தம் பிரியாணியும் ஒரு பிறந்த தின விருந்தும்

என்.எஸ்.மாதவனின் மலையாள cult classic novel லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள் – தமிழில் பீரங்கிப் பாடல்கள் (மொழியாக்கம் இரா.முருகன்) – ஒரு சிறு பகுதி

தம் பிரியாணியும் ஒரு பிறந்த தின விருந்தும்
——————————-
எனக்கு ஞானஸ்நானம் நடந்த நாளில் அதிகாலையிலேயே எட்வின்சேட்டனும் அவருடைய வேலையாட்களும் பிரியாணி செய்ய ஆரம்பித்தார்கள். பெரிய கொப்பரையில், வாங்கி வைத்த நெய்யில் பாதியை ஊற்றிச் சூடாக்கி அரிந்து வைத்த வெங்காயத்தில் பாதியை அதில் போட்டு, எட்வின்சேட்டனின் சமையல் கோஷ்டியில் வந்த வேலாயுதன் வறுத்தார். எட்வின்சேட்டன் கண்ணை மூடியபடி கொப்பரையைச் சுற்றி, வாடை பிடித்துக் கொண்டு நடந்தார். “வேலாயுதா, வறுக்கற வெங்காயம் நம்ம எஸ்.எஸ்.கோடர் முதலாளி கன்னம் மாதிரி சிவப்பா ஆகும் போது அரிஞ்சு வைச்ச வெள்ளைப் பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயெல்லாம் கொப்பரையிலே போட்டு வறுக்கணும். பிரியாணி செய்யறது மூக்கை வச்சு. சமையல்குறிப்பை பார்த்துப் பார்த்து சொல்றது இல்லே. கமகமன்னு வாசனை வரும்போது நான் சொல்லுவேன், நிறுத்து வேலாயுதான்னு. அப்போ நீ நிறுத்தி எரிஞ்சிட்டிருக்கற விறகை உருவணும்”.

சக்கரியா இன்னொரு கொப்பரையில், மீதி வெங்காயத்தை நெய்யில் போட்டு வறுத்தார். எட்வின்சேட்டன் அவரைக் கூப்பிட்டுச் சொன்னார் : :ஏய், வெங்காயத்தோட கலர் மாறி மஞ்சள் ஆகும்போது, உடச்ச முந்திரிப்பருப்பையும், கிஸ்மிஸ் பழத்தையும் போட்டு மிதமான சூட்டுலே வறுத்துக்க. பழுப்பு நிறத்துலே வரும்போது அரிச்சு எடு”.

வெங்காயமும் இஞ்சியும் மற்றதும் வறுபட்டு நல்ல வாசனை வர ஆரம்பித்து, சமையல் கொட்டகையில் பரவியபோது எட்வின்சேட்டன் அந்த கொப்பரையில் மாமிசத் துண்டுகளை இட்டுக் கலந்தார். இறைச்சி சிவந்த போது, தயிரும், கசகசாவும், உப்பும் சேர்த்து வறுத்தார். அப்போது அவருடைய வேலையாள் சக்கரியா உடைத்த முந்திரியும், உலர்ந்த திராட்சையும், வெங்காயமும் சேர்த்து வறுத்ததை அரிந்தெடுத்து ஒரு முறத்தில் பரப்பினார். மீதி வைத்திருந்த நெய்யில் எட்வின்சேட்டன் களைந்து வைத்திருந்த அரிசியை இட்டு வறுத்தார். அரிசி ஈரம் உலர்ந்தபோது கொப்பரைக்குள் தண்ணீர் விட்டு, அதை மூடி வைத்தார். “சர்க்காரியாவே, சோறு கொழஞ்சுடாம பார்த்துக்க. பிரியாணியிலே பாதி வேலை அரிசி வேக வைக்கறது தான். வெந்த அரிசிக்குள்ளே அந்த அரிசிமணியோட கண்ணு தெரியணும்”.

சமையல் கொட்டகையில் காலை நேரத்துக் கிழக்கு வெயில் விழத் தொடங்கியது. வானத்தில், வௌவால்கள் லந்தன் அரண்மனை மாடங்களுக்குத் திரும்பப் பறந்து கொண்டிருந்தன. முனை முறிந்த கறிப்பலா மர இலைகளில் சூரிய கிரணங்கள் விழுந்து தெறித்தன. எட்வின்சேட்டன் வீட்டுப் பின்பக்கம் சாய்வு நாற்காலியில் இருந்தபடி உரக்கச் சொன்னார் : “விக்டோரியா, ஒரு கிளாஸ் காப்பி எடுத்துக்கிட்டு வாயேன். காலையிலே இருந்து நின்னுக்கிட்டிருக்கேன். பல்லுலே பச்சைத் தண்ணி படலே”.

ஞானஸ்நானத்துக்காக மாதாகோவிலுக்குச் சேர்ந்து போக அண்டை வீட்டுக்காரர்கள் தான் முதலில் வந்தார்கள். சேவியரும் சாராவும் வந்ததுமே, அப்பனிடம் ஒருமித்துச் சொன்னார்கள் : “வலிய ஆசாரி, நாங்க சீக்கிரமா வந்தது எட்வின்சேட்டன் பிரியாணிக்கு தம் வைக்கறதைப் பார்க்கத்தான்”.

இறைச்சி பாதி வெந்த சேதியை வேலாயுதன் எட்வின்சேட்டனுக்குச் சொன்னார். எட்வின்சேட்டன் சமையல் கொட்டகைக்குப் போய் இறைச்சியோடு எலுமிச்சைச் சாறும், அரிந்து வைத்திருந்த கொத்துமல்லித் தழையும், புதினா இலைகளும் சேர்த்து வறுத்தார். சட்டுவத்தை வேலாயுதனிடம் கொடுத்து விட்டு மற்ற வேலையாட்கள் போல எட்வின்சேட்டனும் சாலட் செய்ய தக்காளியும் பச்சை மிளகாயும் அரிந்தார். சிறிது நேரத்தில் வேலாயுதன் கூவினார்: “எட்வின்சேட்டா, இறைச்சியிலே இருந்து கொழுப்பு விலகிடிச்சு”.

அடுப்பில் எரிந்த கொள்ளிகளில் ஒரு விறகை மட்டும் விட்டுவைத்து மற்றதையெல்லாம் எட்வின்சேட்டன் எடுத்து விட்டார். அந்த நேரத்தில் எங்கள் வீட்டுப் பின் வராந்தாவில் ஆள் கூட்டம் நிறைந்திருந்தது. எல்லோரையும் பார்த்தபடி எட்வின்சேட்டன் சொன்னார்: “இனி, தம்”.

தம் மசாலாப்பொடியை எட்வின்சேட்டன் நகமுனையால் அளந்து, வெந்த இறைச்சி மேல் தூவினார். அதன் மேல் மூன்றில் ஒருபாகம் சோற்றைப் பரப்பினார். தண்ணீர் விட்டுக் கரைத்திருந்த மஞ்சள்பொடியை அவர் சோற்றின் மேல் தெளித்தார். அதன் மேல் எட்வின்சேட்டன் இன்னொரு மெல்லிய அடுக்கு சோற்றைப் பரப்பினார். அதன்மேல், வறுத்த முந்திரிப் பருப்பும், உலர்ந்த திராட்சையும், வெங்காயமும். இன்னொரு நகக்கண் அளவு மசாலாப்பொடி. மேலே, இன்னொரு அடுக்கு சோறு. மஞ்சள்பொடி கரைத்த நீர். மேலே, மிச்சமிருந்த சோறு. ரோஸ்வாட்டர். மேலே தம் மசலாப்பொடி கொஞ்சம் போல. மாதாகோவிலில் பூசை வைக்கிறதை நோக்குவது போல, கூடியிருந்தவர்கள் எட்வின்சேட்டன் சமையல் செய்வதை நோக்கி நின்றார்கள்.

அரிசிமாவை நீர்விட்டுப் பிசைந்து விரலளவு கனத்தோடு கூடியதாக நீட்டி எடுத்து, வேலையாட்கள் எட்வின்சேட்டனிடம் கொடுத்தார்கள். கொப்பரையின் மேல் அடைத்து மூடி, சட்டியும், மூடியும் தொட்டுப் போகும் வரையை முழுவதுமாக அரிசிமாவுப் பட்டியால் அடைத்தார் எட்வின்சேட்டன். அது முடிந்ததும், கொஞ்சம் எரியும் தீக்கங்கு எடுத்து மூடி மேல் வைத்தார். கூடி நின்றவர்களைப் பார்த்துச் சொன்னார் எட்வின்சேட்டன் : “இதான் தம். கொப்பரைக்குள்ளே இப்போ சித்திரையிலே கத்தரி வெய்யில் அடிக்கறதுக்கு பத்து மடங்கு அதிகமான சூடு இருக்கும். இறைச்சியோட ஜூசும், வாசனை திரவியங்களும் ஒண்ணோட ஒண்ணு தீவிரமா முட்டிமோதி ஒரு கைகலப்பு நடக்குது அங்கே. நான் இதுவரைக்கும் மூவாயிரத்துக்கு மேல் பட்ட இடங்கள்ளே பிரியாணி சமைக்க தம் வச்சிருக்கேன். இருந்தாலும், நண்பர்களே, தம் வைக்கும் போது கை நடுங்காமல் இருந்ததில்லே. கை நடுக்கம் போனால் கலையும் போகும். தம் வச்சு முடிச்சு திறக்கற போது என்ன ஆகியிருக்கும்னு எனக்கு முன்கூட்டி எப்போதும் தெரியாது. நாம மனுஷ இனமாச்சே. என்ன நடக்கப் போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சா, வேதப் புஸ்தகம் எதுக்கு?”

என் ஞானஸ்நான வைபவத்துக்கு வந்த எல்லோரும் எங்கள் வீட்டின் பின்பக்க வராந்தாவில் சமையல் கொட்டகைக்கு முன் கூட்டமாக நின்றார்கள். பந்தலைப் பார்த்தபடி நானும் அப்பனின் மடியில் படுத்திருந்தேன். எட்வின்சேட்டன் கோவிலுக்குப் போனபோது அணிந்த உடைகளைக் களைந்து விட்டு கைலி, பனியனுக்கு மாறி உள்வீட்டிலிருந்து சமையல் கொட்டகைக்கு வந்து, கொப்பரை பக்கத்தில் போய் நின்றார். அவர் கண்களை மூடி, பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே பிரார்த்தனையைச் சொன்னார். பின், கொப்பரை மேலே கவிழ்த்த மூடியின் விளிம்பை ஒட்டிக் காய்ந்து பொருக்குத் தட்டியிருந்த அரிசி மாவை பொடித்து அகற்றினார். எட்வின்சேட்டன் மெல்ல மூடியைத் தூக்கியபோது, நூற்றாண்டுகளாகக் கொச்சியில் இருந்து வெளியே கொண்டு போகப்பட்டு விற்றுப்போன வாசனை திரவியங்கள் எல்லாம் மணக்கத் தொடங்கின. கூடி நின்றவர்கள் கை தட்டினார்கள். சந்தியாகு முழக்கமிட்டார் : “தோபியஸ் எட்வின் ஹிப் ஹிப் ஹுரே”. பிள்ளைகள் ஏற்று வாங்கிச் சொன்னார்கள் : “இப்பிப்புரே”.

வீட்டு முன்வசத்தில் இருந்த பந்தலில் விரிப்புகள் இட்டு மடக்கு மேஜைகளை நிறுத்தி சாப்பாடு பரிமாற இலை போடப்பட்டது. வேலாயுதனும் சக்கரியாவும் எலுமிச்சை ஊறுகாயும் சாலடும் பரிமாறினார்கள். எட்வின்சேட்டன் தனக்கு முன் ஆழ்ந்து அகன்ற பாத்திரங்களைப் பரப்பி வைத்துக் கொண்டார். முதலில் இருந்த பாத்திரத்தில் கொப்பரையில் இருந்து எடுத்துக் கொஞ்சம் சோற்றை இட்டார். அதற்கு அப்புறம் அவித்த முட்டை.யை அதற்கு மேல் வைத்தார். பிறகு சட்டுவம் கொண்டு கிண்டி, இன்னும் கொஞ்சம் சோற்றைக் குவித்து. வறுத்த வெங்காயம், முந்திரி, உலர்ந்த திராட்சை எல்லாம் இட்டார். கடைசியாக, ஊறிய சாற்றோடு இறைச்சித் துண்டுகள். எட்வின்சேட்டன் முதல் பாத்திரத்தில் நிறைத்த பிரியாணிக்கு மேலே சட்டுவத்தால் தட்டினார். அந்தப் பாத்திரத்தை ஒரு தட்டில் கவிழ்க்க, ஒரு அரிசி கூட வெளியே சிதறாமல் பிரியாணியின் சிற்பம் உயர்ந்தெழுந்தது.

பீரங்கிப் பாடல்கள் நாவல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன