அவன் தூக்கி எறிந்த பலா இலையை மேய்ந்த மாடு துரைத்தன பாஷையில் இரைய ஆரம்பித்தது

என் நாவல் ‘அரசூர் வம்சம்’ நூலில் இருந்து ஓர் அத்தியாயம்
————————————————————–
சாவக்காட்டு வேதக்கார பிராமணனுக்குப் புதையல் கிடைத்திருக்கிறது.

ஊர் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறது. சேரமான் காலத்துக் காசு பணம், தங்க ஆபரணங்கள், பளிங்குக் குப்பி. நூதன வஸ்துக்கள்.

ஒரு பெரிய பானை. அது முழுக்க இந்த சமாச்சாரம் எல்லாம்.

சாவக்காட்டானைக் குடியிருக்கும் வீட்டுக்குக் குடக்கூலி கொடுக்காத காரணத்தால் வீட்டுக்காரன் சவட்டிப் புறத்தாக்கிய பிற்பாடு இதெல்லாம் கூடி நடந்தேறியிருக்கிறது. புறத்தாக்கிய வீட்டுக்காரனும் வேதத்தில் ஏறிய இன்னொரு சாவக்காட்டுப் பிராமணன் தான்.

தோமையனோடு கூடப் போன வம்ச வழி வந்தவர்கள் அவனைப் புல்லே என்றுதான் பார்த்திருந்தார்கள். அம்பலப்புழை தேகண்டப் பிராமணர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவியலுக்கும், புளிங்கறிக்கும் காய் நறுக்கிக் கொடுத்துக் கூடமாட ஒத்தாசை செய்கிறேன், ஒரு கும்பா சாதம் போடு என்று நாயாகப் போய் நின்றாலும் எட்டி உதைத்து அனுப்பினார்கள்.

ஆனாலும் தெய்வம் என்று ஒன்று இருக்கிறதே. தோமையனோடு போனால் என்ன, வைக்கத்தப்பன் கோவில் சுற்றம்பலத்தில் தீவட்டி பிடித்துக்கொண்டு தொழுதபடி புறப்பாட்டுக்கு முன்னால் நடந்து போனால் என்ன ?

குடியிருந்த ஓட்டை மனையிடத்தை விட்டு விரட்டியானதும், சாவக்காட்டுக் கிழவன் குப்பைமேட்டுக்குப் போய் ஒண்டிக் கொண்டான். அது வெறும் மண்மேடு இல்லைதான். அவன் பூர்வீகர்கள் எந்தக் கொல்ல வருஷத்திலோ ஏற்படுத்தி, மழையும் வெயிலும் ஊறி ஊறி மனுஷ வாசம் கொள்ளத் தகுதி இழந்து அங்கே வெகு நாள் ஒரு பழைய வீடு நின்றுகொண்டிருந்தது. அது முழுக்க விழுந்து போய்க் குப்பைமேடாயிருந்த இடமாக்கும் அவன் போனது .

இடிந்து விழுந்ததை எல்லாம் எடுத்துக் கழித்து விட்டு, நாலு தூணும், மேலே தென்னோலையுமாக நிறுத்த அவன் தச்சனிடம் வேண்டிக் கொள்ள, தச்சனும் பரிதாபப்பட்டு வேலையை ஆரம்பித்தான். கிழவனுடைய அரைஞாணில் அரைக்கால் வராகன் பெறுமானமுள்ள தங்கம் இருப்பதாகவும் இருக்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் அதை நல்ல வண்ணம் சுத்தி செய்து கூலிப்பணத்துக்கு மாற்றாக ஒப்படைப்பதாகவும் தச்சனிடம் சாவக்காட்டான் சொன்னதும் இதற்கு ஒரு காரணம். தச்சன் நம்பித்தான் ஆகவேண்டி இருந்தது. தங்கம் இருக்கிறதா என்று உடுப்பை உருவியா பார்க்க முடியும் ?

தச்சன் முளை அடித்துக்கொண்டிருக்க, கிழவன் மண்வெட்டி கொண்டு ஒரு மூலையில் பீர்க்கை பயிரிடக் குழிக்கிறேன் என்று உட்கார்ந்திருக்கிறான்.

பிராந்தோ என்று உரக்கச் சந்தேகப்பட்டபடி தச்சன் உளியைத் தன்பாட்டில் இழைக்க, கிழவன் தோண்டிய இடத்தில் டண்டண் என்று சத்தம். என்ன விஷயம் என்று எழுந்துபோய்ப் பார்க்க, நாலு நாழி அரிசி வடிக்கிற அளவிலே உலோகப் பானை ஒண்ணு கிட்டியதாம்.

கிளவனைப் பேப்பட்டி போல புறத்தாக்கினதாச் சொன்னேளே, இப்பப் பாருங்கோ, ரத்னமும் தங்கமுமா அவன் எங்கே உசரத்துலே கேரியாச்சு. நமக்கு இந்த பாசகம், தேகண்டம். ஜன்மத்துக்கும் இதுகூடியல்லாதே வேறே உண்டோ ?

சிநேகாம்பாள் கிட்டாவய்யனிடம் இரைந்து கொண்டிருந்தது ஊர்க் கோடி, யட்சிக்காவு, குளங்கரை, நெல்பாட்டம் எல்லாம் தாண்டி அடுத்த கிராமம் வரை கேட்டிருக்கும்.

கிட்டாவய்யனுக்கும் அந்த வகையில் வருத்தம்தான். பிரஸ்தாப தினத்தில் என்னமோ ரெளத்ரம் தலைக்கேறிப் போய்விட்டது அவனுக்கு. அந்தப் பைராகிகள் வேறே காரே பூரே என்று இந்துஸ்தானியில் அவனையும் அவன் தகப்பனனயும் பிறத்தியாரையும் கிழங்கு கிழங்காக வசவு உதிர்ந்துவிழத் திட்டிவிட்டுப் போனது போல் இருந்தது. உச்சி வெய்யில் நேரத்தில் உயிர்த்தலத்தில் கொட்டிய குளவி வேறே இனிமேல் வம்சவிருத்தி பண்ண முடியுமா என்று அவ்வப்போது மனதில் பிருபிருக்க வைத்தது. ஆனாலும், சிநேகாம்பாள் இந்த மாதம் தூரம் குளிக்காமல் போனதாகச் சொன்னபோது அந்த விஷயத்தில் சேதாரமாக ஒண்ணுமில்லை என்றும் பட்டது.

எல்லாம் கிடக்கட்டும். கிழவனை மனையிலேற்றினது போல இந்தச் சாவக்காட்டு வேதக்காரன் இப்படி உச்சாணிக் கொப்புக்குப் போவான் என்று கிட்டாவய்யன் சொப்பனத்திலும் நினைக்கவே இல்லை.

இது ராஜாக்கன்மார்க்குப் போகவேண்டிய தனம். மூவாட்டுப்புழையில் இருக்கப்பட்ட ராஜப்பிரதானியிடம் இதைச் சேர்ப்பிக்கிறதே நியாயம் என்று விருத்தனுக்குத் தனம் கிடைத்தது தெரிந்து வயிறெரிந்தவர்கள் சொன்னார்கள். அப்போது தெய்வம் மாதிரிப் பாதிரி வந்து உத்தரவாக்கிப் போட்டது இது.

தேடுகிறவன் கிடைக்கிற வரை தேடிக்கொண்டிருக்கட்டும். கிடைத்தபோது அவனுக்கு ஆச்சரியம் உண்டாகட்டும் என்று தோமையர் புனித வார்த்தை உச்சரித்துப் போனதை அனுசரித்து இந்த மனுஷ்யனுக்குக் கிட்டிய திரவியமெல்லாம் இவனுக்கானதே. ராயனுக்கும் சுங்கத்துக்கும் ஒரு சக்கரமும் இவன் கொடுக்க வேண்டியதில்லை.

எல்லாரும் மாரில் குரிசு வரைந்து கொண்டு அதுவுஞ்சரிதான் என்று புறப்பட்டானபோது, தோமையனை வரி விடாமல் படித்து நித்திய பாராயணம் செய்யும் ஒரு மத்திய வயசுக் கிறிஸ்தியானி விடாமல் சந்தேகம் கேட்டான்.

பிரபு, தெய்வ துல்யமான தோமையர் சொன்னது இந்தப்படிக்கு இல்லையோ ? தேடுகிறவன் கிடைக்கிற வரை தேடிக்கொண்டிருக்கட்டும். கிடைத்தபோது அவனுக்குச் சகிக்கவொண்ணாத மனக் கிலேசம் வரும். அப்புறம் ரோமாஞ்சனத்தோடு பிடரி மயிர் கோரித் தரிக்கும்படிக்கு வெகுவாக ஓர் ஆச்சரியமுண்டாகும். இதை நீங்கள் பள்ளியில் அன்றைக்குப் பிரசங்கிக்கவில்லையோ ? உங்களுக்கு விரலில் நகச்சுற்று ஏற்பட்டு எலுமிச்சம்பழம் அரிந்து பொருத்திப் பிடித்தபடி உபதேசித்த மழைநாள் என்பதாக அடியேனுக்கு ஓர்மை. இந்தப் பாவப்பட்ட மனுஷ்யன் அன்வேஷிச்சுக் கண்டெத்திய விதத்தில் அவனுக்கு வேதம் விதித்த அப்பேர்க்கொத்த துக்கம் ஏதும் மனசிலே உண்டானதோ ?

பாதிரி அவன் நெற்றியில் குரிசு வரைந்தார். சமாதானமுண்டாகப் பிரார்த்தித்து விட்டு, ஒரு வாக்கு அரை வாக்கு குறைந்தாலும் தேவ வாக்கு, தேவ வாக்கில்லையோ என்று பிரியமாகக் கேட்டார். அவன் குனிந்து வணங்கி விட்டு அந்தாண்டை போனான்.

கொடுங்கல்லூரில் மாதா கோவில் கல்பாளங்களை இடிச்சுப் பொளிச்சுப் புதிதாக ஏற்படுத்தி வைக்க முழுச் செலவையும் புதுப்பணக்காரனான சாவக்காட்டு வேதக்காரப் பிராமணன் ஏற்பதாக வாக்குத்தத்தம் செய்ததைக் குடையும், பட்டுத்துணியுமாகக் குதிரையில் ஏறும்போது அந்தப் பாதிரி சொல்லிப் போனார்.

சாவக்காட்டானுக்குப் பழம்பானையிலிருந்து சில பழைய அபூர்வ ஓலைச் சுவடிகளும், கூடவே ஒரு குப்பியில் ஏதோ திரவமும் கூடக் கிடைத்ததாகப் பிரஸ்தாபம்.

சுவடிகள் தமிழ்ச் செய்யுளாக இருந்தபடியால் அவற்றைப் பாண்டிப் பிரதேசப் பண்டிதர் ஒருத்தரிடம் கொடுத்து அதற்கு ஏதாவது விலை படிந்து வந்தால் விற்றுத் தரும்படி சொன்னான் அவன்.

மேற்படி பண்டிதரும் அதையெல்லாம் தீரப் பரிசோதித்து, எழுத்து அத்தரைக்கொண்ணும் அர்த்தமாகவில்லை என்றும் அது சேரமான் பெருமாள் கைலாசம் போக விமானம் கட்டியது பற்றிய விளக்கமாகவோ அல்லாத பட்சத்தில், வஞ்சி என்ற பேரூரின் கழிவு நீர்ச் சாக்கடை அமைப்பு பற்றியதாகவோ இருக்கும் என்றும் தெரிவித்தார். நூதனமாக இப்படியான சுவடிகளை அச்சுப் போடுகிறவர்கள் திருவனந்தபுரத்திலும் சென்னைப் பட்டணத்திலும் தொழில் ஆரம்பித்து இருப்பதாகவும், அவர்களிடம் இதைக் காகிதப் புத்தகமாக உண்டாக்கி வாங்கினால் அதை துரைத்தனப் பணம் ஒரு ரூபாய் வீதம் ஆயுர்வேத வைத்தியர்களிடமும், பாண்டி வைத்தியர்களிடமும் விற்கலாம் என்றார் அவர்.

வைத்தியர்கள் இப்படிப் படிக்காத, அவர்களுக்குக் கிஞ்சித்தும் தேவைப்படாத கிரந்தங்களைச் சேகரித்து வைப்பது அவற்றின் நெடி ரோகிகளின் மேல் படப்பட நோய் குறையும் சாத்தியப்பாட்டை உத்தேசித்துத்தான் என்று பாண்டிப் பண்டிதர் சொன்னபோது இது விஷயமாக சாவகாசமாக யோசிக்கலாம் என்று கல்பித்து சாவக்காட்டான் அவரை அனுப்பி விட்டான்.

புதையலாகக் கிடைத்த பணத்தில் ஊர் மூப்பர்கள் சொன்னபடிக்குச் செலவு பண்ணி ஆசாரிமாரையும், மூசாரிகளையும் கொண்டு கொஞ்சம்போல் வசதியான ஒரு ரெண்டுகட்டு வீடு ஏற்படுத்திக் கொண்டான் அவன். மீதிப் பணத்தில் கணிசமான பகுதியை லேவாதேவி நடத்தப் பாண்டி நாட்டிலிருந்து வந்த பெரியகருப்பன் செட்டியிடமும், சுயஜாதிக்காரனும், பெரிய தோதில் கொப்பரை கச்சவடம் செய்கிறவனுமான மலியக்கல் தோமையிடமும் பிரித்துக் கொடுத்து வட்டி வாங்கிவர ஆரம்பித்தான்.

ஆனாலும் பெரிய குப்பியில் இருந்த திரவம் வேறே மாதிரி. அதை எடுத்தபோது குப்பியின் வெளியே வழிந்ததை சாவக்காடன் தன் தலையில் துடைத்துக் கொள்ள திரவம் பட்ட இடம் கருப்பு முடியானதோடு பளிச்சென்று பிரகாசமாக ஒளிரவும் ஆரம்பித்தது. ஆனால் பக்கத்தில் நின்றவன் தலைமுடி கொழிந்து உடனே கொத்துக் கொத்தாகத் தரையில் விழுந்தது.

சாவக்காட்டான் மருந்தை ஒரு சொட்டு இரண்டு சொட்டு குடிக்கலாமா என்று யோசித்தான். அப்புறம் அது வேண்டாம் என்று வைத்து விட்டான். இவன் குடித்துப் பக்கத்தில் இருப்பவன் யாராவது உசிரை விட்டால் ஏகக் களேபரமாகி விடும். அதன் பிற்பாடு யாரோ சொன்னதால் மேலமங்கலம் நம்பூதிரிகளை அழைத்து அஷ்டமாங்கல்யப் பிரச்னம் வைத்துப் பார்த்தான்.

அந்தப் பிரசன்னதன்றைக்கு கிட்டாவய்யன் தான் தேகண்டத்துக்குப் போனது. பட்டு வஸ்திரமும், நடையில் மிடுக்குமாக சாவக்காட்டு வேதக்காரன் இஞ்சிம்புளி கிண்டிக் கொண்டிருந்த கிட்டாவய்யனிடம் வந்து நின்று எப்படி ஓய் நடக்கிறது எல்லாம் ? வர்ஜா வர்ஜமில்லாமல் ஊரில் இருக்கப்பட்ட தனவான்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். உம் சாப்பாடு திருப்தியாக இல்லாத பட்சத்தில் இந்தப் பிரதேசத்திலேயே உமக்கு உத்தியோகம் கிட்டாது போயிடும் என்றான்.

அவனுடைய முகத்தில் ஒரு குரூர சந்தோஷத்தைப் பார்த்தான் கிட்டாவய்யன் அப்போது.

அஷ்டமாங்கல்யப் பிரச்னத்தின் முடிவில் சோமாத்ரி அடுதிரிப்பாடு அஸ்ஸலாயி என்று திருப்தியோடு சொன்னது இப்படி இருந்தது.

சாவக்காட்டு வேதக்காரன் இத்தர நாள் கஷ்டிச்ச ஜீவிதம் அனுபவிச்சது சொவ்வாயும் குசனும் அவன் ஜென்ம ஜாதகத்தில் இருந்த ஸ்தானம் கொண்டு. அது கழிந்து போனகாலம். இனிமேல் கொண்டு அவனுக்குப் பூர்வீகர் அனுக்ரஹம் பரிபூர்ணமாக உண்டு. அந்தக் குப்பி அமிர்தம் கொண்டதாகும். தண்ணி மத்தங்காயில் நடுவிலே அதைப் பிரதிஷ்டை செய்து கிழக்கே பார்த்து வைத்து ஒரு மண்டலம் இஷ்ட தெய்வத்தைப் பூஜிக்க வேணும். அது தோமையனோ, கிறிஸ்து பகவானோ ஆனாலும் சரி. அப்புறம் அந்தக் குப்பியை வெளியே எடுத்துப் பானம் பண்ணினால் அவனுக்கு யெளவனம் திரும்பும்.

இதை வேறே யாருக்காவது கொடுக்கலாமா ?

அவன் கேட்டபோது அடுதிரிப்பாடு அதுக்குப் பாடில்லை என்று சொல்லிவிட்டார். அப்படியே குடித்தாலும், அவர்களுக்கு தேக ஆரோக்கியம் கெடாது என்றும் உயிருக்கு ஆபத்து இல்லையென்றும் சொன்னவர் பிரச்னம் வைத்த இடத்தில் பூவை எடுத்து நகர்த்தியபடிக்குத் தொடர்ந்தார்-

அப்படிக் குடித்த மனுஷ்யர்கள் தப்பும் தவறுமாகத் துரைத்தன பாஷை பேச ஆரம்பித்து விடுவார்கள். உமக்கு இப்போது நல்லதெல்லாம் கூடிவரும் காலம். இப்படி ராஜ நிந்தனையாக நாலைந்து பேரைப் படைத்து அனுப்பி உம் பேரைக் கெடுத்துக் கொள்ளலாமா சொல்லும்.

சாவக்காட்டு வேதக்காரன் அப்புறம் அப்படியே ஒரு மண்டலம் மந்திர உருவேற்றம் செய்து அந்தக் குப்பியிலே இருந்து ஒரு பலா இலை மடக்கில் கொஞ்சம் எடுத்து மாந்திவிட்டு இரண்டு நாள் தொடர்ந்து கண்ணாடிக்கு முன்னால் சாட்டியமாக நிற்க ஒரு சுக்கும் இல்லை.

ஆனால் அவன் தூக்கி எறிந்த அந்தப் பலா இலையை மேய்ந்த தெருவிலே போன மாடு ஒன்று அரைகுறையாகத் துரைத்தனப் பாஷையில் இரைய ஆரம்பித்தது. மாட்டுக்காரன் சாவக்காட்டு வேதக்காரன் வீட்டில் ஏறி அவனிடம் பிராது கொடுத்தான்.

இப்படி என் பசுமாட்டை ராஜ தூஷணம் செய்ய வைத்து விட்டார்களே. இது கறக்கிற பாலும் இனி விலை போக மாட்டாதே. ஊரில் ஒருத்தனாவது அதைக் கையால் தொடவும் துணிவானா ? மாட்டைப் பழையபடி ஆக்கிப் போடும். இல்லாத பட்சத்தில் நீரே அதை எடுத்துக்கொண்டு அதுக்குண்டான பணத்தை அடையும்.

சாவக்காட்டான் மறுபேச்சு பேசாமல் மாட்டை அவன் சொன்ன விலை கொடுத்து வாங்கிக் கொட்டிலில் கட்ட அது ராத்திரி முழுக்க ஏதோ அன்னிய பாஷையில் பிரலாபித்துக் கொண்டிருந்தது. அது கறந்த பாலை வீணாக்க மனம் இல்லாமல் தினசரி சுண்டக் காய்ச்சி வெல்லப்பாகு சேர்த்து அம்பலத்தில் பாதியும், கொடுங்கல்லூர் பள்ளியில் மீதியுமாக விநியோகிக்கக் கொடுத்தான். அப்புறம் பாதிரி வந்து இந்த மாதிரிப் பிராணிகளை வீட்டில் வளர்க்காமல் இருப்பது நல்லது என்று சொல்லிப் போனார்.

ஆனால், அம்பல மேல்சாந்தி, சாவக்காட்டன் தத்தாத்ரேய ரிஷி கோத்திரத்தில் பட்டவன் என்பதாகக் கண்டறிந்து அந்தப் பாலை அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவதில் யாதொரு பிரச்னையும் இல்லை என்று சொல்லி விட்டார். பசுவையும் அம்பலத்திலேயே பராமரிக்கவும் அவர் ஏற்றுக் கொண்டார்.

சாவக்காட்டான் அனுப்பிய துரைத்தன பாஷை பேசும் பசுவின் பாலில் அபிடேகமான தேவி முகத்தில் அற்புதமான களை தென்பட்டதாக சிநேகாம்பாள் அம்பலத்துக்குப் போய்விட்டு வந்து கிட்டாவய்யனிடம் தெரிவித்தாள்.

அம்பலத்தில் பூதங்களி பார்க்க வீட்டோடு எல்லோரும் போயிருந்த நேரம் அது.

பூதம் பூதமா ஆடறதை எல்லாம் நான் பாக்க மாட்டேன். குழந்தைகளும் பயந்திடும். கிருஷ்ணனாட்டம்னா வரேன்.

சிநேகாம்பாளுக்கு பூதங்களி பிடிக்காது என்றில்லை. அவளுக்கு கிட்டாவய்யனிடம் பேச வேண்டி இருந்ததே காரணம்.

சாவக்காட்டார் மனைக்கு ஒரு நடை நடந்துட்டு வாங்களேன்.

ராத்திரியில் தனிக்கு இருக்கும்போது அவன் பூணூலைப் பிடித்து இழுத்தபடி சொன்னாள் சிநேகாம்பாள்.

ஏது விஷயமா ?

கிட்டாவய்யன் அவள் வாயில் முத்தம் கொடுக்க உத்தேசித்துக் கொஞ்சம் முன்னால் நீண்டிருந்த பற்கள் முந்தின நாள் உதட்டில் ஏற்படுத்தின தடம் இன்னும் காயாததால் கழுத்துக்குக் கீழே முத்தம் கொடுத்தான். பக்கத்தில் படுத்திருந்த மூத்த பெண் புரண்ட படிக்கே பகவதி அத்தை கல்யாணத்துக்கு எனக்குப் பட்டுப்பாவாடை வேணும் என்று தூக்கத்தில் சொன்னாள்.

வாங்கித் தரேண்டா குஞ்சே.

கிட்டாவய்யன் அவள் தலையைப் பிரியமாகத் தடவ அவள் திரும்பவும் நல்ல உறக்கத்தில் ஆகியிருந்தாள்.

பகவதிக்குட்டி கல்யாணத்துக்கு காணியை விக்கணும்கறாரே உங்க அண்ணா ?

சிநேகாம்பாள் கேட்டாள்.

ஆமா, கொஞ்சமாவது நம்ம அந்தஸ்துக்குத் தக்க மாதிரி தங்கமும் வெள்ளியும் ஸ்திரிதனமாகத் தர வேண்டாமா ?

இருக்கறதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்க அக்கா, தங்கைமார் கல்யாணத்துக்கே அழிச்சாச்சு. மிச்சமும் போறதுக்குள்ளே நமக்கும் ஒரு வழி பண்ணிக்க வேண்டாமா ?

கிட்டாவய்ய்யன் அவள் மாரில் கைவைத்து அளைந்தபடி இருந்தான். அவளை இடுப்பை அணைத்துப் பிடித்து உள்ளுக்குக் கூட்டிப் போக வேணும். எல்லாரும் வர நேரம் கொஞ்சம் தான் இருக்கிறது.

அரிசியும் சணல் மூடையுமாக வாடையடிக்கும் அறையில் சிநேகாம்பாள் மேல் அவன் படர்ந்தபோது அவள் சொன்னாள்.

உங்க பங்கு காணியை வித்த பணம் கொஞ்சம். சாவக்காட்டாரிடம் கொஞ்சமாக் கடம் மேடிச்சு ஒரு துகை. போதும். சாப்பாட்டுக் கடை போட்டுடலாம். ஆலப்புழையிலே இல்லே கொல்லத்துலேயோ.

முயக்கத்தின் உச்சியில் கூட அவர்கள் எதுவும் பேசவிடாதபடிக்குச் சாப்பாட்டுக் கடை மனதில் எழுந்து நின்று கொண்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன