’இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா’ நூலில் இருந்து – ஸ்ரீரங்கத்துக் கதைகள்

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் பற்றி –
ஸ்ரீரங்கத்து மனிதர்களுக்கு ஒரு பொதுத் தன்மை உண்டு என்கிறார் சுஜாதா ஒரு கதையில் –
ஸ்ரீரங்கத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் அக்காரவடிசலும், அதிரசமும், குஞ்சாலாடும் சாப்பிட்டே பலருக்கும் டயாபடிஸ்.

இதைத் தவிர இவர்களில் பலருக்கும் ரத்தத்தோடு கலந்த நகைச்சுவை உணர்ச்சி. ஸ்ரீரங்கம் கோவில் மேல் அபரிமிதமான ஈடுபாடு. திருவரங்கன் மேல் என்றும் மாறாத, குறையாத பக்தி.
ஸ்ரீரங்கத்தை விட்டுப் பிரிய மனமின்றி அமெரிக்கா போய், பிணமாக வந்து இறங்கும் சேச்சாவும், அம்மா இளைய மகனோடு அமெரிக்கா போக, ஸ்ரீரங்கத்து மண்ணையும் மனிதர்களையும் நேசித்துக் கொண்டு இங்கேயே இருந்து, இறந்த மாஞ்சுவும் ஒரே நாணயத்தின் இரு பக்கம் போல.

பத்தணா அய்யங்கார், உஞ்சவிருத்தி அய்யங்கார், யூக்லிட் கணித ஆசிரியர் வி.ஜி.ஆர் அய்யங்கார், மல்லிப்பூ ரங்கய்யங்கார், மாங்கொட்டை நாணு அய்யங்கார், ஃபுல்சூட் அய்யங்கார், டிரான்ஸிஸ்டர் மாதிரி அளவில் சிறிய கிருஷ்ணய்யங்கார், வரதாச்சாரியார் என்று இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்திருந்த முந்தைய தலைமுறை வைணவர்கள் பேச்சு மொழியாலும், தென்கலை வைணவத்தைக் கடைப்பிடிப்பதாலும் மட்டும் ஒரு போல. இந்த பொதுமைக்கு மேல் தான் விதம்விதமான பாத்திரக் குணநலன்களோடு அவர்கள் சுஜாதாவால் உருவாக்கப்பட்டு, உலா வர அனுப்பப் படுகிறார்கள்.

ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்கு மெலிதான ஒரு பொதுத் தன்மை உண்டு.

பெரும்பாலான ஸ்ரீரங்கக் கதைகள் ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அவரை வைத்து ஒன்று அல்லது ஒரு சில சுவாரசியமான சம்பவங்களை நிகழ்த்தும். கதைசொல்லி பார்வையாளனாக அல்லது கதை நடத்திப் போகும் நிகழ்வில் பங்கு பெறுகிறவனாக இருப்பான். கதை அந்த நிகழ்வின் இறுதியில் நின்று இருபது முப்பது வருடம் இடைவெளி ஏற்பட்டு, கதாசொல்லியின் நிகழ்காலத்துக்கு வரும். பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு ஸ்ரீரங்கம் போகிற கதைசொல்லி வயதான அதே பாத்திரத்தை சந்திப்பான். அல்லது அவர் இறந்திருப்பார். நினைவுகளே மிச்சமாகத் திரும்புவான் கதைசொல்லி.

இந்த எளிய கதையமைப்பு அடித்தளமாக மேலே பலவிதமான நகாசு வேலைகளோடு நகர்பவை இந்த ஸ்ரீரங்கத்துக் கதைகள்.

‘ஸ்ரீரங்கத்துக் கதைகள்’ நூல் முன்னுரையில் சுஜாதா குறிப்பிடுவார் –

ஸ்ரீரங்கம் என்பது ஒரு metaphor (உருவகம்) தான். இதைப் படிப்பவர் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய ஸ்ரீரங்கம் உண்டு. இதில் உள்ள மனிதர்களின் பிரதிகள் அவர்கள் வாழ்விலும் இருப்பார்கள். அவர்களை நினைத்துப் பார்க்க வைப்பதே இக்கதைகளின் நோக்கம்.
சுஜாதா என்றதும் முதலில் நினைவு வருவது இந்தக் கதைகள் தாம்.

இந்திய இலக்கியச் சிற்பிகள் : சுஜாதா
இரா.முருகன் எழுதியது. சாகித்ய அகாதமி வெளியீடு அக்டோபர் 2020

புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன