தொழில் நுட்பம் நயமாகப் பயன்படுத்தப்பட்டு, பாஸ்ட் நாடகத்தைச் சிறப்பாக்குகிறது.

கூடவே, எளிய காட்சியமைப்புகள். பல காட்சிகளில் கட்டியங்காரன் போல் இயக்குனரும் ஒரு பாத்திரமாக மேடையில் நாற்காலி போட்டு ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார். ‘இந்தப் பாத்திரம் உள்ளே போகலாம்’ என்று அவர் உரக்கச் சொல்ல, பாதிப் பேச்சில் ஒரு கதாபாத்திரம் மறைகிறது. ‘தெருவில் நடக்கிறான் பாஸ்ட்’ என்று சொல்ல, செட் பிராப்பர்ட்டி எதுவும் கண்ணில் காட்டாமல், மேடை சட்டென்று தெருவாகிறது. காட்சியைச் சட்டென்று முடிக்க வேண்டியிருந்தால், ‘உயிரைக் கொண்டு போக தேவதைகள் வரலாம்’ என்று அவர் அறிவிக்க, இரண்டு தேவதைகள் உள்ளே வர, இழுத்துப் பறிக்காமல் ஒரு மரணம். காட்சி முடிவு.

நாடகத்தின் முதல் பகுதியில் பெண் கதாபாத்திரமான கிரட்சென், பாஸ்ட் அவளுடைய படுக்கையறையில் மறைத்துவைத்துப்போன அழகான உடையைப் பார்க்கிறாள். தோழி தூண்ட, உடுத்தியிருந்ததைக் களைந்துவிட்டு அங்கேயே புது உடுப்பை மாற்றிக்கொண்டு அழகு பார்க்கிறாள். அவள் தோழியை சாத்தான் மயக்குகிறான். சுவரில் சாய்ந்து அவனோடு வாய்வழிப் புணர்ச்சியில் தோழி ஈடுபட, பாஸ்டோடு படுக்கையைப் பகிர்கிறாள் கிரட்சென். இரண்டு பக்கத்திலும் பெண் பார்வையாளர்கள் இருக்க, நடுவில் உட்கார்ந்து இதைப் பார்க்கச் சங்கடமாக இருந்தாலும், கதையும், வசனமும், நாடக ஆக்கமும் இருக்கையில் உட்காரவைத்தன.

நாடகத்தின் இரண்டாம் பகுதியில் பாஸ்ட் பேரழகியும் கிரேக்க மகாராணியும் ஆன ஹெலனைச் சந்திக்க விரும்புகிறான். கடல் தேவதைகளும் சாத்ததனும் கேட்டுக்கொண்டபடி அவன் முழு உடுப்பையும் களைய வேண்டி வருகிறது. பிறந்த மேனிக்கு மேடையில் நின்று வசனம் பேசும் பாஸ்ட், அப்படியே மெல்ல நடந்து பின்னால் போக, பக்கத்தில் சத்தம். திரும்பிப் பார்க்க, பைனாகுலர்கள் உயர்ந்திருந்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன