இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா (சாகித்திய அகாதமிக்காக நான் எழுதியது)

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சுஜாதா பற்றி நான் எழுதி, சாகித்திய அகாதெமி பதிப்பாக வந்திருக்கும் நூலில் இருந்து –

’சுஜாதா’வின் தகப்பனார் தன் உப அதிகாரியான, திருமதி சுஜாதாவின் தகப்பனாரிடம், ’இவர்களின் திருமணத்தை நடத்தலாமே’ என்று யோசனை தெரிவித்தார். இருவருக்குமே அந்த யோசனை பிடித்திருந்தது.

இரண்டு குடும்பங்களும் நன்கு பழகி நல்ல நட்பில் இருப்பதால் புதிய அறிமுகம் என்று தேவைப்படாமல் போனது. எனினும் திருமதி சுஜாதா குடும்பத்தில் அவரை ’சுஜாதா’வின் மூத்த சகோதரருக்குத் திருமணம் செய்து தரச் சற்றே அதிகம் விருப்பம் இருந்தது.

‘சுஜாதா’ நடக்கும்போது சற்று முன்னால் சாய்ந்து நடப்பார். அவருடைய சகோதரர் நிமிர்ந்து நடப்பவர்.

இதுதான் அந்த விருப்பத்துக்குக் காரணம் – புன்சிரிப்போடு சொல்கிறார் திருமதி சுஜாதா.

’சுஜாதா’ சற்றே முன்னால் சாய்ந்து நடந்ததற்கும் காரணம் சொல்கிறார் திருமதி சுஜாதா – ஸ்ரீரங்கத்து வீடுகள் எல்லாம் உயரம் குறைந்தவை. முக்கியமாக சமையலறை, பல அந்தக்கால வீடுகளில் குனிந்து தான் உள்ளே நுழைய வேண்டிய உயரத்தில் இருக்கும். அங்கே பழகிப் பழகி ‘சுஜாதா’ முதுகு வளைத்து நடக்கத் தொடங்கியிருக்கலாம்.

வருங்கால மாப்பிள்ளை பற்றி திருமதி சுஜாதா வீட்டாரின் கவனிப்பு இது என்றால், வருங்கால மருமகள் பற்றி, ‘சுஜாதா’ வீட்டில் கணிப்பு என்ன?

அவர்களுக்கு கேள்வியே கேட்காமல் பெண் பிடித்திருந்தது. வரதட்சணை வாங்கக் கூடாது, கொடுக்கக் கூடாது. ஆடம்பரம் இல்லாத, வைதீகச் சடங்குகளை நிர்ணயித்தபடி செய்து நடக்கும் திருமணம் வேண்டும் என்று இரு வீடுகளும் மனமொத்துப் போனதால் மூத்தவர் சம்மதித்தனர்.

‘சுஜாதா’வுக்கும் பெண் பிடித்திருந்தாலும் ஒரு தயக்கம். அவர் ஆறடி உயரமானவர். திருமதி சுஜாதா ஐந்தடி மூன்றங்குலம் தான் உயரம். இந்த ஏற்றத் தாழ்ச்சியோடு காலமெல்லாம் வாழ முடியுமா என்று அவர் அப்போது அதைப் பிரச்சனையாக இனம் கண்டு தீர்வு என்னவென்று குழம்பியிருந்ததைச் சொல்லி இத்தனை ஆண்டுகளுக்குப் பின் கலகலவென நகைக்கிறார் திருமதி சுஜாதா.

எப்படியோ கல்யாணம் சிறப்பாக நடந்து முடிந்தது. என்றாலும் எங்கேயாவது புதுமனைவியோடு போக வேண்டி வந்தால், ‘சுஜாதா’ நாலடி முன்னால் நடப்பார். குள்ளமான மனைவியோடு நடப்பதை எத்தனை நாள் அப்படித் தவிர்ப்பது? இரண்டு மனங்களும் படிப்படியாக உடன்பட, உயரப் பிரச்சனை ஒருவழியாக ஒன்றுமில்லாமல் போனது.

ஜன்னலுக்கு வெளியே
————————
’சுஜாதா’வுக்கு பெங்களூரில் அரசு நிறுவன மேலதிகாரியாக உத்தியோகம். அது ஓய்வூதியம் இல்லாத பணியமைப்பு கொண்டது. ‘சுஜாதா’ உடல்நலம் கொஞ்சம் பாதிக்கப்பட்ட 1980-கள் காலகட்டத்தில் திருமதி சுஜாதா பிற்கால வாழ்வில் அவர் இல்லாத சூழல் உருவானால் எப்படி சமாளிப்பது என்று தீர யோசித்து முடிவு கண்டார். தன் பட்டப்படிப்பு – பிஏ எகனாமிக்ஸ் – பட்டம் போதாது என்று பட, முதுகலை பொருளாதாரப் பட்டம் (எம்.எஸ்ஸி ஸ்டேடிஸ்டிக்ஸ்) உயர்கல்வி பெறத் தீர்மானித்தார் அவர். மைசூர் பல்கலைக் கழகத்தின் பட்ட மேற்படிப்பு அது. மாணவர்கள் அஞ்சல் மூலம் கல்வி பெற வசதி. அவ்வப்போது கட்டாயமாக தொடர்பு வகுப்புகளுக்கு (காண்டாக்ட் க்ளாஸ்) செல்வது தேர்வு எழுதத் தகுதி ஈட்டித் தரும். பெங்களூரில் குடும்பத்தை விட்டுவிட்டு, இரண்டு வாரம் இந்த வகுப்புகளுக்காக மைசூரில் தங்கி இருக்க வேண்டி வந்தது திருமதி சுஜாதாவுக்கு.

‘சுஜாதா’ அவரிடம், “நீ போய்ட்டு வா, நான் சமாளிச்சுக்கறேன். ஆபீஸ் கேண்டீன் இருக்கு” என்று சொல்லிவிட்டார். பிள்ளைகளும் வீட்டுக்கு பக்கத்து உணவு விடுதியில் இரண்டு வாரம் சாப்பிட்டுக் கொள்வதாகச் சொல்லி விட்டார்கள். பெங்களூர் வீட்டில் ஒரு பாதி மனமும், மைசூர் வகுப்பில் மீதியுமாக திருமதி சுஜாதா இருந்து பாடம் கேட்க, வகுப்பறையில் ஜன்னலுக்கு வெளியே உயரத்தில் ஒரு தலை தெரிந்தது. ‘சுஜாதா’ தான்!

திருமதி சுஜாதா உடனே வெளியே வந்து பார்க்க, “மனசு கேட்கலே, வந்தேன்” என்று அவர் படைக்காத கதாபாத்திரம் போல மனம் திறந்து பேசினாராம் ‘சுஜாதா’. ’இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடுவேன். நீங்கள் கவலைப்படாமல் போங்கள்’ என்று அனுப்பி வைத்தாராம் திருமதி. நெகிழ்ந்து சொல்கிறார்.

புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும்

இரா.முருகன் அக்டோபர் 10 2020

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன