இந்திய இலக்கியச் சிற்பிகள் : சுஜாதாவின் நாடகங்கள் பற்றி

தமிழில் நடிப்பதற்காக எழுதப்பட்ட நாடகங்களே பெரும்பான்மையானவையும். எனில் படிப்பதற்காக எழுதப்பட்ட நாடகங்களும் உண்டு. உதாரணமாக, மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் எழுதிய ‘நினைக்கப் படும்’. படிப்பதற்கான நாடகங்களையும் மனதில் நிகழ்த்தித்தான் வாசகர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை மறக்கக் கூடாது.

சுஜாதாவின் நாடகங்கள் நிகழ்த்தப் பட்டாலும், படிக்கப் பட்டாலும் அலாதி நாடக அனுபவத்தைத் தர வல்லவை.

’கடவுள் வந்திருந்தார்’, ’டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’, ’ஊஞ்சல்’, ’அன்புள்ள அப்பா’, ‘வந்தவன்’ என்று அவர் எழுதிய பல நாடகங்களும் அறுபது வயது கடந்த பூர்ணம் விஸ்வநாதனுக்காக எழுதியதால், ஒரு முதியவர் பாத்திரம் இந்நாடகங்களில் முக்கியமான இடம் பெறுவது இயற்கையே. ‘பூரணத்துக்காக சுஜாதா பிடித்த கொழுக்கட்டைகள்’ என்று அந்நாடகங்களை விளையாட்டாக சுஜாதா அன்பர்கள் சொல்வதுண்டு.

தமிழில் மேடை நாடகங்கள் சம்பிரதாயமாக, மேடை செட் வீட்டுப் பூஜை அறையிலோ அல்லது அட்டைப் பிள்ளையாருக்கு முன்னால் நின்று பிரார்த்திப்பதோடோ ஆரம்பிக்கும். கடவுள் வந்திருந்தார் நாடகத்துக்காக மேடையில் திரை உயர, ஆபீஸ் போகிற அவசரத்தில் ஒரு ஐம்பத்தைந்து வயதுக்காரர். மேல் கோட்டைப் போட்டுக்கொள்ள எடுத்து, அவையைப் பார்த்துப் பேசுகிறார் –

ஆதிசங்கரர் ஒரு கேள்வி கேட்டார். பார்க்கறதுக்கு ஒருத்தருமே இல்லையா, ஆகாசம் அப்பவும் நீலமா இருக்குமான்னு. ஏன்? ஒரு ஆள் பார்த்தால்கூடப் போறாது. ரெண்டு பேர் பார்த்து ஒத்துப்போனாத்தான் உண்மைக்கு ஒரு வடிவம் வரும்.

ஓய்வு பெற்ற முதியவர். வேலைக்குப் போகும் மகள். அனுசரணையான ஆனால் நிறையப் பேசுகிற மனைவி. வீட்டு மாடியில் குடி வைத்த, இவர் மகள்மேல் காதல் கொண்ட இளைஞன். இவை சந்தேகமே இல்லாமல் சராசரி நாடக மேடை பாத்திரங்கள் தாம். ஆனால் கதைப் போக்கு, காலம் என்ற நான்காம் பரிமாணத்தில் பிரயாணம் செய்ய உடனே திரும்புகிறது.

எதிர்காலத்திலிருந்து வந்தவன் ஓய்வு பெற்ற சீனிவாசனைச் சந்திக்கிறான்.

வந்தவன் அவரை மிரள வைக்கிறான். அவன் சீனிவாசன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிகிறான்.
நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் மூலம் தன்னையும் கிண்டல் செய்து கொள்கிறார் சுஜாதா, அவர் எழுதாத ஒரு புத்தகத்தை வைத்து

வீட்டு சொந்தக்காரர் (சீனிவாசன்), மாடியில் குடியிருக்கும் இளைஞன் (சுந்தர்) உரையாடல்

சுந்தர்: உங்களுக்காக லைப்ரரியிலே புஸ்தகம் எடுத்துண்டு வந்தேன் ..

சீனிவாசன் : (ஆவலோடு அதைப் பார்த்து) கிடைச்சுடுத்தா?

சுந் : எதிர்கால மனிதன். பிரமாதமா இருக்கு

சீனி : (புரட்டி) சுஜாதாவா? சினிமாக்காராள்ளாம் புஸ்தகம் எழுத ஆரம்பிச்சுட்டாளா?

சுந்: இது வேறே. பெங்களூர்க்காரர். கொஞ்சம் ரீல் விட்டிருக்கார். நம்பும்படியா இல்லே. எதிர்கால மனிதன் இன்னிக்கும் இருக்கானாம். அவனை நாம் சந்திக்கலாமாம். ஏதோ டைம் டிராவல், அது இதுன்னு …

(இந்திய இலக்கியச் சிற்பிகள் : சுஜாதா
இரா.முருகன் எழுதியது. சாகித்ய அகாதமி வெளியீடு அக்டோபர் 2020)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன