எமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து

”விஷயம் தெரியுமா? மந்தவெளி கேஷவ்ஜி மெஸ்ஸில் நோ அளவுச் சாப்பாடு. பருப்புப்பொடி, நெய், வடு மாங்காய், ஸ்வீட்டுனு ராச்சாப்பாடாம்”.

பக்கத்து அறை நாராயணசாமி புதன்கிழமை சாயந்திரம் ரூமுக்கு போகிற போது சொன்னார்.

“எப்படி சார், மந்தவெளி பாகிஸ்தான்லே இருக்கா?”

நான் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன். கோவிந்தன் மேன்ஷனின் கதவுகளுக்குப் பூட்டு, தாழ்ப்பாள் இருக்கிறதோ என்னமோ, காது உண்டு. எமர்ஜென்சி காலத்தில் அரசாங்கச் சின்னத்தில் மூணு சிங்கத்துக்கும் அசோக சக்கரத்துக்கும் நகைச்சுவை அந்நியமானது. பின்னால் மறைந்து நிற்கும் நான்காவது சிங்கம் வேண்டுமானால் சிரிக்குமோ என்னமோ.

“எப்படி சாத்தியமாச்சு ஃபைவ் ஸ்டார் விருந்து?”

நான் கேள்வியை மாற்றி சாத்வீகமாக்கிக் கேட்டேன்.

”ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு மட்டும் சாப்பாடு போடுவாங்களாம். நாம நாலு பேரு இருக்கோம். என் நண்பர்கள் நாலு பேர் நம்மை அறிமுகப்படுத்த ரெடி. வயிறு நிறைய சாப்பிட்டு வரலாம், வாங்க”,

கேஷவ்ஜி மெஸ் பற்றி கீழ்த்தளத்தில் இருந்த விஸ்வநாதன் சொல்லியிருக்கிறான். ஒருநாள் கூட்டிப் போகிறேன் என்றவன் காலி செய்து கொண்டு போய் ஒரு மாதமாகிறது. பாலக்காட்டுக்கு டிரான்ஸ்பர் என்று சொன்னார்கள்.

மேன்ஷன் நட்பு எல்லாம் ட்ரான்ஸ்பரில், கல்யாணத்தில் பால் குக்கர் பரிசு கொடுத்து பிஸிபேளா சாப்பிடுவதில் முடிந்து போகும் என்பதற்கு விஸ்வநாதன் சொல்லாமல் பறையாமல் போனது உதாரணம்.

”எப்படி இந்த மாதிரி இஷ்டம்போல வெட்டுன்னு சோறு இலையிலே கொட்ட முடியும்?”

நான் திரும்ப அடியைப் பிடிக்க நாராயணசாமி சொன்னது-

“முதல்லே அது மெஸ் இல்லே. தினம் ஒரு இருபது இருபத்தைஞ்சு பேருக்கு பிரசாதம் கொடுக்கறாங்க. தினசரி பூஜை முடிந்து அன்னதானம். அன்னதானத்துக்கு அளவு சாப்பாடு ரூல்ஸ் எல்லாம் கிடையாது. சமாராதனை முடிஞ்சு சாப்பிட்டவங்க சமையல்காரங்களுக்கும் பரிமாறினவங்களுக்கும் பதில் மரியாதை செய்யறது சகஜம் தானே. நாம அது போல பூக்குடலையிலே ஆளுக்கு பத்து ரூபாய் போடப் போறோம். ரொம்ப பிடிச்சுதுன்னா அதிகமாகவும் போடலாம்”.

அந்த சமாராதனை விருந்து அடிபொளி. அட்டகாசமாக, வீட்டில் உண்ணும் ஓண சத்ய, கல்யாண விருந்து போல எல்லாப் பழைய நினைவையும் கிளறி, சுடச்சுட சாப்பிடும்போதே கண்ணில் நீர் நிறைய வைத்து விட்டது, கேஷவ்ஜி ஹோட்டல் – மெஸ் – மடம் ஏதோ ஒண்ணு அன்போடு போட்ட அளவில்லா உணவு.

“சபையரிலே போய் செகண்ட் ஷோ பார்த்துட்டு போகலாமா?”

பெல்காவி கேட்டார்.

”கண்ணைக் கட்டுது சார், போய்ப் படுத்தா விடிஞ்சு ஏழு மணிக்குத்தான் எழுந்திருப்பேன். சபையர் போய்ட்டு திரும்ப நடக்க தெம்பு இல்லே”

நாராயணசாமி சொன்னார்.

“அதெல்லாம் ஒரு சாக்கா, இரானியிலே சூடா ஒரு டீ சாப்பிட்டு அப்புறம் பாருங்க”.

பெல்காவியோடு பக்கத்து ஈரானியில் நுழைந்தோம். சின்னச் சின்ன சமோசாகளுக்கும் டீக்கும் வயிற்றில் எப்படியோ இடம் ஒழிந்து கிடந்தது. படி இறங்கும்போது நாராயணசாமி அறிவித்தார்:

“‘இப்போ விடிய விடிய வள்ளித் திருமணம் பார்க்கக் கூட நான் ரெடி”.

சினிமா பார்த்துவிட்டு கிளம்பும்போது நான் சொன்னேன் –

“இனிமே காலையிலே ஒன்பது மணிக்குத்தான் மறுபடியும் நடமாட்டம்”.

“ஏன், காந்தி இறந்து போன நாள் ஆச்சே, துக்கம் அனுஷ்டிக்க வேணாமா?”, குல்கர்னி கேட்டபடி ஆட்டோ ரிக்ஷாவுக்கு கைகாட்ட, சங்கடமான அமைதி அப்போது.

நல்ல வேளையாக இரண்டு ஆட்டோ ரிக்ஷாக்கள் சேர்ந்து வந்து நிற்க, நானும் குல்கர்னியும் ஒரு ஆட்டோ. மற்றவர்கள் இருவரும் மற்றையதில்.

“ஏன் குல்கர்னி சார் நாளைக்கு என்ன கொண்டாட்டம்னு மறந்துட்டீங்களா? அக்டோபர் ரெண்டு. காந்தி பிறந்த நாள் ஆச்சே”.

குல்கர்னி பதறிப் போனார். அடடா, என்னமோ நினைவு, தப்பா சொல்லிட்டேன் என்றார். ஆனால் அவர் சொன்னது சரிதான். அது துக்க தினமும் கூட. அடுத்த நாள் தெரிந்து விட்டது.

ஊருக்கு எல்லாம் விடிந்து மூன்று மணி நேரம் கழித்துத்தான் எனக்கு விடிந்தது. விவிதபாரதியோ, மீடியம்வேவ் அலைவரிசையில் ஒலிபரப்பும் மதராஸ் ஒன்று வானொலி நிலையமோ, கட்டாய எமர்ஜென்சி இன்னிசையோடு மகான் காந்தி மகான் பாட்டையும் ஒலிபரப்பியது. காந்தி அந்தக் கூட்டத்தில் அந்நியமாகக் காதில் விழுந்தார். தொடர்ந்து எம்.கே.தியாகராஜ பாகவதரின் தனிப்பாடல் “காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை”. ட்ரான்சிஸ்டரை சத்தமாக வைத்து அந்தப் பாட்டைக் கேட்கும்போது கீழிருந்து மேன்ஷன் வாட்ச்மேன் குரல் –

“போத்தி ஐயா, தண்ணி நிக்கப் போவுது. அடிச்சு வைக்கணும்னா பக்கெட் எடுத்துட்டு விரசா வாங்க”.

நான் காலி பக்கெட்டும், பிரஷ் வைத்து நுரைத்த வாயுமாகக் கீழே ஓடும்போது மனதில் காந்தியைப் போல் பாட்டு. இதென்ன ராகம்? சட்டென்று மனதில் வர மாட்டேன் என்கிறது. எம்.கே.டி பாடிய இன்னொரு பாட்டு, அது ஒரு சினிமா பாட்டு, அது கூட இதே மெட்டு தான்.

அரை பக்கெட் அடிபம்பில் அடிப்பதற்குள் தண்ணீர் சன்னமாக வர ஆரம்பித்தது. இது ஒரு வினோதமான குடியிருப்பு காம்பவுண்ட். கீழ்த் தளம், மூன்று மாடி மேலே. நாலு நாலு ரூமாக மொத்தம் பதினாறு அறைகள். இந்தக் குடியிருப்பைத் தவிர, ஒரு சிறிய வீடும் இந்த காம்பவுண்டில் உண்டு.

எல்லோருக்கும் சேர்த்து நான்கு அடிபம்புகள். வார நாட்களில் தண்ணீர் வரத்து குறைந்து போனால், வீட்டுக்காரர்களுக்கும் மேன்ஷன் வாசிகளுக்கும் அவ்வப்போது தண்ணீர் யுத்தங்கள் நிகழ்ந்தாலும் சாயந்திரம் ஆபீஸ் விட்டு வரும்போது அந்தச் சுவடே தெரியாமல் பத்து நிமிடம் கீழே வீட்டு வாசலில் நின்று அரட்டை அடித்துவிட்டு ரூமுக்குப் படியேறுவது வாடிக்கை. முக்கியமாக பெல்காவியும், குல்கர்னியும். அவர்களுடைய கன்னடமும், குடித்தனக் காரர்களின் தமிழும் எப்படியோ தகவல் பரிமாறிக் கொள்ளும்.

“போத்தி மாமா, எங்க வீட்டுலே ஹாப்பி தாத்தா திவசம். ஸ்வீட்டு எல்லாம் சாப்பிடுவோம்”.

கீழ் வீட்டு வாண்டுகள் நாலு அடிபம்பிலும் தண்ணிர் அடித்துக் கொண்டு பக்கெட்டை வைக்க விடாமல் சூழ்ந்து கொண்டிருந்தார்கள்.

“திவசத்துக்கு ஹாப்பி எல்லாம் சொல்லக் கூடாது. தாத்தா போய்ச் சேர்ந்துட்டாரில்லையா?”

நான் மெல்ல அறிவுரை சொன்னபடி பக்கெட்டை பம்பில் வைத்து பசங்கள் கையை விலக்க, தண்ணீர் நின்றே போனது. ”இப்போ என்ன பண்ணுவீங்க?” அதுகள் அக்கறையாக விசாரித்தன.

“வேறென்ன செய்ய, மாதுதான்”. சொல்லியபடி நான் கீழே முதல் அறை வாசலில் நின்று “மாது வந்திருக்கேன்” என்றேன்.

இப்படி நாலு ரூமில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் தேற்றினால், ரெண்டு பக்கெட்டுக்குக் குறையாமல் தண்ணீர் கிடைக்கும். குளியல், ஆத்திர அவசரத்துக்குத் துணி துவைப்பது எல்லாம் முடித்துக் கொள்ளலாம்.

“போத்தி, மாது வேணாம். எக்ஸ்ட்ரா பக்கெட் இருக்கு. எடுத்துப் போய்க் குளிச்சுட்டு உடனே ரிட்டர்ன் பண்ணுங்க”.

கீழே குடியிருந்த ராமோஜி ராவ் சலுகை காட்ட, எல்லாம் கிரமமாக முடித்து வெளியே கிளம்பும்போது வாட்ச்மேன் பெரியசாமி வந்து நின்றார்.

“மனஸ்தாபம் இல்லாம, கோபதாபம் இல்லாம சமாளிச்சுட்டீங்க தம்பி”

வீட்டுப் பெரியவர் போல் என்னைப் பாராட்டினார் அவர். எங்கள் ஊர்ப் பக்கத்து மனுஷர் தான். விளைச்சல் பொய்த்து முன்னூறு மைல் கடந்து பஞ்சம் பிழைக்க இங்கே வந்திருக்கிற பலரில் அவரும் ஒருத்தர்.

“எதுக்குக் கோபம். யாருக்கும் கோபம் ஆகவே ஆகாது” என்று காந்தி அடிகள் போல சாத்வீகமும் புனிதமும் ஒரு வினாடியாவது மேலே கவிய நின்றேன்.

சட்டென்று எம்.கே.தியாகராஜ பாகவதரின் இன்னொரு பாட்டு நினைவு வந்தது. “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி”. சினிமாப் பாட்டு. என்ன படம் நினைவு இல்லை. ஆனால் ராகம் புலப்பட்டது. செஞ்சுருட்டி.

அப்போ, காந்தியைப் போல் ஒரு சாந்த ஸ்வரூபனை? செஞ்சுருட்டியே தான். பாகவதர் வேண்டிக் கேட்டு பாபநாசம் சிவன் எழுதியது என்று வீட்டில் பாட்டித்தள்ளை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இதிலே எல்லாம் என்ன நாட்டம்? இன்னும் இருபது வருஷம் முந்திப் பிறந்திருக்க வேண்டியவன் நீ என்பாள் அவள். நான் இல்லாத ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகள் கம்பீரமானவை. மனசும் புத்தியும் விடுதலையாக இருந்த காலம். இன்றுபோல் இல்லை

1975 நாவல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன